ஈழம் ஒரு கடிதம்

ஜெமோ,

உங்களுடைய பார்வையில் இருந்து நான் கடுமையாக மாறுபடுகிறேன். இலங்கையில் இராணுவமும், விடுதலை புலிகள் இருவருமே மிக கடுமையான போர் குற்றங்களை செய்துள்ளார்கள், ஆனால் இங்குள்ளவர்கள் விடுதலை புலிகளின் போர்குற்றங்களை பற்றி மூச்சுகூட விடுவதில்லை. “விடுதலை புலிகள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு இராணுவ இயக்கம்”, என்று ஒருமுறை சோபா சக்தி கூறினார், அதுவே சரியான மதிப்பீடு என்று நினைக்கிறேன். “முறிந்த பனை” படித்த போது இந்த பாசிச புலிகளில் முழுமையான வெறியை அறிந்து கொள்ள முடிந்தது. பல பாலச்சந்திரர்களை கொலைக்களத்திற்கு தெரிந்தே அனுப்பி வைத்தவர்தான் புலிகளின் தலைவர். அப்பாவிகளை கேடயமாக பயன்படுத்தி தாங்கள் தப்பிக்க நினைத்தவர்கள் தான் புலிகள். 1987லிலும், 2003லும் அரசியல் தீர்வுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை சுத்தமாக அழித்து கொண்டு தங்களையும் ஈழ தமிழ்மக்களையும் ஒரு சேர அழித்து கொண்ட இந்த கூட்டத்திற்குத்தான் இந்த போராட்டங்கள், அப்பாவி இலங்கை தமிழர்களுக்காக அல்ல. இந்த மாணவர் உண்ணாவிரத போராட்டம் பாசிச புலி மற்றும் அவர்களின் தமிழக முகவர்களின் பிரச்சார வழிமுறைகளின் வழியே சென்று கடுமையான இந்திய எதிர்ப்பில் போய்தான் முடியும் ஏற்கெனவே அந்தவழியில் தான் போய் கொண்டு இருக்கிறது. இந்த போராட்டங்கள் இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக அல்ல, புலி பினாமிகளின் வெளிநாட்டு பண முதலீடுகளை காப்பாற்றிக்கொள்ளதான், இலங்கை அரசை தண்டிக்கிறேன் பேர்விழி என்று தங்களுடைய பணப்பறிப்பு தொழிலை வெளிநாட்டு புலிகள் தொடர்வதற்குதான் இது வழிவகுக்கும். இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பெரும்பாலான தமிழக தமிழர்கள் இந்த கேலிக்கூத்தில் பங்கெடுக்காமல் இருப்பதே.

அண்மையில் தஞ்சை பெரியகோவிலுக்கு வருகை தந்த இலங்கையை சேர்த்த புத்த பிட்சுக்கள் தாக்கபட்டார்கள். அதை தமிழ் தேசிய இயக்கங்கள் ஆதரிக்க செய்தன, அவர்கள் அப்படிதான், ஆனால் ஒரு அறிவுஜீவி அவர் எப்போதும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை எதிர்ப்பவர், தினமும் தொலைகாட்சியில் அறப்போராட்டம் நடத்துபவர் . அவர் இந்த பிட்சுக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தி பேசுகிறார். புத்த மதமும், இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் ஒரே முனையில் இணைந்துல்ளதால் இங்கு அந்த பிட்சுக்கள் தாக்கப்பட்டது நியாயமானதாம். மதமும் அரசியலும் எல்லா தேசங்களிலும் கைகோர்த்தே உள்ளது. இவர் இந்து பெளத்த மதங்களை சார்தவர்கள் அரசியல் நிலைப்பாடு எடுத்தால் அதை கடுமையாக குறைகூறுபவர் அதேசமயம், சரி அதையேன் சொல்வது உங்களுக்கே புரியும். ஆனால் இந்த அரைகுறை – ஜீவிகளின் இந்த நிலைப்பாடுகலால்தான் அவர்களுடைய நிறத்தை உண்மையான நடுநிலையாளர்களுக்கு காட்டிகொடுக்கிறர்கள் அதுவரை நல்லதுதான்.

நன்றி
சு செல்வபாரதி

This entry was posted in பொது. Bookmark the permalink.