தொழிற்சங்கத்தின் எதிர்மறைத்தன்மை

அன்புள்ள ஐயா, நலம் , நலமறிய ஆவல் . விஷ்ணுபுரம் விழாவில் தங்களை சந்திக்க ஆவலுடன் இருகின்றேன்.

சமீபத்தில் தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை படித்தேன் . அதில் எப்படி சட்டம் இயற்ற வேண்டிய பாராளுமன்றம் தன் கடமையை செய்ய தவறுவதால் அந்த வெற்றிடத்தை நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்பு அல்லது வாழ்முறைகள் என்கிற பெயரில் நிரப்ப முற்படுகின்றன என்பதையும் அதன் பிற விளைவுகளை பற்றியும் அழகாக எடுத்துரைக்கப் பட்டிருந்தது.

அந்த கட்டுரையை படிக்க படிக்க எனக்கு எங்களது (நமது) நிறுவனத்தில் நடப்பது நினைவுக்கு வந்தது. இந்த நிறுவனத்தில் எப்படி அதிகாரிகள் செய்ய வேண்டியவற்றை எல்லாம் இப்போது union கள் செய்கின்றன என்பதும் இப்பொழுதெல்லாம் அதிகாரிகள் ஏதும் செய்ய முற்படும்போதும் union கள் அதற்க்கு ஏதானும் முற்றுக்கட்டை போடு விடுகின்றன.

ஓர் செயல்திறனட்ட்ற அதிகாரி இருக்கும் பட்சத்தில் union கள் அவரை செயல் பட செய்யும் உந்தாக இருக்கின்றன. இதே ஒரு செயல் பட முனையும் அதிகாரியின் செயல் அவர்களின் தலையீடு பெரும் எரிச்சலை ஏற்படுதுவதாக் உள்ளது.

union இல் பங்கெடுத்தவர் என்ற முறையில் இதை பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.

விஜய் சாகர்

அன்புள்ள விஜய்

காட்டில் ஒரு இயற்கை விதி செயல்படுவதைக் கண்கூடாகக் காணமுடியும். கொடிகள் செடிகள் மரங்கள் காளான்கள் என பலவகை தாவரங்கள் செறிந்திருக்கும். கொஞ்சம் கவனித்தால் அவை ஒரு சமநிலையில் இருப்பதைக் காணலாம். ஒவ்வொருசெடியும் இன்னொரு செடியால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொருசெடியும் தன்னால் முடிந்தவரை வளரவே முயல்கிறது. ஆனால் அதை பிற அனைத்துச்செடிகளும் சேர்ந்து கட்டுக்குள் வைத்துள்ளன. காட்டில் ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட செடியை முழுமையாக வெட்டி அழித்தால் இன்னொருசெடி பீரிட்டு வளர்வதைக் காணலாம்

ஜனநாயகம் என்பது இயற்கையின் இந்த விதியை சமூகவியலில் செயல்படுத்த முயலக்கூடியது என்று புரிந்துகொள்ளலாம். ஜனநாயகத்தில் எல்லா விசைகளும் வளர அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் ஒன்று இன்னொன்றால் இயல்பாக கட்டுப்படுத்தப்படவும் செய்கின்றன

நம் அரசியலல் செயல்பாடு என்பது நாடாளுமன்றம், நீதிமன்றம், அதிகாரிவர்க்கம், ஊடகங்கள் என வெவ்வேறு அமைப்புகளின் கூட்டான செயல்பாட்டால் நிகழ்கின்றது. ஒவ்வொன்றும் தன்னுடைய முழு விசையுடன் செயல்படுகையில் ஒன்று இன்னொன்றை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஆகவே ஏதேனும் ஒன்று விசையிழந்தால் இன்னொன்று வேகம் பெறுகிறது. இது இயல்பானதுதான்

தொழிற்சங்கம் ‘ஆக்கபூர்வமாக’ சிந்திக்கவேண்டும் என்று வாதிடுபவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அதாவது தொழிற்சங்கம் முதலாளிகளைப்போல அல்லது நிர்வாகம்போல சிந்திக்கவேண்டும், செயல்படவேண்டும் என்று சொல்வார்கள். நான் அதற்கு என்னுடைய பதிலை எப்போதுமே சொல்வேன். தொழிற்சங்கம் முதலாளியோ நிர்வாகமோ அல்ல. ஆகவே அந்த பணிகளை அது ஆற்றமுடியாது.முதலாளி, நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிர்சக்தியாக செயல்படுவதற்காகவே அது உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வேலையை அது செய்வதே முறையாகும்.

அந்தவேலை ஒருவகை எதிர்மறைத்தன்மை கொண்டதுதான். ‘ஆக்கப்பூர்வமான’ வேலை அல்லதான். ஆனால் அந்த எதிர்மறைத்தன்மையே அதன் கடமை. முதலாளிக்கும் நிர்வாகத்துக்கும் எதிராக தொழிலாளர் நலனை மட்டுமே கவனிக்கவேண்டியதுதான் அதன் பொறுப்பு. அது பிரேக். அக்ஸிலேட்டரின் வேலையை அது செய்யக்கூடாது

தொழிற்சங்கம் பிற அமைப்புகளை கண்காணிக்கக்கூடிய கட்டுப்படுத்த முயல்வதே முறை. அதன் வழியாகவே அது அந்த அமைப்பின் சரியான செயல்பாட்டுக்கு பங்களிப்பாற்றுகிறது

ஜெ

Posted in பொது

காந்தி சில சொற்கள்

காந்தி உண்ணவிரதம் இருப்பார் எனும் பொது புரிதல் காந்தியவாதம்=உண்ணாவிரதம் என்ற மிக பெரிய சமன்பாட்டினை கொடுத்து விட்டது. அல்ஜீப்ரா என்பது (a+b)2= a2+b2=2ab என்ற பொது புரிதலுக்கும் இதற்கும் பெரும் வேறுபாடில்லை என்றே நினைக்கின்றேன்.

காந்தியவாதம் = (கூட்டுறவு+சுயசார்பு+எதிர் நுகர்வு )* பொருளாதாரம்+ (சிறிய அளவு+குறைந்த அதிகாரம்) *அரசு + (பன்மை + சேவை)* கலாச்சாரம்

என்ற சமன்பாடினை உடைய சமூகமே காந்திய சமூகம் என்று நான் நினைக்கின்றேன். அகிம்சை முறை என்பது இந்த கணித சூத்திரத்தின் கட்டமைப்பின் பாதையாக இருக்க முடியும்.

கேட்கும் பொம்மையை வாங்கி கொடுக்காவிட்டால் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தையை போல உண்ணாவிரதம் இருப்பது என்ன காந்தியம்? அதற்கும் காந்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

காந்தியை திட்டுபவர்கள் யாரும் தான் நினைக்கும் சமூகம் எதுவென்றும், அதன் அரசு, பொருளாதாரம், கலாச்சாரம் எதுவென்றும் சொல்லுவதில்லை. பொதுவாக திட்டுவது ஒரு மரபாக ஆகி விட்டது.

இந்திய தேசியம் என்பது ஒரு வெற்று தேசிய பெருமிதம் அல்ல அது ஒரு puluralistic democratic society என்பதாகவே அனுகபட வேண்டும் என்றே என்னுகின்றேன். இதனை எப்படி தக்க வைப்பது, இதை எப்படி அர்த்தமுள்ளதாக்குவது என்பதே இந்த சமூகத்தின் முன் உள்ள கேள்வி. அதையே ஒரு அறிவு ஜீவியோ, சமூக சேவகரோ, களப்பணியாளரோ முன் வைக்க வேண்டிய சூழல் உள்ளது, உலகமயமாக்கம் இதனைதான் கலாச்சாரமாக கோருகின்றது.

நிர்மல்.

அன்புள்ள நிர்மல்

காந்தியைப்புரிந்துகொள்ள சில அடிப்படைக்கருத்கோள்கள் தேவை. அவற்றை சுருக்கமாக மூன்று சொற்களில் சொல்லிவிடமுடியும்

1. பன்மைத்தன்மை– எதுவும் பன்மையாக, மையமில்லாததாக இயங்கும்போதே சரியாக இருக்கிறது.

2.சமரச இய்க்கம்– எந்த ஒரு செயல்பாடும் முரண்படும் விசைகள் நடுவே உள்ள சமரசமாகவே இருக்கமுடியும்.

3.பொறுமை – எந்த ஓர் உண்மையான மாற்றமும் அதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டே உருவாகும். உடனடியாக நிகழ்வது உண்மையான மாற்றமல்ல

ஜெ

Posted in பொது

உள்ளுணர்வை பயில்தல்

திரு ஜெமோ,
உங்களுடைய பழைய கட்டுரை ஒன்றில் இவ்வரிகளை வாசித்தேன்,”உள்ளுணர்வை மனிதன் வளர்த்துக்கொள்ள முடியும், பயில முடியும்.”இதை விளக்க முடியுமா?

அதாவது உள்ளுணர்வை பயில்வது எப்படி?intuition மேல் நம்பிக்கை வைத்து அதன் வழியே முடிவெடுத்து, செயல்பட்டு பிறகு அதன் வெற்றி தோல்வியை கணக்கிட்ட பிறகு, மனதில் “சரி இந்த முறை நம் நுண்ணுணர்வை பின்பற்றி முடிவெடுத்தது சரியே!. அடுத்த முறை இதே போல ஒரு தருணம் வாய்க்கையில் மனதில் இதைப்போல் புகை மூட்டம் போல தோன்றும் ஒரு எண்ணத்தின் மேல் (gut feeling) நம்பிக்கை வைக்க வேண்டும்” என தொடர்ந்து அனுபவங்களின் மேல் நமக்கு நாமே பின்னூட்டம் இட்டு பழக்கிக் கொள்வதா?
அல்லது வேறு வழி உண்டா?

முத்து கிருஷ்ணன் நீலகண்டன்

அன்புள்ள முத்துக்கிருஷ்ணன்,

உள்ளுணர்வை வளர்த்துக்கொள்ளும் பயிற்சிக்குப்பெயர்தான் தியானம். அதைப்பயனபடுத்தி பிரபஞ்சத்தையும் தன்னையும் அறியும் பயிற்சிக்குப்பெயர் யோகம்

உள்ளுணர்வை அறிவதற்கு அடிப்படையாக தேவைப்படுவது உள்ளுணர்வு என்றால் என்ன என்று உணர்வது. ஒருவன் தன்னை தானே கூர்tந்து அவதானிப்பதன் வழியாகவே அதை உணரமுடியும். மனதுல் ஓடும் எண்ணங்கள், அதன்விளைவான உணர்ச்சிகள், கனவுகளாக ஓடும் பிம்பங்கள் எவையும் அல்ல உள்ளுணர்வு. உள்ளுணர்வு அவற்றின் அடியில் உள்ள ஒன்று. ஆனால் அது எண்ணங்களாக உணர்ச்சிகளாக, கனவுகளாக மட்டுமே வெளிப்பட முடியும்

யோகத்தின் மொழியில் சொல்லப்போனால் துரியம்தான் உள்ளுணர்வு. அது சுஷுப்தி வழியாக ஸ்வப்னம் வழியாக வெளிப்படுகிறது. நாம் ஜாக்ரத்தால் அதை புரிந்துகொள்ள முயல்கிறோம்.

எது உள்ளுணர்வு என உணர்ந்தவன் அதன் செயல்முறையை அதன் வெளிப்பாட்டுமுறையை கொஞ்சம் கொஞ்சமாக உணர முடியும். அதன்பின் அவன் உள்ளுணர்வுடன் தொடர்புகொள்ள முடியும். மெதுவாக அதை தனக்கேற்ப மாற்றிக்கொள்ள, வளர்த்துக்கொள்ள முடியும். அதுவே தியானத்தின் படிநிலைகளாக அறியப்படுகிறது.

கண் தெரியாதவன் காட்டுக்குள் செல்வதுபோல. அங்கே அவன் காணமுடியாத மாபெரும் மிருகம் ஒன்றிருப்பதை உணர்கிறான். கொஞ்சம்கொஞ்சமாக அந்தமிருகத்தை அவன் புரிந்துகொள்கிறான். காற்று வீசும் ஒலி, பாறை சரியும் ஒலி போன்றவை அல்ல அது நடக்கும் ஒலி என பிரித்தறிகிறான். பின்னர் அதன் ஒலியை வாசனையை அது வரும் நேரக்தை அது செல்லும் பாதைகளை எல்லாம் பழகிக்கொள்கிறான்.

ஒருகட்டத்தில் அந்த மிருகத்துக்கு ஒரு துண்டு கரும்பை நீட்டவும் அதன் நல்லெண்ணத்தைப் பெறவும் கற்றுக்கொள்கிறான். அதன் மத்தகத்தை தொடவும் கொம்புகளை நீவவும் பயில்கிறான். அதன் மீது ஏறி அமர்ந்து செல்லும்போது காடே அவன் காலடிக்கீழ் இருக்கும.

ஜெ

Posted in பொது

ஈழம் ஒரு கடிதம்

ஜெமோ,

உங்களுடைய பார்வையில் இருந்து நான் கடுமையாக மாறுபடுகிறேன். இலங்கையில் இராணுவமும், விடுதலை புலிகள் இருவருமே மிக கடுமையான போர் குற்றங்களை செய்துள்ளார்கள், ஆனால் இங்குள்ளவர்கள் விடுதலை புலிகளின் போர்குற்றங்களை பற்றி மூச்சுகூட விடுவதில்லை. “விடுதலை புலிகள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு இராணுவ இயக்கம்”, என்று ஒருமுறை சோபா சக்தி கூறினார், அதுவே சரியான மதிப்பீடு என்று நினைக்கிறேன். “முறிந்த பனை” படித்த போது இந்த பாசிச புலிகளில் முழுமையான வெறியை அறிந்து கொள்ள முடிந்தது. பல பாலச்சந்திரர்களை கொலைக்களத்திற்கு தெரிந்தே அனுப்பி வைத்தவர்தான் புலிகளின் தலைவர். அப்பாவிகளை கேடயமாக பயன்படுத்தி தாங்கள் தப்பிக்க நினைத்தவர்கள் தான் புலிகள். 1987லிலும், 2003லும் அரசியல் தீர்வுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை சுத்தமாக அழித்து கொண்டு தங்களையும் ஈழ தமிழ்மக்களையும் ஒரு சேர அழித்து கொண்ட இந்த கூட்டத்திற்குத்தான் இந்த போராட்டங்கள், அப்பாவி இலங்கை தமிழர்களுக்காக அல்ல. இந்த மாணவர் உண்ணாவிரத போராட்டம் பாசிச புலி மற்றும் அவர்களின் தமிழக முகவர்களின் பிரச்சார வழிமுறைகளின் வழியே சென்று கடுமையான இந்திய எதிர்ப்பில் போய்தான் முடியும் ஏற்கெனவே அந்தவழியில் தான் போய் கொண்டு இருக்கிறது. இந்த போராட்டங்கள் இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக அல்ல, புலி பினாமிகளின் வெளிநாட்டு பண முதலீடுகளை காப்பாற்றிக்கொள்ளதான், இலங்கை அரசை தண்டிக்கிறேன் பேர்விழி என்று தங்களுடைய பணப்பறிப்பு தொழிலை வெளிநாட்டு புலிகள் தொடர்வதற்குதான் இது வழிவகுக்கும். இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பெரும்பாலான தமிழக தமிழர்கள் இந்த கேலிக்கூத்தில் பங்கெடுக்காமல் இருப்பதே.

அண்மையில் தஞ்சை பெரியகோவிலுக்கு வருகை தந்த இலங்கையை சேர்த்த புத்த பிட்சுக்கள் தாக்கபட்டார்கள். அதை தமிழ் தேசிய இயக்கங்கள் ஆதரிக்க செய்தன, அவர்கள் அப்படிதான், ஆனால் ஒரு அறிவுஜீவி அவர் எப்போதும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை எதிர்ப்பவர், தினமும் தொலைகாட்சியில் அறப்போராட்டம் நடத்துபவர் . அவர் இந்த பிட்சுக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தி பேசுகிறார். புத்த மதமும், இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் ஒரே முனையில் இணைந்துல்ளதால் இங்கு அந்த பிட்சுக்கள் தாக்கப்பட்டது நியாயமானதாம். மதமும் அரசியலும் எல்லா தேசங்களிலும் கைகோர்த்தே உள்ளது. இவர் இந்து பெளத்த மதங்களை சார்தவர்கள் அரசியல் நிலைப்பாடு எடுத்தால் அதை கடுமையாக குறைகூறுபவர் அதேசமயம், சரி அதையேன் சொல்வது உங்களுக்கே புரியும். ஆனால் இந்த அரைகுறை – ஜீவிகளின் இந்த நிலைப்பாடுகலால்தான் அவர்களுடைய நிறத்தை உண்மையான நடுநிலையாளர்களுக்கு காட்டிகொடுக்கிறர்கள் அதுவரை நல்லதுதான்.

நன்றி
சு செல்வபாரதி

Posted in பொது

யுங்

அன்புள்ள ஜெ,

சி ஜி யுங் ஆழ்படிமம் பற்றிக் கூறுவதை நீங்கள் முழுவதும் ஏற்றுக்கொள்கிறீர்களா? இந்து ஞான மரபின் அடிப்படையில் நீங்கள் மாறுபடும் இடம் உண்டா?

C G Jung – There is a thinking in primordial images, in symbols which are older than the historical man, which are inborn in him from the earliest times, eternally living, outlasting all generations, still make up the groundwork of the human psyche. It is only possible to live the fullest life when we are in harmony with these symbols; wisdom is a return to them.

சமீபத்தில் மேலுள்ளதை வாசித்தேன். மேலும், இந்தப் பதிவில் http://www.jeyamohan.in/?p=3705 உங்கள் பதிலும் மற்றும் என்னுடைய சில அனுபவங்களும் இதையே சுட்டுகின்றன.

நன்றி,
ராஜா

அன்புள்ள ராஜா

சி.ஜி.யுங் மீதான என் கவற்சிக்கு முக்கியமான காரணம் அவரது மொழி. இலக்கியவாதி என்றமுறையில் என்னைப் பொறுத்தவரை ஒருவிஷயம் அழகாகவும் கூர்மையாகவும் சொல்லப்படும்போதே அது முழுமையாகிவிட்டது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதற்குமேல் புறவயமாகச் சொல்லப்படும் முழுமையான உண்மை என ஒன்று உண்டா என்ன?

இதிலும் யுங் அழகாகவே சொல்கிறார். ஆழ்படிமங்கள் மனிதனின் பிரக்ஞையைவிட பழைமையானவை, அவனுடைய கூட்டுஆழ்மனதைவிட பெரியவை என்றே நானும் நம்புகிறேன். என்னைப்பொறுத்தவரை கடவுள் என்பது என்னுள் இருந்து எழும் ஆழ்படிமம்தான். அந்த பிரம்மாண்டத்தின் முன் எப்போதுமே என்னை வெறும் தூசாக உணர்கிறேன். நான் என் அகங்காரமழிந்து அதையே என்னால் வணங்க முடியும்

என் எழுத்து என்பதையே நானறியும் அன்றாட வாழ்க்கை வழியாக என் ஆழ்மனதுக்கு, அங்குள்ள ஆழ்படிமங்களுக்குச் செல்லும் ஒரு வழி என்றே நினைக்கிறேன். படைப்பின் ஆழம் என நான் நினைப்பது என்னுடைய சொந்தப்படிமம் ஒன்று என் பண்பாட்டின் ஆழ்படிமத்துடன் கொள்ளும் மிகச்சரியான இசைவை மட்டுமே.

ஆம், இலக்கியத்தின் உச்சகணம் என்பது ஆழ்படிமத்தை உருவாக்கிய தொன்மையின் முடிவிலியுடன் என்னுடைய படிமங்களும் சொற்களும் கொண்டிருக்கும் பிரிக்கமுடியாத உறவு வெளிப்படும் தருணங்கள் மட்டுமே.

அப்போது நான் ஒரு நவீன எழுத்தாளன் மட்டுமல்ல, ஒரு புராதன இனக்குழுச்சமூகத்தின் குறிசொல்லியும்கூட.

ஜெ

Posted in பொது

அம்மையப்பம் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

வெண்கடல் simply brilliant.

வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன் இந்த கதையைப் பற்றி..

இன்று காலை என் கணவரிடம் உங்கள் கதையைச் சொன்னேன். வாசிக்கும் பழக்கம் இல்லாதவர். பொருளாதாரம் தான் அவரின் விருப்பம். எனக்கு நேர் எதிர். ஆனால் நான் சொன்னால் கதைகளைக் கேட்பார்.

அவரால் இந்த கதையை நன்றாக புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் நான் பட்ட வலி அது. அவர் பார்த்த வலி அது.ப்ரசவ வலியை விட கொடுமையான வலி அது ஜெயமோகன். ப்ரசவ வலியைக் கூட பொறுத்துக் கொள்ள முடியும். இந்த வலி இருக்கே…..

அந்த சமயத்தில் எனக்கு 3 விஷயங்கள் தோன்றியது.முதலாவது – கடவுள் ஏன் பெண்களுக்கு இந்த மஹா வலியைக் கொடுத்தார்?அம்மா – தெய்வமாக தென்பட்டாள், என் கண்களுக்கு. நானும் கொடுத்தேனே அந்த வலியை அவளுக்கு!!என் பெண்கள் – அவர்களும் இந்த வலியைப் படப் போகிறார்களே? பாவம்…

யாராவது கரு தரித்தப் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த வலியே என் நினைவுக்கு வரும் இப்போதும். மறக்கவே முடியாத வலி அது ஜெயமோகன்.

இன்னும் ஒன்றும் எனக்கு தோன்றும் – இந்த ஆண்களுக்கு மட்டும் இந்த வலி தெரிந்திருந்தால் பலாத்காரமே செய்ய மாட்டார்கள் என்று?

உங்களின் ஒரு வாசகர் கேட்டிருந்தார் – சுய அனுபவங்களைக் கொண்டு வாசிப்பது சரியா என்று?
என் சுய அனுபவத்தினாலேயே இந்த கதையை நான் வாசித்தேன். உணர்ந்தேன்.

பெண்மையைப் போற்ற வேண்டும் ஜெயமோகன். நான் பெண் என்பதால் சொல்லவில்லை, நான் என் தாயின் மகளாகச் சொல்கிறேன்.ஆமாம், உங்களுக்கு எப்படி இந்த வலி புரிந்தது?? தெரிந்தது?? ஏதோ நீங்கள் பட்டார் போல் எழுதி இருக்கிறீர்கள்??

அருமை.

கடந்த வாரமாக வரும் உங்கள் கதைகளில் கொஞ்சம் உக்ரகமான உணர்சிகளை உணர்கிறேன்.

அன்புடன்
மாலா

அன்புள்ள ஜெ

அம்மையப்பம் வாசித்தபோது கதை எளிமையான ஒன்று என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதன்ப்ன் இந்த நாட்களில் பல சந்தர்ப்பங்களில் அந்தக்கதையை நான் நினைத்துக்கொண்டே இருந்தேன். ஏணிகூட்ட ஆசாரி எதுக்கு என்ற வரி ஒரு பழமொழி போலவே மனதில் பதிந்துவிட்டது. எந்தெந்த இடத்திலோ அது கேட்டுக்கொண்டே இருக்கிறது

சரவணன் முருகானந்தம்

Posted in பொது

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

தங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் கூடிய இந்த கட்டுரையை ரசித்துப் படித்தேன். கல்லூரி நாட்களில் இந்த அரண்மனைக்கு சென்றிருக்கிறேன். மனதில் ஒருவகை இனம் புரியாத உணர்வுகளை உருவாக்கியது அதன் தோற்றமும் அதன் அலங்காரப் பொருட்களும். உடன் வந்த நண்பர் ஒருவர் ஒரு கோழி இறகை தலையில் சொருகிக்கொண்டு, ‘நான்தான் திருவிதாங்கூர் மகாராஜா’ என்று வலம் வந்தது இன்றும் நினவில் நிற்கிறது (இன்று அவர் ஒரு பெரிய தனியார் கல்லூரியில் பேராசிரிய்ராக இருக்கிறார்). முதல் மாடியில் இருக்கும் கருங்கல்லால் ஆன கழிவறையும் மற்றுமோர் ஆச்சரியம் (இரண்டுக்கும் தனித்தனி பாதைகள்!!!)

மரம் நடுதல், குளம் வெட்டுதல் தவிர்த்து, மன்னர்களின் வாழ்க்கை முறை குறித்து ஏதேனும் நூல்கள் உள்ளனவா?

அன்புடன்
இளம்பரிதி

அன்புள்ள இளம்பரிதி

உண்மையில்சென்ற சிலவருடங்களில் தமிழில் பல துறைகளிலும் முக்கியமான நூல்கள் பல வெளிவந்துள்ளன. ஆனால் மன்னர்கள், அரண்மனைகள் பற்றி ஆய்வுநோக்குடன் எழுதப்பட்ட நூல்கள் இல்லை என்றே தோன்றுகிறது

ஜெ

அன்புள்ள ஜெ.,

கற்பழிப்பு என்பது பெண்கள் பொதுவெளிக்கு வருவது பிடிக்காத ஆணாதிக்க மனோபாவம் என்ற தொனியில் தங்கள் கட்டுரை இருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் கூட ‘ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்பட்டால் கற்பழிப்பு நடக்காது’ என்ற வகையில் கருத்து கூறி இருக்கிறார்.

‘பெண்கள் அரைகுறை ஆடை அணிவதுதான் இதற்குக் காரணம்’ எனும் கூற்றுக்கு எதிர்க்கூற்று போலத்தான் இது தொனிக்கிறது.

கற்ற்பழிப்பு என்பது அடிப்படையில் பாலியல் இச்சையை மையமாகக் கொண்டது (பழி வாங்கும் நோக்கில் நடக்கும் சில சம்பவங்கள் தவிர). பேருந்தில் உரசுவது, பெண்களைக் ‘கமெண்ட்’ அடிப்பதில் ஆரம்பித்து கற்பழிப்பு வரை மிகப் பெரும்பாலும் அது ஆணின் பாலியல் வக்கிரமே முதல் காரணம். இந்த வக்கிரம் பிடித்த ஆண்கள் பாலியல் சுகத்துக்காகப் பெண்களின் காலில் விழுந்து சேவை செய்யவும் தயாராகத்தான் இருப்பார்கள். பின் எங்கிருந்து வந்தது ஆணாதிக்கம்…

இதைக் குறைப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது – துருப்பிடித்துக் கிடக்கும் நம் நீதி அமைப்பு முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். தெளிவான சாட்சியங்கள் இருந்தால் கூட பலப் பல வருடங்கள் வழக்கு இழுப்பதும், குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் (வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இதற்காக சில முயற்சிகள் தொடங்கப்பட்டன; வழக்கம் போல் நம் வழக்கறிஞர்கள் கூட்டம் சேர்ந்து அதை நாசமாக்கிவிட்டது)…

‘நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது’ என்ற வறட்டுத்தனமான சித்தாந்தத்தைத் தூக்கி எறிய வேண்டும். நூறு குற்றவாளிகள் தப்பித்தால், அங்கே ஆயிரம் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது நம் புத்தியில் உறைக்கவேண்டும்.

சட்டத்தை மாற்றுவது எளிது; நீதி அமைப்பை சீராக்குவது கடினம். நம் அரசியல்வாதிகளுக்கு இந்த சூத்திரம் தெரியும். அதனால்தான் சட்டத்தை மாற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி இருக்கிறார்கள்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்

பாலியல் வன்முறை என்பது ஓர் அடிப்படை மானுட இயல்பின் வெளிப்பாடு. கொலைபோல, திருட்டுபோல. அதை இல்லாமலாக்க முடியாது. ஆனால் இன்று அதன்மீது சமூகம் ஏற்றிக்கொண்டிருக்கும் ஆணாதிக்கப்பசப்புகளை களைந்து அதை குற்றமாக மட்டுமே காணலாம் என்பதே என் எண்ணம்

ஜெ

Posted in பொது

சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மிகக் குளிரான ஒரு நாளின் மாலைப் பொழுதில் எழுதுகிறேன்.

அசோகமித்திரன் பற்றிய ஒரு வாசகரின் குறிப்பையும் அதற்கான உங்கள் பதிலையும் படித்தேன். சு.ரா.வை படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அசோக மித்திரனையும் படித்து வந்திருக்கிறேன். தீபம் சஞ்சிகை அவருடைய எழுத்துகளை அதிகம் பிரசுரித்தது என்று நம்புகின்றேன். கரைந்த நிழல்கள் நாவல் தீபம் இதழில்தான் தொடராக வந்தது. அந்தக் கதை சொன்ன விதமே ரொம்ப அலாதி. பெரிய திரையில் சினிமா பார்த்த மகிழ்வையும் பரவசத்தையும் தந்தது. திடீர் திருப்பங்களுடன் வெளிவந்த அந்த நாட்களின் தொடர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக அவர் அதை எழுதிச் சென்றார். இன்று வரையிலும் இயங்குபவர்.

கனடாவின் இயல் விருது, மாதவனுக்கும் அசோகமித்திரனுக்கும் கிடைக்கவில்லையே என்ற என்னுடைய ஆதங்கத்தின் பாதியளவு பாரத்தை விஷ்ணுபுரம் விருதை மாதவனுக்கு வழங்கி நீங்கள் கௌரவத்தை தட்டிக் கொண்டீர்கள்.

அசோகமித்திரன் பற்றியும் ஒரு சிறு நூலையாவது நீங்கள் எழுத வேண்டும். (‘கடைத்தெருக் கலைஞன்’ மாதிரி)

வாழ்த்துக்கள்.

அன்புடன், எஸ்.எல்.எம். ஹனீபா

அன்புள்ள ஹனீஃபா,

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

அசோகமித்திரனைப்பற்றி நான் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒன்று நீண்ட ஆய்வுக்கட்டுரை. அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக ஆக்கமுடியும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்

ஜெ

ஜெ,

ஆகவே கதையைத் ‘தன்னிச்சையாக’ அமைக்க முயன்றார்கள். வெறும்
நிகழ்ச்சிகளைப்போல அமைந்த கதைகளை சா.கந்தசாமி ,சுந்தர ராமசாமி
,அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதினார்கள்.

சுந்தர ராமசாமியின் “பட்டுவாடா” என்ற சிறுகதை இந்த வகையை சேர்ந்ததா? இரு
ஆண்டுகளுக்கு முன் அவரது சிறுகதைகளின் முழு தொகுப்பை வாங்கியபோதுதான்
இந்த கதையை முதலில் படித்தேன். முழுக்க முழுக்க விவரணைகளால் நிறைந்த கதை.
இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே படித்திருக்கிறேன். கதையில் வரும்
நிகழ்வுகள் என்ன என்று எனக்கு இன்னும் பிடிபடவில்லை.

நன்றி
கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

பட்டுவாடா அப்படிப்பட்ட கதை அல்ல. அதை சுந்தர ராமசாமி கவியுருவகமாக எழுதியிருக்கிறார். அதிலுள்ள எல்லாவற்றுக்கும் குறியீட்டுப்பொருள் உண்டு

பல்லக்குத்தூக்கிகள் சிறுகதைத்தொகுதியில் உள்ள கதைகளில் வெறுமே நிகழ்ச்சிகளாக மட்டுமே உள்ள பல கதைகள் உள்ளன. உதாரணம் போதை, வாசனை

ஜெ

Posted in பொது

ரப்பர்-கடிதம்

வாழ்த்துக்கள் ஜெயமோகன் சார்.

சமீபத்தில் நான் படித்து முடித்த மூன்று புத்தகங்களில் உங்கள் ரப்பர் நாவலும் ஒன்று. மிகமும் கவனமாக படிக்க வேண்டிய தருணம் இந்த புத்தகத்தில் நிறையவே இருந்தது. அதே மாதிரி வட்டார தமிழில் சில முக்கியமான வாக்கியங்களும் வருவதால் என் போன்ற மதுரையை சார்ந்தவர்கள் சற்று பின்வாங்க வேண்டிய இடமும் இந்த நாவலில் உண்டு. நிறைய இடங்களை நான் மறுபடி மறுபடி படித்து கொண்டே இருந்தேன். திரும்ப திரும்ப படித்த பிறகும் கூட பிரான்சிஸ் மனநிலையை என்னால் கனிக்க முடியவில்லை. (கிருஷ்ண பருந்துவில் வர சாமியாரை போல).

ஒரு எழுத்தாளனின் முதல் நாவலை படிக்க வேண்டும் என்பதால் உங்கள் ரப்பர் நாவலை நான் படித்தேன். மீண்டும் மீண்டும் ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்,.

ஏதோ ஒரு வார்த்தையுள் அந்த எழுத்தாளன் ஒளிந்து கொண்டு வாசகனுக்கு ஒரு தீராத விளையாட்டை அவன் நிறுவ வேண்டும் என்பது என் துணிவு.

நான் இனி வரும் காலங்களில் திரும்ப படிக்க வேண்டும் என்று நினைக்கும் போது இந்த நாவலும், கிருஷ்ண பருந்து நாவலையும் ஒரு சேர படிக்க வேண்டும்.

இனி நீங்கள் சொன்னது போலவே கன்னியாகுமரி நாவலை படிக்கலாம் போல தோன்றுகிறது.

மிக நீண்ட விவாதம் செய்ய வேண்டும் என்று தோனுகிறது. இன்னும் 2 வருடம் படிக்க வேண்டிய புத்தகம் என் கண் முன்னால் ஓடுகிறது. நாம் சந்திக்கும் வாய்ப்பு நிச்சயம் ஒரு நாள் கிட்டும். அப்போது ஒரு எளிய வாசகனின் புரிதல் உங்களிடம் வைக்கிறேன்.

வாழ்த்துக்கள் ஜெயமோகன் சார்.

நன்றி,

பிறைசூடி இ.

அன்புள்ள பிறைசூடி

ரப்பர் என் முதல் நாவல். ஆனாலும் இன்றுவரை என் எழுத்தை இட்டுச்செல்லும் அடிப்படையான தேடல்களும் சஞ்சலங்களும் அழகுகளும் உள்ளன. அது ஆன்மீகமான வினாக்களை கேட்டுக்கொள்கிறது. இன்றுவரை என்னை வழிநடத்திச்செல்லும் பைபிளில் இருந்து தொடங்கி முன் செல்கிறது.

அந்த ஆன்மீக தரிசனத்தை வரலாற்றின் ஓட்டத்துடன் பிணைத்துப்பார்க்க முயல்கிறது. வரலாறு என்ற ஒழுக்கை சித்தரிப்பதற்காகவே கதைப்பின்னல் உருவாகி வந்திருக்கிறது. அக்கதைப்பின்னலின் புள்ளிகளே மனிதர்கள்

ஆன்மீகத்தேடலும் வரலாற்றுப்புலமும் ஊடும்பாவுமாக அமைந்தவை என் நாவல்கள் என நான் இன்று உணர்கிறேன்

ஜெ

Posted in பொது

வெண்கடல்-கடிதங்கள்

.அன்பின் ஜெ எம்.,

வெண்கடலுக்குள் ஆயிரம் படிமங்களை அனைவரும் அலசினாலும் அவற்றை என்னாலும் இனம் காண முடிந்தாலும் எனக்கென்னவோ அந்தப் பெண் படும் தவிப்பிலும் வலியிலுமே மிகுதியாக ஒன்ற முடிகிறது; அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது.என்ன முயன்றாலும் அதைத் தாண்டி நகர்ந்து செல்வது எனக்குச் சாத்தியமாகவில்லை. ஒரு வேளை என் மன அமைப்பு அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்னவோ..! எது ஒரு பெண்ணின் அடையாளமாகக் கருதப்படுகிறதோ – எது உலகுக்கெல்லாம் பால் நினைந்தூட்டுகிறதோ – எது அவளுக்கும் அகிலத்துக்கும் வரமாக இருக்கிறதோ அதுவே அவளுக்கு சாபமும் ஆகிற தருணத்தை உங்கள் கதை மிகச் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது.

சென்ற அஞ்சலில் நான் குறிப்பிட்டது போலப் பெண் நிலைக்குள் கூடு பாய்ந்து அவள் படும் வலியையும் வேதனையையும் உள்வாங்கி எழுதிய அற்புதமான படைப்பாக வெண்கடலின் அலைகளைக் கிளர்த்தியிருக்கிறீர்கள். இறந்து போன குழந்தை இருக்கட்டும்… உயிரோடு இருக்கும் குழந்தையும் கூடப் பாலருந்த வாய் வைக்கத் தெரியாமல் மலைத்துப் பழகும் நாட்களில்- மறுத்து ஒதுக்கும் தருணங்களில் அந்தப் பெண் படும் தவிப்புக்கு எதைத்தான் உவமை சொல்ல முடியும் ? ..எப்போதோ அனுபவித்தும்/பிறர் அனுபவிக்கக் கண்டும் மறந்து போன அந்தப் பழைய அனுபவங்களுக்குள் மீண்டும் ஒரு முறை நுழைந்து செல்ல வைத்தபடி மயிர்க்கூச்சலிடும் சிலிர்ப்பை உண்டாக்கி விட்டது கதைக்குள்ளான பயணம்.

பெண்பாலை அருந்தாததவர் எவருமில்லை….!

ஆனால் அது சார்ந்த அவள் வேதனையை,வலியை உணர முடிவதும்-

அவ்வாறு உணரத் தவறுவதாலேயே சமூகம் தடம் பிறழ்ந்து போகிறதென்பதைப் போகிற போக்கில்

//‘பெண்ணடியாளுக்க வலியக் கண்டா ஆணாப்பிறந்ததே பாவம்ணு தோணிப்போயிரும்’ என்றான் குமரேசன்‘ஆணுக்கு அந்தமாதிரி வலி இல்லியா?’ என்றேன்.

‘இல்லியே… இருந்தா இந்த உலகம் இப்பிடி நாறக்கூதறயா இருந்திருக்குமா? ஒரு மரியாதியும் சினேகமும் எல்லாம் இருந்திருக்குமே’ //

என்று இவ்வாறு கோடி காட்டுவதும் பெண் மீது மிகுந்த மரியாதையும் சினேகமும் உள்ள உன்னதமான ஒரு ஆத்மாவுக்கு மட்டுமே சாத்தியம். மிகச்சரியான இடத்தில் வந்து விழுந்திருக்கும் மிகச்சரியான அந்த உரையாடல் துணுக்கை அங்கே இணைப்பதென்பது,மானுட இனம் முழுவதன் மீதும் அலகிலாக் கருணை கொண்ட ஒப்பற்ற ஒரு படைப்பாளிக்கு மட்டுமே தன்னிச்சையாக வாய்க்கும் ஒரு வரம்…! அவனால் மட்டுமே இயலக்கூடியது அது…! நன்றி ஜெ எம்!

கதையின் முடிவில் தன் பாலருந்தித் தன் துயர் தீர்த்த அட்டைகளைக் கோழிக்கு இரையாக்குவதை ஒப்புக்கொள்ள முடியாமல் அருளைப்பாலாய்ச் சுரக்கும் அந்தப்பெண் நெகிழச்செய்து விட்டாள்.கதைக்கு அருமையான முத்தாய்ப்பு அது.

எம்.ஏ.சுசீலா

அன்புள்ள ஜெ

வெண்கடல் சிறப்பான கதை. ஒரு நல்ல கதையை எப்படி சுருக்கி எவரிடம் சொன்னாலும் அது உணர்ச்சிகரமாகச் சென்றுசேரக்கூடியதாக இருக்கவேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட கதை இது. வகுப்பிலும் வீட்டிலும் இந்தக்கதையைச் சொன்னபோது கேட்டவர்கள் எல்லாரும் ஆகா என்றார்கள். அதுவே ஒரு நல்ல கதைக்கு இலக்கணம்

நன்றி

சிவம்

Posted in எதிர்வினைகள், சிறுகதை | Tagged