இயல் விருது – ஒரு பதில்

அன்புள்ள கிரிதரன்

உங்கள் கடிதம் கண்டேன்.

http://www.geotamil.com/pathivukal/VNG_ON_IYALVIRUTHU2007.htm

உங்கள் தரப்பை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதை வாசகர்கள் பரிசீலிக்கட்டும். இம்மாதிரி விஷயங்களில் நியாங்கள் அந்த அலை ஓய்ந்த பிறகே மனதில் திரளும். காத்திருப்போம்.

ஒன்றைமட்டும் சொல்ல விரும்புகிறேன். லட்சுமி ஹாம்ஸ்டம் பற்றி முழுமையாக தெரிந்தபின்னர், அவரது இரு நூல்களைப் படித்த பின்னர்தான் என் கருத்தை சொல்கிறேன். இயல் விருதின் தெரிவுமுறை முற்றிலுமாக எனக்குத்தெரியும்.

எந்தவிருதைப்பற்றி குறைசொன்னாலும் தேர்வுமுறையின் ஒழுங்கமைப்பு பற்றிய பதில் வரும். ஆனால் ஓர் அமைப்பின் உள்ளக்கிடக்கையே விருதுகளாக ஆகிறது.

உங்கள் தனிப்பட்ட தேர்வில் உங்களுடைய தேர்ச்சியின்மை வெளிப்படுகிறதோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. நீங்கள் லட்சுமி ஹாம்ஸ்டம் குறித்து சொல்வனவே அதற்குச் சான்று. நண்பரே, தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு பேராசிரியரைப்பற்றியும் இதைவிடச்சிறப்பான ‘அதிகாரபூர்வ’ ஆதாரங்கள் இருக்கும். resume தயாரிப்பதில்தான் உச்சகட்ட தேர்ச்சி வெளிபப்டுகிறது இங்கே. சந்தேகமிருந்தால் வி.சி குழந்தைச்சாமி அல்லது வசந்திதேவி போன்ற ஒருவருடைய சுயவிவரங்களைப் போய் பாருங்கள். ஏன் ஆ. இரா வெங்கடாசலபதியைப்பற்றி அல்லது நு· மானைப்பற்றி தேடிப்பாருங்கள். தமிழே அவர்களால்தான் வாழ்கிறது என தெரியும்!!. அதனடிப்படையில் விருதுகளைக் கொடுப்பதாக இருந்தால் எப்படியும் முந்நூறு பேராசிரியர்களுக்கு கொடுத்த பின்னரே தமிழின் ஏதாவது படைப்பாளியை பரிசீலிக்க முடியும்.

தமிழின் எந்த ஒரு படைப்பாளியும் அப்படி ஒரு சுயபதிவை செய்து வைத்திருக்க மாட்டான். தமிழ்ச் சூழலில் முன்னோடிகளான மேதைகளைப்பற்றியே மொத்தமாகப் பத்து கட்டுரைகள் எழுதபட்டதில்லை. இந்து இதழில் அவர்கள் செத்தால்கூட செய்தி வராது. ஆங்கிலப் பதிவுகளுக்காகத் தேடினால், சுத்தம்! இதுதான் இங்குள்ள நிலைமை. இங்கு உண்மையிலேயே பங்களிப்பாற்றியவர்கள் ஊரறியாது அமைதியாக வாழ்நாள் முழுக்க பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கீகாரமும் புகழும் பணமும் ஏதும் இல்லை. விருதுகள் பங்களிப்பையும் சாதனைகளையும் மட்டும் வைத்து அளிக்கப்படுமென்றால் அவர்களுக்கே அளிக்கப்படவேண்டும்.

அமைப்பு சார்ந்த மனிதர்களுக்கு ஏற்கனவே இருக்கும் ‘வெளிச்ச’த்தையும் தொடர்புகளையும் வைத்து விருதுகளை அளிப்பதில் உள்ள அபத்தத்தையே நான் சுட்டிக்காட்டுகிறேன். நீங்கள் மீண்டும் அதையே சொல்கிறீர்கள். லட்சுமி ஹாம்ஸ்டமின் தகுதிகளாக நீங்கள் சொல்லும் பதிவுகளை அளவீடுகளாகக் கொண்டால் தமிழில் நூறு பேராவது அதைவிட முன்னால் வந்துவிடுவார்கள். துணைவேந்தர்கள், உலகப்பல்கலைகழங்கள் தோறும் உலா வருபவர்கள், தலையணைபோல மொழிபெயர்ப்புகளைச் செய்தவர்கள், கருத்தரங்குகளை நடத்தியவர்கள், கட்டுரைகள் சமர்ப்பித்தவர்கள்……அவர்களுக்கு நீங்கள் அளிக்கும் விருது உண்மையான சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் அவமரியாதை. நான் சொல்வது இதையே.

உங்கள் தேர்வுப்பட்டியலிலேயே பார்க்கவும். லட்சுமி நான்கு நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். அதன் மூலம் ‘உலகமே’ நம்மை திரும்பிப்பார்த்திருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். பட்டியலில் உள்ள பிறரைப்பற்றி நீங்கள் என்ன அறிவீர்கள்?

நானே சொல்கிறேன். நாற்பதாண்டுக்காலமாக தமிழ் பண்பாட்டு ஆய்வில் ஒரு புதிய அலைக்காக உழைத்தவர் தொ. பரமசிவம். நமக்கு சம்பிரதாயமான ஒரு வரலாற்று ஆய்வுமுறையே இருந்துவந்தது. கல்வெட்டுச்சான்றுகள். தொல்பொருளாதாரங்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே வரலாற்றை வகுப்பது. அது வரலாற்றை மேலிருந்து எழுதுவது. பண்பாட்டு வரலாற்றை கீழிருந்து எழுதும் ஒரு பெரு முயற்சியின் முன்னோடி தொ. பரமசிவம்.

அதாவது மக்கள் வாழ்க்கைசார்ந்த பண்பாட்டுக்கூறுகளை வைத்து நம் வரலாற்றை ஆராய்வது தொ. பரமசிவம் போன்ற முன்னோடிகளால்தான் உருவாக்கப்பட்டது. சடங்குகள் நம்பிக்கைகள் போன்றவற்றையெல்லாம் வரலாற்றை ஆராய பயன்படுத்தலாம் என்று வழிகாட்டியவை அவ்வாய்வுகள். அழகர்கோயில் பற்றிய அவரது ஆய்வுமுறையை ஒரு ‘கிளாசிக்’ என்று எந்த ஆய்வாளரும் சொல்வார். கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பன்னிரண்டு ஆண்டுக்கால கள ஆய்வின் விளைவு அது. தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக அவர் இயங்கிவருகிறார். அவரது ஆய்வு முறை இன்று வலுப்பெற்றுதான் ஒரு பொ.வேல்சாமி வரை வரும் புதியவரிசை ஆய்வாளர்களே உருவாகி தமிழ்பண்பாட்டு ஆய்வே தலைகீழாக மாறியுள்ளது. இன்றைய தமிழின் முக்கியமான அறிவுச்செயல்பாடுகளில் ஒன்று இது.

தொ.பரமசிவம் பற்றி ஆங்கிலத்திலும் இணையதளத்திலும் தேடினால் கிடைக்காது. பல்கலைக் கழக அங்கீகாரங்கள் முன்னரே வாங்கிய விருதுகள் இல்லை. ஏன், அவருக்குப் பின் அவரது பானியில் ஆய்வைச் செய்த சி.ஜெ.·புல்லர் போன்ற வெளிநாட்டினரைப்பற்றி நீங்கள் தேடினால் கிடைப்பதன் நூறில் ஒருபங்கு கூட அவரைப்பற்றி கிடைக்காது. நண்பரே , தமிழ் முன்னோடிகளை அளக்க அது அல்ல அளவுகோல்.

இன்னொன்றும் இங்கே சொல்கிறேன். தொ.பரமசிவம் எனக்கு நேர் எதிரான அரசியல் கொண்டவர். என் ஒரு சொல்லைக்கூட ஏற்கமாட்டார். அவரது பெரியாரிய தீவிரப்போக்கு எனக்கும் கடுமையான கசப்பு உள்ள தளம். ஆனால் எப்போதும் ஒரு முன்னோடி ஆய்வாளராக தனிப்பட்டமுறையிலும் எனக்கு வழிகாட்டுபவராகவே இருந்து வந்திருக்கிறார்.

அடுத்து சு.தியோடர் பாஸ்கரன். தமிழில் சூழியல் குறித்த ஒரு சொல்லாடல் இன்று நிகழ்கிறது என்றால் அதற்கு காரணமே அவரது கால்நூற்றாண்டுகால பொறுமையான பலன் கருதாத உழைப்பும் கவனமும்தான். இன்று இதில் புழங்கும் பலநூறு சொற்களே அவரால் உருவாக்கப்பட்டவையே. ஒருமொழியின் ஒருபண்பாட்டின் ஒரு குறிப்பிட்ட அறிவுத்தளத்தை தொடங்கிவைத்த முன்னோடி உங்கள் கண்ணுக்கு ஒரு நான்குநூல்களை மொழிபெயர்த்த ஒரு மொழிபெயர்ப்பாளரை விட சாதாரணமாகத் தென்படுவதற்குக் காரணம் என்ன என்று சிந்தியுங்கள்.

பேராசிரியர் ராமானுஜம் நாடகத்துக்கு ஒரு முக்கியமான பங்களிப்பை ஆற்றியுள்ளார். ஆனால் அவர் ஒரு பல்கலையில் அவருக்கு அளிக்கப்பட்ட வேலையை சிறப்பாகச் செய்தார், அவ்வளவுதான். ஆனால் உண்மையில் நாடகத்தில் முன்னோடி சாதனையாளர், தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்தவர் ந.முத்துசாமிதான். நீங்கள் பேரா.ராமானுஜத்தைப்பற்றி நிறைய தகவல்களை பெறலாம்.அவர் கல்வித்துறையாளர். முத்துசாமியைப் பற்றி நாம் சொன்னால்தான் உண்டு.

உங்கள் அளவுகோல் எவ்வளவு அபத்தமானது என்பது என் சொற்களால் உங்களுக்குப் புரியுமா என்று தெரியவில்லை. ஒருவர் கல்வித்துறை அமைப்பு சார்ந்து செயல்படுபவராக இருந்தால் பல இடங்களை அடைந்து தன்னை நிறுவிக்கொள்ள முடியும். பெரிதாக தன்னைக் காட்டிக் கொள்ள முடியும். பல அங்கீகாரங்கள் விருதுகள் அவருக்கே கிடைக்கும். இதுதான் தமிழ்நாட்டு வழக்கம். இங்கே உண்மையான சாதனையாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கபப்ட்டு கிடக்கிறார்கள். இங்கே தனக்காக உழைப்பவர் தன்னை பூதாகரமாக காட்டிக் கொள்ள முடியும். அசோகமித்திரனைவிட நூறுமடங்கு பெரிதாக க.ப.அறவாணன் தெரிவார். சுந்தர ராமசாமியைவிட நூறுமடங்கு பெரிதாக வைரமுத்து தெரிவார். லட்சுமிக்கு மாற்றாக நான் அசோகமித்திரனை சுட்டிக்காட்டினால் ஒரு இணைய தளத்தை அல்லது ஆங்கிலக்கட்டுரையைக்கூட ஆதாரமாகச் சுட்ட முடியாது. ஆகவே அசோகமித்திரனைவிட லட்சுமி தமிழ்ச்சாதனையாளர் என ஆகிவிடுவாரா? சொல்லுங்கள்.

நேற்றுமுன்தினம் வைரமுத்துவுக்கு மதுரை பல்கலைகழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. இது அவருக்கு கிடைக்கும் இரண்டாவது கௌரவ டாக்டர் பட்டம். இதைத்தவிர பத்மஸ்ரீ பட்டம். சாகித்ய அக்காதமி…. அவர் முழுமூச்சுடன் ஞானபீடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்த அளவுக்கு அங்கீகாரமும் கௌரவமும் இன்றுவரை தமிழின் எந்த இலக்கியமேதைக்கும் கிடைத்தது இல்லை. எப்படி? நீங்கள் வைத்திருக்கும் அதே அளவுகோலால்தான். அந்த அளவுகோலில் அசோகமித்திரன் முதல் தேவதேவன் வரையிலான தமிழ் முன்னோடிகள் அனைவருமே வெளியே தள்ளப்படுவார்கள். இதையெல்லாம் நம்பியே இங்கு பெரும்பாலான விருதுகள் அளிக்கப்படுகின்றன. இதைக்கண்டு வெதும்பி இதற்கு மாற்றாக உருவாக்கப்பட்டதுதான் ‘இயல்’விருது.

உங்கள் நேர்மையான கடிதமே இயல்விருது பற்றி நான் சொல்லிய குற்றச்சாட்டுகளுக்கு வலிமையான நேரடியான ஆதாரம். படைப்பு சார்ந்த அளவுகோல்கள் புறக்கணிக்கப்பட்டு அமைப்புசார்ந்த ‘பெரியமனிதர்களை’ மட்டுமே பரிசீலிக்கும் ஒரு அமைப்பாக இயல் மாறிவிட்டது. இதையே அதன் மரணம் என்று சொல்கிறேன்.

இந்த அளவுகோல் தொடர்ந்தால் நாளை வைரமுத்து,பா.விஜய் வரிசை ஒன்று; ஸ்டுவர்ட் பிளாக்பர்ன்,பானி பேட்ஸ்,சி.ஜெ.·புல்லர் என்று வெளிநாட்டு டாக்டர் பட்ட ஆய்வாளர்களின் வரிசை ஒன்று ; வி.சி குழந்தைசாமி, வசந்திதேவி போன்று துணைவேந்தர்,பேராசிரியர் வரிசை ஒன்று, ஆங்கில மொழிபெயர்பபளர் வரிசை ஒன்று என ஒரு நீண்ட பட்டியல்தான் உங்களுக்கு காத்திருக்கிறது. ஒவ்வொரு விருதும் தமிழிலக்கிய முன்னோடிகளுக்கு அளிக்கப்படும் ஒரு அவமானமாக ஆகும். அதையே நான் கண்டிக்கிறேன்.

உங்கள் கடிதம் சொல்லும் ஒரு வேதனையான நகைச்சுவையை எண்ணி சிரித்தேன். உலகளாவிய தமிழர்களுக்கு தமிழிலக்கியத்தை ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் ஒரு அம்மணி அறிமுகம் செய்து வைக்கிறாள். இனிமேல் தமிழிலக்கியவாதிகள் தமிழர்களை ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் அணுகவேண்டும். மொழிபெயர்ப்பாளரை முதலில் ‘புக்’செய்துவிட்டுத்தான் நாவலையே ஆரம்பிக்க வேண்டும். ஞானபீடமெல்லாம் மொழிபெயர்ப்பாளர் வழியாகவே எழுத்தாளருக்கு அளிக்கப்படும. கொஞ்சம் கஷ்டம்தான். பார்ப்போம்.

ஜெயமோகன்.

This entry was posted in எதிர்வினைகள் and tagged , . Bookmark the permalink.

One Response to இயல் விருது – ஒரு பதில்

  1. Pingback: jeyamohan.in » Blog Archive » இலக்கியப் பரிசுகள்:கடிதங்கள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s