கனிமொழி வணக்கம்

பதினைந்துவருடம் முன்பு சுபமங்களா இதழில் கனிமொழி கருணாநிதி என்றபேரில் ஒரு கவிதை வெளிவந்தபோது நான் கோமல் சாமிநாதனை அழைத்து ஒரெ விஷயத்தைக் கேட்டேன். தன் பெயருடன் தந்தைபேரை இணைத்துத்தான் கனிமொழி அக்கவிதையை அனுப்பினாரா என. ஆம் என்றார். அது ஒரு கவிஞர் ஒருபோதும் செய்யக்கூடிய செயலல்ல. தன் மொழியின் படைப்புத்திறனின் திறனால் மட்டுமே கவனிக்கப்பட விரும்புதலே படைப்பாளிகளின் அடிபப்டை இயல்பு. பிற அடையாளங்கள் வைத்து அங்கீகாரம் பெற அவர்கள் விரும்ப மாட்டார்கள். எழுத ஆரம்பித்து இருபதுவருடம் வரை தான் கெ.வி.புட்டப்பாவின் [குவெம்பு] மகன் என்பதை பூர்ண சந்திர தேஜஸ்வி மறைத்திருந்தார் என்பார்கள்.

எதிர்பார்த்ததுபோலவே எந்தக் கவிஞருக்கும் இல்லாத அளவுக்கு கனிமொழிக்கு புகழாரங்கள் குவிந்தன. சுஜாதா முதல் வெங்கட் சாமிநாதன் வரை. சாரு நிவேதிதா முதல் கல்யாண்ஜி வரை…. பாரதிக்குப் பின் இந்த அளவுக்கு பாராட்டுபெற்ற கவிஞரே இல்லை. எதிர்மறைக் கருத்துக்கள் இன்றுவரை எதுவுமே பதிவானது இல்லை.

சிலகாலம் முன்பு ஒருமுறை ஒரு புத்தக வெளியீட்டாளர் நண்பர் தொலைபேசியில் அழைத்து கனிமொழியின் கவிதைகளை மலையாளத்தில் மொழியாக்கம்செய்ய இயலுமா என என்னிடம் கேட்கச் சொன்னதாகச் சொன்னார். நான், அவர் இன்றுவரை ஒரு நல்ல கவிதை எழுதவில்லை என்பதே என் மதிப்பீடு என்றும், இலக்கியத்தில் அவருக்கு உண்மையான ஆர்வம் இருக்கும் பட்சத்தில் அவர் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம் என்றும், அதற்கு தொடர் வாசிப்பும் சலியாத இலக்கிய முயற்சியும் தேவை என்றும், சுயநலம் கருதும் போலிப்பாராட்டுக்களை ஏற்று மயங்கவேண்டாம் என்றும் சொல்லும்படிச் சொன்னேன். அப்படியே சொல்லிவிடுவதாக அந்நண்பரும் சொன்னார்.

அரசியல் பதவிக்கு முன்னோட்டமாக கவிஞர் என்ற அடையாளம் தேடவே கனிமொழி களத்திலிருக்கிறார், இலக்கிய நோக்கமேதும் அவருக்கு இல்லை என நான் தொடர்ந்து சொல்லிவந்தபோது கடுமையாக மறுத்த நண்பர்கள் பலர் உண்டு. இப்போது அவர்கள் மறுப்பு சொல்வதில்லை. இப்போது தமிழச்சியும் அதேபாதையில் இருக்கிறார்.

தமிழ்ச் சிற்றிதழ்கள் க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வழியாக ஐம்பதாண்டுக்காலமாக உருவாக்கி அவ்ந்த எல்லா இலக்கிய மதிப்பீடுகளையும் கைவிட்டு இவ்விருவரையும் தமிழின் முதன்மையான படைப்பாளிகளாக, எல்லா முன்னோடிகளுக்கும் முன்னோடிகளாக, ஏன் சிற்றிதழிலக்கியத்தின் பதாகைகளாக முன்னிறுத்த முயன்று கொண்டிருக்கின்றன. மறுபக்கம் இந்த ஆட்சியில் கிராமநூலக அமைப்பே நிதியில்லாமல் செயலற்று கிடக்கிறது என்ற மனப்புழுக்கங்கள். இரண்டுவருடங்களாக நூலகத்திற்கு புத்தகம் வாங்குவதே ஒத்திபோடப்பட்டு பதிப்பகங்கள் விழிபிதுங்கி நிற்கின்றன என்ற மனக்குறைகள். அவற்றை வெளியே சொல்லக்கூட அஞ்சி மேடைகளில் ‘இலக்கிய விடிவெள்ளியே’ என்று பசப்புகிறார்கள்

இந்தப் புத்தகக் கண்காட்சியில் எங்கு நோக்கினாலும் கனிமொழி படம். தமிழின் முதன்மையான சீரிய பதிப்பகங்கள் இரண்டுமே அவரையே முன்னிறுத்தின. தமிழச்சியையும். உயிர்மை இதழைப்பொறுத்தவரை அவர்கள் இவ்வருடம் வெளியிட்ட முக்கியமான நூல் தமிழச்சியின் கவிதைகள்தான் என மாபெரும் வண்ணத்தட்டி மூலம் அறிந்துகொண்டேன். சமீபத்திய உயிர்மை இதழில் அட்டையில் கனிமொழி. ஏன்? உள்ளே சாருநிவேதிதா புகழ்ந்து நாலுவரி எழுதியிருக்கிறார். காலச்சுவடு அவரது வரலாற்றுச்சிறப்புமிக்க முதல் உரையை வெளியிடுகிறது.

இப்போது கொ.ராஜாராம், பி.கெ.சிவகுமார் உள்ளிட்ட நண்பர்கள் ஒரு சிற்றிதழ் தொடங்கும்போது, இன்னும் பெயரே போடப்படாத நிலையில், முதல் வணக்கங்களை போட்டுவிடுகிறார்கள். அவர்களின் ‘ஸ்டார்’ எழுத்தாளர் தமிழச்சி, சல்மா. முதல் இதழ் அட்டையில் கனிமொழி படம் இருக்குமோ தெரியவில்லை. இந்த அளவுக்கு போவதற்கு ஏதாவது லாபம் உண்டா? இல்லை, பயப்படுகிறார்களா? ஒன்றும் புரியவில்லை.

ஒருநண்பர் சொன்னார், கனிமொழி தனிபப்ட்ட முறையில் மிகவும் பண்பானவர், சந்திக்கவருபவர்களை அவர் உட்காரச் சொல்கிறார். தவழ்ந்தால் அவர் மேலும் மகிழ்ச்சி அடையக்கூடுமென்று இவர்கள் நினைத்துக் கொண்டால் அவர் என்ன செய்வார் என. உண்மையாக இருக்கலாம். தமிழ் மனோபாவமே எப்போதும் அப்படிப்பட்டது. இதில் விதிவிலக்காக எழுத்தாளர்களில் சிலரே கண்ணில் படுகிறார்கள். மற்றபடி வரிசை மிக நீளமாக இருக்கிறது.

ஆகவே ஒன்றைமட்டும் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். நணபர்களே, நான் இவ்வரிசையில் இல்லை. இவர்களுடனும் இல்லை. எனக்கு என்
சிறிய வாழ்க்கையில் பெரிய தொடர்புகளைப் பேணிக்கொள்ளமுடியவும் முடியாது.எதையுமே அடையாமல் சிற்றிதழ்களைச் சார்ந்து எழுதி வரும் ஒரு சின்னக்குழு எப்போதும் உண்டு. என் இடம் அங்குதான். அவர்கள் மேலும் சிறு இதழ்களை நாடிப்போயாக வேண்டிய நிலை உருவாகிவிட்டிருகிறது இன்று.

This entry was posted in எதிர்வினைகள் and tagged , . Bookmark the permalink.

3 Responses to கனிமொழி வணக்கம்

  1. Pingback: கில்லி - Gilli » Blog Archive » on kanimozhi - jeyamohan

  2. Pingback: Jeyamohan vs Anandha Vikadan - Backgrounder, Tamil Blogs, MGR, Sivaji et al « Snap Judgment

  3. Pingback: தமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s