மூதாதையரைத்தேடி

தக்கலையில் இருந்து வெளிவரும் ‘முதற்சங்கு’ என்ற சிற்றிதழ் பிராந்திய நலனுக்காக அயராது உழைப்பதுடன் உள்ளூர் பெரியமனிதர்களை அறிமுகம் செய்தும் வைக்கிறது. 2007, நவம்பர் மாத 47 ஆவது இதழில் 13 ஆம் பக்கத்தில் ‘காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை ஒன்று உள்ளது.’ராவணன் பரம்பரை குமரியிலா?”

‘ராமனுக்கு இரு ஆண்மக்கள் பிறந்தனர். லவனும் குசனும். இவ்விருவர்களுக்குப் பின் ராமனின் பரம்பரை என்னவாயிற்று? அவன் வழிவந்த பரம்பரையினர் இன்றும் இருக்கிறார்களா?” என்று கேட்கும் அய்வாளார் அதை கண்டுபிடிப்பது இன்றைய தலையாய ஆய்வுப்பணியாக இருக்க ஏன் அதை ஆய்வாளர் செய்யவில்லை என்று வியக்கிறார். அது இன்றைய பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவும் என்கிறார்

இதைத்தொடர்ந்து ”இப்போது நம் முன் எழும் மற்றொரு கேள்வி இராமபிரானால் அழிக்கப்பட்ட இராவணன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இன்று இருக்கிறார்களா? ஆம் இருக்கிறார்கள்! அதுவும் குமரிமாவட்டத்தில் வாழ்ந்துவருகிறார்கள் என்ற வியப்பான செய்தி இப்போது கிடைத்துள்ளது!!! ” என்று அறிவிக்கிறார் ஆசிரியர். ”…விளவங்கோடு வட்டம் மருதங்கோடு பரக்குன்று, அகத்தீஸ்வரம் வட்டம் தெக்குறிச்சி போன்ற ஊர்களில் அதற்கான தடயங்கள் உள்ளன. இங்கெல்லாம் இராவணனை தங்கள் குலமுன்னோராக போற்றும் மரபு சில குடும்பத்தாரிடம் இருந்துவருகிறது… இராவணானால் எழுதப்பட்ட தமிழ்ச் சுவடிகள் சிலவும் இவர்களிடம் இன்றளவும் உள்ளன”

இதற்கான விரிவான ஆதாரங்களோடு நீளும் இக்கட்டுரை அடிப்படையாக வைக்கும் கருத்துக்களை இவ்வாறு சுருக்கிக் கூறலாம்.

1.குமரிமாவட்டத்தில் உள்ள நாடார் அல்லது சான்றோர் சாதியினரே ராவணனின் குலத்தவர்.

2. சான்றோர் சாதியில் முந்நூற்றுவர் என்ற பிரிவு உள்ளது.ராவணனின் படைப்பிரிவை முந்நூற்றுவர் என கம்பன் சொல்கிறார். அது இவர்களே.

3. ராவணன் சீதையை சிறைவைத்த இடம் குமரிமாவட்டத்தில் உள்ள மிஞ்சிறை என்ற ஊரே. இது உண்மையில் ராவணப்படையினரான சான்றோர் சாதியால் முன்சிறை என்று சொல்லப்பட்ட இடம்.

4. சான்றோர்கள் கேரளத்தில் ஈழவர் என்று சொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஈழத்தில் அதாவது ராவணனின் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் இது.

5.ராவணன் மனைவி மண்டோதரி சான்றோர் குலத்தவள். அவள் அப்பா மயன். இவர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்தவர்

6. இந்த மயன் மாபெரும் பொறியியல் மேதை. ஆகாயவிமானம்[வானூர்தி] போன்றவற்றைக் கண்டுபிடித்தவர். மயனச்சிற்பி என்றும் இவருக்கு பெயர் உண்டு. ஐந்திறம் போன்ற அரிய நூல்களை இவர் எழுதினார்

7. எகிப்து பெரு முதலிய நாடுகளில் உள்ள பெருமேடுகள் [பிரமிடுகள்] இவரால் கட்டப்பட்டவையே

8. திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர் குலத்தவரே

ஆதாரங்களாக புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம், அரக்கர் நூல் [ஓலைச்சுவடி] கோயிலூட்டம்மை வழிபாடு -இராவணேசுவரன் பூசை [பதிப்பாசிரியர் சு.செல்வகுமார் 2004] குமரிமாவட்ட எழுத்தாளர்கள் யார் எவர் -மயன் மற்றும் திரு பாஸ்கரன் வைத்தியர் நேர்காணல் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.

எனக்கும் இக்கட்டுரை பொருத்தமானதாகவே தோன்றுகிறது. காரணம் நான் சென்ற முப்பதுவருடங்களாக நாயர் குலத்தைப்பற்றி, குறிப்பாக குமரிமாவட்ட நாயர்களைப் பற்றி ஆராய்ந்து சேகரித்துள்ள தகவல்களும் இந்தக் கோணத்துடன் பெரிதும் ஒத்துப்போகின்றன. குமரிமாவட்டத்தில் நாடார்களை விட்டால் பெரிய சாதி நாயர்களே . இவர்களே ராமாயணத்தில் விரிவாகப்பேசப்படும் வானரங்கள். இவர்கள் அதிகமாக வாழும் கல்குளம், விளவங்கோடு பகுதிகளே அந்தக்காலத்தில் கிஷ்கிந்தை என்று சொல்லப்பட்டிருக்கவேண்டும். இப்போதுகூட இப்பகுதியில் உயரமான மரங்களும் அவற்றில் சிறந்த பழங்களும் உண்டு என்பதை ஆய்வாளர் காணலாம்.மூத்த நாயர்கள் சாயாகக்டைகளில் மாத்ரூபூமி படித்தபடி கட்டன் சாயா குடிக்க அமரும் விதமும் இதற்கு அரண்சேர்க்கும் ஆதாரமாகும்.

ராமாயண ஆதாரங்களையே முதலில் விரிவாகக் காணலாம். பெயர்களே பொருத்தமாக உள்ளன என்பது முதலில் கவனிக்கத்தக்கது. ராவணன் நாடார். கும்பகர்ணன்நாடார், விபீஷணன் நாடார்… அதேபோல வாலிநாயர், சுக்ரீவன்நாயர், [ வாலிப்பிள்ளை ?] அங்கதக் குறுப்பு, கவயன்மேனோன், சுபாகுக் கைமள், தாரன் நம்பியார்– எல்லாருமே நாயர்களே.

வானரங்களின் வாழ்விடத்தை வான்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 37 ஆவது சர்க்கம் தெளிவாகவே சொல்கிறது. அவர்கள் மகேந்திர மலை முதல் இமயமலை வரை பரவி வாழ்ந்தார்கள். மகேந்திரமலை இப்போது திருநெல்வேலி நாகர்கோயில் சாலையில் ஆரல்வாய்மொழிக்கு அருகே உள்ளது என்று சிறு குழந்தைகளும் அறியும். இமயமலையில் இருந்த வானரங்கள் என்ன ஆயின என்று தெரியவில்லை. ‘மேற்குக் கடலுக்கு கிழக்கே இளம்சூரியனின் ஒளியுடன் மலைகள் உயர்ந்த மண்ணில் வானரங்கள் வாழ்கின்றன’ என்று வான்மீகி சொல்கிறார். அது கேரளம் அல்லாமல் வேறு எந்த இடம்? வானரங்கள் மதுவை மிகவும் விரும்புபவை என்று வான்மீகி பலமுறை சொல்கிறார். நாயர்கள் அன்றுமின்றும் அந்திக்கள் அடிமைகள் அல்லவா?

இலக்கிய ஆய்வை நோக்குவோம். வாலி பெரிய வீரன். இவர் காலையில் சூரிய வணக்கம் செய்ய கடலின் நான்குபக்கதிற்கும் குதித்துச் சென்று அமர்வது வழக்கம். ஒரேசெயலைச் செய்ய ஒருவர் நான்கு இடத்துக்குப் பாய்ந்தாலே அவர் நாயர் என்பதற்கு ஆதாரமாகிறது. அந்நிலையில் இவரது பலமறிய நினைத்த ராவணன் இவரது வாலைப்பிடிக்க இவர் அவரை அப்படியே அவரை வாலால் சுருட்டி முடிந்த பின் அப்படியே மறந்துபோனதாக ராமாயணம் சொல்கிறது. முடிச்சு போட்டு வைத்தாலும் ஒன்றை மறந்துபோகும் ஒருவர் நாயரே என எவரும் சொல்வார்.

வாலி மனைவி தாரை. தம்பி சுக்ரீவன். அண்ணன் தம்பிக்கு இடையே சண்டை நடந்தது. வழக்கம்போல தம்பி போய் ராமன் என்ற ஆரியனை துணைக்குக் கூட்டிவந்தான். இதுவும் ஒரு நாயர் குணமே என்பதைச் சொல்லவேண்டியதில்லை. சண்டையில் பாலி இறக்க அவர் மனைவியை சுடச்சுட சுக்ரீவன் திருமணம் செய்து கொண்டான். ஏற்கனவே இருந்த சொத்துச் சண்டையில் இவ்விஷயமும் அடக்கம் என்று நாம் ஊகிக்கலாம். இவ்வழக்கம் சமீப காலம்வரை நாயர்களிடம் இருந்ததை வரலாறு அறியும்

இன்றும் நாயர்களிடம் உள்ள பல இயல்புகளை நாம் இதற்குரிய சமூகவியல் ஆதாரங்களாகச் சொல்லலாம். முதல்விஷயம், நாயர் குழந்தைகள் சிறுவயதிலேயே பெரிய வால்தனத்துடன் வளர்கின்றன. இந்த வால் நுண்ணுருவில் அவர்களிடம் எப்போதும் உள்ளது. ‘ஆளு பெரிய வாலாக்கும்” என்ற சொற்றொடர் இன்றும் புழக்கத்தில் உள்ளது. நாயர்கள் பெரும்பாலும் ஒரு வயதில் அப்பென்டிக்ஸ் அறுவைசிகிழ்ச்சை செய்தேயாகவேண்டும். அது அவர்களின் வாலின் உள் எச்சமே.

”சீதை என்ன அழகாக இருந்து என்ன, நல்ல ஒரு வால் இல்லையே” என்று ஒரு வானரம் குறைப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நாயர் ஸ்திரீகளின் சென்ற நூற்றாண்டுவரையிலான உடை ‘ஒந்நர முண்டு’ ஆகும். இதில் பின்பக்கம் வால்போல நீளமான சரிகை குச்சம் தொங்கும். இது நாயர்களின் ஆழ்நனவிலியில் இருந்து வந்த அழகுணர்வே என ஆய்வாளர் அறியலாம்.

ராமன் திரும்பிவரும்போது ஒரு பெருவிருந்து சுக்ரீவனால் கொடுக்கப்பட்ட போது அனைத்து வானரங்களும் ஒரே சமயம் எம்பிக்குதித்ததை கண்டு அதிர்ந்து ராமன் விசாரித்தபோது ஒரு வானரம் அடைப்பிரதமனை வளைத்து அள்ளிக் குடித்தபோது அதில் இருந்த ஊறிய கிஸ்மிஸ் பழம் நழுவித்தெறிக்க அதைப்பிடிக்க அது தாவியதைக் கண்டு அனிச்சையாக மற்ற வானரங்களும் தாவிய கதை தெரியவந்தது. நாயர்கள் இந்த மனநிலையை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். நூறுவருடம் முன்பு கர்னல் மன்றோ தலைமையில் பதினெட்டு பேர் கொண்ட ஒரு ஆங்கிலப்படை கோட்டாறுக்கு வந்தபோது அதை எதிர்த்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாயர்கள் ஈட்டிகள் ஏந்தி நடனமிட்டு போருக்குச் சென்றதாகவும், பிரிட்டிஷ் படையின் முதல் குண்டு குறிதவறிய ஒலி கேட்டு முதல்நாயர் ஓட மொத்தப்படையும் சிதறி ஓடியதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது

நாயர்களை ராணுவமாக ஆக்க முனைந்த மார்த்தாண்ட வர்மாவின் டச்சு காப்டன் பெனடிக்ட்- டி – லென்னாய் அவர்களின் வலக்காலில் ஓலையும் இடக்காலில் சீலையும் கட்டி ”ஓலைக்கால்! சீலைக்கால்!” என்று கூவி லெ·ப்ட் ரைட் கற்பித்ததாக வரலாறு சொல்கிறது. காயங்குளம் போரில் பல நாயர் கால்களில் ஓலைகள் கழன்றுபோனதனால் அவர்கள் சீலைக்காலை மட்டுமே தூக்கி வைத்து எம்பி எம்பிக் குதித்து போனமை அவர்களின் முன்னோர்களை நினைவூட்டுவதாக இருந்தது என்று சொல்லப்படுகிறது.

நாயர்கள் பாம்பை வழிபடுகிறார்கள். வானரங்களுக்கு பாம்பு எதிரி என்று இலக்கியங்கள் சொல்கின்றன. பாம்பைப்பிடித்த வானரம் அதை விடத்தெரியாமல் இறுகப்பிடித்து திரும்பி அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு பட்டினி கிடந்து செத்த கதையும் நாமறிந்ததே. பாம்பைக்கண்ட வானரம் தன் வாலையே அஞ்சும் என்ற கவிவாசகமும் நாயர்களின் குணத்தை காட்டுவதாகவே உள்ளது. அச்சமும், பிடித்த பிடியை விடாத பண்புமே இவர்களை பாம்பு வழிபாட்டாளர்களாக ஆக்கியிருக்கலாம். இதேபோல இவர்கள் புலிவாலையும் பிடித்திருக்கிறார்கள் என்பதை ‘நாயர் பிடித்த புலிவால்’ என்ற பழமொழியால் அறியப்படுகிறது.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ராமர் பாலம் கட்டியது நாயர்கள். அதை அவர்களிடம் ஒப்படைப்பதே நியாயம். அணிலுக்கு அது செய்த சேவைக்கு ஏற்ற பங்கு கொடுக்கபப்டும். மேலும் நாயர்களே பரிணாமத்தில் முதலில் உருவானவர்கள். கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாலோடு முன் தோன்றி மூத்த குடி

This entry was posted in கட்டுரை, நகைச்சுவை and tagged . Bookmark the permalink.

One Response to மூதாதையரைத்தேடி

  1. Pingback: ராவணன் கதாநாயகனா காமக் கொடூரனா « சகோதரன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s