நகைச்சுவையும் நாகார்ஜுனனும் : ஒரு பதில்

அன்புள்ள ஜெயமோகன்

நலமா உங்கள் எல்லோருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

இந்த மின் அஞ்சலை எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.

நம்மிடையே எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு என்றாலும் உங்கள் எழுத்துக்களை வாசிப்பவர்களில் நானும் ஒருவன்

‘திலகம்’ வாசித்தேன். குமரித்தமிழில் நன்றாகவே இருக்கிறது. என்னை இழுத்து எழுதியதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்

ஆனால் என் கடந்த காலத்தை ஜாதிக்கண்ணோட்டத்தில் எழுதிய அந்த வார்த்தை பிரயோகத்தை ‘நீங்கள்’ பாவிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை

எப்போதாவது சந்திக்கும்போது நிறைய பேசலாம்.

நாகார்சுனன்

*

அன்புள்ள நாகார்ஜுனன்

உங்கள் கடிதம் கண்டு மகிழ்ச்சி.

முதலில் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் ஏதுமில்லை. நம்மிடையே போதிய அறிமுகமோ உரையாடலோ நிகழவில்லை. ஆனால் நான் உங்களை கூர்ந்து கவனித்து வருகிறேன். பிரேம் விஷயத்தில் எனக்கு நிகழ்ந்தது போல பிற்பாடு நாம் அறிமுகமானால் தயக்கங்கள் விலகக் கூடும்

நகைச்சுவை பற்றி. என்னுடைய கிண்டல்கள் ‘எழுத்தும் எண்ணமும்’ என்ற இணையக் குழுவில் நண்பர்களை கிண்டல்செய்வதற்காக எழுதப்பட்டு பிறகு அவர்களால் ஊக்கப்படுத்தப்பட்டு இணைய தளத்தில் போடப்பட்டன. அவற்றுக்கு தாக்கும் என்ணமேதும் இல்லை.

தமிழகத்துக்கு வெளியே , இங்குள்ள பல மனநிலைகளுக்கு அப்பால் நீங்கள் இருப்பதனால் நான் சொல்லவருவதைப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். தமிழகத்தில் பொதுவாக நகைச்சுவை உணர்வு மிக மிகக் குறைவு. நகைச்சுவையை நேரடியாக எடுத்துக் கொள்வதும் எரிச்சலைடைவதும் நம் வழக்கம். குறிப்பாக சாதி மதம் போன்ற பல தளங்களைத் தொட்டே பேசமுடியாது. இதை கேரளத்தில் பார்க்க முடியாது. நகைச்சுவைக்கும் கிண்டலுக்கும் முழு சுதந்திரம் உள்ள ஒரு பண்பாட்டு வெளி அது.

தமிழ் நாட்டில் நாம் சாதி முதலியவற்றைச் சொல்வதில்லை,. ஆகவே அவை நமக்குள் நுரைத்துக் கொண்டே இருக்கின்றன. கேரளத்தில் சாதி மதம் சார்ந்து ஒருவரை ஒருவர் கிண்டல்செய்வது ஒரு அன்றாட வழக்கம். நூற்றாண்டுகளாக உருவாகிவந்த கசப்புகளையும் பேதங்களையும் இப்படித்தான் அவர்கள் தாண்டிச்சென்றார்கள். இன்ரு மலையாளிகளிடம் மட்டும் காணும் ஒருவழக்கம் உண்டு. பத்து நண்பர்கள் இருந்தால் அதில் முஸ்லீம் பிராமணன் தலித் கிறித்தவர் என அனைவருமே இருப்பார்கள். சகஜமான நெடுங்கால நட்பாக இருக்கும். தமிழில் எழுத்தாளர்கள் இடையே கூட சாதிசார்ந்த நட்புகளே அதிகம். கேரளத்தில் நகைச்சுவை பல விஷயங்களை எளிதாக்கிவிடுகிறது. இணைக்கும் வலிமையாக இருப்பது நகைச்சுவையே. இதே மனநிலை பெருமளவுக்கு குமரிமாவட்டத்தில் உண்டு.

அதேபோல அதிகாரத்தையும் நகைச்சுவை எதிர்கொள்கிறது. அதை நீங்கள் அவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே காணலாம். கருணாகரனை எல்லா எல்லைகளுக்கும் போய் கிண்டலடிக்கும் நிகழ்ச்சிக்கு கருணாகனையே தலைமை தாங்க அழைக்கலாம். அவரும் வந்து வாழ்த்தி சிரித்துவிட்டு போகலாம். மோகன்லாலை எப்படி கிண்டலடிபப்து என்ற வகுப்பை மோகன்லால் தலைமையில் நடத்தலாம். இது ஒரு முக்கியமான பண்பாட்டு நகர்வு. பண்பாட்டில் கேரளத்தின் முக்கியமான சாதனையே இதுதான்

எனது நாஞ்சில்நாடன் பற்றிய பதிவைப் பாருங்கள். அதில் பெரும்பகுதி அவரது சாதி பற்றிய கிண்டல்தான். தமிழில் நண்பர்களுக்குள் இருந்த இந்த விஷயத்தை பின்னர் விவாதக்குழுவில் கொண்டுவந்தோம். எனக்கு தயக்கங்கள் இருந்தது. ஆனால் நண்பர்கள் ஊக்கமூட்டினார்கள். ஆகவே அதை இணையதளத்தில் ஏற்றினேன்

இன்னொருவர் என்றால் மன்னிப்பு கேட்டிருப்பேன். உங்களிடம் மன்னிப்பு கோரமாட்டேன். நீங்கள் இருப்பது இப்பண்பாடு உதித்த மண்ணில். நகைச்சுவையின் சமூகப்பரிமாணங்களை படித்துமிருப்பீர்கள்.

பதிலுக்கு நீங்கள் என் சாதி பற்றியோ மதம் பற்றியோ வேறு எதைப்பற்றியோ எப்படிவேண்டுமானாலும் கிண்டல் செய்யுங்கள். [சாதி பற்றிய தகவல்களை எங்கல்ஸின் குடும்பம் தனிச்சொத்துச் அமூகம் நூலிலேயே காணலாமே]

ஜெயமோகன்

This entry was posted in எதிர்வினைகள், நகைச்சுவை and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s