என்ன என்ன வார்த்தைகளோ!

‘ஜெயமோகன் புள்ளி உள்ளே’ என்ற என் இணையதளத்தைப்பார்த்துவிட்டு வரும் வாசகர் கடிதங்கள் பலவகை. அன்பார்ந்த நக்கல்கள் முதல் பகுப்பு. ‘மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும் என்பது நீங்கள் குடும்பத்துடன் காட்டுக்குபோன அனுபவமாக இருக்கும் என்று நினைத்து படித்தேன்’ என்று ஒரு கடிதம். அருண்மொழியை புலி என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் குட்டிகளை அப்படி சொல்லிவிட முடியாது. ஒன்று பதினாறு வயதில் மகரக்கட்டு வந்து குரல் உடைந்து கழுதைப்புலியாக மாறிவிட்டிருக்கிறது.

கைமருத்துவம் பற்றிய கட்டுரைக்கு சித்தமும் பித்தமும் [ அதாவது ஹோமியோவும் ] கலந்து சிகிழ்ச்சை அளிக்கும் பாண்டிச்சேரி நண்பர் ஒருவர் [எங்களூரில் ஹோமியோ டாக்டர் நாராயணனை ஹோமோ டாக்கிட்டர் என்று பலர் அழைத்தமையால் அவரே தன் பெயரை குளிகை டாக்டர் என்று மாற்றிக் கொண்டார்] உண்மையிலேயே மண்எண்ணை மூச்சுத்திணறலுக்கு அளவோடு உபயோகப்படுத்தத் தக்க நன்மருந்து என்றும் நான் சரஸ்வதி அருளால் சரியான மருந்தையெ சொல்லியிருக்கிறேன் என்றும் தெரிவிக்கிறார். சுக்கு முதலிய ஆயுர்வேத மருந்துடன் சற்று மண்எண்ணை கலப்பது வயிற்றுப்புண் இல்லாதபோது நன்றாகவே வேலைசெய்கிறதாம். ஆனால் யாரும் சோதித்துப்பார்க்க நான் ஆலோசனை சொல்ல மாட்டேன்.

என் வாசகர்கள் எழுதிய கடிதங்களிலேயே அபூர்வமானதாக நான் எண்ணுவது பம்பாய் வாசகர் ஒருவர் ‘டார்த்தீனியம்’ வந்தபோது எழுதியது. கிறுக்கலான கையெழுத்தில் ‘அய்யா உங்கள் கடிதம் கண்டேன். அந்தச் செடியின் விதை எங்கே கிடைக்கும் என சொல்ல முடியுமா? அதை அவசரமாக தேவைப்படுகிறேன். கடைகளில் கேட்டால் இல்லை என்று சொல்கிறார்கள்…” அதை எதிரிவீட்டில் நட விழைந்தாரா தனக்குத்தானே நட்டுக்கொள்ளவா என்ற கேள்வி இப்போதும் உள்ளது.

தேவகிச்சித்தி இப்போது எப்படி இருக்கிறார், கல்யாணம் ஆயிற்றா, என்ன வயது இருக்கும் என ஆவலாக கேட்ட திருமணமாகாத நடுவயதுக்காரரை மன்னித்துவிடலாம். ஆனால் ‘ஒன்றுமில்லை’ வாசித்துவிட்டு தன் கையில் உள்ள கழலையை அறுவைசிகிழ்ச்சை செய்யலாமா கூடாதா ,கடைசியாக நான் என்னதான் சொல்கிறேன் என்று கேட்ட வாசகர் மேல் எனக்குக் கோபம்தான். ‘ஒன்றுமில்லை, சரியாய் போய்விடும்’ என்று ஒரு வரி எழுதிப்போட்டேன்.

நெல்லை நண்பர் ஒருவர் ·போனில் கூப்பிட்டு ஆவேசமாக ”வெள்ளாளர் என்ற சாதியே உண்மையிலே கெடையாது சார்” என்றார் ”அப்ப?”என்றேன் ”சும்மா சொல்லுதானுக” ”அப்ப?” ”வெளங்காப்பயக்க சார்…” சற்றுநேரம் மௌனம். நான் ஆழ யோசித்து ‘அப்டீண்ணா இப்ப, அப்பிடி சொல்லிக்கிடுதவங்க உண்மையிலே கெடையாதுங்கிறியளா?” ”அமா சார். அதாக்கும் சொல்லிட்டிருக்கேன்” ”அப்பம் இந்தச் சொல்லுதவனுக எங்க இருக்கானுக?” அவரும் ஆழ யோசித்து ”அவனுக கெடையாது சார்!”என்றார்.

அவரது கோட்பாடு இதுதான். இன்று வெள்ளாளர் என்று அறியப்படும் அனைவருமே நாடார்கள்தான். பாண்டியமன்னனுக்கு பெண் கொடுத்து தணிந்துபோனவர்கள் அவர்கள். தணியாதவர்கள் நாடார்கள். தமிழில் நிறைய ஆதாரம் இருக்கிறது. வேளாளச் சான்றோர் என்று பல நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் மாற்றானின் பிள்ளைகள் ஆதலால்தான் பிள்ளைகள் என்று சொல்லப்படுகிறார்கள். அந்த இழிவை நாடாதவர்கள் நாடார். தெளிவாக விளக்கினார். எட்டு வருடங்களாக ஆய்வுசெய்து வருகிறாராம்.

முக்கொட்டை என்று ஒரு பிள்ளைவாளை எழுதியதை ஆதரித்து வந்த கடிதம் உண்மையிலேயே அப்படி ஒரு வெள்ளாள பிரிவு இருப்பதை குறிப்பிடுகிறது. தெரிந்திலேன். காரணமும் அதுதானா? சீரக வெள்ளாளர் என்று ஒரு பிரிவு இருக்கிறதாம். சீரகம் விற்றார்களா இல்லை சீர்+அகம் கொண்டவர்களா என்பது ஆய்வுக்குரியது.

தேவதேவன் கருத்தரங்கச் செய்தியை வாசித்துவிட்டு அதற்கு வருவதற்கு முன் அவர் என்ன சாதி என்று கேட்டு அவசர மெயில் அனுப்பிய நண்பர் நீங்கள் என்ன சாதி என்று கேட்டு நான் பதில் அனுப்பிய பிறகு நாடவில்லை. கம்மாவார் பற்றி தான் ஆய்வுசெய்துவருவதாகவும் உடனே முடிசூடிய பெருமாள் பிள்ளையின் ஆய்வுக்குறிப்புகள் தேவை என்றும் ஒருவர் எழுதிக் கேட்டார்.

நாவல் ஒரு சமையல் குறிப்பில் நாவலுக்குள் சமையற்குறிப்பு சொல்வதைப்பற்றி சொல்லப்படவில்லையே என்ற வாசக ஐயம் நியாயமானது. அவருக்கு லஷ்மி, ரமணி சந்திரன் போன்றவர்களின் சமையற்குறிப்புகள் உதவிகரமாக இருந்திருக்கின்றன. புல்லும் பறிக்கலாம் அண்ணனுக்கு பெண்ணும் பார்க்கலாம் என்ற சீரில். நாஞ்சிநாடனை பரிசீலிக்கலாமென்று எழுதினேன்.

‘மூதாதையரைத் தேடி..’ பலர் ஆய்வுசெய்துவருவதாகத் தெரிகிறது. மயன் ஒரு நாடார் என்று சொல்வது வரலாற்று மோசடி என்று ஒரு நண்பர் சொன்னார். அவருக்கு நேரடியாக என்னை தெரியும். இணையதள கட்டுரையை அச்சு எடுத்து அவருக்கு அவரது ஆதரவாளர் அனுப்பியிருக்கிறாராம். மயன் என்றால் விஸ்வகர்மா. விஸ்வகர்ம சமூகம் என்று ஒரு சாதியே இருக்கும் வரலாற்றுத்தகவல் எப்படி மறுக்கப்பட்டது? ”ஆசாரிமாரா”‘ என்றேன். ”சேச்சே அவனுக குடிகாரப்பயக்க சார்….நான் சொல்லுகது செம்மான் சமுதாயத்தப்பத்தியாக்கும். வில்லுகுறியில எங்க பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு உள்ள மயனுக்க செலை இருக்கு…அவருக்க வாரிசுகள் இப்பமும் உண்டு…”

அவர்களுக்கும் நாயர்களுக்கும் சுமுக உறவு இருந்திருக்கிறது என்றார் ஆய்வாளர். கிஷ்கிந்தையை மயன் கட்டிக் கொடுத்ததை ராமாயணமே சொல்கிறதே. பத்மநாபபுரம் அரண்மனை உள்பட இங்குள்ள பல நாயர் இல்லங்கள் செம்மான் சமூக சிற்பிகளால் கட்டப்பட்டவையே என்று சொல்லி பலவற்றை பட்டியலிட்டார். தூத்துக்குடிப்பகுதியில் உள்ள நட்டாத்தி நாடார்கள் விபீஷணனின் வழித்தோன்றல்கள் என்றார். அதற்கு அவர்கள் விபீஷணனை கோயில் கட்டி கும்பிடுவதெ சான்று.

இதைத்தவிர என்னவென்று விளங்காத காரணத்தால் நான் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ பாடலைப்பற்றி எழுதவேண்டும் என்று கேட்டுக் கொண்ட நண்பர், இசைவிமரிசகர் ஷாஜி தாமஸ¤க்கு தன்னுடைய சொந்தப்பாடல்கள் அடங்கிய ஏழு சிடிக்களை அனுப்பலாமா என்று கேட்டவர், கோணங்கிக்கு உண்மையிலேயே கூழ் பிடிக்கும் என்ற தகவலை தெரிவித்தவர் என பலவகை கடிதங்கள்.

நேரில் பார்க்க வரலாமா என்ற கடிதங்களுக்கு நான் பொதுவாக எதிர்மறையான பதிலை அளிப்பதில்லை என்றாலும் ஒருவர் எனக்கு பாடிக்காட்ட வரலாமா என்று எழுதியிருக்கவேண்டியதில்லை என்றே உணர்கிறேன். சங்கீதத்தை நான் மொழிபெயர்ப்புதான் செய்கிறேன். அந்நண்பர் ஷாஜிக்கு பாடிக்கேட்கச்செய்வதே முறை. ஷாஜி அதை எனக்கு மொழிபெயர்த்து தமிழில் சொல்லுவார்.

நாஞ்சில்நாடனுடன் மது அருந்த ஆவலாக இருப்பதாக வந்த கடிதங்களை நாஞ்சில்நாடனுக்கு அனுப்பலாமா என்ற ஐயம் இருக்கிறது. அவர் கேரள அவியலைப்பற்றி என்ன கருத்து கொண்டிருக்கிறார் என்று கேட்ட நண்பர் மலையாளக் கவிஞரும் கூட. கன்யாகுமரியில் மலம் கழிப்பது பற்றிய ஐதீகம் முன்னரே உண்டு என்று சொன்ன ஒருவர் ஒரு பழைய தீர்த்தயாத்திரை வருணனைப்பாடலில் [வண்டிககரன் பாட்டு] ‘முக்கடல் முனையிலே மகிழ்ந்து காலைக்கடன் கழித்து பக்குவமாய் கடலாடி பக்தியுடன் எழுந்து திக்கெட்டும் ஒளிபரவும் தெளிசோதி கும்பிட்டு’ என்ற வரியிலே காலைக்கடன் பற்றி சொல்லியிருப்பதை உணர்த்தினார். மகிழ்ந்து என்று அடிக்கோடும் போட்டிருபப்தனால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

ஆனால் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் , பத்மினி ரசிகர்கள் அனுப்பிய தனிப்பட்ட வசைகளில் உள்ள காவியநயத்தைப்பற்றி தனியாகவே எழுதவேண்டும். சிவாஜிகணேசன் மிகை நடிப்பு செய்யவில்லை, அந்தக் கதபாத்திரங்களின் உள்ளக் கொந்தளிப்பை வைத்துப் பார்க்கையில் அவர் உண்மையில் குறைநடிப்பையே வழங்கினார் என்று ஒருநண்பர் வாதிட்டார். எம்.ஜி.ஆர் தெளிவாகத்தான் பேசினார் என்று சொன்ன நண்பர் அவர் அப்படி பேச ஆரம்பித்த பிறகே அவரது குரலுக்கு தனித்தன்மை ஏற்பட்டது என்றார். தன்னால் ஒருபோதும் சொல்லிவிடமுடியாத ‘ரத்தத்தின் ரத்தங்களே’ என்ற அழைப்பை அவர் எடுத்துக்கொண்ட தீரத்துக்கு தலைவணங்கவேண்டும் என நான் எழுதியதை அந்நண்பரும் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் என் நெஞ்சை உடைய வைத்த கடிதம் காந்தராவை பற்றி நான் கிண்டலாக எழுதியிருக்கக் கூடாது என்று வந்ததுதான். அவர்தான் இந்திய திரை நடிகர்களிலேயே அழகானவராம். இன்றைய ரஜினி காந்த் விஜயகாந்த் எல்லாம் காந்தராவைப்பார்த்து பெயர் சூட்டிக் கொண்டார்களாம். எழுதிய தாத்தா சின்னப்பையனாக இருந்தபோது ஏதாவது பாட்டி அவரை ”பாக்க அசல் காந்தராவு மாதிரி இருக்கீங்க, போங்க” என்று சொல்லியிருப்பாளோ?

This entry was posted in எதிர்வினைகள், கட்டுரை, நகைச்சுவை and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s