தன்னறமும் தனிவாழ்வும்-கடிதம்

திரு ஜெ அவர்களுக்கு,

நான் தங்களுடைய

விதி சமைப்பவர்கள்
தேர்வு செய்யப்பட சிலர்
காந்தி
நான்கு வேடங்கள்

போன்ற பல விஷயங்களால் கவரப்பட்டு முடிந்த அளவுக்கு அதை பின்பற்றவும் செய்கிறேன். சில சமயங்களில் மிகக் கொடுமையாக இருக்கிறது. உதாரணத்திற்கு என்னுடன் ஜூநியராக கடந்த ஒரு வருடமாக பணியாற்றும் ஒரு நபர் நான் ஓரளவு கண்டிப்பானவன் என்ற காரணத்தாலும் அவனின் சோம்பேறித்தனத்தாலும் நான் இல்லாத சமயத்தில் என் மேலதிகாரிகளிடத்தில் தவறாக என்னப்பற்றி விமர்சனங்கள் செய்திருக்கிறான். தற்பொழுதுதான் எனக்கு அதைப்பற்றி தெரிய வருகிறது. நான் நினைத்தால் அவனை பணிமாற்றமோ அல்லது பணிநீக்கமோ செய்திருக்க முடியும். ஆனால் என் மனம் அதற்கு ஒப்பவில்லை, அவனின் குடும்பத்தை நினைத்து. ஆனால் எனக்கே பிரச்சினை என்று வரும் பொழுது நான் என்ன செய்ய ?

இதுவே சில வருடங்களுக்கு முன் என்றால் கதையே வேறு! இச்சமயம் அவன் பணிநீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்திருப்பான்!

தங்களின் எழுத்துக்கள் என்னை பல விஷயங்களில் தடை செய்கிறது. இது எனக்கே பிரச்சினையாக வளருகிறது. பேசிப் பயனில்லை என்ற இடத்தில் நிற்கிறது. நான் என்ன செய்ய ?

– எஸ்.பி.

அன்புள்ள எஸ்பி அவர்களுக்கு

நான் எழுதும் கட்டுரைகளில் நம்முடைய வாழ்க்கைச்செயல்பாடுகளை அந்தந்தக் களங்களுக்கேற்ப பிரித்துக்கொள்வதைப்பற்றி, அவற்றை அக்களங்களின் தேவைக்கு ஏற்ப முழுமையாகச் செய்வதைப்பற்றித்தான் பேசிவருகிறேன்.

ஆகவே ஒருவர் தன் தொழில்சூழலில் தேவையில்லாத மெல்லுணர்ச்சிகளை வளர்த்துக்கொண்டு அங்கே தன் பணிகளில் பிழைகளையோ தோல்விகளையோ உருவாக்கிக்கொள்வதை ஒருபோதும் சரி என்று சொல்லமாட்டேன். அது அறக்குழப்பம் என்றுதான் பொருள்படும்.

உங்கள் பணியிடத்தில் நீங்கள் எதைச்செய்தாகவேண்டுமோ, எதைச்செய்தால் உங்கள் பணி முறையாகவும் வெற்றிகரமாகவும் நிகழுமோ அதைச்செய்வதே சரி. அதற்கு நீங்கள் சொந்தவாழ்க்கையில் நெகிழ்வானவராக இருப்பது தடையாக ஆகவேண்டியதில்லை.

இப்படிச் சொல்வேன். அந்த ஊழியர்மீது நடவடிக்கை எடுப்பதுதான் தொழிலுக்கு தேவையானது என்றால் அதை எந்தவித வன்மமும் வெறுப்பும் இல்லாமல் செய்வதுதான் சரியான செயல். செய்தபின் அதற்காக வருந்தாமலிருப்பதும் அந்நினைவை குற்றவுணர்வுடன் சேர்த்துக்கொள்ளாமலிருப்பதும் அவசியம்

இல்லை அவரை மன்னிக்கவைக்கவேண்டும், அதுவே நல்லது என நீங்கள் நினைத்தால் அதற்கான காரணகாரியங்களை யோசித்து அதில்இருக்கும் இழப்புகளை கணக்கிட்டு அதைச்செய்யவேண்டும். அதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்

தன்னறம் என நான் சொல்வது அதையே

ஜெ

This entry was posted in பொது. Bookmark the permalink.