புனித தோமையர் ஓர் அறிமுகம்

இயேசுவின் மாணாக்கர்களில் முக்கியமானவரான புனித தோமையர் [St.Thomas] பற்றி விவிலியம் போதுமான அளவுக்கு செய்திகளை அளிப்பதில்லை. கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் தேடினால் தாமையரைப்பற்றி மிகச்சில குறிப்புகளே காணப்படுகின்றன. தாமையரின் பெயர் திருச்சபை அங்கீகரித்த நான்கு இறைச்செய்திகளிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. அவரது தெளிவான சித்திரத்தை அளிப்பது நான்காவது இறைச்செய்தியாளரா யோவானில்தான். இவர் தாமஸ் யூதாஸ் திதியோன் என்று சொல்லப்படுகிறார். இரட்டையரில் ஒருவன் என்ற பொருளில் [ இது சம்ஸ்கிருதத்தில் இருந்து பெறப்பட்ட சொல் . துவம் என்றால் இரண்டு]

தோமையர் யோவானின் இறைச்செய்தியில் இயேசு மேல் அழுத்தமான பிடிப்பும் துணிவும் கொண்ட முதல் மாணாக்கராகச் சொல்லப்படுகிறார். இயேசு லாஸரசை காணும் பொருட்டு ஜுதேயாவுக்கு மீண்டும் செல்லும் நோக்கத்தை அறிவித்தபோது இவர்தான் மற்ற மாணவர்களிடம் ”நாமும் கூடவே செல்வோம். ஒருவேளை நாமனைவருமே கொல்லப்படலாம்”என்று சொன்னார்.[யோவான் எழுதிய இறைச்செய்தி 11-16] .மேலும் தோமையர் எளிதில் நம்பிவிடாதவராகவும் தருக்கம் சார்ந்து எதையும் ஆராய்பவராகவும் இருந்தார். இவரே ஏசுவின் இறுதி உணவின்போது அவர் மீது ஐயத்தை எழுப்பினார். ”தோமையர் ஏசுவிடம் சொன்னார். ”கர்த்தரே நீங்கள் ஆவியா அல்லவா என்று நாங்கள் அறியோம். அதை நாங்கள் எப்படி தெளிவுபடுத்திக் கொள்வது?” [யோவான் எழுதிய இறைச்செய்தி 14:5] .

ஆனாலும் தாமஸ் கிறிஸ்து உயிர்த்தெழுந்து வந்தபோது கேட்ட கேள்வியால்தான் வரலாற்றில் நிற்கிறார். ”அவரது கைகளில் ஆணி அறையப்பட்ட துளைகளை கண்ணால் கண்டு அவற்றில் என் விரல்களை விட்டாலொழிய நான் அதை நம்பமாட்டேன்” என்று அவர் அடம்பிடித்தார்.[யோவான் எழுதிய இறைச்செய்தி 20:25] ஆனால் எட்டு நாட்கள் கழித்து அவர் விசுவாசம் பெற்றார். அதற்காக ஏசு அவரைக் கடிந்துகொண்டார். ” நீ என்னைக் கண்டதனால் என்னை நம்பினாய் தாமஸ். ஆனால் காணாமலேயே நம்பியவர்கள் எவரோ அவர்களே அருள்கூரப்பட்டவர்கள்” [ யோவான் எழுதிய இறைச்செய்தி 20:29].இக்காரணத்தால் இவர் ஐயப்பட்ட தாமஸ் [ Doubting Thomas] என்று அழைக்கப்பட்டார். மேலைநாடுகளில் , குறிப்பாக புரட்டஸ்டண்ட் மதத்தில், தோமையர் ஒரு படி குறைந்தவராகவே இனம்காணப்படுகிறார்.

தாமஸ் என்ற பேர்குறித்தே ஏராளமான கிறித்தவ இறையியல் சார்ந்த ஊகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையான ஆவணம் என்பது கிரேக்க மொழியிலும் சிரியக் மொழியிலும் சிற்சில பாடபேதங்களுடன் பேணப்பட்டுவரும் ‘தோமையரின் செயல்பாடுகள்’ [Acta Thomae] முக்கியமான ஆவணமாகும். அது பார்டசேன்ஸ் எழுதியதாக இருக்கலாம்[Bardesanes] கிபி 220க்கு முன்பாக எழுதப்பட்ட இவ்வாவணம் ஹரானக் [Harnack] ஆல் தன் குறிப்புகளில் [Chronologie, ii, 172] சான்றளிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மையான பிறப்பிடம் எடேசா ஆகும். [Edessa] அங்கு தாமஸ் கீழைநாட்டில் கொல்லப்பட்டபின் கொண்டுவரப்பட்ட எலும்புகள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டதாக தெரிகிறது. இது தோமையரின் எலும்புகள்தான் என்பதற்கான ஆதாரம் என்னவெனில் அவர் இரு இடங்களில் ஏசுவின் இரட்டைச் சகோதரர் ஆக குறிப்பிடப்படுகிறார் என்பதே. யூதாஸ் தாமஸ் என்று சிரியக் மொழியில் சொல்லப்படும் தாமஸ் கிரேக்க மொழியில் திதிமோஸ் [இரட்டையர்] என்று சொல்லடுகிறார். இவை ஒரே பொருள் கொண்டவை.

இறையியலாளாரான ரெண்டல் ஹாரிஸ் இந்த எலும்புவழிபாடானது இது எடெஸாவில் இருந்த ஏதோ புறச்சமய [pagan] வழிபாட்டு முறையானது கிறித்தவத்துக்குள் ஊடுருவியதன் விளைவு என்கிறார். அவர் எடெஸாவிற்கு தாமஸின் எலும்புகள் வந்தது குறித்து கூறும் கதை இது. கிறிஸ்துவின் இறப்புக்குப் பின்னர் அவரது மாணாக்கர்கள் உலகைப் பகுத்துக்கொண்டு சமயப்பரப்புநர்களாக [அப்போஸ்தலர்] கிளம்பிய போது தாமஸின் கணக்குக்கு வந்தது இந்தியா. தாமஸ் இந்தியா செல்ல விரும்பவில்லை. அப்போது ஆவி வடிவில் வந்த ஏசு அபான்[Abban] என்ற இந்தியக்கப்பலில் தோன்றி அதன் உரிமையாளரான குந்த·பார்[Gundafor] என்ற மன்னனுக்கு தாமஸை ஆசாரி வேலைசெய்யும் அடிமையாக விற்கச்செய்தார். அவ்வாறாக தாமஸ் அன்டிராபாலிஸ்[Andrapolis] என்ற இந்திய துறைமுகத்துக்கு வந்துசேர்ந்தார். அங்கு அவர் மன்னனுக்கு ஓர் அரண்மனைகட்டும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பணத்தை தாமஸ் ஏழைகளுக்கு செலவழித்தார். மன்னன் அவரை சிறையிலடைக்க அவர் ஏசுவின் அருளால் தப்பினார்.அந்த அற்புதத்தை அறிந்த குந்த·பார் மதம் மாறி கிறித்தவர் ஆனார். அங்கே பலரை மதம் மாற்றியபின் தாமஸ் இன்னொரு நாட்டுக்குச் சென்றார். போகும் வழியில் பலவிதமான மாயமிருகங்களையும் பேய்களையும் அவர் சந்தித்தார்.

மிஸ்தாய் [Misdai சிரிய மொழியில் [Mazdai] என்ற மன்னனின் நாட்டுக்கு அவர் வந்து சேர்ந்தார். அவனது மனைவி டெரிஷியாவையும் மகன் வாஸனையும்[Tertia/ Vazan] அவர் மதம் மாற்றினார். ஆகவே அவர் சிறைப்பிடிக்கப்பட்டு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார். நகர் அருகே இருந்த குன்றுக்கு அவர் கொண்டுசெல்லபப்ட்டு கொல்லப்பட்டார்.அவரதுச் சடலம் புராதன மன்னர்களின் கோபுரத்தின்கீழ் அடக்கம் செய்யபபட்டது. பிற்பாடு அவரது ஆதரவாளர்களால் அவரது எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு எடெஸாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இங்கு குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கிபி 46ல் இமைய மலைக்கு தெற்கே ஆ·ப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாப் மற்றும் சிந்த் பகுதியை ஆண்டிருந்த மன்னனின் பேர் கோண்டோ·பெர்னிஸ் என்று கிரேக்க மொழியிலும் குது·பாரன் என்று அம்மொழியிலும் சொல்லப்பட்டது. [Gondophernes/Gudupharan] நாணயங்கள் மூலமும் கிரேக்க தொன்மக்கதைகள் மூலமும் இது ஓரளவுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியின் மொழியான காரோஸ்தி [Kharoshthi ]யிலும் ஐதீகங்கள் காணப்படுகின்றன. இது ஏற்கனவே கண்ட மன்னந்தான் என்பதில் பெரிதும் விவாதமில்லை. தக்த்- இ- ·பாய் [Takht-i-Bahi] கல்வெட்டுகளின்படி அம்மன்னன் கிபி 20 முதல் கிபி 46 வரை ஆண்டான் என்பது நிபுணர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மிஸ்தாய் என்பது இந்து பேர் ஈரானிய மொழிக்கு மாறியதாக இருக்கலாம். அப்படியானால் அது மதுராவை ஆண்ட வாசுதேவன் ஆக இருக்கலாம். கனிஷ்கருக்கு அடுத்தபடியாக பட்டத்துக்கு வந்த மன்னர் அவர். சிலபெயர்கள் பொருளில்லாதபடி உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கலாம்

ஆனால் தோமையர் இந்தியாவின் தெற்கே மேற்குக்கடற்கரைக்கு வந்தார் என்றும் இங்கேயே கொல்லப்பட்டார் என்றும் மிக தீவிரமான நம்பிக்கை உள்ளது. 1955 டிசம்பர் 18 ல் இந்திய தலைநகர் டெல்லியில் தோமையர் தினம் கொண்டாடப்பட்டபோது அப்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் சொன்னார் ” புனித தோமையர் இன்று கிறித்தவ நாடுகளாக இருக்கும் பல நாடுகள் தோன்றுவதற்கு முன்னரே இந்தியக்கடற்கரைக்கு வந்தார். அவரிடமிருந்து தங்கள் கிறித்தவப் பாரம்பரியத்தை தொடங்கும் இந்திய கிறித்தவர்கள் ஐரோபிய நாட்டுக் கிறித்தவர்களைவிடவும் பழைமையானவர்கள் ”

தோமையர் இந்தியா வந்து பத்தொன்பது நூற்றாண்டு தொடங்குவதை ஒட்டிய கொண்டாட்டத்தின் பகுதியாக புனித பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் 1952 டிசம்பர் 31ல் அனுபிய ரேடியோ செய்தியில் இவ்வாறு சொன்னார். ” புனித தோமையர் இந்தியா வந்து 1900 வருடங்கள் தாண்டிவிட்டன. பிந்திய பல நூற்றாண்டுக்காலம் இந்தியா மேற்கிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்தியா தன்னுடைய முதல் அப்போஸ்தலரின் பாரம்பரியத்தை பேணிக்கோண்டது . இந்த அப்போஸ்தலரின் வழித்தோன்றல்களாக இன்று இந்தியாவில் உள்ள தோமையர் கிறித்தவ மக்களுக்கு எங்கள் சபையின் வாழ்த்துக்கள் ”

ஆனால் தோமையர் இந்தியா வந்தது உண்மையா என்ற ஐயம் வலுவானதே. காரணம் ஒன்று தோமையரின் வருகை இன்றும் ஓர் ஐதீக கதையாகவே உள்ளது. தோமையரின் வருகைக்கு ஆதாரமாகக் காட்டப்படும் எல்லா அமைப்புகளும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை.

மரபான நம்பிக்கைகளின்படி ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தாமையர் கிபி 52ல் இந்தியாவுக்கு வந்தார். கேரளத்தில் அன்றிருந்த முக்கிய துறைமுகமான கொடுங்கல்லூரில் இறங்கினார். இது கொடுங்கோளூர் என்றும் வஞ்சி என்றும் அழைக்கபப்ட்டிருந்த துறைமுகம். சேரர்களின் பண்டைய தலைந்நகரம். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் எடுத்த இடம் இதுவே என்று ஆதாரபூர்வமாக சொல்லப் படுகிறது. அந்த கண்ணகி ஆலயமே இன்றுள்ள கொடுங்கல்லூர் தேவி கோயில் என்று வரலாறு கூறுகிறது. தாமையர் கேரள பிராமணர்களுக்கு ஏசுவின் நற்செய்தியைச் சொன்னார் என்றும் அவர்களில் பலர் மதம் மாறினார்கள் என்றும் கூறப்படுகிறது. அவர் ஏழு திருச்சபைகளை கேரள மண்ணில் உருவாக்கினாராம். அவை முறையே கொடுங்கல்லூர், கோட்டக்காவு, பாலயூர், கொல்லம், கோக்கமங்கலம், நிரணம் சேறயில் ஆகியவை. அவர் மலயாற்றூர் குன்றுகளுக்கு வந்து ஜெபம் செய்யும் பழக்கம் கொண்டிருந்தார் என்றும் சொல்லபப்டுகிறது. அதன் பின் அவர் கிழக்கு கடற்கரைக்கு இடம் பெயர்ந்தார். கிபி 72ல் அவர் சென்னைக்கு அருகே உள்ள புனித தோமையர் குன்று என இன்று அழைக்கப்படும் குன்றில் வாழ்ந்த போது ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டார். அவரது உடல் மைலாப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கே அவர் அடக்கம் செய்யபப்ட்டார். இன்றும் அவரது சமாதி அங்கே வழிபடப்படுகிறது.

உண்மையில் தோமையர் வந்திருக்க வாய்ப்புள்ளதா? உண்டு. அன்றைய கேரளக் கடற்கரைக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது. யவனர்களும் அராபியர்களும் தொடர்ந்து வணிக நோக்கத்துடன் கேரளத்துக்கு வந்தபடி இருந்தனர். இக்கடற்கரையில் இன்றும் குவியல் குவியலாக நாணயங்கள் கிடைத்தபடியுள்ளன. அதிகமும் ரோமாபுரி நாணயங்கள். அதற்கும் முன்பு கிமு 970 முதல் 930 வரை ஆண்ட இஸ்ரேலரின் சாலமோன் மன்னரின் மரக்கலங்கள் கேரளக் கடற்கரைக்கு வந்தபடி இருந்தன. அதற்கு புராதன பழைய ஏற்பாடு பைபிளிலேலேயே ஆதாரங்கள் உள்ளன. முசிரிஸ் என்று அப்போது குறிக்கப்பட்ட கொடுங்கல்லூரில் இருந்து முத்தும் மணிகளும் கோண்டுவரப்பட்டு மன்னருக்குப் படைக்கப்பட்டன. கேரளக்கடற்கரையிலிருந்து பெறப்பட்ட மிளகு முதலிய நறுமணப்பொருட்கள் அக்காலம் முதலே ஐரோப்பாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் மிகமிக பிரியமானவையாக இருந்தன. ரோமாபுரி பயணியும் வரலாற்றாசிரியருமான ப்ளினி [கிமு 23-79] ஒவ்வொரு வருடமும் பொன்னாகவும் மணியாகவும் பெருஞ்செல்வம் கேரளத்துக்குச் செல்வதைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார்.மலபார் பகுதிக் கப்பல்கள் பாரசீக வளைகுடா கடந்து சென்று வணிகம் செய்வதைப்பற்றியும் அவர் எழுதியுள்ளார். ப்ளினியைப்போலவே டாலமி [கிமு 100-160) மற்றும் பெரிப்ளூஸ் ஆகியோரும் சேரக்கடற்கரைக்கு மேலைநாடுகளுடன் இருந்த நெருக்கமான உறவைப்பற்றி எழுதியுள்ளனர். முதல் நூற்றாண்டுமுதலே கேரளத்தில் மட்டாஞ்சேரி என்ற இடத்தில் யூத குடியிருப்புகள் உருவாகிவிட்டன. சமீபகாலம் வரை யூதர்கள் ஒரு தனிச்சமூகமாக அங்கிருந்தனர்.அவர்களின் கோயிலும்[சினகாக்] அங்குள்ளது

இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வாய்ப்புள்ள யூதாஸ்- தாமஸ் குறிப்புகளின் படி முதல் நூற்றாண்டின் இறுதியில் புனித தோமையர் தன் சுவிசேஷங்களை குண்டபேர்ஸ் என்ற பார்த்திய மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் செய்துகொண்டிருந்தார் .[Gundaphares,Parthian]. பாண்டிய மன்னரின் நிலமா இது என ஆராயலாம். இலக்கிய ஆதாரங்கள் தவிர இன்றும் எஞ்சும் தோமையர் மரபு கிறித்தவர்களின் [மார்த்தோமா கிறித்தவர்கள்] சமூகம் அவரது வருகைக்கான சிறந்த ஆதாரமாகும். இவர்கள் பாலையூர் , அர்த்தாடு, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளம் முழுக்க பரவினார்கள். மயிலாப்பூரில் உள்ள தோமையரின் சமாதியும் பறங்கிமலை கோயிலும் இன்றும் உள்ளவை. இப்புனித அப்போஸ்தலரின் எலும்புகள் எடெஸ்ஸா என்ற என்ற ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பிற ஆதாரங்கள்

ஈஸி·பஸ் [ Eusebius, கிபி நாலாம் நூற்றாண்டு] புனித ஜெரோம் [St. Jerome, கிபி342-420] ஆகியோரின் குறிப்புகளில் பாண்டேனியஸின் [Pantaenus] பயணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இவர் அலக்ஸாண்டிரியாவின் பிஷப் டிமிட்றியஸ் மூலம் இந்தியாவின் பிராமணர்களுக்கு கிறித்தவ மதத்தை கற்பிக்கும்பொருட்டு அனுப்பபட்டவர் . கிபி 190ல் எழுதப்பட்ட இக்குறிப்புகளில் சில மேலதிக ஆதாரங்கள் கிடைக்கின்றன. மேலைக்கடற்கரையில் வாழ்ந்த தாமையர் மரபு கிறித்தவர்களைப்பற்றி இவற்றில் சொல்லப்பட்டுள்ளது. புனித எ·ப்ரம் [St. Ephrem கிபி306-373] புனித கிரிகோரி [St. Gregory of Nazianze கிபி 324-390 ] புநித அம்புரோஸ் [ St. Ambrose கிபி 333-397] புனித ஜெரோம் [St. Jerome ஆறாம் நூற்றாண்டு] புனித கிரிகோரி [St. Gregory of Tours ஆறாம் நூற்றாண்டு] ஆகியோரின் குறிப்புகளிலெல்லாம் இந்தியாவில் கிறித்த்வம் இருந்தமைக்கான சான்றுகளும் தோமையர் பற்றிய குறிப்புகளும் உள்ளன என்று சொல்லப்படுகிறது.

மறுப்புபுகள்

ஆனால் தாமஸ் இந்தியாவில் ஊழியம்செய்தார் என்பதற்கோ கணிசமான இந்தியக் கிறித்தவர்கள் நம்புவதுபோல அவர் மேற்குக் கடற்கரையில் இறங்கி கிழக்கு கடற்கரையில் இறந்தார் என்பதற்கோ அவரை சென்னை மைலாப்பூருடன் தொடர்புபடுத்துவதற்கோ உறுதியான சான்றுகள் ஏதுமில்லை என்று சொல்லும் ஆய்வாளர்களும் உள்ளனர். எ·ப்ரம் சிரியக் , புனித கிரிகோரி , புனித அம்புரோஸ்,புனித ஜெரோம், புனித கிரிகோரரி ஆகியோர் இதைப்பற்றிய மேலோட்டமான குறிப்புகளை விட்டுச்சென்றிருந்தபோதும்கூட அவை போதுமான ஆதாரங்களாக இல்லை. ஆனால் சென்னை பறங்கிமலை அல்லது புனித தோமையர் மலையில் கல்லாலன ஒரு சிலுவை உள்ளது. இதில் ·ப்லாவி [Pahlavi ] என்னும் தொன்மையான பெர்சியன் மொழியில் அமைந்த கல்வெட்டு உள்ளது. இது ஏழாம்நூற்றாண்டுக்கு முற்பட்டது. சிரியமொழிச்சடங்குகளையும் சிரிய வேர்களையும் கொண்ட ஒரு கிறித்தவ சமூகம் மேலைக்கடற்கரையில் காணப்படுவதும் உண்மையே. இவர்கள் சிரியன் கிறித்தவர்கள் எனப்படுகின்றனர். இந்த சர்ச் உண்மையிலேயே புனித தாமஸ் அவர்களால் உருவாக்கப்பட்டதா என்பது இன்னும் குழப்பமானதே.

கிபி 325ல் நடந்த நைஸியா கவுன்ஸிலில் [Council of Nicea ] சிரிய-கால்டியன் பிஷப் ஒருவர் இந்தியா மற்றும் பாரசீகத்துக்கான பிஷப்பாக கலந்துகொண்டமைக்கு சான்று உள்ளது. அப்போதே இந்தியாவில் கிறித்தவர்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர்கள் தாமஸ் அவர்களால் மதம் மாற்றப்பட்டவர்களா? கிபி 745ல் தாமஸ் கானா [Thomas Cana] என்னும் போதகரின் தலைமியில் ஒரு சிரிய மதமாற்றக்குழு கேரளக்கடற்கரையில் பணியாற்றியுள்ளது. அவர் பேரைத்தான் புனித தோமையர் என்றுஙிங்குள்ள கிறித்தவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அவர் கேரள மரபில் க்னாயி தொம்மன் என்று சொல்லபப்டுகிறார். இவ்வாறு இவ்விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது. வரலாற்றாதாரங்களை விடவும் நம்பிக்கைகளுக்கே இங்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

கத்தோலிக்க சபையால் உறுதியாகச் சொல்லப்பட சாத்தியமான தகவல் என்னவென்றால் ஆறாம் நூற்றாண்டு அளவில் காஸ்மோஸ் இண்டிகோப்லெய்ஸ்டஸ் [Cosmas Indicopleustes] மலபார் கடற்கரையில் [Male] கிறித்தவர்கள் இருந்தனர் அவர்களின் பிஷப் பாரசீகத்தில் பட்டமேற்றார் என்று குறிப்பிடுவதாகும். தோமையரின் எலும்புகள் நாலாம் நூற்றாண்டுவரை எடெஸ்ஸாவில் இருந்தன என்பதற்கு சான்று உள்ளன. அவை அங்கிருந்து சியோஸ் [Chios]க்கு 1258ல் கொண்டுசெல்லபப்ட்டு அங்கிருந்து ஒர்டொனா [Ortona]வுக்கு கொண்டுசெல்லபப்ட்டதாக ஆதாரபூர்வமாகச் சொல்ல முடியும். ஒரு தவறான புரிதலின் அடிப்படையில் தாமஸ் அமெரிக்காவுக்குச் சென்றதாக சிலர் நம்புகிறார்கள்.

ஆக்டா தோமா [Acta Thomae] வின் சுருக்கமான வடிவம் எதியோப்பிய மொழியிலும் லத்தீனும் உள்ளது. தோமையரின் சுவிசேஷம் என்ற வடிவில் எகிப்தில் காப்டிக் மொழி வடிவில் கிடைத்துள்ள நூலை கத்தோலிக்க திருச்சபை அங்கீகரிக்கவில்லை. தோமையரின் வெளிப்பாடுகள் [Revelatio Thomae] என்ற பேரில் கிடைக்கும் நூல் பாப்பரசர் கெலசியஸ்[ Pope Gelasius]அவர்களா இறைமறுப்பு என்று விலக்கப்பட்டது. அதன் பல சிதைந்த வடிவங்கள் இப்போது பல இடங்களில் கிடைக்கின்றன.

ஆய்வாளர்களைப் பொறுத்தவரை புனித தாமையர் யார், அவர் இந்தியாவுக்கு வந்தாரா, இல்லையென்றால் கிழக்கே வந்த அவர் உண்மையில் எங்கு கிறித்தவச் செய்தியை பரப்பினார் என்பதெல்லாம் இன்றும் மர்மங்களே. அவரது இறைச்செய்தி பிற்பாடு கிறித்தவ தேவாலய அதிகார அமைப்பால் அங்கீகரிக்கபபட்ட இறைச்செய்திகளிலிருந்து தத்துவார்த்தமாக மாறுபட்டிருந்தது என்று இப்போது தெரிகிறது. அதனால்தான் அவர் வரலாற்றில் இருந்து மறைந்து போனாரா என்ன?

[கலைக்களஞ்சியங்களில் இருந்து]

This entry was posted in கலாச்சாரம், மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்துரை and tagged , , . Bookmark the permalink.

One Response to புனித தோமையர் ஓர் அறிமுகம்

  1. Pingback: jeyamohan.in » Blog Archive » தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s