இணைவைத்தல்- கடிதங்கள்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் எழுதிய ‘இணைவைத்தல்’ படித்தேன்.
இப்படியும் இருந்திருக்க முடியுமா என்ற ஆச்சரியம் தோன்றியது.
பொதுவாய் உங்கள் எழுத்துகளை, முக்கியமாய்
அசாதாரணத்தன்மை நிறைந்த கதைகளை
விரும்பிப் படித்துவருகிறேன்.
மிக்க நன்றி
-ஹேமா

அன்புள்ள ஹேமா

ஒரு விஷயம் கவனியுங்கள். பெரும்பாலான ஆழமான விஷயங்கள் ‘இப்படியும் இஉக்குமா’ என்ற எண்ணத்தை உருவாக்கும்விதமாகவே உள்ளன. ஏனென்றால் நம் வாழ்க்கை பெரும்பாலும் மேலோட்டமான தளத்திலேயே நடந்துகொண்டிருக்கிறது

ஜெ

வணக்கம் ஜெயமோகன் அவர்களே…!

“இணைவைத்தல்“ கட்டுரையை இன்று அதிகாலையில் வாசித்தேன். “தேர்வு“ வாசித்த போது இருந்த ஆட்கொள்ளும் மனநிலையை ஒத்த நிலையை “இணைவைத்தல்“ என்னும் செலுத்திக் கொண்டிருக்கிறது.

காதல் பற்றிய கனவுகள் அதிகம் காமத்துடன் கழிந்துவிடும் கனவுகளாகவே இருந்து விடுகின்றன. அவற்றையே அதிகமானோர் காதலாகவும் கொள்கிறார்கள். அதற்குத்தான் அவர்கள் நிறங்களைப் பூசி கொண்டாடுகிறார்கள். ஆனால், காதலின் உண்மையை அல்லது உள்ளிருந்து எழும் தீயை சரியாக உணர்ந்து கொண்டவர்கள் குறைவு. அப்படியானவர்கள் பேசுகின்ற அல்லது எழுதுகின்ற தருணங்களை காமத்துடன் காதலை கழித்துவிடுகிறவர்கள் அலைக்கழிப்புடனேயே அணுகுகிறார்கள். ஆனால், உண்மையில் உணர்ந்து கொள்ளப்பட்ட காதலின் தன்மையை உங்களின் “இணைவைத்தல்“ சரியாக சொல்கிறது. நான் இன்னும் இருபதுகளில் பயணப்படுகிற இளைஞன் திருமணமென்ற அடுத்த நிலைக்குள் செல்லாதவன். ஆனால், காதலின் ஆழத்தை அல்லது புரிதலை சரியாக உள்வாங்கி வைத்திருக்கிற ஒருவன். ஆமாம், நான் அப்படித்தான் நம்புகிறேன்.

சினிமாக்களில் போதிக்கப்படுகின்ற காதலை அல்லது விளம்பர யுத்திகளுக்குள் காணாமல் போய்விட்ட காதலை தேடுகிறவன் அல்ல. என்னுடைய மனது கற்றுத்தந்த காதலை- இன்னொரு மனது கொண்டிருக்கிற உணர்வுகளை உள்வாங்கி ஆழமாக பிரதிபலிக்கிறவன் நான். எனக்கு காதல் என்பது என்றைக்குமே கொண்டாட்டத்துக்கும் ஆராதனைக்கும் உரியது. கிட்டத்தட்ட அதேவிடயத்தையே உங்களின் கட்டுரையில் கண்டேன். அதிகாலை வேளையில் வாசித்த கட்டுரையொன்று என்னுள் சில நாட்களுக்கு தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கப் போகிறது. அந்த வகையில் நல்ல உணர்வுகளை மீட்டெடுக்க அல்லது மனதின் ஆழத்தில் வைத்துக் கொண்டிருந்த காதலை அனுபவிக்க தூண்டிய வகையில் உங்களுக்கு நன்றி.

புருஷோத்தமன் தங்கமயில்

அன்புள்ள புருஷோத்தமன்

இயல்பான அன்பு தன்னளவிலேயே மகத்தானது.

மனிதனுக்கு அன்பு செலுத்துவதற்கான இயல்பு பிற அடிப்படை இச்சைகளைப்போல இயற்கையிலேயே அளிக்கப்பட்டுள்ளது என்பதை நான் இந்த வயதில் திடமாக உணர்கிறேன்.

அதை மறைப்பது அச்சமும் அகங்காரமும் மட்டும்தான். நாம் ஏன் அன்பு செலுத்துவதில்லை என யோசித்தால் அந்த இரு சொற்களிலேயே வந்து நிற்க முடிகிறது

திருமணம் பற்றி பேசும்போதே ‘பாத்துடா…தலையில ஏறி ஒக்காந்திருவா. வைக்கவேண்டிய வேண்டிய எடத்தில வைக்கணும்; என்று பேச ஆரம்பிக்கும்குரல்களைப்பற்றி கவனமாக இருங்கள்

ஜெ

This entry was posted in பொது. Bookmark the permalink.