முடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் 'முட்டம்'

‘பெரிய விஷயங்களை மட்டும் சொல்பவர்கள் கூர்மையற்ற பார்வையுடையவர்கள்’ என்பது இலக்கியத்தின் பொன்விதிகளில் ஒன்று. எழுத தொடங்குபவர்கள் அனேகமாக அனைவருக்கும் தென்படும் விஷயங்களை ஆர்ப்பாட்டமான நடையில் சொல்வார்கள்.எல்லார் கண்ணுக்கும் பட்டு ,எவருமே சொல்லாதவற்றைச் சொல்வதே மேலான இலக்கியம் என்ற புரிதலை அவர்கள் வந்தடைய நாளாகும். மிக தற்செயலாக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது சிரில் அலெக்ஸின் இந்த இணைய தளத்தைக் கண்டடைந்தேன். என் சொந்த நிலமான குமரி மாவட்டத்தின் அழகிய நுண்ணிய சித்திரங்களினாலான அந்த எழுத்து என்னை உள்வாங்கிக் கொண்டது. கடற்கரைச்சாலையில் செல்லும்போது திடீரென ஓர் இடத்தில் கடலின் அழகிய வளைவொன்றைப்பார்த்து வியந்து நின்றுவிடுவது போல.

எடுத்த எடுப்பிலேயே சிரில் தேர்ந்த எழுத்தாளனைப்போல நுண்சித்தரிப்புகளுக்குச் செல்கிறார். அதற்குக் காரணம் அவர் இம்மண்ணைப்பிரிந்து நெடுந்தூரம் சென்றிவிட்டிருப்பதுதான். இங்கேயே இருந்திருந்தால் இம்மண் அவர் கண்ணில் பட்டிருககது, சமூகப்பிரச்சினைகள் மட்டுமே பட்டிருக்கும். சுறாப்புட்டு முதலிய சின்னச்சின்ன விஷயங்களில் உறையும் தன் பண்பாட்டின் ருசியை அந்த பிரிவு அவருக்கு காட்டியது போலும். ”உனக்கு வணக்கம் பிரிவே நீ எங்களை கண்கட்டி நெருங்கச்செய்தாய்!’ என்று மலையாள மகாகவி வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனன்.

இந்நூல் ஒரு பெரிய நாவல் இன்னும் தொடங்காமல் முகாந்திரங்கள் மட்டும் நிகழ்ந்துகொண்டிருப்பது போலிருக்கிறது. கடற்கரைச் சித்திரங்கள், கடல் வர்ணனைகள், கடலும் வானும் மனிதனை சிறியதாக ஆக்கும் பேரனுபவ வர்ணனைகள், மீன்கள், மனிதர்கள், தேவாலயங்கள்… கோலம் போட சாணி தெளிக்கட்டுவிட்டது. புள்ளிகள் தொடங்கிவிட்டன. இனி கோடுகள் மூலம் நாவல் உருவாகிவரவேண்டும்.

இலக்கியத்தில் மண் என்றும் விரிவுடனும் உக்கிரத்துடனும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மலைகள் வயல்கள் ஆறுகள். ஆனால் தமிழிலக்கியத்தில் கடலும் கடற்கரையும் மிக மிகக் குறைவாகவே முகம் காட்டியுள்ளன. ஜோ. டி. குரூஸின் ‘ஆழிசூழ் உலகு’ முக்கியமான விதிவிலக்கு. சிரிலின் சித்தரிப்பில் நான் நன்கறிந்த முட்டத்தின் நண்டு ரேகைகள் படர்ந்த மென்மணல் பரப்புகளை, வெண்ணுரை பொலிய அலைநீராடும் கடற்பாறைகளைக் காணமுடிகிறது.

மனிதர்கள் இச்சித்தரிப்பில் இன்னும் தங்கள் உக்கிரத்துடன் வந்துசேரவில்லை. அவர்களின் பாரம்பரியம், உள்ளுறையும் கோபதாபங்கள், ஆசைகள், இச்சைகள் .அவையெல்லாம் இணைந்து பின்னிப்பின்னி ஒருகணமும் ஓயாது நெளியும் மாபெரும் வாழ்க்கைக்கோலம். சிரில் அதை நோக்கி நகர்வதற்கான அனைத்து புள்ளிகளையும் இந்நூலில் நேர்த்தியாக போட்டிருக்கிறார். அடுத்த படி நாவல்தான் என அவருக்கு எழுதினேன். அதை நினைவில் கொண்டிருப்பார் என நினைக்கிறேன்.

நெடுநாள் முன்பு முட்டம் பற்றி நான் ஒரு கவிதை எழுதினேன். கடற்பாறை என்ற அக்கவிதை காலச்சுவடில் வெளியாயிற்று. ‘முடிவின்மையின் அறைபட்டு அறைபட்டு உருவான அதன் முகம்’ என்ற அதில் உள்ள ஒரு வரி நினைவில் ஒளிர்கிறது. முடிவின்மையின் அடிபடுதல் என்பது ஓர் ஆசி. கடலை அறிந்து அதை நோக்குபவனுக்கு அது கிடைக்கும்.  சிரிலுக்கு அது நிகழ்வதாக

This entry was posted in முன்னுரை, வாசிப்பு and tagged , . Bookmark the permalink.

One Response to முடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் 'முட்டம்'

  1. Pingback: தேன் » Blog Archive » ‘அடி வாங்குக’ என வாழ்த்தியவர்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s