மண்மணம்


திருச்செந்தூரில் இருந்து நாகர்கோயில் வரும் வழி பெரும்பாலான குமரிமாவட்டத்துக்காரர்களுக்குப் பிடித்தமானது. அவர்கள் குமரி எல்லையைத் தாண்டிச்சென்ற முதல் அனுபவமே திருச்செந்தூர் பயணமாகத்தான் இருந்திருக்கும். விடியற்காலை நாலரை மணிக்கு நாகர்கோயிலில் இருந்து கிளம்பும் பஸ்ஸில் தான் அனேகமாக சென்றிருப்பார்கள். பஸ் இலைவெளுக்கும் நேரத்தில் நெல்லைக்குள் நுழைந்து மண் வெளுக்கும் நேரத்தில் சாத்தான்குளம் தாண்டிச்செல்லும். நெல்லை நாகர்கோயில் சாலைபோல அகலமானதல்ல செந்தூர்சாலை. சின்ன ஓடை போல வளைந்து வளைந்து பல இடங்களில் தேங்கி நின்று தயங்கிச் செல்லக்கூடியது. வழியில் என்னனவோ ஊர்கள்.

ஊர்களை நிதானமாக பார்த்துக்கொண்டே செல்லலாம். அந்தக்காலத்தில் எல்லாமே சிவந்த ஓட்டுக்கூரைபோட்ட கட்டிடங்கள் .மிச்சம் ஓலைக்கூரைகள். சாலையோரம் செக்கச்சிவந்த மண் விரிந்த நிலம். தொடுவான் வரை மண் சென்று சேர்வதை நானெல்லாம் அங்கேதான் முதன்முதலாகப்பார்த்தேன். வானத்துக்கும் மண்ணுக்கும் நடுவே மலை இருந்தாகவேண்டும் என எண்ணியிருந்தவனுக்கு அது பெரிய அதிர்ச்சி. ’மலை எங்கே?’ என்று வேணுமாமாவிடம் கேட்டு ‘சும்மா இருடா’ என்று அதட்டப்பட்டேன்.

என்ன ஒரு சிவப்பு.எங்களூரில் யட்சிகோயிலில் ஆடுவெட்டிய இடத்தில் மறுநாள் காலையில் மண் அப்படித்தான் இருக்கும். பல்லாயிரம் ஆடுகளை வெட்டியிருக்கிறார்கள். காலையில் அந்தச்சிவப்பு கொஞ்சம் ஈரச்சிவப்பாக இருப்பதுபோலக்கூட தோன்றும். கருவேலமரங்களின் குடைகள். ‘கொடைமரம்லே!’ என்று சண்முகண்ணன் வியந்தான். அவனுக்குத்தான் மொட்டை. நான்குவருட முடி சடையாக சுருட்டிக்கட்டப்பட்டு கனகாம்பரமும் மரிக்கொழுந்தும் சூட்டப்பட்டிருந்தது.

செக்கச்சிவந்த மண்ணில் கன்னங்கரிய பனைமரங்கள். பனைமரத்தடியில் அதிகாலை மென்மண்சருமத்தில் காலையில் யாரோ ஓலைகளை இழுத்துச்சென்ற தடங்கள். உடைமுள் மரங்களின் நீளக்கிளைகள் காற்றில் சுழன்று மண்ணில் போட்ட அரைவட்டங்கள். செந்தூர்பாதையின் அற்புதம் பனைமரங்களை ஏந்திய செம்மண் நேராகச்சென்று கடலில் இறங்குவதைக் காணலாம். கடல்வெண்மணல் மேடுக்கு அப்பால் உயரத்தில் கொந்தளித்துக்கொண்டிருக்கும். உடைந்து தலையில் கொட்டிவிடுமென பயம் வரும்.

செம்மண் காய்கறிவிவசாயத்துக்கு ஏற்றது. கமலைவைத்து வெண்டைக்காய் கத்தரிக்காய் பயிரிடுவார்கள். பாண்டிக்கத்தரிக்காய் என்று தெற்கத்திய கல்யாணங்களுக்கு தேடிவிசாரித்து வந்து வாங்குவார்கள். பாண்டிக்கத்தரிக்காயில் நெய்மணம் இருக்கும். பாண்டி வெள்ளரிக்காயில் விதை சிறியதாக இருக்கும். பாண்டிக்காய்கறி எதுவும் இங்கே மதிப்புள்ளதுதான். காலையில் கூட்டம்கூட்டமாக பெண்கள் செக்கச்சிவந்த கீரைக்கட்டுகளையும் காய்கறிகளையும் கூடைகளில் சுமந்துகொண்டுவந்து மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டிருப்பார்கள். வெற்றிலைகள் தகடுதகடாக அடுக்கப்பட்டிருக்கும். ‘வெத்திலபுஸ்தகம்’ என்றான் சண்முகண்ணன். எனக்கே அதிலொன்றை வாசிக்கலாமென ஆர்வமாக இருந்தது.

சட்டென்று ஒரு பொட்டலில் ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிச்சென்று பனைமரத்தடியில் நின்ற பனையேறியிடம் பனையோலை தொன்னையில் அக்கானி வாங்கி சில்லாட்டையை சல்லடையாக்கி அரித்து உறிஞ்சிக்குடித்தார். ’எறங்குலே’ என்றார் வேணுமாமா. இறங்கி நாங்களும் பதநீர் குடித்தோம். எட்டுபேருக்கு பதனிக்கு எண்பதுபைசாதான். பதநீர் அப்படி சுவையாக இருப்பதை அறிந்ததே இல்லை. ‘வெயிலாக்கும் பதனியிலே இனிப்பா கேறி இருக்கிறது’ என்றாள் பார்வதிமாமி.

செந்தூரில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். டி.எம்.எஸ் பாட்டு போட்டிருந்தான். பூமாலையில் ஓர் மல்லிகை. அந்தப்பாட்டு நினைவுகளை உசுப்பக்கூடியது. என்னைப்போலவே பக்கத்தில் இருந்தவருக்கும் நிகழ்ந்திருக்கும். என்னிடம் திரும்பி ‘எல்லாமே மாறிப்போச்சு, ஏன் சார்?’ என்றார்.

‘ஆமாம்’ என்றேன். பொதுவாக காலம்மாறியதைப்பற்றிப்பேச கிராமத்துப்பெரிசுகள் விரும்பும்.

‘அந்தக்காலத்திலே ரெண்டுபக்ககும் செம்மண்வயலா இருக்கும். காய்கறியா போடுவாங்க…’ என்றார். ‘நான் இங்கதான் பத்தாம்கிளாஸுவரை படிச்சேன். இப்ப மதுரைப்பக்கமா போயிட்டோம்’ என்றார்.

‘சொந்த ஊர் இங்கயா?’ என்றேன்.

‘ஆமா சார்… எல்லுவிளை…என்றார். ’எங்க பூர்வீகமே இங்கதான். அப்பா ஒத்தைக்கொரு மகன். தாத்தாவழியிலே வந்த எட்டேக்கர் நெலம் இருந்தது. அதைவச்சு வெவசாயம் செஞ்சு எங்கள படிக்கவச்சார்’

‘என்ன வெவசாயம்?’ என்றேன்

‘வெத்திலதான். அந்தக்காலத்திலே இந்தப்பக்கம் வெத்தில நல்ல வெவசாயம்… ஒருமாதிரி பாத்திபோட்டு ஏத்திட்டா பத்துவருசம் வரை தினம் வரும்படி இருக்கும். ஆனா சார் வெத்திலப்பாத்தி ஒரு ரத்தக்காட்டேரி. ஆளை அப்டியே உறிஞ்சிக்குடிச்சிரும். அப்பாவுக்கு வேற நெனைப்பே கெடையாது. காலையிலே மூணுமணிக்கு வெத்தில பறிச்சு அஞ்சுமணிக்குள்ள ரோட்டில வச்சாத்தான் வண்டிக்காரங்க எடுப்பாங்க. அதுக்குமேலே கொஞ்சம் நீத்தண்ணியக் குடிச்சிட்டு தண்ணிபாச்ச ஆரம்பிச்சா பத்துமணி ஆயிடும். மேக்கொண்டு உரம் சுமந்து போடுறது களை எடுக்கிறது. மத்தியான்னம் ஒருமணி நேரம் கிடைச்சா மத்த வேலைகள். சாயங்காலம் மறுபடியும் தண்ணி…கொடிக்கு பாத்தியில தண்ணி காயவே கூடாது சார்… இந்த பொட்டக்காட்டில தண்ணி எங்க ? அதலபாதாளத்திலே கெடக்கும். பாதாள கங்கைய கொண்டார மாதிரியாக்கும் அதை மேலே ஏத்துறது….வெத்திலச்செல்லப்பான்னு சொன்னா ஊரிலே எல்லாருக்கும் தெரியும்…’

அவர் பெருமூச்சுவிட்டார்

‘இப்ப அப்பா இருக்காரா?’

‘இல்ல சார். அப்பா எழுவத்தெட்டிலேயே போய்ட்டார். ஒரு சின்ன நெலத்தகராறு…பக்கத்திலே எங்க பங்காளி ஒருத்தன் வெத்திலபோட்டான். அவனுக்கும் எங்களுக்கும் ஒரே வரப்பு. வரப்புல அவன் தாங்குகழிய ஊணிட்டான். அப்பா தட்டிக்கேட்டார். சட்டுன்னு சண்டை மூத்து அவன் பாளையரிவாளால கழுத்த சீவிட்டான். அங்கியே விழுந்து செத்தார். அவனும் எட்டுவருசம் உள்ள கெடந்தான். அதுக்குமேலே நாலஞ்சுவருஷம் எங்கம்மா நெலத்தை பாத்துக்கிட்டாங்க. நான் தலையெடுக்கிறதுவரை கஷ்டம்தான்’ சட்டென்று கோணலாக சிரித்து ‘அரையடி நெலத்துக்காக செத்தாரு சார்….நெனைச்சுப்பாத்தா கேனத்தனமா இருக்கும். ஆனால் அந்தக்காலத்து ஆளுங்களுக்கு அப்டி ஒரு வெறி இருந்தது நெலத்துமேலே’

அதற்குமேல் கொஞ்சநேரம் அவரும் பேசவில்லை. நானும் பேசவில்லை. நான் அவரிடம் இப்போது நிலம் இருக்கிறதா என்று கேட்க விரும்பினேன்

அவரே ஊகித்ததுபோல ‘நான் வேலைக்குப்போனப்ப நெலத்த வித்துட்டேன். மதுரையிலே பிளாட்டு வாங்கி வீடு கட்டினேன்…தம்பிக்கும் ஒரு பிளாட்டு வாங்கி போட்டேன்’ என்றார். ‘இப்ப இந்த ஊரிலே ஒண்ணும் இல்ல. நெலம்போனதோட ஊர்த்தொடர்பும் போச்சு. குலதெய்வக்கோயில்லாம் இங்கதான். வரியெல்லாம் ஒண்ணும் யாரும் கேக்கிறதுமில்ல. மறந்தேபோயிருப்பாங்க…நான்லாம் ஊருக்குப்போயி இப்ப இருபத்தேழு வருசமாவுது…’

இருபக்கமும் வெறும் மண். உழப்படாத மண்ணில் உடைமுள் மண்டிக்கிடந்தது. பாலிதீன்தாள்கள் அவற்றில் சிக்கி காற்றில் அதிர்ந்துகொண்டிருந்தன. நிலத்தின் ஆயிரம் நாக்குகள் போல. ர்ர்ர்ர் என அவை கூச்சலிட்டன.

‘இப்பல்லாம் இந்தப்பக்கம் வெவசாயமே கெடையாது’ என்றேன். ஒரு இருபது வருஷம் முன்னாடிக்கூட பயறு கீரைன்னு என்னமோ போட்ட்டிருந்தாங்க’

‘போட்டு என்ன செய்ய? ரத்தத்த விட்டுல்லா பயிர வளக்கணும்? வளத்து பறிச்சு கொண்டு போயி சந்தையிலே வச்சா குப்பைக்க விலையில்லா ஏவாரி கேப்பான்….வெவசாயம் செஞ்சவன்லாம் இப்ப நடுத்தெருவிலல்லா நிக்கான்?’ என்றார் ஒரு கரிய மனிதர்.

முள்மண்டிய நிலத்தில் ஆங்காங்கே கைவிடப்பட்ட இறவைக்கிணறுகள். உடைந்த பம்புசெட் கட்டிடங்கள். நகரம் நெருங்கும்போது மட்டும் சில இடங்களில் பிளாட் போட்டிருந்தார்கள். விஜிபி நகர். சந்தியா நகர்.

‘கிராமம் எல்லாம் நகரமாயிடுச்சு’ என்றார் முதல் ஆள். நான் சிரித்துக்க்கொண்டேன்.

‘நான்லாம் வெவசாயத்த விட்டு நாகர்கோயிலே மக கூட செட்டிலாயாச்சு..’ என்றார் கரியமனிதர் ‘ஆனா மழைபெஞ்சாமட்டும் நேர இங்க வந்திருறது…இந்த வெந்தமண்ணிலே மழைபெயேறப்ப வாற மணமிருக்கே அது குழந்தைஏசுவுக்க மணமுல்லா?’

அவரது கணிப்பு சரிதான். கொஞ்சநேரத்தில் மனிதகுமாரன் பிறந்தார்.

Posted in பொது

விவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்

வணக்கம் சார்,

தமிழ் எழுத்துலகில் உள்ள வன்மங்கள் இப்பொழுதுதான் புரிகிறது. உங்களுக்கு நேர்ந்தமையால்… இது என்னுடைய நேரடி அனுபவமாகவே உணர்கிறேன்.நான் உங்களை படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் பெரிய விவாதத்துக்கு உள்ளானது இப்பொழுதுதான்.நீங்கள் இதை மிக மன விரிவுடன் எதிர்கொள்ளும் விதம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனக்கு பலியின் தலை மீது கால் வைத்து வளர்ந்து கொண்டு இருக்கும் வாமணன் தான் ஞாபகத்துக்கு வருகிறான்.அவன் வளர்ச்சி முன் பலி, இந்த உலகு, விஸ்வம் எல்லாமே சிறியதாக மாறிக்கொண்டு இருக்கும்.ஒரு எழுத்தாளராக, ஒரு விசில் ப்ளோயராகவும் நீங்கள் அந்த வாமணன் தான்.உங்கள் பண்பு, மன விரிவு முன் இதெல்லாம் சிறிய விஷயங்கலாகவே மாறும்.

உங்கள் சக எழுத்தாளர்கள் உங்களிடம் உள்ள இந்த அறம் சார்ந்த கோபத்தை தேவையில்லாத ஒன்றாகவே கருதுகிறார்கள் ஏன் ?

எஸ்.ரா. ஆனந்த விகடன் வாசகர் கேள்வி பதிலில் உங்களை பற்றி இதே தான் சொன்னார். நீங்கள் பெரிதாக மதிக்கும் அசோக மித்திரனும் சமீபத்தில் ஆ. வி. பேட்டியில் உங்கள் எழுத்து ஆழுமையை வியந்து கொண்டே… இதே போன்ற கவலையை தான் தெரிவித்தார்!

இவர்களுக்கு உங்கள் மீது மிக்க அன்பும், மரியாதையும் இருக்கலாம். ஆனால்,ஒரு எழுத்தாளன் தன் சுற்றியுள்ள சிறுமைகள் பற்றி நேரடியாக பேசுவதில் அப்படி என்னதான் தவறு?அவன் அப்படி பேசும்போதே… அதனால் தனக்கு நேரும் விழைவுகள் தெரிந்துதானே தைரியமாக முன்மொழிகிறான்?அவன் பேசும் விஷயங்களுடன் கருத்தளவு ஆமோதிக்கும் ஒருவர் அதற்க்கு தார்மீக ஆதரவு தெரிவிக்க வேண்டாமா?
ஏன் தேவை இல்லாத விஷயங்களாக கருதுகிறார்கள்?

அன்புடன்,
ராஜு

அன்புள்ள ராஜூ

எழுத்தில் எது சரி எது தவறு என்பதற்கு இலக்கணங்கள் விதிமுறைகள் ஏதும் இல்லை. விதி என ஒன்று உண்டு என்றால் இதுதான் – ஒருவர் தான் எப்படிப்பட்டவரோ அப்படியே வெளிப்படவேண்டும்.

இலக்கியவாதிகளில் தன் எழுத்துக்குள் மட்டும் நின்றுவிட்ட பெரும்படைப்பாளிகள் உண்டு. எல்லா விஷயத்துக்கும் எதிர்வினையாற்றிய பெரும்படைப்பாளிகள் உண்டு.சமூகப்பணியாற்றியவர்கள் உண்டு ஆற்றாதவர்களும் உண்டு. பிறதுறைகளில் மேதமை வெளிப்பட்டவர்கள் உண்டு, இலக்கியம் மட்டுமேயாக வாழ்ந்தவர்களும் உண்டு. அவற்றை அந்தந்த இலக்கியவாதிகளின் தனி இயல்பு என்றே சொல்லவேண்டும்

மௌனியும் அசோகமித்திரன் எதிர்வினையாற்றாத பெரும்படைப்பாளிகள் புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் எதிர்வினையாற்றிய படைப்பாளிகள்.

எதிர்வினையாற்றுகையில் படைப்பாளி தொடர் விவாதங்களில் சிக்கிக்கொள்கிறான். அவனுடைய நேரமும் கவனமும் படைப்பில் இருந்து சிதறடிக்கப்படுகின்றன

மேலும் கருத்துக்கள் என்றாலே அவை முதன்மையாக எரிச்சலைத்தான் உண்டுபண்ணும். மாற்றுத்தரப்புடையவர்கள் கோபம் கொள்வார்கள். மாற்றுக்கருத்தில்லாதவர்கள் கூட புதியகருத்து அளிக்கும் சமன்குலைவு காரணமாக ஒவ்வாமை கொள்வார்கள்.

அனைத்துக்கும் மேலாக கருத்துக்கள் தெரிவிக்கும் எழுத்தாளன் தன் சொந்த ஆளுமையை எழுத்துக்கு வெளியே தனியாக முன்வைக்கிறான். அகங்காரம் அதிகமுள்ள வாசகர்கள் அதனால் சீண்டப்படுகிறார்கள். பொதுவாக முதிர்ச்சியற்ற வாசகர்கள் அல்லது ஆரம்பபநிலை வாசகர்கள் அதிக தன்னகங்காரத்துடன் இருப்பார்கள். அவர்களைப்போன்றவர்கள் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளன் மீது கசப்பை வளர்த்துக்கொள்வார்கள். ‘நானும் ஒரு ஆள்தான்’ என்ற மனநிலையிலேயே அவன் படைப்புகளை அவர்கள் வாசிப்பார்கள்.

கலை சார்ந்த நுண்ணுணர்வற்றவர்கள் படைப்புகளை வெறும் கருத்துக்களாகவே காண்பார்கள். அவர்கள் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளனின் கலைப்படைப்புகளை அவனுடைய கருத்துக்களின் நீட்சிகளாக மட்டுமே கண்டு சில்லறைத்தனமான வாசிப்பை முன்வைப்பார்கள்.

இவற்றின் விளைவாக கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளன் மீது பொதுவான ஓர் எதிர்மறைத்தன்மை சூழலில் நிலவும். அவனுடைய ஆக்கங்கள் பற்றிய அரைவேக்காட்டுத்தனமான, திரிக்கப்பட்ட கருத்துக்கள் உலவிக்கொண்டிருக்கும். இது எங்குமிருப்பதுதான். ஆனால் தமிழில் நல்ல வாசிப்புக்களைவிட இவை பன்மடங்கு அதிகம்

ஆகவே அவனை வாசிக்கவரும் புதியவாசகர்கள் திசைதிருப்பப்படுவார்கள். அவனை வாசிக்க அவர்களுக்கு மிகப்பெரிய தடை இருக்கும். இந்து அந்த எழுத்தாளனுக்கு மிகப்பெரிய இழப்பே. ஆகவே கருத்துக்கள் தெரிவிக்காமல், எதிர்வினையாற்றாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.

ஆனால் இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. சமூகப் பண்பாட்டு அரசியல் தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்காமல், விவாதங்களுக்கு வராமல் ஒதுங்கிவிடும் எழுத்தாளன் காலப்போக்கில் தன்னுடைய சுய அனுபவங்கள் சார்ந்த ஓரிரு உணர்ச்சிகளுக்குள் ஒடுங்கிவிடுபவனாக ஆகிவிடுவான். அவனுடைய படைப்புலகம் சிறுத்து சூம்பிப் போய்விடும். ஒரு குறிப்பிட்ட படைப்புகளுக்குப்பின் அவனிடம் வளர்ச்சியே இருக்காது

ஆக, எதைத்தேர்ந்தெடுப்பது? ஆற்றலில் ஒருபகுதி வீணானாலும் பரவாயில்லை என எண்ணுமளவுக்கு படைப்பூக்கம் கொண்ட படைபாளி கருத்துச்சொல்லி விவாதிப்பவனாகவே ஆகவேண்டும் என நான் நினைப்பேன். அக்கருத்துக்களினால் அவன் சமகாலத்தில் ஒருவேளை முழு நிராகரிப்பை அடைந்தாலும் கூட அவனுடைய மிகச்சிறந்த சாத்தியங்களை அவன் வெளிப்படுத்திருப்பான். தன் முழு ஆளுமையுடன் மலர்ந்திருபபன்

சமகாலத்தில் நிராகரிக்கப்படுவது எழுத்தாளனுக்கு ஒட்டுமொத்தமாக எந்த இழப்பையும் அளிப்பதில்லை. எழுத்துக்களின் வாழ்நாள் மிக அதிகம். புதுமைப்பித்தன் அவர் வாழ்ந்த காலத்தில் அனைவராலும் வெறுக்கப்பட்டவர் என்பது இன்று அவரது எழுத்துக்களை தீர்மானிக்கிறதா என்ன? எழுத்தாளனின் வாழ்நாள் அதிகபட்சம் ஐம்பது வருடம். எழுத்துக்கள் ஐம்பதாண்டுக்காலம் கழித்துதான் உண்மையான வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன

ஜெ

Posted in பொது

படைப்பியக்கம் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நேரில் சந்திக்கும்போது ஒன்றை கவனித்தேன். அது தொடர்ச்சியாக பேசும் உங்களின் திறனைதான். அதுவும் உற்சாகத்துடன் பேசுவது பெரிய வரம். பொதுவாக அதிகம் படிப்பவர்கள் அல்லது அப்படி கூறப்படுபவர்கள் பேசுவது மிகமிக குறைவு. அப்படிபட்டவர்கள் பேசுபவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பார்கள். நேர்மாறாக, நீங்கள் பீறிட்டுவரும் நீர்ஊற்றுபோல பேச்சு உங்களிடம் வெளிவருகிறது. உங்கள் பேச்சு ஒரு பேச்சாளரின் லாவகத்துடன், உடல்மொழியுடன் கேட்பவர்களின் கவனத்தை கவரும் உத்தேசத்துடன் இல்லை. பேசுவது சாதாரண இயல்பான செயலாகவே வெளிப்படுகிறது. ஒரே விசயத்தை பலநேரங்களில்கூட உங்களால் பேசமுடியும் என தோன்றுகிறது. பாதிதூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் அதன் தொடர்ச்சியிலிருந்து ஆரம்பிக்கமுடியும் போலவும் தெரிகிறது.

சிறுவயதிலிருந்து இப்படிதான் இருக்கிறீர்களா? இப்படி தொடர்ச்சியாக பேசுவது ஒரு கலையாக அல்லது உங்கள் சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக நினைக்கிறீர்களா? மீண்டும் அதே விசயத்தை பேசும்போது புதிய சிந்தனைகளை, அதாவது நீங்கள் சிந்தித்து வைத்துள்ளவை, அதனுடன் சேர்த்துக் கொள்வீர்களா? இப்படி தொடர்ந்து பேசுவதனால் சிந்தனையின் தொடர்ச்சி எப்படி பெறமுடியும். புதிய சிந்தனைகளுக்கு இப்பேச்சுகள் ஏதாவது ஒருவகையில் இடையூறாக இருப்பதில்லையா? (அப்படி இருக்குமென நினைத்துக் கொண்டிருக்கிறேன்) அல்லது வளம்சேர்ப்பவையாக இருக்குமா? அப்படியே வளம்சேர்ப்பவையாக இருந்தால்கூட புதிய ஐடியாக்களை பெறமுடியாமல் போகும் வாய்ப்பிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. எதிரிலிருப்பவரின் பேச்சை நீங்கள் கவனிப்பதும் இல்லை. ஆனால் தொடர்ந்து அவர் விரும்பும் இடத்திற்கு வந்துவிடுகிறீர்கள் எப்படி?. கொஞ்சம் விளக்குங்கள் பிளீஸ்.

அன்புடன்,
கே.ஜே.அசோக்குமார்

அன்புள்ள அசோக்குமார்

நான் என்னுடைய பேச்சை என் பள்ளிநாட்களிலேயே நண்பர்களுடனான உரையாடல்மூலம் உருவாக்கிக்கொண்டேன் என்று நினைக்கிறேன். இன்றும் என் பள்ளிநண்பர்கள் – குறிப்பாக என்னுடன் ஒரே பெஞ்சில் இருந்தவர்கள்- என்னுடைய உரையாடல்களை நினைவுகூர்கிறார்கள். எல்லார் வீட்டிலும் என் பெயருள்ள ஒரு குழந்தை உள்ளது.

அந்த உரையாடல் எனக்கு நான் வாசித்தவற்றை செரித்துக்கொள்ள தேவைப்பட்டது. நாம் வாசித்த எவையும் நாம் பேசி எழுதி நம்முடைய மொழிக்கு மாற்றிக்கொள்ளாதவரை நம்முடையவை அல்ல. அவை நம்மிடம் மேற்கோளாகவே இருக்கும்,நம் சிந்தனைகளாக மாறியிருக்காது. ஆகவே தான் விவாதியுங்கள் என நான் எப்போதுமே சொல்கிறேன்

என்னுடைய பிள்ளைகளுடன் நான் எப்போதுமே விவாதித்துவந்திருக்கிறேன். அவர்களிடமும் அந்த் உரையாடல்திறன் இருப்பதைக் காண்கிறேன்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அண்ணனுக்கு

இன்றைய தேதியில் புனைவிலக்கியத்தில் என்னைப்போன்ற ஆரம்ப எழுத்தாளர் புதிதாய் படைத்து
சாதிப்பதற்க்கு இடம் இருக்கிறதா?அதற்க்கான தேவை இருக்கிறதா?

நவீன தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் தொடங்கி ஜெயமோகன் வரையில் வாசிக்கையில் இனி நாம் என்ன எழுதுவது என்ற தயக்கம் எழுத நினைக்கும்போதெல்லாம் ஒட்டிக்கொள்கிறது.

புனைவு நீங்கலாக தமிழில் எழுதி தடம் பதிக்க வேறு என்னென்ன எழுத்து வகைக்களுக்கு(என்னென்ன துறைகளுக்கு) தேவை இருக்கிறது? இன்றைய தேதியில்தமிழின் அத்தனை சாதனையாளர்களைத்தாண்டி புனைவிலக்கியத்தில் ஏதேனும் புதிதாய் சாதிக்க முடியுமா? அல்லது மிகத்தேவையான ஏதேனும் புது வகை அபுனைவு எழுத்து வகைக்கொண்டு(புனைவின் அதே கலைத்திறத்தேதோடு)சாதிக்க இடமும் தேவையும் இருக்கிதா?

அன்புடன்
வ.அதியமான்.

அன்புள்ள அதியமான்

தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் எழுதியபின்னர்தானே நானும் எழுதிக்கொண்டிருக்கிறேன்?

மனித சிந்தனை, படைப்பியக்கம் என்பது பிரம்மாண்டமான நதி போல. அது எங்கிருந்தோ கிளம்பி பெருகிச்சென்றுகொண்டே இருக்கிறது. நாம் அதில் நம்முடைய சிறிய துளியைச் சேர்க்கிறோம். நம் வரை வந்துசேர்ந்த சிந்தனையைக் கற்று நம் வாழ்வனுபவங்கள் அளித்தவற்றை அதில் சேர்த்து அதற்கே திருப்பி அளிக்கிறோம்

ஆகவே எந்த சிந்தனைக்கும் எந்த படைப்புக்கும் அதற்கான இடம் ஒன்று உண்டு. இதுவரையிலான இலக்கியத்தை பயிலுங்கள் நீங்கள் எங்கிருந்து தொடங்கவேண்டுமென தெரியும். உங்கள் சொந்த உணர்வுகளுக்கு நேர்மையாக எழுதுங்கள். எதை எழுதவேண்டுமென புரியும்

அது முக்கியமானதாகவே இருக்கும். வாழ்த்துக்கள்

ஜெ

Posted in பொது

காந்தியின் கடவுள்

அன்புள்ள ஜெயமோகன்

காந்தியை படிக்கும் போது அவருடைய அடிப்படை நோக்கமாக எனக்கு தோன்றியது அவருடைய ஆன்மீக தேடலே.

“நான் விரும்புவதும், இந்த முப்பது ஆண்டுகளாக நான் பாடுபட்டு வந்திருப்பதும், ஏங்கியதும், என்னை நானே அறிய வேண்டும் என்பதற்கும், கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்பதற்கும், மோட்சத்தை அடைய வேண்டும் என்பதற்குமே. இந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே நான் வாழ்கிறேன்”

மேலே உள்ள காந்தியின் கூற்று உண்மை எனில் காந்தியின் கடவுள் தேடல் என்பதே அவரை ஒரு ஊர் சுற்றியாக மாற்றியதா அல்லது எனது கண்களுக்கு புலப்படாத வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?

காந்தி தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு வகையான சத்திய சோதனைகளை சுய பரிசோதனை செய்தாலும் அந்த “இறை தேடல்” என்பதற்கு என்ன வகையான முயற்சிகள் செய்தார் என்ற கேள்விக்கு தாங்கள் விடை அளித்தால் அதை பின் பற்ற முடியவில்லை என்றாலும் முயற்சி செய்து பார்க்க ஒரு வாய்ப்பாக அமையும்.ஏனென்றால் மோட்சத்தை அடைதல் என்பதே வாழ்க்கையின் நோக்கம் என்பதில் எனக்கும் உடன்பாடே.

நன்றியுடன்

சாமி

அன்புள்ள சாமி,

கடவுள் , மோட்சம், ஆன்மீகம் போன்றவை பொதுவான சொற்கள். ஆனால் கூர்ந்துநோக்கினால் அவற்றுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் கொடுப்பதைக் காணமுடியும். ஒருவருடைய கடவுள் அல்ல இன்னொருவரின் கடவுள். லௌகீக வாழ்க்கைக்கு வேண்டியதை கேட்டு மன்றாடினால் மேலே இருந்து கொடுக்கக்கூடிய ஒருவர் என்று சிலர் கடவுளை வரையறுக்கிறார்கள். தன்னுடைய செத்துப்போன மூதாதை என்று ஒருவர் நினைக்கிறார். பூமியிலே நடக்கவேண்டிய எல்லாவற்றையும் சட்டங்களாக ஆக்கி மனிதர்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு மேலே இருந்து கண்காணிக்கக்கூடிய ஒருவர் என்று சிலர் நினைக்கிறார்கள்.

காந்தியின் ஆன்மீகம் அவருக்கே உரித்தானது. காந்தியைப்புரிந்துகொள்ளாமல் அதை புரிந்துகொள்ள முடியாது. ஒரே சொல்லில் காந்தி தன் கடவுளைச்சுட்டிக்காட்டியிருக்கிறார்- நரநாராயணர். துன்பபப்டும் சகமனிதர்களிடம்தான் அவர் கடவுளைக் காண்கிறார். அவர்களுக்குச் செய்யும் சேவையை இறைவழிபாடு என்கிறார். அந்த பக்தி மற்றும் வழிபாடு மூலமே தன்னால் மானுடவாழ்க்கையை கவ்வியிருக்கும் துயரம் அறியாமை தனிமை என்னும் மூன்று தளைகளில் இருந்து விடுபடமுடியுமென நினைக்கிறார். அதையே அவர் மோட்சம் என்று சொல்கிறார்.

இந்த தரிசனத்தை காந்தி அவரது வைணவ மரபிலிருந்து எடுத்துக்கொண்டார். நரநாராயணர் என்ற சொல்லேகூட புஷ்டிமார்க்க வைணவத்தில் இருந்து பெற்றுக்கொண்டதே. அந்த தரிசனம் ராமானுஜரால் வைணவத்துக்குள் நிலைநாட்டப்பட்டது. ராமானுஜர் கைங்கரியம் என்று சொல்வது அதையே. எளியோர் சேவை. அதன் மூலம் அகங்காரம் அழிவதுதான் உண்மையான தியானம்

வைணவம் அந்த விவேகத்தை புராதனமான சமண மரபில் இருந்து பெற்றுக்கொண்டது. மானுடவரலாற்றில் ஆன்மீகம் என்பது சேவையின் வழியாக அடையபப்டும் நிலை என வகுத்த முதல் மதம் சமணம்தான். சமணம்தான் மதத்தை சேவையுடன் இணைத்தது. கல்வி, மருத்துவம், சமரசம் ஆகிய மூன்று தளங்களிலும் செய்யப்படும் சேவையை தன்னுடைய துறவிகளின் ஞானசாதனைக்கான வழியாக சமணம் வலியுறுத்தியது. சமணத்தில் இருந்தே உலகின் பிற மதங்கள் அதைக்கற்றுக்கொண்டன.

காந்தியின் வீடு சமணமும் வைணவமும் சரிபாதியாகக் கலந்த மதப்பின்னணி கொண்டதாக இருந்தது. அவரது அன்னை பேஜாரிசுவாமி என்ற சமணத்துறவியின் பக்தையாகவும் தீவிர வைணவ வழிபாட்டுக்கொள்கை கொண்டவராகவும் இருந்தார். அந்தப்பின்புலத்தில் இருந்தே காந்தியின் ஆன்மீகம் ஆரம்பிக்கிறது

காந்தியின் ஆன்மீகத்தின் மூன்று புள்ளிகள் அதுவே. கல்வி மருத்துவம் சமரசம். அவர் என்றும் ஆசிரியராகவும் மருத்துவராகவும் பணிபுரிய பெருவிருப்பு கொண்டிருந்தார். அப்பணியை அவர் ஆற்றாத நாளே இல்லை. அவரது அரசியல் என்பது சமரசம்தான். அந்த மூன்று சாதனைமார்க்கங்கள் வழியாக அவர் அடைந்த உச்சமே அவரது மெய்ஞானம்

ஜெ

Posted in பொது

எல்லாமே இலக்கியம் தானே சார்?

அன்புள்ள ஜெ.,

உயர்ந்த சமூகம், மகிழ்வான சமூகம், நல்ல இலக்கியம், நல்ல இசை, நல்ல ரசனை – இவற்றை எல்லாம் யார் வகுப்பது, எப்படி வகுப்பது?

“ராஜேஷ்குமார் எழுதுவது உயர் இலக்கியம் அல்ல; ரஜினி படங்கள் உயர்ந்த ரசனைக்குரியவை அல்ல” – என்றெல்லாம் சொல்ல நீ யார் என்ற கேள்வி என் கல்லூரிக் காலத்தில் பலமுறை கேட்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, நான் உணர்ந்தது ஒன்றுதான். எந்தப் புத்தகத்தைப் படித்தால், என் மனம் ஓஷோவின் நூல்களை அதிகாம நாடுகிறதோ, அவையெல்லாம் உயர் இலக்கியமாக உணர்ந்தேன்.

இதையே சுருக்கி இப்படிச் சொல்லலாமா? – ஒரு தனிமனிதனின் ஆன்மீக நாட்டத்தை உருவாக்குவதும் உறுதிப்படுத்துவதுமான எவையும் உயர்ந்ததே- அது சமூகமாயினும், இலக்கியமாயினும் அல்லது இசையாயினும்…

இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமா என்று தெரியவில்லை.. ஆனால், என்னளவில் இது சரியெனப்படுகிறது. தங்கள் கருத்தை அறிய ஆவல்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்,

இந்த கேள்வி எல்லா காலத்திலும் அரைகுறைகளால் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ‘இதையெல்லாம் யார் தீர்மானிப்பது? ஒவ்வொருவருக்கும் ஒன்று கிளாசிக்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் , ‘இலக்கியம்னா இன்னதுன்னெல்லாம் சொல்லிட முடியாது. எல்லாமே இலக்கியம்தான்’ என்று சொல்லக்கூடிய ஒருவன், ’நல்லது கெட்டதுன்னெல்லாம் சொல்ல நாம யாரு? காலம் தீர்மானிக்கட்டும்’ என்று சொல்லக்கூடிய ஒருவன் மனித இனம் இதுவரையில் வளர்த்தெடுத்துவந்த சிந்தனை மரபையோ இலக்கியமரபையோ பற்றி எதுவுமே தெரியாத பாமரன்.

இருபது வயதுக்குக் குறைவான ஒருவன் அப்படிச் சொன்னால் அவனுக்கு ஒரு விளக்கம் கொடுக்கலாம். அதற்குமேல் வயதான ஒருவன் சொன்னால் ‘சரிதான் ராசா, நீ போய் கொப்பரை வியாபாரம் செய், அல்லது கம்ப்யூட்டர் தட்டு, அல்லது கல்லூரியில் வகுப்பெடு…நீ அதற்குத்தான் லாயக்கு’ என்றுமட்டும்தான் பதில் சொல்லவேண்டும். அவனை மீட்க முடியலாம், ஆனால் அதற்கான பெரும் உழைப்பு பெரும்பாலும் வீணாகவே வாய்ப்பு.அந்த வயது வரை தற்செயலாகக்கூட சிந்தனை சார்ந்த, அழகியல்சார்ந்த எதையுமே கவனிக்காத ஒருவன் அதற்குமேல் கவனிக்கவோ புரிந்துகொள்ளவோ வாய்ப்பேயில்லை.

மனிதஇனத்தின் சிந்தனை எழுத்தில் பதிவுசெய்யப்பட ஆரம்பித்து பத்தாயிரமாண்டுகளாகியிருக்கலாம். இத்தனை ஆண்டுகளாக சிந்தனைகள் ஒன்றுடன் ஒன்று மோதி விவாதித்து, ஒன்று கலந்து வளர்ந்து நம்மை அடைந்துள்ளன. நாம் இந்த பிரம்மாண்டமான பிரவாகத்தின் சிறு துளி. நம் வழியாக இந்த பேரொழுக்கு அடுத்த காலகட்டத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த ஒழுக்கில் இன்று வரை திரட்டப்பட்ட அறிதல்களினூடாகவே எது உயர்ந்தசிந்தனை என்றும் எது நல்ல இலக்கியம் என்றும் தீர்மானிக்கக்கூடிய அளவுகோல்கள் உருவாகியிருக்கின்றன. அந்த அளவுகோல்கள் பண்பாடுதோறும் வேறுபாடுகள் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த நுண்ணிய வேறுபாடுகளை மீறி ஒட்டுமொத்தமாக அடிப்படையான மானுடப் பொதுத்தன்மையும் கொண்டிருக்கின்றன. அந்தப்பொதுத்தன்மைதான் மனிதகுலம் ஒன்று என்பதற்கான ஆதாரம். மனிதப்பண்பாடு என்பதன் சாராம்சம்.

இந்த சாராம்சத்தை விதிகளாக கொள்கைகளாக புறவயமாக தொகுத்து வைக்கமுடியாது. ஏனென்றால் அவை கையில் உள்ள இலக்கியத்தையும் கலைகளையும் சிந்தனைகளையும் கொண்டு உருவாக்கப்படுபவை. புதியதாக உருவாகி வருவனவற்றை அவை கட்டுப்படுத்தாது.

ஆனால் மனிதகுலத்தின் கூட்டுப்பிரக்ஞையில் அவர்கள் அறியாமலேயே அந்த அளவுகோல்கள் உள்ளன.ஒரு சிந்தனையை ,கலையை ,இலக்கியத்தை எதிர்கொள்ளும்போது ஒரு பண்பாட்டின் மிகச்சிறந்த மனங்கள் அந்த அளவுக்கோல்களைக்கொண்டுதான் முடிவுகளை எடுக்கின்றன.

நான் எப்போதுமே சொல்வது இதுதான். மனிதகுலம் தான் இதுவரை அடைந்த வெற்றிகளையே செவ்வியல் என்று சொல்லி தொகுத்துக்கொண்டுள்ளது. அந்தச்செவ்வியல்தான் அதற்குப்பின்னால் வருவனவற்றின் தரம் என்ன என்பதை தீர்மானிக்கிறது. சங்க இலக்கியம்தான் அதன்பின் வந்த இலக்கியங்களில் எது முக்கியமானது என்பதை தீர்மானிக்கும் அளவுகோல்களை உருவாக்கி அளிக்கிறது. சங்க இலக்கியம் சிலப்பதிகாரத்தை முதன்மையானதாக ஆக்குகிறது. சங்க பாடல்களும் சிலம்பும் சேர்ந்து ஆழ்வார்பாடல்களை முதன்மையாக்குகின்றன.

இது ஒரு தொடர்ச் செயல்பாடு. நம் வரை இது வந்து சேர்ந்திருக்கிறது. நாளை நம்மைத்தாண்டிச்செல்லும். நாம் இன்று எழுதுவதில் எது இலக்கியம் எது இலக்கியமல்ல என்று தீர்மானிப்பது சங்க இலக்கியங்கள் முதல் புதுமைப்பித்தன் வரை வந்து சேர்ந்திருக்கும் செவ்விலக்கியத் தொடர்ச்சிதான். கிரேக்கநாடகங்கள் முதல் தல்ஸ்தோய் வரை வந்து சேர்ந்திருக்கும் உலகச்செவ்விலக்கியத் தொடர்ச்சிதான்.

அதுதான் ராஜேஷ்குமார் எழுதுவது வெற்று வணிக எழுத்து அசோகமித்திரன் எழுதுவது இலக்கியம் என ஐயம்திரிபற புரியவைக்கும் அளவுகோல். அந்த பெருமரபின் ஏதேனும் ஒரு பகுதியுடன் எளிய அறிமுகம் ஒருவனுக்கிருந்தால் அவனுக்கு இக்கேள்வியே எழாது. தொடர்பற்ற மூடனைச் சொல்லிப்புரியவைக்கவும் முடியாது

அந்த மூடர்களை விவாதங்களில் வாயடைக்கச்செய்ய இப்படிச் சொல்லலாம். இன்று ஒரு நிறுவனம் ஒரு செல்பேசியை அறிமுகம் செய்கிறது. அது தரமானது அல்லது தரமில்லை என்று சொல்லமுடியுமா முடியாதா? முடியும். ஏனென்றால் சாம்சங் அல்லது ஆப்பிள் நேற்றுவரை கொண்டுவந்த செல்பேசியை விட ஒரு படி மேலானதாக அது இருந்தால்தான் அது நல்லது. அதாவது நேற்றுவரை வந்துசேர்ந்திருந்த தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கவேண்டும் அந்த செல்பேசி. செல்பேசித்தொழில்நுட்பம் என்ற பேரொழுக்கு அந்த செல்வழியாக முன்னகர்ந்திருகக்வேண்டும்.

மாறாக தொண்ணூறுகளில் வந்த செல்பேசியை அந்த நிறுவனம் கொண்டுவந்துவிட்டு ‘தரம் பிரிக்கவும் மதிப்பிடவும் எவருக்கும் உரிமை இல்லை. இது எங்களுடைய தயாரிப்பு,எங்களுக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் பிடித்திருக்கிறது’ என்று வாதிட்டால் அதைவிட முட்டாள்தனம் உண்டா? இன்றுவரை வந்துள்ள தொழில்நுட்பம் வரப்போவதற்கான அளவுகோல்களை உருவாக்குகிறது. இன்றுவரை வந்துள்ள சிந்தனையும் கலையும் இலக்கியமும் வரப்போவதை மதிப்பிடும் அளவுகோல்களை உருவாக்குகின்றன. அவ்வளவுதான்

ஜெ

Posted in பொது

பம்பி

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,
வணக்கம்.சிறுவயதில் எனது தந்தை ‘ரத்ன பாலா’ என்ற சிறுவர் மலரை தொடர்ந்து வாங்கித்தந்தார்.நான் பாடசாலைப் புத்தகத்திற்கு வெளியே வாசிக்கத்தொடங்கியதற்கு ரத்ன பாலாவும் ஈழநாடு பத்திரிகையும் முக்கிய காரணங்களாக அமைந்தன.இன்றைக்கு அப்பாவை நான் நன்றியுடன் நினைத்துக் கொள்ளுபவற்றில் வாசிப்பு பழக்கத்தை அவர் எனக்கு உருவாக்கியது முதன்மையானது.இல்லாவிட்டால் நான் ஒரு வேலைக்கு மட்டும் படித்த கிணற்றுத் தவளையாகவே இருந்திருப்பேன்.

இப்பொழுது தமிழ் நாட்டில் ரத்ன பாலா வருகின்றதோ தெரியவில்லை.ரத்ன பாலாவில் பபீனா தீவு என்று ஒரு சித்திரக்கதை இரு இதழ்களில் வெளிவந்திருந்தது.கானுயிர்களை கதை மாந்தர்களாகக் கொண்ட அக்கதையை பல பல முறை வாசித்திருப்பேன்.உண்மையில் நானும் அவர்களுடனேயே வாழ்ந்தேன்.இன்றும் மறக்க முடியாத அற்புதமான புனைவுலகு.

பம்பி(Bambi) என்ற மான்குட்டியை பற்றிய போத்துக்கேய மொழிப்பாடலை தற்செயலாகக் கேட்டேன்.அந்தப் பாடலில் ஏற்பட்ட ஈர்ப்பினால் பம்பி என்ற வால்ட் டிஸ்னியால் 1942 இல் தயாரிக்கப்பட்ட படத்தைப் பார்த்தேன்.எழுபது வருடங்களாகிவிட்டாலும் புதியது போன்றே இருக்கின்றது.படத்தைப் பார்த்த பொழுது நான் மீண்டும் பபீனா தீவு வாசித்த சிறுவனாக மாறி காட்டுக்குள் சென்றுவிட்டேன்.மனம் இலேசாக இருக்கிறது.உடனேயே உங்களுக்கு இதை எழுதுகிறேன்.

பாடலிற்கான சுட்டி.

பம்பி படத்திற்கான சுட்டி.

ந. சிவேந்திரன்
YouTube – Videos from this email

Posted in பொது

குடும்பவரலாறு

குடும்ப வரலாற்றை பற்றி பல பேரறிஞர்கள் சொல்லி உள்ளார்கள். ஆனால் பெரும்பாலும் அது தாத்தா , கொள்ளு தாத்தா பெயர், ஊர் , தொழில் மட்டும் சொல்வதாக உள்ளது. குடும்ப வரலாறு என்பது அவ்வளவு தானா ?

ரமேஷ்

அன்புள்ள ரமேஷ்

மேல்நாடுகளில் குடும்ப பைபிள் என்ற ஒரு ஏட்டை தலைமுறை தலைமுறையாக எழுதிச்சேர்க்கும் வழக்கம் உள்ளது.குடும்பத்தின் வம்சவரிசை, முக்கியமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பதிவுசெய்வார்கள். இது ஒட்டுமொத்தமாக சமூக வரலாற்றை எழுதவும் இலக்கியப்படைப்புகளுக்கும் மிகப்பெரிய ஆவணத்தொகையாக உள்ளது.

நமக்கு பொதுவாக பதிவுசெய்யப்பட்ட வரலாறு இல்லை. அந்த மனநிலையும் இல்லை. நாம் செவிவழி வரலாற்றையே வைத்திருக்கிறோம். தேசத்திற்கும் குடும்பத்திற்கும். செவிவழி வரலாற்றின் சிக்கல் என்னவென்றால் ஒரு தலைமுறை அதில் ஆர்வமிழந்துவிட்டால் அது அறுபட்டு பிறகு மீட்க முடியாதபடி ஆகிவிடும் என்பதே

உண்மையில் நமக்கு ஆர்வமிருந்தால் நம்முடைய குடும்பத்தின் வரலாற்றை ஓரளவேனும் எழுதிவிடமுடியும். பலரிடமிருந்தும் தகவல்களை திரட்டி தொகுத்து எழுதப்போனால் தெரியும் எவ்வளவு தகவல்கள் கிடைக்கின்றன என்று. ஆர்வமோ தொடர்முயற்சியோ இல்லாத நிலையில் கேட்கும்போதுதான் வரலாறே இல்லையே என்று தோன்றுகிறது

ஒரு குடும்பத்தின் வரலாறு ஒருவேளை பெரியதாக ஏதும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த வரலாற்றின் ஒரு பகுதியாக அதை நாம் பொருத்திப்பார்க்கமுடிந்தால் அது மிகப்பெரிதாக வளர்வதைக் காணலாம். ஒட்டுமொத்த வரலாற்றை இத்தகைய துளிகள் வழியாக பிரம்மாண்டமாக் ஆக்கிக்கொள்ளமுடியும்

உதாரணமாக தமிழ்க் குடும்ப வரலாற்றில் மிகப்பெரும்பாலானவற்றில் குறைந்தது இரண்டு இடப்பெயர்வைப்பற்றிய குறிப்புகள் இருக்கும். ’ந்ம்ம பூர்வீகம் குளித்தலைப்பக்கம். அங்கே இருந்து நாம தஞ்சாவூருக்கு வந்தோம். உங்க கொள்ளுத்தாத்தா காலத்திலே திருச்சியிலே குடியேறிட்டோம்’ என்று சுருக்கமாகச் சொல்வார்கள்

அந்த குடிபெயர்வுகள் நிகழ்ந்த வருடங்களை பிற குடும்பங்களில் குடிபெயர்வு நிகழ்ந்த வரலாற்றுடன் ஒப்பிட்டால் ஒன்று தெரியும். முதல் குடிபெயர்வு 1770களில் அல்லது 1889 களில் இரு தாதுவருட பஞ்சங்களை ஒட்டி நிகழ்ந்திருக்கும். இரண்டாவது பெயர்வு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் போரை ஒட்டி உருவான புதுவகை வேலைவாய்ப்புகளின் விளைவாக நிகழ்ந்திருக்கும்.

இத்தகைய சிறு தகவல்கள் வழியாகவே நாம் பொதுமக்கள் வரலாற்றை எழுதமுடியும். அமெரிக்கா அல்லது ஐரோப்பாவின் வரலாற்றெழுத்தில் இரண்டு வகையான வரலாறுகளைக் காணலாம். அரசியல் வரலாறு, மக்கள் வரலாறு. மன்னர்களும் போர்களும் அடங்கியது அரசியல் வரலாறு. பண்பாடும் சமூகமும் வளர்ந்து வந்ததை விவரிப்பது மக்கள் வரலாறு

நம்முடைய அரசியல் வரலாறே இன்னமும் முழுமையாக எழுதப்படவில்லை. ஆகவே மக்கள் வரலாறு ஆரம்பிக்கப்படவே இல்லை என்பதில் ஆச்சரியம் இல்லை. நம் சமூகத்தின் சாதியமைப்பு, கிராமிய அமைப்புகள், விவசாயமுறையின் பரிணாமம், சமூக இடப்பெயர்வுகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக சித்தரிக்கும் மக்கள் வரலாறு இனிமேல்தான் எழுதப்படவேண்டும்.

அத்தகைய மக்கள் வரலாறு எழுதப்படுவதற்கான முதல் தேவை குடும்பவரலாறுகள். அவையே அதற்கான மக்கள் வரலாறு எழுதப்படுவதற்கான கச்சாப்பொருட்கள். எவ்வளவு குறைவாக இருந்தாலும் நாம் நம் குடும்ப வரலாற்றை பதிவுசெய்யலாம். இன்று இணையம் இருப்பதனால் வெளியிடும் பிரச்சினையே இல்லை. ஒட்டுமொத்தமாக தொகுக்கப்படும்போது ஒவ்வொரு சிறு தகவலுக்கும் பெரும் முக்கியத்துவம் வந்து சேரும்

மக்கள் வரலாற்றில் இருந்தே மேலான புனைவிலக்கியம் உருவாக முடியும். இன்றைய மக்கள் வரலாறு ஓரளவேனும் இலக்கியத்திலேயே உள்ளது. ஜோ டி குரூஸின் நாவல்கள் இல்லையேல் இங்கே மீனவர்கள் வாழ்ந்திருந்தமைக்கு வரலாற்றாதாரமே இல்லையே. அவரது நாவல்கள் ஒருவகை குடும்ப வரலாறுகள் அல்லவா?

ஜெ

Posted in பொது

வயக்காட்டு இசக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,

வணக்கம் . நேற்று அ கா பெருமாள் எழுதிய வயக்காட்டு இசக்கி படிதேன் . அவர் ஒரு researcher ஆகதான் தணுர்மலயான் ஆலயம் புத்தகம் எனக்கு காட்டியது . ஆனால் அவரும் ஒரு அற்புதமான கதை சொல்லி என்று இந்த வயக்காட்டு இசக்கி எனக்கு காட்டியது .

ராபாடிகளை பற்றியான கதையையும் , அவர்களின் வாழ்க்கையையும் ஒரு கதை போலவே சொல்லி செல்கிறார் .

ஓநாயின் மலத்தை தேய்த்து குறி சொலவருவதால் தான் அவர்களின் அருகில் நாய் வருவதில்லை மற்றும் ராபாடிகளை உழவுதொழிலை வாழ்த்தி வெகுமதி பெரும் பாடகர்கள் போன்ற தகவல்களையும் தனக்கே உரித்த முறையில் கல்வெட்டுகளின் சான்றுடன் சொல்லி செல்கிறார் .

ராபாடியின் பாட்டில் இருந்து பல நெல்வகைகளை பட்டியல் இடுகிறார் . அப்படியே நெல்வயல்களை தாக்கும் நோய்களை பற்றியும் அதை தடுபதற்கான முறைகளையும் சொல்லுகிறார்.

இசக்கியின் கதையை சொல்லி முடிக்கும்போது அவள் கணவன் மேடான அவள் வயிற்றை தடவி தடவி அழுதான் என்று அவர் சொல்லி செல்லும் இடம் ஒரு உச்சகட்ட இலக்கியமாக எனக்கு பட்டது . ( அந்த அளவுக்கு எனக்கு ரசனை குறைவோ ? (: (: ). எப்பொதும் சிறுகதையோ அல்லது நாவலோ படித்து முடித்த பின் அதில் வரும் காட்சிகள் நம் மனதில் ஓடிகொண்டே இருக்கும். இதுவும் படித்ததில் இருந்து ஓடிகொண்டே இருக்கிறது . இரவெல்லாம் அவன் அவள் வயிற்றை தடவிய காட்சியே கனவாக ஓடியது .

முடிக்கும் போது இப்படியாக வயல்வெளியை காப்பாற்ற உயிரை விட்டவர்கள் தெய்வம் ஆனர்கள். ஆபுர்வமான நெல்வகைகளை பயிரிட்டு பரிமாறி கொண்டவர்கள் மட்டும் மனிதராய் செத்து போனார்கள் என்று முடித்து ஒரு research முடிந்த உடன் researchers எல்லாம் ஒரு conclusion கொடுப்பார்கள் என்ற நியதியையும் காப்பாற்றி விட்டார் .

ஜெ இதை படித்த பொது என் தாதா என்னை அவர் மடியில் உட்காரவைத்து கதை சொல்லிய காலம் மனதில் தேர் ஓடுவதுபோல் ஓடியது . அவரும் தகவல்களை சொல்லும் பொது இடையில் கதையை போட்டு அவர் சொன்னது கதையா என்று நினைபேன் . என் தாதா விடம் பேசியது போலவே இருந்தது இதை படித்து முடித்தபின் . உங்களின் அறம் சிறுகதைகளை போலவே எனக்கு இந்த வயக்காட்டு இசக்கியும் இதயத்துக்கு நெருக்கமானவை.

அன்புடன்

பன்னீர் செல்வம்

அன்புள்ள பன்னீர்

இந்த கதைகளை நான் 2000 வாக்கில் தட்டச்சு செய்து விக்கிக்காக கொடுத்தேன். இணையத்தில் உள்ளன என நினைக்கிறேன்

ஜெ

அ கா பெருமாள் விக்கி மூலம்

அ கா பெருமாள்

Posted in பொது

சடங்குகள் ஒரு கடிதம்

ஆசிரியருக்கு ,

வணக்கம். தங்கள் சடங்குகள் குறித்து படித்தேன். முழுக்க , முழுக்க உண்மை. கடும் சைவமான என் அம்மா தனது பேத்திகளுக்கு ஆடு வெட்டி படையல் போட பெரும் பிடிவாதம் கொண்டார்கள். அம்மாவின் ஆசையா , ஆடா என்று மூன்று நிமிடம் குழம்பி அப்புறம் அம்மா சொன்னதைதான் செய்தேன். நாத்திகம் பேசியதை பின்பு பிரியாணி சாப்பிடுகையில் மறந்து போனேன். சாப்பிட்டு முடித்த பின் நியாபகம் வந்தது. 🙂 அம்மா தனியாக சைவ உணவு சாப்பிட்டார்கள் என்பது தனி கதை. குல சாமி சன்னதிக்கு முன்னால் துண்டால் திரை பிடித்து ஆடு பலி நடந்தது. சாமியும் சைவந்தான் என நினைத்து கொண்டேன். பின்னொரு நாளில் உங்கள் சமண பௌத்த கட்டுரை படிக்கும் பொது இது சமண சாமியோ என்று தோன்றியது. உருவமே இல்லாமல் பெரும் பாறை ஒன்றில் கோபுரம் இல்லாமல், சன்னதி இல்லாமல் சாமி இன்றும் உண்டு. அதற்ககு வாயில் துணி கட்டி பூசை செய்யும் பூசாரியும் உண்டு. அவர் முழு நேர விவசாயி, பகுதி நேர பூசாரி. வைதீக மந்திரம் இன்றி பூசை உண்டு. இன்னொரு குல சாமியும் உண்டு. அது பெண் தெய்வம். அதற்கு அப்பாவே பகுதி நேர பூசாரி.

பிற மதங்களோடு இந்து வாழும் முறையை ஒப்பிடவே முடியாது. எந்த மூல நூலும் , வைதீக வடிவும் , வேதம் ,புராணம் தெரியாமல் என் குல கோவிவிலில் பூசை செய்யும் பூசாரியும் இன்றைக்கு இந்து என அழைக்க படும் பிரதிநிதியே. அவருக்கும் , என் கிராமத்துக்கும் எந்த தத்துவ வடிவும் தெரியாது. அது அவர்கள் வாழும் முறை. பூஜை முறைகள் அவர் பாட்டனார் செய்தது, பாட்டனாரின் பாட்டனார் செய்தது , எனவே அவர் செய்கின்றார். எங்கள் பூசாரி கடுமையான சாதி நம்பிக்கை உடையவர். அது மிக வெளிபடையானது. அதில் ஒளிவு மறைவு சுத்தமாக கிடையாது. அது நில உடைமையின் நீட்சியென உரையாடலில் தெரியும்.

சாதியும் சடங்கும் படிக்க தெரிந்து கொள்ள வெளியில் மட்டும் பார்க்க வேண்டியதில்லை, உள்ளுக்குளும் பார்க்க வேண்டும் என்ற வரிகள் முழு உண்மை . திரண்ட இந்த இந்திய வரலாற்றின் ஒரு துளியே நான் , என் குடும்பம், என் கிராமம். இந்திய இயங்கு தன்மை , வடிவம் , பிடிவாதம், மூட நம்பிக்கை, சாதி குறித்த எண்ணங்கள் எல்லாம் இந்த துளியில் உண்டு.

அன்வர் பாலசிங்கத்தின் கருப்பாயீ என்ற நாவல் படித்தேன். மனத்தினை உலுக்கியது. இன்று பேச படும் பிரச்சனைகளின் ஒருபுரம்தான் அது. இந்து எனும் முத்திரை கொண்டு தொகுக்காமல் இருந்திருந்தால், இந்த இன குழுக்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை வேறு விதத்தில் தீர்த்து இருக்கலாமா என்றும் படுகின்றது. இந்து முத்திரைதான் குல நம்பிக்கை, குல பழக்க வழக்கம் எல்லாம் மத நம்பிக்கை ஆக்கி குழப்பி விட்டதா என தெரியவில்லை. இந்த முத்திரை வைதீகத்தினை தலைமை பீடம் கட்ட மட்டுமே பயன் பட்டது.

வைதீகம் இனக்குழுக்களை இந்து முத்திரைக்குள் தொகுக்கவில்லை, அவர்களை ஒன்றாக்க வில்லை. மாறாக அந்த இன குழுக்களின் நம்பிக்கைக்கு, சடங்குகளை மட்டும் ஓரளவு வைதீக படுத்தியது. இந்த பழங்குடி ,குலம், இனம், சாதி என தொகுக்க பட்ட சமுகம், அதன் அடுத்த கட்டம் நகரவில்லை. இந்த தேக்கம் தாண்டாததே இங்கு பிரச்சனை. நீ, நான் ஒரே மதம், ஒரே நிறம், ஒரே ஊர் , ஒரே பொருள் வலிமை ஆனால் நான் ஏன் தாழ்த்த பட்டவன் அன்வர் பாலசிங்கதின் நாவலில் என்ற கேள்வி எழுந்த பொழுது அதை இந்து மத தலைமைகள் விளங்கிகொள்ளவில்லை, இன்னமும் விளங்கி கொள்ளவில்லை . தங்கள் அதிகாரம் திரட்டி கொள்ள , தங்கள் பழம் பெருமை பேச மட்டுமே அவர்கள் செயல் பட்டார்கள், செயல் படுகின்றார்கள். விவசாயம் வாழும் முறை , தொழில் என இரு வடிவிலும் இருந்ததும் பிரச்சனைதான். கிராமத்துக்கு ஒரு காந்திக்கு எங்கு போவது? இந்த இடத்தில் நேரு , அம்பேத்க்கார் நினைத்த பெரும் ஆலைகளே , தொழில் அமைபுகளே இந்த கிராம அமைப்பை உடைத்து பிறப்பு மறுத்து திறன் சார் மாற்று அதிகார அமைப்பை உண்டாக்க முடியும் என்று படுகின்றது. நீங்கள் பெரு நகரங்களில் இந்த மாற்றங்கள் வந்தது குறித்து குறிப்பிடு இருந்தீர்கள். உரிமை மறுக்கபடும் இனக்குழுக்கள் தங்களை ஒத்தவர்களை தொகுத்து கொண்டு அதிகார, பொருள் பீடங்களை நோக்கி புது விழுமியங்களோடு நகர்வதும் மிக முக்கியம். தொகுத்தல் பிரதிநித்துவ அரசியல் உலகில் அவர்களை வலிமை ஆக்குகின்றது. அவர்களை தங்கள் வலிமையை உணர செய்கின்றது. அவர்களை உரையாடலுக்குள் அவர்களுக்கு கொடுத்தாக பட வேண்டிய மரியாதையுடன் கொண்டு வருகின்றது.

அதிகாரம் அடக்கு முறையில் பூரணமாகின்றது. நவீன தொழில் உலகில் கேட்டில் நிற்கும் வாட்ச்மேன் வணக்கம் வைக்காதது குறையேன நினைத்து வாட்ச்மேனை திட்டி ஆறுதல் அடைந்த கடுமையான பகுத்தறிவு பேசும் உறவினர் , ஆடு வெட்டுபவனை ஒன்றாக உணவு சாப்பிட விடாத மற்றொரு சொந்தகாரரை கண்டால் கிண்டல் செய்வது ஒரு வேடிக்கையான காட்சி. இவர் நவீன ஜமீன்தார். அதை சொன்னால் அவர் ஆட்சேபித்தார். பொருளை கொண்டு சாதியை மாற்றி இருக்கின்றார். சாதியில் எதிர் பார்த்த அதே அதிகாரத்தினை இன்று பொருளின் மூலமாக எதிர்பார்க்கின்றார். பந்தியில் அவர்க்கு ஒரு தனி சிறப்பு கவனிப்பு இருத்தல் அவருக்கு தேவை படுகின்றது. அது இல்லாமல் பிற விருந்தினருக்கு உள்ள மரியாதையை அவருக்கு தரும் பொழுது மரியாதை குறைவாய் நினைக்கின்றார். தன்னை துருத்தி கொள்லல் அவருக்கு முக்கியம். இது ஒரு ஆதி வேட்கை என்றே நம்ப வேண்டி இருக்கின்றது. இதை மட்டு செய்ய நவீன குடிமை விழுமியங்களுக்குதான் செல்ல வேண்டும்.

சாதி, மத விழுமியங்களுக்கு மாற்று குடிமை விழுமியங்களே. பணக்காரனை வில்லனாக பார்த்து அதே நேரம் பணம் சேர்க்கும் வெறியோடு அலையும், பொங்கலுக்கு 100 ரூபாய் கொடுக்கும் குடிமை சமூகத்திடம் மாற்று விழுமியங்கள் சென்று சேர வேண்டும். சேரும் என்ற நம்பிக்கை உண்டு. காந்தி சொன்ன அதிகார அடுக்குகள் உயரம் கொள்ளாத குடிமை சமூகம் மிக சுதந்திரம் ஆனது. அங்கு எல்லோருக்கும் உரிமை உண்டு, உரிமை காக்கும் பொறுப்பு உண்டு. அது ஒரு உன்னத சமுதாயம். இன்று பொறுப்பு இல்லாத உரிமையே பெரும் சிக்கல் தருகின்றது.

ஈவெரா அவர்கள் படம் கொண்ட கிராமங்களின் சாதி வெறி பற்றி சொன்னீர்கள். அதே நேரம் காந்தி படத்தினை 500 ரூபாயில் போட்டு , காந்தியை பீரங்கி வண்டியில் சவ ஊர்வலம் செய்த காந்திய அரசியல் வாரிசுகளை கொண்ட சமூகம் இது என்பதும் உங்களுக்கு தெரியும். ஏழைகளின் தேசத்தில் ஜனாதிபதி மாளிகை கங்கா அபிஷேகம் , கவர்னருக்கு சிறப்பு ரயில் என காந்தி கட்சியின் வேடிக்கை கொண்டதே இந்த சமூகமே , பெரியார் படம் போட்டு சாதி பேசுவோரையும் கொண்டுள்ளது . காந்தியின் மனசாட்சி என சொல்லபட்டவர் குல கல்வி செய்தார். அரசிடம் காசு இல்லாமல் அவர் செய்யவில்லை, ஏனென்றால் அவருக்கு பின்னர் இரண்டாண்டுகளில் மற்றொரு முதல்வர் இலவச உணவோடு மாநிலமெங்கும் கல்வி சாலை அமைத்தார். இந்த சூழலில் ஈவெரா பிரதிநிதித்துவ அரசியலை நெறி செய்ய சொன்னார். பிரதிநிதித்துவ அரசியலே அரசு. அதுவே மக்களாட்சியின் குறியீடு. அதுவே சமூகம் நகரும் வழி. அது குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் சிக்கி தேங்காமல் தவிர்க்க சொன்னார். அவர் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட சிலரிடம் சென்று சிக்க காரணமாக நினைத்ததை எதிர்த்தார். அவர் எதிர்ப்பு, அவர் நினைத்த மக்களாட்சி அமைப்பு முறை அவருடைய கால கட்டத்தில் மிக முக்கியமானது. தீர்க்கதரிசிகளை அல்லது குறி சொல்பவர்களை தேடி நின்று ஒற்றை வரி பஞ்ச் டயலாக் பேசி அவரை பின் பற்றுவதாக நினைத்த நவீன ஜமீந்தார்களிடம் அவர் கருத்தோட்டம் சிக்கி நின்று விட்டது. அது தொடர் வழியில் விரிவு படுத்தபட வில்லை. காந்தியின் போராட்டம் என்பது உண்ணாவிரதம் என்று தவறாக புரிந்து கொள்ளும் சமூகமே , ஈவெரா பாதை எனபது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினை எதிர்ப்பது என்று தவறாய் புரிந்து கொள்கின்றது என்று நம்புகின்றேன்.

நிர்மல்

Posted in பொது

விவாதமுறை பற்றி மீண்டும்

ஆசிரியருக்கு ,

தொடர்ந்து சிந்திக்கும் நபர்களுடன் நான் உரையாடிக்கொண்டு இருக்கிறேன் என்ற முறையில் என்னால் ஒரு அவதானிப்பை சொல்ல முடியும் . நமது விவாதச் சூழல் மிக பலவீனமாக இருக்கிறது. ஒரு கருத்தை சொல்லும் போதோ அல்லது மறுக்கும் போதோ நாம் எப்படித் “தென்படுகிறோம்” என்ற அக்கறை மற்றும் அச்சத்துடனேயே உள்ளனர் .

இங்கு பொதுவாக பிரதானமாக மூன்று வகையில் விவாதங்கள் நடக்கிறது :

1. அன்றாட தேசிய/ மாநில நடப்புகள் [சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு, கூடங்குளம், இணைய கருத்து சுதந்திரம் போன்றவை] .

2. அரசியல் சமூகப் பிரச்சனைகள் [அரசியல் மதக் கலப்பு , இடது சாரிகள், Rss நிலைப்பாடு , தேவர் ஜெயந்தி படுகொலை, தருமபுரி கலவரம் , இட ஒதுக்கீடு போன்றவை ]

3. அரிதாக சித்தாந்த, தத்துவப் பிரச்சனைகள் [சூழல் மனிதனை உருவாக்குகிறதா, நீதி இடத்துக்கும் காலத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறதா . கொள்கை -நிறுவன உறவு போன்றவை]

இதில் எவ்வகையில் யாருடன் விவாதித்தாலும் முதல் கட்டத்திலேயே சில தடை அரண்களை சந்திக்க வேண்டும், அதற்கு மேல் நகரவும் முடியாது.

உதாரணமாக:

1. அவ்வாறு பொதுமைப் படுத்தக் கூடாது.

2. அவ்வாறு ஒப்பிட முடியாது.

3. அவ்வாறு பிரித்து அறிய முடியாது அல்லது வேறுபடுத்த முடியாது.

4. அவ்வாறு வகைப் படுத்த முடியாது.

5. அவ்வாறு அறுதியிட்டுக் கூறி விட முடியாது போன்றவை .

மேலும் விவாதத்தின் போது கருத்து சொலும் நபர் தனக்கு சில விதமான பிம்பம் வேண்டுமென விரும்புகிறார் அவைகளில் மதச் சார்பின்மை , முற்போக்கு, மற்றும் நடுநிலைமை ஆகியன முக்கியமானவைகள். மேற்சொன முதல் இரண்டு வகை பேசுபொருட்களில் மதச்சார்பின்மை மற்றும் முற்போக்கு கட்டாயம் , கடைசி தத்துவ சித்தாந்த விவாதத்தில் நடுநிலைமையும் , அனைத்து தரப்பையும் பரிசீலிக்கும் தன்மையும் கட்டாயம்.

“இவர் சொல்வது சரி அதற்காக அவர் சொல்வதை முற்றிலும் புறக்கணிக்க முடியாது , அதற்காக இவர் சொல்வதை முற்றிலும் ஏற்க முடியாது, அவர் சொல்வதிலும் நியாயங்கள் உள்ளது , இவர் குற்றச் சாட்டை நாம் ஒதுக்கிவிட முடியாது ” போன்ற நியாயவாதிகளின் வாதங்களைக் கேட்டிருப்பீர்கள் .

நாம் எதையும் நிலைக்க விடாமல் , சட்டகப் படுத்தாமல் , எல்லைகளை வகுத்துக்கொள்ளாமல் விலகியும் கடந்தும் விவாதித்தல் என்ற முறையைக் கையாள்வது எளிது, யார் வேண்டுமானாலும் எதைப் பற்றியும் விவாதிக்கலாம் . ஆனால் கொடுப்பதும் பெறுவதும் இருக்காது.

உங்கள் நோக்கில் தமிழக அறிவுலகின் விவாத ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது, காரணம் என்ன ? தீர்வு என்ன ?

கிருஷ்ணன் .

அன்புள்ள கிருஷ்ணன்

நான் தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு இலக்கியவிவாதக்கூட்டங்களில் இருபதாண்டுக்காலமாக பங்கெடுத்துவந்த அனுபவம் கொண்டவன். தொழிற்சங்க விவாதங்களில் அதற்கும் அதிகமான காலமாக பங்கெடுத்து வருகிறேன். நமக்கு விவாதிக்கும் பயிற்சி இல்லை என்பதை எப்போதுமே கவனித்துவருகிறேன். பெரும்பாலான விவாதங்கள் கட்டற்றமுறையில் நாலா பக்கமும் பரவிச்செல்வதையே காணமுடிகிறது. பலசமயம் அது மனவருத்தங்களில் சென்று முடியும். விவாதம் முடிந்தபின் அதன் விளைவாக எவரிடமும் எதைப்பற்றியும் எளிய தெளிவுகூட எஞ்சியிருக்காது

இங்கே ஒரு சாதாரண சொற்பொழிவுக்குப்பின் கேள்விபதில் நிகழ்ச்சியை வைத்தால்கூட அந்தச்சொற்பொழிவு உருவாக்கிய எல்லா சாதகமான மனப்பதிவுகளும் அழிந்துவிடுவதைக் காணலாம். பேசப்பட்ட விஷயத்துக்குச் சம்பந்தமே இல்லாத கேள்விகளே பெரும்பாலும் எழும். கேள்விகள் சாதாரணமாக மிகமிக சம்பிரதாயமானவையாக, எங்கும் எவரும் கேட்கக்கூடியவையாக இருக்கும். உதாரணமாக ‘உங்கள் படைப்புகளில் நீங்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என்பதுபோல.

அபூர்வமாக வேறுவகையான வினாக்கள் வரும். அவை மூர்க்கமாக சீண்டக்கூடியவை. ஒருமுறை வளைகுடா நாட்டில் ஒரு ஆசாமி காடு நாவலில் ஒரு கதாபாத்திரம் சொல்லும் வசனத்தை நான் சொல்லும் கொள்கைப்பிரகடனமாக எடுத்துக்கொண்டு கேள்விகேட்டு தன்னம்பிக்கையுடன் புன்னகை செய்தார். அடுத்தக்கட்டத்திற்குச் சென்று அவதூறுகளையும் வசைகளையும் சொல்லக்கூடிய வினாக்களும் இருக்கும். அரங்கில் தன்னையும் எழுத்தாளன் அல்லது அறிவுஜீவி என நினைக்கும் ஒருவர் இருந்தார் என்றால் அந்தஎன

ஏன் நம்மால் விவாதிக்கமுடியவில்லை? முதன்மையான காரணம் நமக்கு அது எங்கும் கற்றுத்தரப்படுவதேயில்லை என்பதுதான். நமுடைய பள்ளிகளில், கல்லூரிகளில் எங்கும் நாம் விவாதிப்பதே இல்லை. கற்பித்தல்களையும் பேருரைகளையும் கேட்டு திரும்புவது மட்டுமே நமது கல்வியாக உள்ளது. கல்விக்கூடத்திற்கு வெளியே அறிவார்ந்த பயிற்சியைத் தரக்கூடிய எந்த அமைப்பும் இங்கே இல்லை. அரசியல்,ஆன்மீகம் என எந்த தளத்திலும் அறிவுப்பயிற்சிக்கு வழியில்லை.

அத்துடன் இந்த அரைகுறைக்கல்வியைக் கற்றதும் நாம் கற்றவர்கள் என்ற அபத்தமான தன்னகங்காரத்தைவேறு அடைந்துவிடுகிறோம். ஆகவே எங்கும் எப்போதும் அந்த அகங்காரத்தை மட்டுமே முன்னிறுத்துகிறோம். அந்த அகங்காரம் ஒரு பெரிய தகுதி என நினைக்கிறோம். அகங்காரத்தை சுயகௌரவம் என்று விளக்கிக்கொள்கிறோம். ஆகவே எதையுமே கவனிக்காதவர்களாக எல்லாவற்றையும் அந்த அகங்காரத்தைக்கொண்டு தடுத்துநிறுத்திவிடுபவர்களாக மாறிவிடுகிறோம். சுந்தர ராமசாமியின் முன்னும் ஜெயகாந்தனின் முன்னும் அமர்ந்து அர்த்தமில்லாமல் பேசிக்கொண்டே இருக்கக்கூடியவர்களை, அவர்கள் முக்கியமாகச் சொல்லக்கூடியவற்றைக்கூட அபத்தமாக உடனே மறுத்துப்பேசக்கூடியவர்களைக் கண்டிருக்கிறேன்.

பெரும்பாலான விவாதங்களில் நம்மிடம் இருக்கும் சில மனப்போக்குகளை இவ்வாறு தொகுத்துச்சொல்கிறேன்

1. நமக்கு ஒவ்வாத கருத்துக்களைச் சொல்பவர்கள், நம்மை மறுத்துப்பேசுபவர்கள் மீது கசப்பை உருவாக்கிக் கொள்ளுதல்.

எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் அதற்கு மறுப்பும் மாற்றும் கண்டிப்பாக இருக்கும். அதன் இருப்பை அங்கீகரிக்கமுடியாதவர் கொண்டிருப்பது கருத்து அல்ல வெறும் நம்பிக்கை மட்டுமே. நம்முடையது தர்க்கபூர்வமான கருத்தாக இருந்தால் நாம் அதன் மாற்றுத்தரப்பையும் ஒரு கருத்தாக மட்டுமே எடுத்துக்கொள்வோம். ஒருபோதும் அந்த மாற்றுக்கருத்து நம் உணர்ச்சிகளை தூண்டாது.

இவ்வாறு கசப்புகளை உருவாக்கிக்கொள்வதன் வழியாக மாற்றுக்கருத்தைச் சொல்பவரின் எல்லா கருத்தையும் மூர்க்கமாக மறுக்க ஆரம்பிக்கிறார்கள். மாற்றுத்தரப்பினரை தனிப்பட்டமுறையில் தாக்குகிறார்கள். அவமதிக்க்க முயல்கிறார்கள். இன்று இங்கு ஓர் இணையத்திலோ நேரிலோ ஒரு விவாதமே நிகழமுடியாமலிருப்பதை எங்கும் காணலாம். காரணம் இரண்டாவது வரியிலிருந்து வசை ஆரம்பமாகிவிடுவதுதான்

மாற்றுத்தரப்பு மீதான காழ்ப்பை மறைத்துக்கொள்வதற்குக் கூட சிந்திப்பவர்கள் என்று தங்களைப்பற்றி நம்பிக்கொண்டிருப்பவர்கள் முயல்வதில்லை என்பதைக் காணலாம். அந்தக்காழ்ப்பு அவர்களை ஒருங்கிணைவில்லாத கருத்து கொண்டவர்களாக, அடிப்படை நியாய உணர்ச்சிகூட அற்றவர்களாக, சில்லறைப்புத்தி கொண்டவர்களாக காட்டுவதைப்பற்றிக்கூட அவர்கள் கவலைகொள்வதில்லை

ஒருவர் ஒரு விவாதத்தில் தன் தரப்புக்குப்பதிலாக தன்னுடைய அகங்காரத்தை முன்வைப்பதனாலேயே இப்படி நிகழ்கிறது.

2. விவாதங்களில் விவாதப்பொருளில் இருந்தும் தர்க்கமுறைமையில் இருந்தும் விலகிச்செல்லுதல்

ஒருவிவாதத்தில் ஒரு கருத்தும் அதை நிரூபிக்கும் முறைமையும் ஒருவரால் முன்வைக்கப்படுகிறது. நான் இப்படிச் சொல்கிறேன், இன்னின்ன காரணங்களால் என்று அவர் சொல்கிறார். அதை மறுக்கையில் அந்தக்கருத்தை அது நிரூபிக்கப்பட்ட முறைமையை அடிப்படையாகக் கொண்டு செய்வதே முறையாகும். இந்த முறைமை மிக விரிவாக கல்வித்தளங்களில் வரையறுக்கப்பட்டுள்ளது. நாம் அதை கருத்தில்கொள்வதே இல்லை.

இந்தியாவின் வறுமைக்குக் காரணம் மக்கள்தொகைப்பெருக்கம் என ஒருவர் சொல்கிறார். மக்கள்தொகை அதிகமான இடங்களில் வறுமை மிகுந்திருக்கிறது என ஒரு புள்ளிவிவர ஆய்வையும் முன்வைக்கிறார். அதை மறுக்கும் ஒருவர் அந்தப்புள்ளிவிவர ஆய்வைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மக்கள்தொகை மிகுந்த இடங்களில் வறுமை இருப்பதற்கு வேறு காரணங்களை அவர் சொல்லலாம். மக்கள்தொகை நேரடியாக வறுமையுடன் சம்பந்தப்படவில்லை என்று வாதிடலாம். அதுதான் மறுத்துவாதிடுதல்.

அதன்பின் வறுமைக்கு வளங்களைப்பயன்படுத்திக்கொள்ளும் அறிவாற்றல் இல்லாமையே காரணம் என அவர் வாதிடலாம். அதற்கு இந்தியாவின் வறுமைமிக்க இடங்களில் கல்வியறிவு இல்லாமலிருப்பதைப்பற்றிய சான்றுகளை அவர் முன்வைக்கலாம். அது இன்னொரு கருத்து. இப்படித்தான் விவாதங்கள் முன்னால்செல்லும்

ஆனால் இங்கே எந்த விவாதத்திலும் அந்த விவாதமையம் பொருட்படுத்தப்படுவதில்லை. முதல் மறுப்பிலேயே சம்பந்தமில்லாத இன்னொன்றுக்கு பதில் சொல்வார்கள். முற்றிலும் வேறெங்கோ உள்ள ஒரு கருத்தைக்கொண்டு வந்து நிறுத்துவார்கள். நாலைந்து வாதங்களுக்குள் மொத்தவிவாதமே எங்கேயோ சென்று விட்டிருக்கும்

3. விவாதங்களில் கலைச்சொற்களையோ தர்க்கமுறைமையையோ மறுத்தல்

அதிபுத்திசாலித்தனமாக விவாதிப்பதாக நினைத்துக்கொண்டு இதை இங்கே பலர் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருவர் இன்றைய பொருளியல் நவகாலனிய அரசியல் சார்ந்தது என்று வாதிடுகிறார் என்றால் நவகாலனியம் என்ற சொல்லால் அவர் சுட்டுவது பொதுவாக சூழலில் சுட்டிக்காட்டப்படுவ்தைத்தான் என்றால் அச்சொல்ல்லின் அர்த்தமென்ன என்று வாதிடுவதில் அர்த்தமில்லை. நவகாலனிய அரசியல்தான் இன்றைய பொருளியலை தீர்மானிக்கிறதா இல்லையா என்பதுதான் விவாதமையம்.

சொற்களை மறுப்பது விவாதமே அல்ல. அப்படிப்பார்த்தால் எந்தச்சொல்லையும் மறுத்துவிடமுடியும். பொருளியல் என்று ஒன்று கிடையாது என்றோ பொருளியல் என்றால் அரசியலைத்தான் குறிக்கும் என்றோ வாதிடலாம். அதெல்லாமே அபத்தமான வாதங்கள். ஒருவர் ஒரு சொல்லை பொதுவாகச் சூழலில் புழங்கும் பொருளில்தான் பயன்படுத்துகிறேன் என்றால் அதன்பின் சொல்பற்றிய விவாதமே நிகழமுடியாது. அவர் அதற்கென சிறப்பான ஒரு தனி வரையறையை அளிக்கிறார் என்றால் அதை அவர் விளக்கும்படிக்கோரலாம்.

இதுவே தர்க்கமுறைமைக்கும் பொருந்தும். பொதுவாக எல்லா விவாதங்களும் நம் சூழலில் ஏற்றுக்கொள்ளப்ப்ட்ட விவாதமுறைமைகளின்படித்தான் நிகழ்கின்றன. பழைய உதாரணம் சொல்லப்போனால் மலைமேல் புகை தெரிகிறது, அங்கே தீ இருக்கலாம் என்று ஒரு தர்க்கம் முன்வைக்கப்பட்டால் மலைமேல் தீ இல்லாவிட்டாலும் புகை இருக்கலாமே என வாதிடுவதே முறை. மலைமேல் புகை தெரிந்தால் தீ இல்லை என்றுதான் நான் பொருள்கொள்வேன் என ஒருவர் சொன்னால் அவரிடம் விவாதிக்கவே முடியாது

இதன் அடுத்தபடி தான் நீங்கள் சொல்வது. ஒருவருக்கு விவாதங்களில் நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். நான் விவாதிக்க விரும்பவில்லை என்று சொல்லி எல்லா விவாதங்களில் இருந்தும் விலகுவதற்கான உரிமை அவருக்கு உள்ளது. ஆனால் மானுட ஞானம் முழுக்க விவாதங்கள் வழியாக உருவாகி வந்தது என்ற அறிதல் அவருக்கிருக்கவேண்டும். கிரேக்க மரபோ உபநிடதமரபோ விவாதங்கள் மூலமே செயல்படுகின்றன

இந்த விவாதங்களுக்கு கிரேக்கத்திலும் இந்தியாவிலும் தனியான தர்க்கவியல்களையே உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு நியாயவியல் என்ற தர்க்கமுறை உள்ளது. அது விவாதப்பொருளை வரையறுப்பது, விவாதமுறைமையை பொதுமையாக்குவது, பொய்ப்பிப்பது, இறுதிமுடிவை உருவாக்கிக்கொள்வது என அனைத்துக்கும் வழிகாட்டுகிறது

இந்த மரபுகளைப்பற்றிய அடிபப்டை அறிவுகூட இல்லாத நிலையில்தான் ‘அப்டீன்னென்ல்லாம் சொல்லிட முடியாது’ போன்ற அபத்தமான கூற்றுகள் உருவாகின்றன. ஒரு விவாதக்களத்தில் முடிவாக உருவாகிவரக்கூடிய ஒரு கருத்து அந்த விவாதக்களத்திற்குள் மட்டுமே ஆதிகாரிகத்தன்மை கொண்டதாகும். அது முழுமுற்றான உண்மை அல்ல. அந்த விவாதக்களத்துக்குள் வந்து அதைச் சந்திக்கக்கூடிய ஒருவர் அதை ஏற்கவேண்டும். மறுப்பதாக இருந்தால் அதற்கான வாதங்களைச் சொல்லவேண்டும். சும்மா வந்து ‘இப்டில்லாம் விவாதிச்சு சொல்லிட முடியாது’ என்று சொல்ல அவருக்கு உரிமை இல்லை.

மனித சிந்தனையின் ஆதாரச்செயல்பாடாக உள்ள விவாதத்தின் அடிப்படைகள் தொகுத்துப்பொருள்கொள்ளுதல், பகுத்துப்பொருள்கொள்ளுதல், சாராம்சப்படுத்துதல், ஒப்புநோக்குதல், உவமித்தல் ஆகியவையாகும் என நியாயவியல் சொல்கிறது. இவற்றைச் செய்யாமல் சிந்திக்கமுடியாது. இவற்றைச் செய்யக்கூடாது என்று சொல்பவர் சிந்திக்கவேண்டியதில்லை என்றுதான் சொல்கிறார்.

காரணம் இதுதான் மனிதமூளை செயல்படும் விதம். விவாதங்களில் நம்பிக்கை இல்லை என்பவர்கூட தனக்குள் ஒவ்வொன்றையும் விவாதித்துதான் முடிவுகளுக்கு வருகிறார். இரு ஓட்டல்களை ஒப்பிட்டு ஒன்றை முடிவுசெய்கிறார். அந்த ஓட்டலின் தின்பண்டங்களை பகுத்து ஒட்டுமொத்தமாக அங்கே தோசை நல்லது என்று முடிவுசெய்கிறார். அந்தஓட்டல் நாட்டுப்பலகாரங்களை நன்றாகச்செய்யக்கூடியது என்று ஒரு புரிதலை அடைகிறார்.

விவாதங்களை சரியாகச்செய்ய ஆரம்பித்தால் சரியாகச் சிந்திக்கிறோம் என்று பொருள். நாம் ஏன் சரியாக விவாதிக்கவில்லை என்றால் நாம் சரியாகச் சிந்திக்கவில்லை என்பதுதான். நாம் சரியாக விவாதிக்காததனால் சரியாக சிந்திக்கவில்லை.

கடைசியாக ஒன்றுண்டு. விவாதங்களில் ஈடுபடுவதற்கான அறிவார்ந்த திராணி இல்லாமை. அதை தானே உள்ளூர உணர்ந்திருக்கும் ஒருவர் செய்யும் பல்வேறு பாவனைகள் உண்டு. அவற்றையே நாம் இன்றைய இணைய விவாதங்களில் அதிகமாகக் காண்கிறோம்.

முதன்மையான பாவனை, கோபக்காரனாக காட்டிக்கொள்வது. எதுமுற்போக்கோ எது அரசியல்ரீதியாக பெரும்பான்மையின் கருத்தோ அதை ஏற்றுக்கொண்டு அதிதீவிரமாக கோபம் கொள்வது. விவாதங்களில் புகுந்து திட்டி வசைமாரிப்பொழிவது. புரட்சியாளன் பிம்பம் கிடைக்கும். எதைப்பற்றியும் பொருட்படுத்தும் ஒரு வரியைச்சொல்லிவிடமுடியாது என்ற விஷயம் மறையும்

இரண்டாவது பாவனை நக்கல். எதைப்பற்றியும் சில்லறைத்தனமாக சில நக்கல்கருத்துக்களை உதிர்த்துவிட்டு முன்னால் செல்லுதல். நீங்கள் என்னதான் செய்திருக்கிறீர்கள் என்ற ஒரு வினா வ்ராதவரை பாதுகாப்பாக வண்டி ஓடும்

இத்தனைக்கும் அப்பால் ஒரு விவாதம் தமிழில் நிகழ்கிறது என்றால் அது ஆசீர்வதிக்கப்பட்ட இடம்

ஜெ

விவாதத்தின் நெறிமுறைகள்

Posted in பொது