ஜே.ஜே.சிலகுறிப்புகள்,சாரு நிவேதிதா– இருகடிதங்கள்

இணையத்தின் வேகம் பிரமிக்கச்செய்கிறது. நான் எழுதவந்த நாட்களில் ஒரு சிற்றிதழ்களில் பிரச்சினை எழுந்தால் அதற்கு பதில் சொல்லி ஒரு கடிதம் எழுதுவோம். மூன்றிலிருந்து ஆறுமாதத்திற்குள் அது அச்சில் வரும். அதற்கான பதில் மீண்டும் அதே அளவு நாட்கள் கழித்து வெளியாகும். அதற்கு பதில் எழுதுகையில் ஒருவருடம் கழிந்திருக்கும். ஒருவருடகாலம் ஒரு கோபத்தை நீட்டிப்பது கஷ்டம்.நானெல்லாம் உடனே மறந்து என் வேலைக்கு திரும்பியமையால் புனைகதைகளை எழுதினேன். விவாதங்கலில் ஆழ்ந்து அழிந்தவர்களே அதிகம்.

இப்போது ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றிய கடிதத்தை எழுதி இணையதளத்தில் ஏற்றிவிட்டு போய் துணிதுவைத்துவிட்டு வரும்போது மின்னஞ்சல்பெட்டி நிறைந்திருக்கிறது. ஐயங்கள். கேள்விகள் பதில்கள்.

இரு அடிப்படை வினாக்களுக்கு மட்டும் என் பதில்கள். இவை பொதுவாசகர்களுக்கு உதவிகரமானவையாக இருக்கலாம்.

1. அன்புள்ள ஜெயமோகன், ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின்நவீனத்துவ வடிவம் கொண்டது என்கிறீர்கள். இப்போது சாரு நிவேதிதா எழுதும் நாவல்கள் போலத்தான் அவையும் இருக்கின்றன என்பதை இப்படி பார்க்கும்போது உணர முடிகிறது. சுயகதையும் உண்மையான மனிதர்களைப்பற்றிய விஷயங்களும் வம்புகளும் கிண்டலும் கலந்த வடிவம்தான் ஸீரோ டிகிரி முதலிய நாவல்களிலும் உள்ளது. ஜே.ஜே.சிலகுறிப்புகளை சாரு நிவேதிதா எப்படி வரவேற்றார்? அதைப்பற்றி அவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா?

அன்புள்ள ….

சாருநிவேதிதா ஒரு சுவாரஸியமான பத்தி எழுத்தாளர் [காளம்னிஸ்ட்] மட்டுமே. பத்தி எழுத்தாளர்கள் எப்போதும் பெருவாரியான வாசகர்களின் பொதுவான ரசனைக்காக எழுதும் திறன் கொண்டவர்கள். அவர்களுடைய மனஅரிப்புகளையும் பாசாங்குகளையும் நோக்கிப் பேசுபவர்கள். பத்தி எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் வருவதே அவர்கள் உண்மைகளை அஞ்சாமல் சொல்லும்போது மட்டும்தான். குல்தீப் நய்யார் என் முன்னுதாரணம். ஆனால் சாரு நிவேதிதா நேர்ப்பேச்சில் கூட தொண்ணூறு சதவீதம் பொய்தான் பேசுவார் என இருபது வருடங்களாக அவரை அறிந்த நான் கண்டிருக்கிறேன். உண்மையில் விதவிதமான பாசாங்குகள் வழியாக சென்றபடியே இருக்கும் அவரால் உண்மையை அவரே நினைத்தால்கூட பேச முடியாது.

சாரு நிவேதிதா அடிப்படையில் கற்பனையோ நுண்ணோக்கும் திறனோ இல்லாத மிக மேலோட்டமான எழுத்தாளர். அவரிடமிருக்கும் கற்பனை என்பது தன்னைப்பற்றி அவர் சொல்லும் அபத்தமான பொய்களில் மட்டுமே. அதேசமயம் ஒருபோதும் அவரை முற்றாக புறக்கணிக்க இயலாது. அதற்குக் காரணம் அவரது மொழிசார் நுண்ணுணர்வு. அவரது நடை ஒரு குறிப்பிட்டவகையில் தமிழில் சுஜாதாவின் நடைக்குப்பின் முக்கியமான ஒன்று. ஆழத்தை அது அடைய இயலாது, ஆனால் மேல்தளத்தில் சுழிப்புகளும் பாய்ச்சல்களுமாக பலவிதமான தோற்றங்களைக் காட்டுகிறது. இது ஒரு முக்கியமான பின் நவீனத்துவ இயல்பு.

சாரு நிவேதிதாவின் இலக்கிய ரசனை, வாசிப்பு, இசைரசனை,திரை ரசனை எல்லாவற்றின் மேலும் எனக்கு ஆழமான அவநம்பிக்கை உண்டு. அதற்குக் காரணம் காலம்தோறும் அவர் எழுதிவரும் கட்டுரைகளேதான். இலக்கியத்தின் அடிப்படைகளான பேரிலக்கியங்களில் வாசிப்போ எளிய அறிமுகமோ இருப்பதை அவர் வெளிப்படுத்தியதில்லை. அவர் வாசிக்கும் படைப்புகள் பெரும்பாலும் ‘பரபரப்பு’ நூல்கள். அவற்றில்கூட அவர் நுண்மைகளைத் தொடுவதேயில்லை. பெருவெட்டாகச் சொல்லப்பட்ட விஷயங்கள், அதுவும் நேரடியான வன்முறை மற்றும் காமச் சித்தரிப்புகளும் மிகையுணர்ச்சிகளும் மட்டுமே , அவர் கண்களுக்குப் படுகின்றன.அவ்வளவுதான் அவரது எல்லையே.

கோட்பாடு சார்ந்து அவர் எதுசொன்னாலும் அது பிழையான செவிவழிப்புரிதலாகவே இருக்கும். சென்றகாலங்களில் பின் நவீனத்துவம், அமைப்பியல் பற்றி அவர் சொன்னவற்றை நினைத்து பிற்பாடு நானே படிக்க ஆரம்பித்தபோது வாய்விட்டுச் சிரித்திருக்கிறேன். எனக்குத்தெரிந்து எந்த சீரிய வாசகரும் அவரை ஓர் எல்லைக்குமேல் பொருட்படுத்துவதில்லை. மேலோட்டமான வாசகர்கள் சிலகாலம்வரை அவரது சரளமான எழுத்துநடையையும் நக்கல்களையும் ரசிப்பார்கள்.

சாரு நிவேதிதா எழுதும் வடிவம் அவர் தெரிவுசெய்துகொண்ட பின் நவீனத்துவ வடிவம் அல்ல. அவரால் முடிந்ததே அதுதான். கற்பனை இல்லாத எழுத்தாளர் என்றவகையில் அவர் கண்டது கேட்டது ஆகியவற்றை மட்டுமே அவரால் எழுத முடியும். அதுவும் ‘அப்படியே’. பெயர்களைக்கூட மூலப்பெயருக்கு நெருக்கமாக அமைத்து கிசுகிசுத்தன்மையை உருவாக்குவது அவரது வழக்கம். உண்மையான வாழ்க்கையை எழுதும்போது அதில் ஒருமையை, மையத்தை கொண்டுவருவது கஷ்டம்– காரணம் வாழ்க்கைக்கு அப்படி ஒரு ஒருமையும் மையமும் இல்லை. ஆகவேதான் சாரு நிவேதிதாவின் ஆக்கங்கள் சிதறுண்டிருக்கின்றன.

பின்நவீனத்துவ வடிவங்களில் மூலநூல்களை மறு ஆக்கம்செய்தல், போலிசெய்தல், எழுதுவதைப்பற்றிய எழுத்து, தனக்குள் செயல்பட்டு தன்னை கழித்துக் கொள்ளுதல், எல்லா தரப்பையும் ஒலிக்கவைத்து மாபெரும் விவாதத்தன்மையை உருவாக்குதல், தர்க்க ஒழுங்கை மொழியின் அராஜகம் மூலம் மீறி உன்னதத்தை [sublime] தொடுதல், வரலாற்றுக்குச் சமானமான புனைவுவரலாற்றை உருவாக்குதல் போன்ற முக்கியச் சாத்தியங்கள் எதையும் சாரு நிவேதிதா தொடக்கூட முடியாது. ஏன் அவர் அவற்றை வாசித்துக்கூட உள்வாங்கிக் கொள்ளமுடியாது. இன்றுவரை அதற்கான தடையத்தை அவர் வெளிப்படுத்தியதில்லை

அதேசமயம் உண்மையான வாழ்க்கையை எழுதியிருக்கிறார் என்ற மதிப்பு அவற்றுக்கு உண்டா என்றால் அதுவும் இல்லை. காரணம் நடுநிலைமையில் நின்று தன் வாழ்க்கைச்சூழலை எழுதுவதும், தன்னையே விமரிசனக் கண்ணோட்டத்துடன் நோக்குவதும் எளிதல்ல. சாதாரணமாக நாம் நம் வாழ்க்கையைப்பற்றி பேசும்போதுகூட நம் விருப்பக் கற்பனைகள், நமது காழ்ப்புகள், தன்னிரக்கங்கள், தற்பெருமைகள் ஆகியவை நமது சித்தரிப்பில் கலந்து வரும். அதை வெல்வது பெரும் கலைத்திறனோ அழுத்தமான நேர்மையோ உள்ளவர்களுக்கே சாத்தியம். சாரு நிவேதிதாவின் நாவல்கள் அவரது மனமாச்சரியங்களின், பாவனைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே. சாரு நிவேதிதா எழுதுவது பெரும்பாலும் அவரது காழ்ப்புகளால் திரிக்கப்பட்ட கிசிகிசுக்களை.

ஸீரோ டிகிரி அவரால் எழுதப்படச் சாத்தியமான இலக்கியம். அதன் நடையில் உள்ள கிண்டலும் விளையாட்டுகளும் பல்வேறு வகையான கிசுகிசுக்களும் கலந்து அதை ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கமாக மாற்றுகின்றன. தமிழ்ச் சூழலுக்கு அது ஒரு முக்கியமான ஆக்கம் என்று எண்ணுகிறேன். ஆனால் அவ்வளவுதான் அவர். அவரது நடையின் சரளம் நீண்டகாலம் எழுதுவதனால் மட்டுமே வருவது. அவர் தமிழின் பிரபல ஊடகங்களின் மொழிச்செயல்பாட்டை மிக ஊன்றிக் கவனித்துவருகிறார். அவற்றின் மீது ஆழமான அங்கத நோக்கு அவருக்கு உள்ளது. எழுதும்போது மொழிசார்ந்த நுண்ணுணர்வு விழித்திருப்பதன் சாத்தியங்களை ஸீரோ டிகிரியிலும், ராஸலீலாவின் முதல் பகுதியிலும் காணலாம்.

இந்த வடிவத்துக்கான முன்னுதாரணத்தை அவர் ஜே.ஜே.சிலகுறிப்புகள் லிருந்தே எடுத்துக் கொண்டார் என்பது உண்மையே. ஆனால் ஜே.ஜே.சிலகுறிப்புகள் வந்தபோது சாரு நிவேதிதா ஆற்றிய எதிர்வினை வேடிக்கையானது. அதை கடுமையாக நிராகரித்து அவர் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார். அது இரு தளங்கள் கொண்டது. அக்கால மேலோட்டமான இடதுசாரி நிலைப்பாட்டில் நின்று ஜே.ஜே.சிலகுறிப்புகள்ளின் ‘அற’ நிலைப்பாட்டை நிராகரிப்பது முதல் தளம். எந்த அளவுக்குக் கொச்சையானது என்றால் குழந்தையை ஜேஜேயின் மனைவி பச்சை ஈர்க்குச்சியால் அடிப்பதை அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான், குச்சியை பிடுங்கி அவளை இரண்டு போடவில்லை, அப்படியானால் அவன் என்ன யோக்கியன் — இந்த வகையில். இரண்டாம் தளம் அவரது வழக்கமான படம் காட்டல், இதெல்லாம் என்ன எழுத்து மேற்கே இதை தூக்கிச்சாப்பிடும் எழுத்துக்கள் உள்ளன என்பதுபோல.

அக்காலத்தில் சாரு நிவேதிதா சார்த்ரின் கோட்பாடுகளை தமிழர்கள் அறியாமல் இருப்பதைப்பற்றி வருந்திக் கொண்டிருந்தார். சார்த்ரின் ‘புரட்சிகரம்’ பற்றி எழுதித் தள்ளினார். அதே சமயத்தில் சார்த்ர் அந்த புரட்சிகரத்தை தாண்டி வேறு ஒருவகை கருத்துமுதல்வாதத்தை வந்தடைந்து சிமோன் த பூவாவால் ‘முதுமையின் மனச்சிக்கல்’ என்று விமரிசிக்கப்பட்டிருந்தார் என அவர் அறிந்திருக்கவில்லை. அங்கிருந்து அனைத்து ‘அரசியல் சரிநிலைபாடுகளையும்’ நிராகரிக்கும் பின் நவீனத்துவம் நோக்கி அவர் எப்போது எப்படி வந்தார் என்பதெல்லாம் மர்மங்களே.

பின் நவீனத்துவத்தின் அடிப்படையே political correctmess களை நிராகரிப்பதும் முரண்படுவதும்தான். ஆனால் பின் நவீனத்துவக்கூறு கொண்ட ஜே.ஜே.சிலகுறிப்புகள் இங்குள்ள பின் நவீனத்துவர்களால் நிராகரிக்கப்பட்டதே அரசியல் சரிநிலைபாடு சார்ந்த அளவீடுகள் மூலம்தான்.

2. அன்புள்ள ஜெயமோகன்

…..உங்கள் கடிதத்தில் உள்ள முக்கியமான முரண்பாடு ஜே.ஜே.சிலகுறிப்புகள் ஒரு பின்நவீனத்துவ நாவல் என்கிறீர்கள். நவீனத்துவத்தின் உச்சம் என்கிறீர்கள்….

அன்புள்ள ….

உங்கள் குழப்பத்தை சுருக்கமான சொற்களில் இவ்வாறு விளக்க முயல்கிறேன். ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள் பின் நவீனத்துவ வடிவத்தையும் நவீனத்துவ நோக்கையும் ஒரேசமயம் கொண்ட நாவல்’

பின் நவீனத்துவம் புனைவை இது புனைவு மட்டுமே என்ற பாவனையில் வாசகன் முன் வைக்கிறது. இது உண்மையான வாழ்க்கை என்ற பாவனையில் அல்ல. ஆகவே புனைவுக்குள் அப்புனைவு உருவாக்கப்படும் விதம் பற்றிய சித்திரமும் இருக்கும். இதை மீபுனைவு [மெடா·பிக்ஷன் ] என்பது வழக்கம். புனைவு ஒற்றைப்படையாக ஒலிக்காமல் பல குரல்களை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என்று அது எண்ணுகிறது. ஆகவே ஒருமை இல்லாத சிதறுண்ட வடிவத்தை அது கொண்டிருக்கிறது. அதன் உட்கூறுகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு விவாதிக்கின்றன. அதற்கு ஒரு மையம் திரண்டு வருவதில்லை.

நவீனத்துவம் எதிர்காலத்தை நோக்கி எழுதுகிறது. ஆகவே பெரும் கனவுகளையும் கோட்பாடுகளையும் உருவாக்குகிறது. பின் நவீனத்துவம் திரும்பி கடந்தகாலத்தை விமரிசனக் கண்ணோட்டத்துடன் நோக்குகிறது. ஆகவே அது கடந்த காலத்தை மறு ஆக்கம்செய்கிறது. உடைத்து பரிசீலனைசெய்கிறது. பகடி செய்கிறது. எழுத்தைப்பற்றி எழுதுகிறது. இலக்கியம் பற்றிய இலக்கியங்களை உருவாக்குகிறது. வாழ்க்கையிலிருந்து எழுதுவதற்குபதில் இலக்கியத்திலிருந்து எழுத முற்படுகிறது.

இக்கூறுகளில் பல ஜே.ஜே.சிலகுறிப்புகளில் உள்ளன என்பதைக் காணலாம். அதன் வடிவம் அவ்வகையில் பின் நவீனத்துவக் கூறுகள் கொண்டது. ஆனால் அது எழுத்தாளனின் உள்ளொளியை ஐயத்திற்கிடமில்லாமல் நிறுவ முயல்கிறது. அவனது சரிவை ஒரு பெரும் புனைவுஅவலமாக [டிராஜெடி]யாக முன்னிறுத்துகிறது. ஜே.ஜேயை முற்றாகக் கழித்துவிடும் ஒரு இன்னொரு ஆளுமை அந்நாவலில் இல்லை. அதன் மையமே ஜே.ஜே.தான். கலைஞனின் முதன்மை பற்றி பிற இடங்களில் சுந்தர ராமசாமி சொன்ன விஷயங்களே அதில் உள்ளன. அனைத்தும் சீரழிந்துவிட்டது, கலை ஒன்றே நம்மை மீட்க முடியும் என்றார் சுந்தர ராமசாமி. அதையே ஜே.ஜே.சிலகுறிப்புகளிலும் காண்கிறோம். அப்படி ஒரு லட்சியக்கனவை முன்வைப்பது முழுக்க முழுக்க நவீனத்துவம் சார்ந்தது

This entry was posted in எதிர்வினைகள், கேள்வி பதில் and tagged , . Bookmark the permalink.

One Response to ஜே.ஜே.சிலகுறிப்புகள்,சாரு நிவேதிதா– இருகடிதங்கள்

  1. Pingback: jeyamohan.in » Blog Archive » சாரு

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s