தொழிற்சங்கத்தின் எதிர்மறைத்தன்மை

அன்புள்ள ஐயா, நலம் , நலமறிய ஆவல் . விஷ்ணுபுரம் விழாவில் தங்களை சந்திக்க ஆவலுடன் இருகின்றேன்.

சமீபத்தில் தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை படித்தேன் . அதில் எப்படி சட்டம் இயற்ற வேண்டிய பாராளுமன்றம் தன் கடமையை செய்ய தவறுவதால் அந்த வெற்றிடத்தை நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்பு அல்லது வாழ்முறைகள் என்கிற பெயரில் நிரப்ப முற்படுகின்றன என்பதையும் அதன் பிற விளைவுகளை பற்றியும் அழகாக எடுத்துரைக்கப் பட்டிருந்தது.

அந்த கட்டுரையை படிக்க படிக்க எனக்கு எங்களது (நமது) நிறுவனத்தில் நடப்பது நினைவுக்கு வந்தது. இந்த நிறுவனத்தில் எப்படி அதிகாரிகள் செய்ய வேண்டியவற்றை எல்லாம் இப்போது union கள் செய்கின்றன என்பதும் இப்பொழுதெல்லாம் அதிகாரிகள் ஏதும் செய்ய முற்படும்போதும் union கள் அதற்க்கு ஏதானும் முற்றுக்கட்டை போடு விடுகின்றன.

ஓர் செயல்திறனட்ட்ற அதிகாரி இருக்கும் பட்சத்தில் union கள் அவரை செயல் பட செய்யும் உந்தாக இருக்கின்றன. இதே ஒரு செயல் பட முனையும் அதிகாரியின் செயல் அவர்களின் தலையீடு பெரும் எரிச்சலை ஏற்படுதுவதாக் உள்ளது.

union இல் பங்கெடுத்தவர் என்ற முறையில் இதை பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.

விஜய் சாகர்

அன்புள்ள விஜய்

காட்டில் ஒரு இயற்கை விதி செயல்படுவதைக் கண்கூடாகக் காணமுடியும். கொடிகள் செடிகள் மரங்கள் காளான்கள் என பலவகை தாவரங்கள் செறிந்திருக்கும். கொஞ்சம் கவனித்தால் அவை ஒரு சமநிலையில் இருப்பதைக் காணலாம். ஒவ்வொருசெடியும் இன்னொரு செடியால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வொருசெடியும் தன்னால் முடிந்தவரை வளரவே முயல்கிறது. ஆனால் அதை பிற அனைத்துச்செடிகளும் சேர்ந்து கட்டுக்குள் வைத்துள்ளன. காட்டில் ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட செடியை முழுமையாக வெட்டி அழித்தால் இன்னொருசெடி பீரிட்டு வளர்வதைக் காணலாம்

ஜனநாயகம் என்பது இயற்கையின் இந்த விதியை சமூகவியலில் செயல்படுத்த முயலக்கூடியது என்று புரிந்துகொள்ளலாம். ஜனநாயகத்தில் எல்லா விசைகளும் வளர அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் ஒன்று இன்னொன்றால் இயல்பாக கட்டுப்படுத்தப்படவும் செய்கின்றன

நம் அரசியலல் செயல்பாடு என்பது நாடாளுமன்றம், நீதிமன்றம், அதிகாரிவர்க்கம், ஊடகங்கள் என வெவ்வேறு அமைப்புகளின் கூட்டான செயல்பாட்டால் நிகழ்கின்றது. ஒவ்வொன்றும் தன்னுடைய முழு விசையுடன் செயல்படுகையில் ஒன்று இன்னொன்றை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ஆகவே ஏதேனும் ஒன்று விசையிழந்தால் இன்னொன்று வேகம் பெறுகிறது. இது இயல்பானதுதான்

தொழிற்சங்கம் ‘ஆக்கபூர்வமாக’ சிந்திக்கவேண்டும் என்று வாதிடுபவர்களை நான் சந்தித்திருக்கிறேன். அதாவது தொழிற்சங்கம் முதலாளிகளைப்போல அல்லது நிர்வாகம்போல சிந்திக்கவேண்டும், செயல்படவேண்டும் என்று சொல்வார்கள். நான் அதற்கு என்னுடைய பதிலை எப்போதுமே சொல்வேன். தொழிற்சங்கம் முதலாளியோ நிர்வாகமோ அல்ல. ஆகவே அந்த பணிகளை அது ஆற்றமுடியாது.முதலாளி, நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிர்சக்தியாக செயல்படுவதற்காகவே அது உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வேலையை அது செய்வதே முறையாகும்.

அந்தவேலை ஒருவகை எதிர்மறைத்தன்மை கொண்டதுதான். ‘ஆக்கப்பூர்வமான’ வேலை அல்லதான். ஆனால் அந்த எதிர்மறைத்தன்மையே அதன் கடமை. முதலாளிக்கும் நிர்வாகத்துக்கும் எதிராக தொழிலாளர் நலனை மட்டுமே கவனிக்கவேண்டியதுதான் அதன் பொறுப்பு. அது பிரேக். அக்ஸிலேட்டரின் வேலையை அது செய்யக்கூடாது

தொழிற்சங்கம் பிற அமைப்புகளை கண்காணிக்கக்கூடிய கட்டுப்படுத்த முயல்வதே முறை. அதன் வழியாகவே அது அந்த அமைப்பின் சரியான செயல்பாட்டுக்கு பங்களிப்பாற்றுகிறது

ஜெ

This entry was posted in பொது. Bookmark the permalink.