பேராசிரியர் மௌனகுரு

ஈழ நாடகப்பேராசிரியர் மௌனகுரு மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்து கேரளம் சென்று திருவனந்தபுரம் வழியாக என் வீட்டுக்கு வந்திருந்தார். இரண்டுநாள் என்னுடன் தங்கினார். குழந்தைகளுடன் சட்டென்று இணைந்துவிடும் பழக்கம் கொண்ட உற்சாகமான மனிதர் சில கணங்களிலேயே என் பிள்ளைகளுக்குப் பிடித்தமானவராக ஆனார். ”இவரா? நீ பேரைச்சொன்னப்போ யாரோ சாமியார் வருவார்னுல்ல நினைச்சேன்?”என்றான் அஜிதன். பேராசிரியர் சிறுவயதில் நடனமாடுவார் என்ற தகவலின் வியப்பிலிருந்து சைதன்யாவால் எளிதில் வெளிவர முடியவில்லை.

மாலை பேராசியரை அழைத்துக் கொண்டு நாஞ்சில்நாடனைப் பார்க்கச் சென்றேன். வடிவீஸ்வரத்தில் தம்பிவீட்டில் தங்கியிருந்தார். குடும்பத்தின் நட்சத்திரமாக இருந்த ஒரு தம்பியை சமீபத்தில் இழந்த துயரம். அவரிடம் பேசிவிட்டு வடிவீஸ்வரம் வடிவுடையம்மன் கோயிலுக்குச் சென்றோம். திரும்பிவந்து இரவு பன்னிரண்டு மணிவரை மட்டக்களப்பு கூத்து மற்றும் நாடகம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஈழத்தமிழ் கேட்க அருண்மொழிக்கு மிகவும் பிடிக்கும். பேராசிரியர் பல ஊர் பழகி அதை பெரிதும் இழந்துவிட்டிருந்தாலும் ‘எங்கட’ நாட்டை பற்றிப் பேசும்போது கண்ணில் வரும் ஒளி அதை ஈழப்பேச்சாக மாற்றிவிடுகிறது.

மறுநாள் காலையிலேயே நான் அவரை அழைத்துக் கொண்டு திருவட்டாறு கோயிலுக்குச் சென்றேன். எங்களூரின் பசுமை பேராசிரியருக்கு மனநிறைவை அளித்தது. ”எங்கட ஊர் மாதிரி கெடக்கு” என்றார். ‘கனக்க’ தண்ணீர் ஓடும் தன் ஊர் ஆறு பற்றியும் அதன் அழிமுகத்து மென்மணலில் புரண்டு நீராடுவது பற்றியும் சொன்னார்.

திருவட்டாறு பற்றி அ.கா.பெருமாள் எழுதிய நூலை [ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் – திருவட்டாறு கோவில் வரலாறு, தமிழினி] நான் சுருக்கமாகச் சொன்னேன். மாடங்கள் சூழ்ந்த வாட்டாற்று நகரில் என் குடும்ப வீட்டையும் காட்டினேன். அந்தக் கால மாடவீட்டை வளர்ந்த இக்காலம் குள்ளமாக ஆகிவிட்டிருந்தது. கோயிலின் உயரமும் கேரள பாணி நாலம்பல கோபுர முகடும் பேராசிரியரை பிரமிக்கச் செய்தன. உள்ளே சென்று நாயக்கர் கால சிற்பங்களையும் அகன்ற பிராகாரத்தையும் நுண்மரச்சிற்பங்கள் செறிந்த பலிமண்டபத்தையும் காட்டினேன். மூன்று கருவறை நிறைத்து படுத்திருந்த கன்னங்கரிய திருமேனியை கண்ட கலையுள்ளம் கொண்டவர் எவரும் சில கணங்கள் மெய்மறக்காமலிருந்ததில்லை

பின்னர் திற்பரப்பு. பேராசிரியர் அன்று வரை அருவியில் குளித்ததில்லை. ”இதிலே குளிக்கலாம் என்ன?” என்றார். தயங்கி நீர் அருகே வந்தவரை நான் பிடித்து உள்ளே இழுத்து உள்ளே நிறுத்திக் கொண்டேன். சிரித்து குதூகலித்து, ”தியான அனுபவம் மாதிரி இருக்கு”என்றார். திரும்பும் வழியில் என் சொந்த ஊர் திருவரம்பு வழியாக திருவட்டாறு போய் சாப்பிட்டு விட்டு பத்மநாபபுரம். என் இப்போதைய நாவலின் களம் அது என்றேன். உள்ளே சென்று அரண்மனையின் எளிமையையும் கலையழகையும் விரிவையும் காணக் காண இப்போதுதான் தனக்கு பழைய தமிழ் அரண்மனைகளைப்பற்றிய சித்திரமே வருகிறது என்றார்.

இரவு திரும்பி வந்தோம். அன்றுதான் விகடனில் என்னைப்பற்றிய ‘போட்டுக்கொடுக்கும்’ கட்டுரை வந்திருந்தது. அதன் சிறு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. இரவில் கிளம்பி விவேகானந்த கேந்திரம் சென்று அங்கே தங்கினோம். ஈரோடு நண்பர் சிவா வந்திருந்தார். கன்யாகுமரி முனையிலிருந்து வெகுவாக தள்ளி, தோட்டங்கள் நடுவே, கடலோரமாக அழகிய விடுதி.

இரவு கன்னியாகுமரி கடலில் ஒரு சிற்றோடை கலக்கும் பொழியில் மெல்லிய நிலவின் ஒளியில் நின்று சாம்பல்நீலத்தின் பல்வேறு தீற்றல்களால் வரையபப்ட்ட அருவ ஓவியம் போல கொந்தளித்த கடல்-வானத்தையும் கருமை பளபளத்து நெளியும் ஓடையையும் பார்த்து நின்றோம். கடலின் ஓசைக்குள் ஓடையின் கிளுகிளுப்பு கேட்டுக் கொண்டே இருந்தது. பேராசிரியர் ஏக்கமும் பரவசமுமாக தன் பழைய யாழ்ப்பாண நாட்களைப்பற்றி நண்பர்களைப் பற்றி பேசிக் கோண்டிருந்தார்.

மறுநாள் காலை கன்யாகுமரி முனைக்குச் சென்றோம். ஏற்கனவே குமரிமுனையின் அழுக்கு, சந்தடி, கும்பல் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லி வைத்திருந்தமையால் அவருக்கு ஏமாற்றம் இல்லை. பல ஈழ நண்பர்கள் ஆசையாக கன்யாகுமரிக்குச் சென்று ‘அய்யய்யோ’ என்று பதறுவார்கள். கன்யாகுமரி உலகிலேயே மிக மோசமாக ‘பேண’ப்படும் கடற்கரை. ஆனால் கன்யாகுமரிக்குப் போகாமல் குமரிபயணம் நிறைவுறுவதுமில்லை.

பேராசிரியர் கன்யாகுமரி அம்மனை தரிசனம் செய்துவிட்டு பரவசமாக வந்தார். ”சின்ன பெண்ணு நிக்கிற மாதிரி இருக்கு..” என்றார், கன்யாகுமரி அம்மனுக்கு நம் இன்றைய மத மரபில் வேர்களே இல்லை. அம்மன் அருள் பாலிப்பதில்லை, சும்மா சிற்றாடைகட்டி கை தொங்கவிட்டு நிற்கிறாள். எந்த விதமான இறைச்சின்னங்களும் இல்லை. அம்மனின் இன்றைய கதை பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அது என்ன தெய்வம் என்பதே வியப்புக்குரியதுதான்.

மதியம் காலச்சுவடுக்குப் போய் கண்ணனையும் அ.கா.பெருமாளையும் சந்தித்து மீண்டார் பேராசிரியர். அன்றுமாலை ஐந்து மணிக்கு நாகர்கோயில் ரயில்நிலையம் சென்று அவரை கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்ஸில் ஏற்றிவிட்டார். ”சமாதானம் வாறப்ப நீங்க எங்கட நாட்டுக்கு வரவேண்டும்” என்றார். பதினைந்து வருடங்களாக எத்தனையோ ஈழ நண்பர்கள் கண்களிலும் உதடுகளிலும் நெகிழ்ச்சி தெரிய இதைச் சொல்லிவிட்டார்கள். காலம்தான் சென்றுகொண்டே இருக்கிறது. 

This entry was posted in ஆளுமை, பயணம் and tagged , . Bookmark the permalink.

4 Responses to பேராசிரியர் மௌனகுரு

  1. Pingback: jeyamohan.in » Blog Archive » எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்

  2. Pingback: jeyamohan.in » Blog Archive » ஈழ இலக்கியம்:ஒரு கடிதம்

  3. Pingback: jeyamohan.in » Blog Archive » ஒருநாள்

  4. Pingback: யாழ்நிலத்துப்பாணன் -3 | jeyamohan.in

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s