கடுங்குளிர் கவிதைகள்- 1

எறும்பு தின்னியின் நிதானம்.

திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன்
கனமாக அசைந்து செல்கிறது.
அதன் குளிர்ந்த நாக்கு
எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது.
அதன் குளிர்ந்த மூச்சு
அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது.
உள்ளே ஓலங்கள்
உயிரின் குருட்டு வெறி
தினம் அதுகாண்பது அக்காட்சி.
மரணம் ஒரு பெரும் பதற்றம்
என அது அறிந்தது.
எனவே
வாழ்வு ஒரு நிதானமான நடை எனப்
புரிந்து கொண்டது.

இரு பறவைகள்

வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை
காற்றின் படிக்கட்டுகள்
அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்
பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு.
சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
கிளைகள் மீது எம்பித்தாவுகிறது
வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிகடல்.

இரு பறவைகள்
இரண்டிலுமிருந்து வானம்
சமதூரத்தில் இருக்கிறது.

மண்

இறந்த குழந்தையை தானே புதைக்கும்
தாய் ஒருத்தியை நேற்றுப் பார்த்தேன்.
பிடிப்பிடியாக மண்ணை அள்ளி
மெதுவாக சொரிந்துகொண்டிருந்தாள்.
பிஞ்சுக் கால்கள் மறைந்தன.
குட்டிக் கைகள் பிறகு.
உருண்ட சிறு முகத்தை மெல்ல வருடினாள்.
மென்மையான மண்ணை அள்ளி
மெதுவாகப் பரப்பினாள்.
ஒவ்வொரு பிடி மண்ணாக
மெல்ல மெல்ல…
அம்மா
இந்த பூமியையே அள்ளி எடுத்துவிடுவாயா?


இரு மருங்கும்

சலனம் மிகுந்த இரவின் மௌனத்தில்
இந்த பனிவெளியின் பொந்துகளில் எங்கும்
மெல்ல முளைத்து அருவப்பேருருவாய் ஓங்கி
வெளிநிறைக்கும் கனவுகளை
ஒருபுறம் பார்த்துக்கொண்டிருக்கிறது வரலாறு
கண்ணீரின் கதகதப்புடன்.
மறுபுறம் அதிகாரம்
மீசைக்குள் உறைந்த இளஞ்சிரிப்புடன்.

[பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் உள்ள கடுங்குளிர் கவிதைகள் என்ற அத்தியாயத்தில் சிறைவாசிகள் எழுதியவையாக உள்ள கவிதைகள்]

This entry was posted in இலக்கியம், கவிதை and tagged , . Bookmark the permalink.