விவாதிப்பவர்களைப்பற்றி

அன்புள்ள ஜெயமோகன்

உங்களுடன் உரையாடுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். அது ஒரு அகங்காரத்தின் குரலாக எனக்கு தோன்றியது. பொதுக்கருத்துகக்ளை சொல்பவர்கள் இபப்டி சொல்வது முறையா? நாம் நம்மை பொருட்படுத்துபவர்களை பொருட்படுத்துவது தானே முறை?

முரளி கணேஷ்

அன்புள்ள முரளி
‘கல்வெட்டு பேசுகிறது’ பிப்ரவரி மாத இதழில் ஒரு செய்தி. பிரமிளுக்கான அஞ்சலிக்கூட்டத்தில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் அவரைக் கண்டித்துவிட்டு ‘செத்தபாம்பு என்பதனால் மேற்கொண்டு அடிக்காமல் விடுகிறேன்’ என்றாராம். இதில் வியப்படைய ஏதுமில்லை. நவீன இலக்கியத்தின் ஒரு முன்னோடியான நகுலன் இறந்தபோது ஐந்து சிற்றிதழ்கள் அவரைப்பற்றி செய்தி வெளியிட்டன என்று, ஒரு முற்போக்கு இதழ் செத்த பிணத்தை தூக்கிவைத்து அலைகிறார்கள் என்று தலையங்கம் எழுதியது. முற்போக்கு முகாமைச் சேர்ந்த தோழர்கள் இறந்தால் வருடக்கணக்கில் அவர்களுக்காக கூட்டங்கள் போட்டு மலர்கள் பிரசுரித்து இலக்கியப்போட்டிகள் வைத்து கௌரவிக்கும் அவர்களின் நகுலனைப்பற்றிய நோக்கு இது.

இலக்கியவாதிகளைப்பற்றிய வசைகள் தமிழ்நாட்டில் புதிது அல்ல. வசைகளுக்கு அப்பாற்பட்ட நல்ல எழுத்தாளர் எவருமில்லை. சமீபத்திய உதாரணங்களையே பார்ப்போம். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒருவரி தன்னைப்பற்றியது என்று குட்டி ரேவதி என்ற கவிஞருக்குத் தோன்ற, அவரை அவரது தோழிகள் கண்டிக்கிறார்கள். அதற்கு ஒரு கண்டனக் கூட்டம். பேசியவர்கள் பெரும்பாலும் பெண்ணியம்போன்ற எதனுடனும் தொடர்பில்லாதவர்கள். ராமகிருஷ்ணனை நாய் என்று சொல்லி வசைபாடினார்கள். அவர் எழுத்தாளரே அல்ல என்றார்கள். அவரை இனிமேல் தமிழில் எழுதவிடக்கூடாது என்றார்கள். அதேகூட்டத்தில் யுவன் சந்திரசேகரும் அதேபோல வசைபாடப்பட்டார்.

அதற்கு சிலநாட்கள் முன்புதான் அசோகமித்திரன் அவர் ஆங்கில இதழில் சொன்ன ஒரு கருத்துக்காக அனைத்து எல்லைகளையும் கடந்து வசைபாடப்பட்டார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் சுந்தர ராமசாமி ‘பிள்ளைகெடுத்தாள்விளை’ கதைக்காக வசைபாடப்பட்டார். அதற்கு முன் ஜெயகாந்தன் தமிழ் பற்றி அவர் சொல்லிய கருத்து ஊடகங்களால் திரிக்கப்பட்டு, ஊர் ஊராக நாய் என்றும் பேய் என்றும் வசைபாடப்பட்டார். அதற்கு முன்னர் சுஜாதா. ஒன்று கவனிக்கலாம். இதில் எல்லாம் வசைபாடியவர்கள் அனேகமாக ஒரே நபர்கள்!

வசைகளின்போதெல்லாம் இப்படைப்பாளிகள் தமிழுக்கு அளித்த கொடை, இவர்களின் இலக்கிய ஆளுமை ஒரு கணம்கூட நினைக்கப்படவில்லை. மாறாக அவர்களின் படைப்புகளும் சேர்த்து வசைபாடப்பட்டன. அவற்றையும் சேர்த்து குப்பையில்போடவேண்டும் என்ற குரல் எழுந்தது. அவர்களை எழுதவிடக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது.
 
நான் இவர்களை எதிர்கொண்டது என் இருபத்தெட்டாம் வயதில் ‘ரப்பர்’ வெளிவந்தபோது. அதன் பரிசளிப்புவிழாக் கூட்டத்தில் நான் பேசும்போது தமிழ் நாவல்கள் நாவல் என்ற விரிவும் விவாதத்தன்மையும் கொண்ட வடிவத்தை அடையவில்லை என்று சொல்லி என் நாவல் அதற்கான ஒரு முயற்சி என்று சொன்னேன். அதில் வெற்றிபெற்றதாக எண்ணவில்லை என்றும் ஆனால் எவருமே புறக்கணிக்க முடியாத வெற்றியை எதிர்காலத்தில் பெறுவேன் என்றும் சொன்னேன். தமிழில் படிக்க ஏதுமில்லை என்று நான் சொன்னதாக அது திரிக்கப்பட்டு அச்சாக, விவாதங்கள் தொடங்கின.

அதன் வழியாக வந்த வசைக்குரல்கள் என்னை வேதனையுற வைத்தன. பெரும்பகுதி நான் தமிழில் எழுதக்கூடாது, எழுதினாலும் பிரசுரிக்கக் கூடாது என்ற வகை தாக்குதல்கள். சுந்தரராமசாமியிடம் என் வருத்தத்தைச் சொன்னேன். ”நான் எழுதிய நாவலின் சிலபகுதிகளிலேனும் சிறந்த படைப்பூக்கம் உள்ளதே, அதை இவர்கள் ஏன் பொருட்படுத்தவில்லை” என்றேன். ”உங்கள் மீது இலக்கியக் கவனம் குவிகிறது என்பது மட்டுமே இதற்குப் பொருள். இவர்களில் பெரும்பாலானவர்கள் உங்கள் எழுத்து எதையுமே படிக்காதவர்கள். படித்தாலும் திறந்தமனத்துடன் அணுகாதவர்கள். இவர்களின் குரலை நீங்கள் பொருட்படுத்தக் கூடாது” என்றார் ராமசாமி.

சுந்தர ராமசாமி எக்காரணத்தாலும் படைப்பாளி அவற்றைப் படிக்கக்கூடாது என்று சொன்னார். படித்தால் மானசீகமாக எதிர்வினையாற்ற ஆரம்பித்துவிடுவோம். அது மெல்லமெல்ல நம் மனநிலையை எதிர்மறையாக பாதித்து நம் படைப்புநிலையைக்கூட மாற்றியமைக்கும். ‘முக்கியமான கருத்துக்கள் இருந்தால்?’ என்றேன். ‘அவை முக்கியமான கருத்துக்கள் என்றால் எப்படியும் நம்மைத்தேடி வந்துவிடும்’ என்றார் ராமசாமி. பலவருடங்கள் கழித்து சொல்புதிதுக்காக ஜெயகாந்தனிடம் ஓரு பேட்டி எடுத்தேன். அதில் இக்கேள்விக்கு இதேபதிலை ஜெயகாந்தனும் சொன்னார்.

குரோதமும் உள்நோக்கமும்கொண்ட கருத்துக்கள் எழுத்தாளனை மானசீகமாகத் தளர்த்தும் நோக்கம் மட்டுமே கொண்டவை. அவன் சூழலில் தீவிரமாகச் செயல்படும்தோறும் அவை மேலும் மேலும் உக்கிரமாக ஒலிக்கும். வசைகள், மூர்க்கமான தாக்குதல்கள் அவற்றில் நிறைந்திருக்கும். அவற்றின் அபத்தத்தை ஒரு பொதுவாசகன் எளிதில் உணரலாம். ஜெயகாந்தன், ஒருவர்  தமிழ்வெறியுடன் செயல்படுவது நாய் தன்னைத்தானே நக்குவதுபோல என்று சொன்னார் என்று கேள்விப்பட்டு ‘எப்படி அப்படிச் சொல்லலாம்’ என பொங்கி எழுந்தவர்கள் அவரைப்பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் நாய் நாய் என்று திட்டினார்கள், கவிதைகள் எழுதினார்கள்.

நான் கண்டுவரும் ஒன்று உண்டு. நான் ஒரு விமரிசனக்கருத்தை அழுத்தமாகச் சொல்லும்போது சிலர் பொங்கி எழுவார்கள் ‘இவன் எப்படி அப்படிச் சொல்லலாம்? சொல்வதற்கு இவன் யார்? தன்னை அதிகமாக எண்ணிக்கொள்கிறான்’ என்றெல்லாம் சொல்லி வசைகளும் முன்முடிவுகளும் கலந்து ‘தூக்கிவீசும்’ கட்டுரைகளை எழுதித்தள்ளுகிறார்கள். பொருட்படுத்தத்தக்க எந்தப் பங்களிப்பும் இல்லாத தாங்கள் இந்த அளவுக்கு அழுத்தமாக முடிவான கருத்துக்களையும் தீர்ப்புகளையும் சொல்லலாம் என்றால் இருபதுவருடம் தர்க்கபூர்வமாக இலக்கியவிமரிசனத்தை எழுதிவரும் நான் ஏன் ஒருகருத்தை திடமாகச் சொல்லக்கூடாது என்று இவர்கள் யோசிக்கமாட்டார்கள்.

இவர்கள் பெரும்பாலும் எழுத்தாளனின் எழுத்தின் தீவிரத்தையும் நுட்பங்களையும் அறியாதவர்கள். அதனால் அவனுக்கு வரும் முக்கியத்துவத்தை மட்டும் கண்டு காழ்ப்பு கொள்கிறார்கள். அக்காழ்ப்பை வெளிப்படுத்த மூன்று வழிகளை தமிழில் தெரிவுசெய்கிறார்கள்.ஒன்று தன்னை ஒரு அதிதீவிர முற்போக்காக காட்டிக் கொள்வது. எழுத்தாளன் முற்போக்குக்கு எதிரான எதையாவது சொல்லிவிட்டான் என்று எடுத்துக் கொண்டு ‘சமூகக் கோபத்துடன்’ அவனை கீழிறங்கிச் சாடுவது. இரண்டு, ஏதாவது கோட்பாடுகளை எடுத்துக் கொண்டு அதைவைத்துக் கொண்டு வசைபாடுவது, நகையாடுவது. மூன்று, அதீதவாசகனாக தன்னை உருவகம் செய்துகொண்டு ‘மேலை’ நாட்டில் தான் வாசித்த பெரும்படைப்புகளை வைத்து எழுத்தாளனை எள்ளவும் வசைபாடவும் முயல்வது.

அத்துடன் என் எழுத்துக்களை வாசிக்காதவர்கள் மத்தியில் நான் உயர்சாதி, இந்துமத நோக்கு உள்ளவன் என்ற சித்திரம் உருவாக்கபப்ட்டிருப்பதனால் என்னைப்பற்றிய வசைகளில் எப்போதும் சாதி, மதவெறிக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. வேறு பல காரணங்கள் வெளியே ஒலிக்கும், உள்ளே கீழ்த்தர மதவெறியும் சாதிவெறியும் மட்டும் நுரைத்துக் கொண்டிருக்கும்.    

சமீபத்தில் இணையம் ஒரு பொதுவெளியாக ஆனபின் இத்தகைய எழுத்துக்கள் பலமடங்கு பெருகியுள்ளன. ஒரு எழுத்தாளன் வசைபாடப்பட்டால் உடனே வந்துசேர்ந்துகொண்டு என்ன ஆனந்தமாக கும்மியடித்து மகிழ்கிறார்கள்! யார் இவர்கள்? இவர்களை ஏன் பொருட்படுத்த வேண்டும்? இவை எழுதபப்ட்ட சில மாதங்களிலேயே சருகுகள் போல உதிர்ந்து மறைகின்றன. என் இலக்கிய வாழ்க்கையில் இப்படி எத்தனையோ சருகுப்புயல்களை கடந்துவந்திருக்கிறேன். அவற்றை எழுதியவர்கள்கூட பலர் இன்று மறக்கப்பட்டுவிட்டார்கள்.

தன் எழுத்தை பொருட்படுத்தி ,அது உருவாக்கும் அறிவார்ந்த தளத்திற்குள் வந்து, நேர்மையுடன் சொல்லப்படும் கருத்து அல்லாத எதையுமே பொருபடுத்தக்கூடாது என்றுதான் எனக்குச் சொல்லபட்டது. அதையே இன்று எழுதவரும் ஓர் இளம் எழுத்தாளனுக்கும் சொல்வேன். அவனும் தன் வாழ்நாள் முழுக்க இத்தகைய வசைகளையும் எக்காளங்களையும் தன்னைச்சுற்றி கேட்டுக் கொண்டுதான் இருக்கவேண்டும். தன் எழுத்தைப்பற்றி ஆழமான ஒரு கருத்தையேனும் சொன்ன ஒருவர் சொல்லும் விமரிசனங்களை, அல்லது அவர் மேற்கோள் காட்டும் விமரிசனங்களை மட்டும் அவன் பொருட்படுத்தினால் போதும்.

நீங்கள் எழுதக்கூடியவரென்றால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். என்னிடம் எல்லா மூத்த எழுத்தாளர்களும் சொன்னது இது. உங்கள் முக்கியத்துவத்தைப் பற்றிய உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் எழுதியவை சார்ந்து மட்டுமல்ல, எழுதப்போகும் படைப்புகள் சார்ந்தும் உங்களுக்கு ஓர் அடிப்படைப் பெருமிதம் இருக்க வேண்டும். அதுவே எழுத்தாளனின் ஆற்றலின் ஊற்றுக்கண். அந்த தன்னம்பிக்கையை தகர்க்கவே சூழ ஒலிக்கும் இக்குரல்கள் தொடர்ந்து முயல்கின்றன. அவற்றுக்குச் செவிகொடுக்கும் கணமே உங்கள் ஆற்றல் நுரையடங்குவதைப்போல சரிவதை உணர்வீர்கள்.

எந்த ஒரு எழுத்தாளனும் மனநிலையின் இரு உச்சங்களிலேயே இருக்க இயலும். ஒன்று மனச்சோர்வு. இன்னொன்று மன எழுச்சி. இரண்டுநிலைகளுக்கும் மாறிமாறி அலைவது அவன் வழக்கம். ஒருவகையில் இது எளியவகை மனநோய்போல. அவன் மனஎழுச்சி சார்ந்து தன்னை வைத்துக் கொள்ள எப்போதும் முயலாவிடில் சோர்வுக்குத் தள்ளப்பட்டு அழிவான். சமகால எழுத்தாளர்கள் பலரும் மனச்சோர்வின் மடிப்புகளுக்குள் புதைந்துபோகும் கணங்களையே மீண்டும் மீண்டும் என்னிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். நம்மைச்சூழ்ந்துள்ள இக்குரல்கள் நம்மை அங்கே கொண்டுசென்று அடைக்க முயல்கின்றன. அவற்றுடன் போராடி படைப்பூக்கத்துடன் இருக்க ஒரேவழி நம்மில் ஊறும் சுய உணர்வை வலுப்படுத்துவதே. ‘நான் படைப்பாளி , நான் காலத்தின் குழந்தை’ என்ற உணர்வை.[ இணையான வரிகளை ஜே.ஜே.சிலகுறிப்புகளில் காணலாம்.] ஒரு எழுத்தாளன் என்ற நிலை மிக அபூர்வமானது, அங்கிருந்து கொண்டு நாம் பொருட்படுத்தத்தக்கவை சிலவே.

என்னைப்பொறுத்தவரை ஒன்று ஒருவர் ஏதேனும் ஒரு தமிழ்படைப்பைப்பற்றி ஒரு நல்ல கட்டுரையேனும் எழுதியிருக்க வேண்டும். அல்லது ஒரு நல்ல கதையாவது எழுதியிருக்க வேண்டும். அவரது எல்லா கருத்துக்களும் எனக்கு முக்கியமே. என்னை ஒவ்வொரு வரிக்கும் கடுமையாக விமரிசிக்கும் அ.மார்க்ஸின் ஒருவரியைக்கூட நான் வாசிக்காமல் விட்டதில்லை. என் விமரிசகர்களான பொ.வேல்சாமி போன்றவர்களிடன் நட்பும் மதிப்பும் இருந்து வருகிறது. அல்லது நேர்மையான ஆர்வத்துடன் என் இலக்கிய உலகுக்குள் நுழையும் எந்த வாசகனும் எனக்கு முக்கியமானவனே. அவர்களின் ஐயங்களும் விமரிசனங்களும் நிராகரிப்புகளும்கூட. இன்று தமிழில் எழுதிவரும் பலர் அப்படி என்னுடன் எதிர்த்து உரையாடி வந்தவர்கள்தான். 

கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. யாரும் எழுதலாம். அவற்றைப் பொருட்படுத்தமாட்டேன் என்று சொல்வதற்கும் கருத்துச் சுதந்திரம் உண்டல்லவா? விமரிசனம் எழுதுபவர்கள் தங்கள் எழுத்துக்களை எழுத்தாளன் புறக்கணிக்கவே முடியாதென்ற தரத்துடன் எழுதலாமே.

This entry was posted in எதிர்வினைகள், கேள்வி பதில் and tagged . Bookmark the permalink.

One Response to விவாதிப்பவர்களைப்பற்றி

  1. vks says:

    “விமரிசனம் எழுதுபவர்கள் தங்கள் எழுத்துக்களை எழுத்தாளன் புறக்கணிக்கவே முடியாதென்ற தரத்துடன் எழுதலாமே.”

    அது ஜல்ரா ஆகாதா?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s