ஜெய்? மோகன்?

எஸ்ரா பற்றிய கட்டுரை படித்தேன். அந்த நபரை எனக்கு நாற்பது வருடமாகவே தெரியும் என்பதால் ஜெயமோகன் எழுதியதைப் படித்த போது வகையா மாட்டுனாரா என்று சந்தோஷப்பட்டேன். அவரைப் பற்றிய ஜெயமோகனின் பதிவுகள் ரூம் போட்டு யோசித்தவை போல நன்றாக இருக்கின்றன.

ஜெயமோகன் எழுத வந்த காலத்தில் அவரை நண்பர்கள் செல்லமாக ஜெய் என்று கூப்பிடுவார்கள். என்னிடமே அப்படி சிலர் சொல்லியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரே ஜெய் நடிகர் ஜெய்சங்கர். அந்த நாட்களில் அவர் அதிகம் படங்களில் நடிக்காமல் வீட்டில் இருந்தார். அதனால் அவர் தீவிரமாக இலக்கியப் பணியில் இறங்கிவிட்டாரோ என்ற அச்சத்தில் அய்யய்யோ ஜெய்சங்கர் இப்படி கணையாழி வரை எழுதக்கூடியவராகயிருக்கிறாரே , நாம் வல்லவன் ஒருவன், வல்லவனுக்கு வல்லவன் பார்த்த போது எல்லாம் இது தெரியாமல் போய்விட்டதே என்ற கிலேசத்துடன் ஜெய்யா இப்படி எழுதுறது என்று கேட்டு வைப்பேன். அவர்களும் ஆமா ஜெய் என்னமா எழுதுறார் என்று சொல்வார்கள்.

அதன்பிறகு ஜெய்சங்கர் படம் பார்க்கும் போதெல்லாம் எவ்வளவு பெரிய எழுத்தாளர், தத்துவ வித்தகர் என்று வியந்து கொள்வேன். ஆனால் ஒரு நாள் ஜெய் என்பது ஜெய்சங்கர் அல்ல, ஜெயமோகனைத் தான் அப்படி தமாஷாக கூப்பிடுகிறார்கள் என்ற உண்மையை அறிய வந்த போது ஏமாற்றமாக இருந்தது.

அதன்பிறகு யாராவது அவரை ஜெய் என்று கூப்பிடும் போது சார் பிளீஷ் அப்படி சுருக்கி கூப்பிட வேணாமே என்று மன்றாடத் தோன்றும். சுபமங்களா, காலச்சுவடு என்று ஜெயமோகன் கதை கட்டுரைகளாக எழுதித் தள்ளியதை மாறிமாறி படித்த பிறகு ஜெய்சங்கரே தேவலாம் என்பது போலிருந்தது.

அப்புறம் சில வருடங்களுக்கு பிறகு நண்பர்கள் அவரை ஜெயன் என்று கூப்பிடத் துவங்கினார்கள். அதுவும் எனக்கு வில்லங்கமாகவே முடிந்தது. எனக்கு தெரிந்த ஒரே ஜெயன் மலையாள நடிகர் ஜெயன். பூட்டாத பூட்டுகளில் நடித்தாரே. அவரது தனிவிசேசம் பெரும்பான்மை படங்களில் சட்டைப் பொத்தானை அவிழ்த்துவிட்டு நெஞ்சை காட்டி கதாநாயகிகளை மயக்குவார். மதுரையில் இதோ இவிட வரு என்ற படத்திற்காக ஜெயன் கதாநாயகியின் உடலை கரும்பு ஜூஸ் பிழியும் கவர்ச்சி போஸ்டரைப் பார்த்த பொதுமக்கள் குடுத்த காசு இதுக்கே செத்துச்சி என்று வியந்து போனார்கள். அதை நினைவுபடுத்துவதால் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பல நாட்கள் தவித்திருக்கிறேன்.

இதை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்குவதைப் போல அவரை சமீபமாக நண்பர்கள் மோகன் என்று செல்லமாக கூப்பிட ஆரம்பித்தார்கள். என்னுடைய அற்ப அறிவிற்குத் தெரிந்த ஒரே பெயர் மைக் மோகன். தமிழ் படங்களில் அவர் இடைவிடாமல் மைக்கில் பாடி பல கின்னஸ் சாதனைகள் புரிந்தவர்.

மோகனைப் பற்றிய ஒரு செய்தி. அவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒரு தயாரிப்பாளர் அவரை போலீஸ், பாடகன் என இரட்டை வேடம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். மோகனும் நடித்து கொடுத்திருக்கிறார். ஆனால் படம் வெளியான போதுதான் மோகனுக்குத் தெரிந்தது போலீசாக நடித்தது ஒரு படம். பாடகனாக நடித்தது வேறு படம் என்று. இதை தான் உள்ளடி என்பார்கள்.

அதுவும் நம்முடைய ஜெயமோகன் சினிமாபிரவேசத்திற்குப் பிறகு மோகன் ஷுட்டிங்கில் இருக்கிறார், மோகன் டைரக்டருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று நண்பர்கள் சொல்லும் சத்தியமாக மைக் மோகன் மட்டுமே ஞாபகம் வந்து தொலைவார். இப்படி பெயர் குழப்பம் நீண்டு கொண்டிருந்த காலத்தில் எனது உறவினர் திருமணத்திற்காக பாலக்கோடு அருகில் உள்ள வெள்ளிசந்தை என்ற ஊருக்கு போய்விட்டு ஜெயமோகன் அருகில் தான் வசிக்கிறார் அவரை ஒரு நடை பார்த்துவரலாம் என புறப்பட்ட போது என் மாமா துள்ளி குதித்து என்னது உனக்கு ஜெயமோகனைத் தெரியுமா என்று கேட்டார்.

எனக்கு அதை விட பெரிய வியப்பு. பஞ்சாங்கத்தை தவிர வேறு புத்தகமே அறியாத மாமாவிற்கு எப்படி ஜெயமோகன் பெயர் தெரிந்திருக்கிறது என்று பயந்து, உங்களுக்கு அவரை எப்படித் தெரியும் என்று கேட்டேன். அவர் இந்தப் பகுதியில் ரொம்ப பாப்புலர் என்றார். எழுத்தாளர் என்றால் இப்படியல்லவா மக்களோடு கலந்து இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு அவரை பார்த்து
வருவதாக சொல்லி கிளம்பினேன்.

மாமா தானும் உடன் வருவதாக சொன்னார். இருவருமாக பேருந்து நிலையம் அருகே வந்து நின்ற போது நாலைந்து ஆப்பிள்களும் ஒரு மாலையும் வாங்கிக் கொள்வோமா என்று மாமா கேட்டார். எனக்குத் தலை சுற்ற துவங்கியது. ஜெயமோகனுக்கு என் வீட்டிலே இப்படி ஒரு வாசகரா என்று நெகிழ்ந்து போய் வாங்கிக் கொள்ளலாம்
என்றேன்.

என் முகத்தில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு மாமா உனக்கு ஜெயமோகன் பழக்கம் தானே என்று கேட்டார். இப்படி சந்தேகப்பட்டுவிட்டாரே என்றபடியே நல்ல பழக்கம், அவர் எழுத்தை எல்லாம் படிச்சி இருக்கேன் என்றேன். உடனே மாமா சந்தேகத்தை அதிகபடுத்துவது போல பார்த்துவிட்டு எழுத வேற செய்றாரா என்று கேட்டார்.

நான் ஒன்றும் புரியாமல் மாமாவை பார்க்க, அவர் என்னை முறைத்தபடியே எந்த ஜெயமோகனை சொல்றே என்றார். நான் விஷ்ணுபுரம் ஜெயமோகன் என்றேன். அவர் கோபத்துடன் நான் சொன்னது தர்மபுரி எம்எல்ஏ ஜெயமோகனை என்று விடுவிடுவென வீட்டிற்கு நடந்து போக துவங்கினார். அதன்பிறகு இன்று வரை எங்களுக்குள் பேச்சு வார்த்தை கிடையாது. இப்படி ஜெயமோகனின் வாசகன் என்பதால் நான் பட்டபாடுகள் ஒன்று இரண்டல்ல.

இதன் உச்சம் சண்டைக்கோழி படப்பிடிப்பின் போது கதாநாயகியாக நடித்த மீரா ஜாஸ்மினிடம் உங்களுக்கு கஸ்துரிமான் படத்தின் வசனகர்த்தா ஜெயமோகனைத் தெரியுமா என்று கேட்டேன். அவர் உற்சாகத்துடன் அந்த அங்கிளை லோகி அங்கிளோடு பார்த்து இருக்கேன் என்றார். அப்போது தான் இப்பிடியொரு ரத்தஉறவு இருக்கும் ரகசியமே எனக்கு புரிய துவங்கியது.

சமீபமாக தொலைக்காட்சியில் ஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

எஸ். ராமகிருஷ்ணன்.

This entry was posted in நகைச்சுவை and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s