இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

…..நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?…

அன்புள்ள சடகோபன்

உங்கள் கேள்வி முதல் நோக்கில் தர்க்கபூர்வமானவையாகப்படும். ஆனால் தமிழ்ச் சூழலை சற்று அறிந்தவர்களுக்கு இக்கேள்வியே எழாது. விகடனும் குமுதமும் வணிக நிறுவனங்கள். வணிக மதிப்பை மட்டுமே முன்னிறுத்துபவை. அவை எந்த இலக்கிய மதிப்பீட்டையும் முன்வைப்பதில்லை. எல்லா வணிக ஊடகங்களும் அவை எதிர்கொள்ளும் சமூகத்தில் உள்ள எல்லா போக்குகளையும் எப்படியோ பிரதிநிதித்துவப்படுத்தும். குமுதத்தில் ராம கோபாலனும் வீரமணியும் அ.மார்க்ஸ¤ம் எழுதமுடிவது இப்படித்தான். ஒட்டுமொத்தமாக அவை முன்வைக்கும் வணிகநோக்கையும் வணிகப்பண்பாட்டையும் எதிர்த்துக்கூட அவற்றிலே பேசமுடியும்.

அவ்வாறாக அவற்றின் பெரும் பரவலை தன் இயக்கத்துக்கு தேவையான அளவுக்கு ஒரு இலக்கியவாதியோ கருத்தியல்செயல்பாட்டாளனோ பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழில் உள்ள முன்னோடி எழுத்தாளர்கள் அனைவருமே புதுமைப்பித்தன், க.,நா.சு , அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் எல்லாருமே அப்படி பயன்படுத்திக் கொண்டவர்கள்தான், அவர்கள் தங்கள் மதிப்பீடுகளை முன்வைக்காமலும் இல்லை. ஒரு வணிகஊடகத்தில் விளம்பரம் அளிபப்து போன்றது அது. ஒரு பொது இடத்தில் தன் கொடியடையாளத்தை விட்டு வைப்பது போன்றது. அவ்விதழை நாம் கட்டுப்படுத்த இயலாது. அதன் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்கவும் இயலாது.

முற்றாகப் புறக்கணிக்கலாம். ஆனால் இணையம், புத்தகக் கண்காட்சிகள் மூலம் புதிய வாய்ப்புகள் திறந்துள்ள இன்றையசூழலில் புதுவாசகர்களை நோக்கி இலக்கியத்தைக் கொண்டுசெல்ல அவ்விதழ்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆனால் அங்கேயும் நம் விழுமியங்களையே நாம் முன்வைக்க வேண்டும்

பிரபல வணிக இதழ்களில் உண்மையான இலக்கியத்தை எழுத முடியாது. அவற்றின் முன்னிலைவாசகர்கள் இலக்கியம் நாடுபவர்கள் அல்ல. அடிப்படைப் பயிற்சியற்றவர்கள். ஆனால் அவர்களில் ஒரு சாராருக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்யலாம். இலக்கியம் நோக்கி இழுக்கலாம்

நான் வணிக இதழ்களில் எழுதுவதில்லை என்ற எண்ணத்தில் நெடுநாள் இருந்தவன். ஆனால் விஷ்ணுபுரம் போன்ற நாவலை எழுதி வெளியிட பட்ட கஷ்டங்கள் ஓரளவேனும் வாசகர்களை ஈர்த்தாகவேண்டுமென்ற எண்ணத்தை உருவாக்கின. மிகுந்த தயக்கத்துடன் பிரபல ஊடகங்களை எல்லைக்குட்பட்டு பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். அது பயன் தந்தது. என் நல்ல வாசகர்கள் பலர் சங்க சித்திரங்கள் [விகடன்] வழியாக என்னை நோக்கி வந்தவர்களே.

ஆனால் சிற்றிதழ்கள் அப்படி அல்ல. அவை இலக்கிய மதிப்பீடுகளை முன்வைப்பவை. நிலைநாட்டுபவை. சிற்றிதழ்கள் எழுத்தாளனுக்கு பணம் அளிப்பதில்லை ,அவற்றின் பரவலும் மிகக் குறைவு ஆகவே புகழும் இல்லை. என்ற போதிலும் அதனுடன் இலக்கியவாதிகள் தீவிரமாக இணைந்து செயல்படுவதற்குக் காரணம் அந்த மதிப்பீடே . மதிப்பீடுகள் இல்லை என்றால் ஏன் அவன் வீணாக உழைகக்வேண்டும்? பேசாமல் வணிக இதழ்களிலேயே எழுதலாமே. அம்மதிப்பீடுகளை அவ்விதழ்கள் காத்துக் கொள்ளும்போதே அவற்றின் இருத்தல்நியாயம் உருவாகிறது. இலக்கிய மதிப்பீடுகளை சிற்றிதழ்கள் துறக்குமென்றால் பின்னர் அவற்றின் தேவை என்ன?

ஒரு வணிக இதழின் விற்பனைஎண்ணிக்கை என்ன, அது எத்தனைபேரை சென்று அடையும் என்பதே நம் கேள்வியாக இருக்கும். மாறாக ஒரு சிற்றிதழின் மதிப்பீடு என்ன என்பதுதான் கேள்வி. சிற்றிதழ்கள் இலக்கிய மதிபீடுகளை விட்டுவிட்டால் எதை வாசகர்முன் வைத்து பேசுவது?

என் தெளிவு இதுதான். வசந்தகுமார் என் பிரசுரகர்த்தர். திடமான இலக்கிய விழுமியங்களும் பிடிவாதமும் கொண்டவர். சமசரசமற்றவர். என் நூல்களின் அடையாளம் அவரே. ஆனால் அவரைப்போன்றவர்கள் இல்லாவிட்டால் நேர்மாறாக கவிதா பதிப்பகம்தான் எனக்குத்தேவை. சுத்தமான நேர்மையான வணிகர். ஒழுங்காக ராயல்டி அளிப்பவர். திடமான கட்டும் காகிதமும் உள்ள நூல்களை தயாரித்து விற்பனைசெய்வார். என் நூல்கள் சீராக வெளிவர, தமிழகமெங்கும் சென்றுசேர அவர் தேவை. எனக்கு பொருளாதார லாபமும் உண்டு

இரண்டுமல்லாத ஒருவரை நான் எதற்காக ஏற்க வேண்டும்? ஒன்று வணிகராக இருக்கவேண்டும். அல்லது அறிவியக்க நேர்மையுடன் இருக்க வேண்டும். கவிதாபதிப்பகம் வணிக இலக்கியத்தை அச்சிட்டு விற்பதில் எந்த பிரச்சினையும் எனக்கு இல்லை. அது ஒரு சூபப்ர் மார்க்கெட். தமிழினி அப்படி விற்றால் மனம் புண்படுவேன். தமிழினி ஒரு மதிப்பீட்டை உருவாக்கி நிலைநிறுத்தி வருகிறது. அதில் சமரசம் செய்வதன் மூலம் தன்னையே அது அழிக்கிறது. கவிதா அபப்டி எதையுமே முன்வைப்பதில்லை

இதுதான் வித்தியாசம். உலகமெங்கும் இவ்விரு வகை இதழ்களும் பிரசுரங்களும் இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உங்கள் கேள்வியையே நான் இபப்டி மறுத்துக் கேட்கலாமல்லவா? சரி விகடனில் எழுதிவிட்டேன். ஆகவே எந்தவகையான இலக்கிய மதிபீட்டையும் நன் முன்வைக்கக் கூடாதா? முன்னோடிகள் உள்பட எல்லாருமே அப்படி எழுதிவிட்டார்கள் ஆகவே தமிழில் இனி இலக்கிய மதிப்பீடே தேவை இல்லையா?

நீங்கள் கேட்காத கேள்விகளுக்கும் பதில் சொல்வதாக தோன்றலாம். இது இப்போது பொதுவாக நான் சிந்திப்பது.

நன்றி

ஜெயமோகன்

திரையும் சமரசமும்- ஒரு கடிதம்

This entry was posted in எதிர்வினைகள் and tagged . Bookmark the permalink.

2 Responses to இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்

  1. Pingback: Jeyamohan vs Anandha Vikadan - Backgrounder, Tamil Blogs, MGR, Sivaji et al « Snap Judgment

  2. Pingback: தமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s