அலையறியா கடல்:சாங்கிய யோகம்

பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க என்னால் முடியவில்லை’’

‘’சரி, எல்லா உயிரும் தூங்கும்போது மட்டும் விழித்திரு, போதும்…’’ என்றார் சித்தர். இரவில் தூங்கலாமே என்ற எண்ணத்துடன் மகிழ்ந்து தன் குடிலுக்குத்திரும்பினார் ஆனால் அப்போதுதான் ஒன்று தெரிந்த்து. அனைத்து  உயிரும் தூங்கும் நிலை என்று ஒன்று இல்லை என. இரவில் பல்லாயிரம் உயிர்கள் விழித்துக்கொள்கின்றன. பலகோடி நுண்ணுயிர்கள் தூங்குவதே கிடையாது. அப்படியானால் குரு சொன்ன அந்த இரவு எது?

நாம் காணும் அனைத்தும் ஒரு விழிப்பில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவ்விழிப்புக்கு அடியில் உள்ள இரவையே சித்தர் குறிப்பிட்டார் என்று சிவானந்தர் அறிந்தார். பின்னர் பிற எல்லா உயிர்களைப்போல வாழவும் ஆனால் அக இரவொன்றில் எப்போதும் விழித்திருக்கவும் அவர் கற்றார்.

அந்த அகவிழிப்பு குறித்துபேசும் கீதையின் வரிகள் இவை.

 
60. குந்தியின் மகனே
முயன்று பார்க்கும்
விவேகம் கொண்டவனின்
உள்ளத்தையும் கூட
கொந்தளிக்கும் புலன்கள்
பற்றியிழுத்துக் கொள்கின்றன

61. உறுதிபூண்டவன்
அவற்றை வென்றடக்கி
என்னை பற்றுகோடாக்கி
இருக்கிறான்
ஏனெனில்
புலன்கள் அடங்கியவனின்
பிரக்ஞையே நிலைப்பேறுடையது.

62. புலனின்பங்களை
எண்ணுபவனுக்கு
பற்றுதல் பிறக்கிறது
பற்றிலிருந்து விழைவும்
விழைவிலிருந்து வெறுப்பும்
பிறக்கின்றன.

63. வெறுப்பினால் மனக்குழப்பம்
குழப்பத்தால் நினைவுச்சிக்கல்
நினைவழிவால் அறிவழிவு
அறிவழிவால் உயிரழிவு.

64. ஆனால்
விழைவையும் வெறுப்பையும்
துறந்து
ஆத்மாவில் ஆழ்ந்துள்ள
புலன்களைக் கருவியாக்கி
புற உலகில் அலையும்
அடங்கிய மனமுடையோன்
அருளை
அடைகிறான்.

65. அருள் கொண்டவனுடைய
துயரங்கள் அழியும்
ஏனெனில்
மனத்தெளிவுடையோன்
அறிவிலும்
உறுதி பெற்றிருப்பான்.

66. மனத்தை அடக்காதவனுக்கு
ஆழ்ந்த அறிவு இல்லை
அவனுக்கு
தன்னிறைவும் இல்லை
தன்னிறைவற்றவனுக்கு
அமைதி இல்லை
அமைதியற்றவனுக்கு
ஏது இன்பம்?

67. ஏனெனில்
அலைபாயும் புலன்களை
பின்பற்றும் மனம்
அவனுடைய
பிரக்ஞையை கைப்பற்றுகிறது
கடல்மீது
கப்பலை
கவரும் காற்றுபோல.

68. தடந்தோள் கொண்டவனே,
எனவே
எவனுடைய புலன்கள்
புலனின்பங்களில் இருந்து
முற்றிலும் தடுக்கப்பட்டிருக்கின்றனவோ
அவனுடைய
பிரக்ஞையே
நிலைபேறுடையது.

69. அனைத்துயிருக்கும்
எது இரவோ
அதில்
புலன் வென்றவன்
விழித்திருக்கிறான்
எப்போது
பூமியில் உள்ளவையெல்லாம்
விழித்திருக்கின்றனவோ
அப்போது
முனிவனுக்கு
இரவு.

70. முற்றிலும் நிறைந்து
அசைவற்று நிலைத்த
பெருங்கடலில்
நீரெல்லாம்
சென்றணைவது போல
செயல்கள் அனைத்தும்
சென்றடையும் முனிவன்
அமைதியை அடைகிறான்
செயல்களை விரும்புபவன்
அமைதியடைவதில்லை

71. எந்த மனிதன்
எல்லா செயல்களையும்
நீத்து
ஆசையற்று
தன்முனைப் பழிந்து
தன்னிலை இழந்து
இருக்கிறானோ
அவனே
அமைதியை அடைகிறான்

72. பார்த்தா,
இதுவே
பிரம்மத்தில் நிலைப்பதாகும்
இதையடைந்தவனுக்கு
ஆசைகளில்லை.
மரண காலத்திலேனும்
இதில் நிலைப்பவன்
பிரம்ம நிர்வாணம்
பெறுகிறான்.

பிரம்ம வித்தையை கற்பிப்பதும்
யோக நூலும்
கிருஷ்ண அர்ஜுன உரையாடலும் ஆன
பகவத்கீதை எனும்
உபநிடதத்தின்
சாங்கிய யோகம் எனும்
இரண்டாம் அத்தியாயம் நிறைவு.

தான் ஆனவன்
இந்தப் பாடல்களில் பல இடங்களின் ‘ஆத்மவான்’ என்ற சொல்லாட்சியைக் காணலாம். கீதை உரைமரபில் ஆழமாக விவாதிக்கப்பட்ட சொல் இது. ஆத்மவான் என்றால் ‘ஆத்மா உடையவன்’ என்று நேர்பொருள். ‘ஆத்மாவாகியவன்’ என்றும் பொருள் கொள்ளலாம். பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் ஆத்மா உடையவைதான். அவ்வகையில் அனைத்துமே ஆத்மாதான். ஆனால் ஆத்மவான் என்பவன் தன்னுள் உறையும் ஆத்மாவே தான் என்று உணர்ந்தவன். தன் ஆத்மாவே தான் என்ற நிலையில் எப்போதும் உறைபவன்.

இச்சொல்லை மேலும் விரிவாகப் பொருள் தந்து விரித்தபடியே சொல்லலாம். இந்து ஞானமரபுகளின் பொதுவான தரிசனம் என்னவெனில் தன்னிலை என்பது ஒரு உயிர் கருக்கொள்ளும் போதே அதில் குடியேறுவதாகும். இதை சைவ சித்தாந்த விளக்கங்களில் ‘ஆணவ மலம்’ என்ற பேரில் விரிவாகவே விவாதித்திருப்பதைக் கேட்டிருப்போம். தன்னிலையைப்பற்றி மேற்கத்திய சிந்தனைகள் தொடர்ந்து வந்தபடியே உள்ளன. தெகார்த்தே முதல் ழாக் லகான் வரை தன்னிலையை பற்றிக் கூறியவற்றை இத்தருணத்தில் நாம் சேர்த்து சிந்திக்கலாம். பொதுவாக இன்று நமக்கு கிடைக்கும் சில வரையறைகளைக் கீழ்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்.

1. ‘நான் இருக்கிறேன்’ என்று ஒரு உயிர் கொள்ளும் உணர்வே தன்னிலை.

2. இவவுணர்வை தன்னை பிறிதில் இருந்து பிரித்தறிவதன் மூலமே மனிதமனம் அடைகிறது. நான் எனும்போது நானல்லாத எதுவும் பிறிது என்ற உணர்வே அதற்கு அடிப்படையாக அமைகிறது.

3. தன்னிலை என்பது அடிப்படையில் உடல் மூலமே உருவகிக்கப்படுகிறது. தன்னுடைய உடலையே தான் என்று உணர்தல் முதல்நிலை. தன் உடலை குறியீடாக மாற்றிக்கொண்டு அதன் மூலம் பிரபஞ்சத்தை அறிய முயல்தல் இரண்டாம் நிலை. உயரம், குள்ளம், மென்மை, கருமை போன்ற பலநூறு உருவகங்களை உடலை அளவு கோலாகக் கொண்டு உருவாக்கப்படுவனவே.

4. ஒரு குறியீடாக தன்னிலையே உருவகித்துக் கொண்டு அதை புழக்க தளத்திற்குக் கொண்டு வருவது மொழியின் மூலமே நிகழ்கிறது. தன்னிலை என்ற கருத்துருவம் முற்றிலும் மொழியாலேயே உருவகிக்கப்படுகிறது.

5. நிரந்தரமான, மாறாத, தன்னிலை என்பது ஏதும் இல்லை. தன்னிலை என்பது அந்தந்த மொழிச் சூழலில், பேசுதளத்தில், அவ்வப்போத பொதுவாக உருவகிக்கப்படுவதாகும். இதுமாறிக் கொண்டே இருக்கும். சொற்களன் (discourse) தான் அதை முடிவு செய்கிறது.

6. மொழியின் வழியாகவே தன்னிலை உருவகிக்கப்படுகிறது என்பதனால் மொழி கற்கப்படும் குழந்தைப்பருவம், அதாவது 18 மாதங்களுக்கு உட்பட்ட பருவம்தான் தன்னிலை உருவாகக் கூடிய காலகட்டம். மொழியில் ஒரு ஆடி தன்னைப்பார்க்கும் குழந்தை தான் என உணர்கிறது. இதை ஆடிப்பருவம் (Mirror Stage) எனலாம்.

7. மொழி இருக்கும் வரை தன்னிலை என்பதும் இருக்கும்.

மேலே கூறப்பட்ட கருத்துக்களில் ஐந்து, ஆறு, ஏழாம் கருத்துக்கள் இன்றைய பின் நவீனத்துவ சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுபவை. ஆறாம் கருத்து உளவியலாளரான ழாக் லாகான் விரிவாக முன்வைக்கும் அவருக்கே உரிய கருத்து. நான்காவது கருத்து விட்ஜென்ஸ்டீன்  போன்ற மொழி சார்ந்த தத்துவ வாதிகளால் முன்வைக்கப்படுவது. இக்கருத்துக்களை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை வாசகர் மூலநூல்கள் வழியாக படித்து விவாதிக்கலாம். இங்கு இவை தன்னிலை என்பது அன்று முதல் இன்று வரை எப்படி ஒரு மாபெரும் தத்துவப்பிரச்சினையாக உள்ளது என்று சுட்டும் பொருட்டு தொகுத்துத் தரப்பட்டன.

அகங்காரம், மமகாரம், மமதை என்றெல்லாம் பல்வேறு சொற்களில் இந்து ஞான மரபு குறிப்பிடுவது இந்தத் தன்னிலையையே. மனிதனுள் உறையும் தன்னை உணரும் தன்மையை. இது ஒரு மாயை என்பதே வேதாந்தத்தின் தரப்பாகும். அழிவற்றதும் எங்கும் பரந்ததும் அனைத்தும் ஆனதுமான ஆத்மா ஒர் உடலில் இருந்து கொண்டு தன்னை தனித்த இருப்பாக உணரும் நிலை. இது மாயையே. குடத்திற்குள் உள்ள ஆகாயம் தன்னை குடவடிவில் உணர்வது போன்றது இது.

இம்மாயையை உதறி தன் ஆத்மாவின் இயல்பை தானே உணர்ந்தவனே கீதை குறிப்பிடும் ஆத்மவான். அவனுக்கு அகங்காரம் அழிந்து விடுகிறது. தன் உடலை, தன் உறவுகளை, தன் எண்ணங்களை வைத்து அவன் தன்னை உணர்வதில்லை. தன்னை பிரபஞ்சமெங்கும் பரவி விரிந்து என்றுமிருக்கும் ஒன்றின் பிரித்தறிய முடியாத ஒன்றாக அவன் உணர்கிறான். ‘ஆத்ம சாட்சாத்காரம்’ என்று இதை இந்து ஞானமரபு மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறது. இதன் பல தளங்கள் மேற்கொண்டு விவாதிக்கப்படும்.

நிலைபெற்றவன்

ஆத்மவான் என்ற சொல்லின் செயல்தள விரிவாக்கம் ‘ஸ்திதப்பிரதிக்ஞன்’ என்ற சொல்லாகும். ஆத்மாவாக தன்னை உணர்ந்து தத்துவார்த்தமான தெளிவை அடைந்தவன் செயல்களில் ஈடுபடும்போது சிதறாத உள்ளம் கொண்டவனாக நிலைத்த பிரக்ஞை கொண்டவானக இருப்பான். அவனே நிலைபெற்றவன். கீதையில் உள்ள இக்கலைச் சொல் இந்து ஞானமரபில் பலதளங்களில் மீளமீள விவாதிக்கப்படும் ஒன்றாகும்.

இச்சொல்லுக்கு நம் மரபில் அளிக்கப்படும் இருவகை விளக்கங்களை கூர்ந்து ஆராய வேண்டியுள்ளது. நிலைபெற்றவனின் சிந்தனை நிலைபெற்றிருப்பது எதில்? வழக்கமாக கீதையில் இருந்து உதிரி வரிகளை மேற்கோளாகக் காட்டி ‘இறைவன் நிலைபெற்றிருக்கும் மனம் கொண்டவனே நிலைபேறுடையவன்’ என்று விளக்குவது நம் பக்தி மரபு.

செயல்கள் இறைவனால் விதிக்கப்பட்டவை, செயலின் விளைவுகள் இறைவனால் அளிகக்ப்படுபவை என்று தெளிந்து அனைத்துச் செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து செயல்படுபவனின் சிந்தனை தடுமாற்றம் கொள்ளாது, அதில் விருப்பு வெறுப்புகள் மூலம் உருவாகும் அலைபாய்தல்கள் இருக்காது. ஆகவே அவள் செயல்களும் சிறக்கும் என்று கீதை கூறுவதாக இவர்கள் கூறுவார்கள். அது உண்மை. கீதையின் செய்தியை எளியதளத்தில் அப்படி எடுத்துக் கொள்ளவும் முடியும்.

ஆனால் கீதையின் ஒட்டுமொத்த விவாதத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் கீதை ஆத்மாவானின் ஸ்திதப்பிரதிக்ஞை பற்றியே பேசுகிறது என்பது புரியும். மனம் நிலைபெற்றிருப்பது எதில் என்று கேட்டால் ‘ஆத்மாவே நான்’ என்ற எண்ணத்தில் என்று சுருக்கமாகக் கூறமுடியும். கீதையின் வரிகளை கூர்ந்து படிக்கும்போது வாசகர்கள் இதை அறியலாம்.

இரண்டு மையப்புள்ளிகள்

கீதையின் இந்த அத்தியாயத்தை இரு பாடல்களாக மட்டும் சுருக்குவது எளிது. சாங்கிய ஞானத்தின் மையம் பதினாறாவது பாடலில் உள்ளது. ‘இல்லாதது இருப்பாவதில்லை. இருப்பது இல்லாமலாவதில்லை’ என்பது முக்கியமான ஆப்தவாக்கியமாகும். ஒவ்வொரு களமும் பிறப்பையும் இறப்பையும் ஆக்கத்தையும் அழிவையும் காணும் மானுட மனம் அந்த முதல் தோற்றத்தில் இருந்து மேலெழுந்து ஆழத்தைக் காண்பதற்கான வழி இவ்வரி. அ¨லகளை வைத்து கடலை அகத்தில் உருவகித்துக் கொள்வது போன்றது இது.

அதேபோல யோகச் செயல்பாட்டை ஒரே பாடலாகச் சுருக்கினால் 69ஆவது பாடலை எடுத்துக்காட்டலாம். உயிர்களெல்லாம் தூங்கும் போது யோகி விழித்திருக்கிறான். உயிர்களெல்லாம் விழித்திருக்கம் இடத்தில் அவன் துயில்கிறான். விரித்துப் பேசி இவ்வழகிய வரியின் கவித்துவத்தை இல்லாமல் ஆக்க விரும்பவில்லை. யோகி வாழும் உலகமே வேறு. பிறருடன் கலந்து அவர்கள் பார்வையில் அவர்களில் ஒருவனாக அவன் வாழ்கிறான். ஆனால் அவர்கள் அன்றாடம் காணும் ஒர் உலகை அவன் காண்பதில்லை. அன்றாடம் அவர்கள் உழலும் ஒர் உலகில் அவன் உழல்வதுமில்லை. அவர்கள் அறியாத ஒர் உலகில் அவன் விழித்திருக்கிறான்.

யோகி என்ற சொல்லை அதன் உச்சகட்ட பொருளில் எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் கூட இவ்வரிகளின் அர்த்தம் தொடர்ந்து விரிவடைவதைக் காணலாம். உலகின் கோடானுகோடி சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு ஒருவன் சற்று தீவிரமான செயலை செய்ய ஆரம்பித்தால் கூட அவனுக்கு உரித்தான ஒர் உலகம் உருவாக ஆரம்பிக்கிறது. நாம் காணும் மாபெரும் கலைப்படைப்புகள், அறிவியல் கண்டு பிடிப்புகள் இலக்கிய நூல்கள் எல்லாம் அதன் ஆசிரியர்கள் ‘உலகம் உறங்கும்போது தான் விழித்திருந்து’ படைத்துக் கொண்ட தனி உலகில் பணியாற்றி உருவாக்கியவைதான். பிறர் வாழும் சாதாரண உலகில் அவர்கள் தூக்கத்தில் நடப்பது போலவே நடமாடுகிறார்கள். யோகம் என்பது ஒரு தூக்கமும் ஒரு விழிப்பும் கலந்த ஒன்றுதான்.

புலன் வெல்லல்

கீதையில் இப்பகுதியில் புலன்கள் மீதான கட்டுப்பாடு பெரிதும் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். இது ஸாங்கிய யோகம் என்பதனால் வெற்றிகரமான நடைமுறை வாழ்வுக்கு இன்றியமையாத பயிற்சியாகவே புலனடக்கம் வலியுறுத்தப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் •பிராய்டிசம் (Frauidsm) முன்வைக்கப்பட்ட பிறகு புலன்சார் இச்சைகள் சுதந்திரமானவை என்றும், அவையே மனிதனின் இயல்புநிலை என்றும், அவற்றை கட்டுபடுத்துவதன் மூலம் மனிதனின் அகமும் ஆழமும் அழுத்தப்பட்டு அவனுடைய ஆளுமை சிதைவடைந்தது என்றும், அதன் மூலமே மனிதன் அன்னியப்பட்டு பற்பல உயிர்ச்சிக்கல்களுக்கு ஆளானான் என்றும் கூறப்படுகிறது. இக்கருத்து கிட்டதட்ட ஒரு ‘நிரூபிக்கப்பட்டு விட்ட’ உண்மை போலவே இன்று அறிவுத்துறைகளில் முன்வைக்கப்படுகிறது.

•பிராய்டிசத்தின் நம்பகத்தன்மை சார்ந்த விவாதங்களுக்குள் புக இது இடமில்லை. இருந்தாலும் இதை வாசகர் சிந்தித்துப் பார்க்கலாம். •பிராய்ட் உட்பட •பிராய்டிசக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசிய எவருமே புலன்சார் நுகர்வுகளை தன்போக்கில் செயல்பட முழுமையாக  அனுமதித்தவர்கள் அல்ல. ஆகவே அவர்கள் மனத்திரிபுகொண்டவர்களா? மனத் திரிபுதான் பிராய்டிசம் உருவாகவே காரணமா?

நவீன இலக்கியவாதிகளில் •பிராய்ட்ய நம்பிக்கை என்பது ஒருவனாக மத நம்பிக்கை போல வேரோடியுள்ளது. குறிப்பாக என் ஆரம்பகால வழிகாட்டியாக இருந்த சுந்தரராமசாமி •ப்¢ராய்டிசம் ‘மனித மனங்களுக்குள் அடிக்கப்பட்ட வெளிச்சக்கீற்று’ என்று நம்பியவர். ‘மனச் சுதந்திரம்’ என்ற சொல்லாட்சியை அவர் அடிக்கடி பயன்படுத்துவது உண்டு. மனிதனின் உள்ளுணர்வுகள் இயல்பாக வெளிப்பாடு கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதன்மூலம் அவளது ‘விகாசம்’ நிகழ முடியும் என்றும் அவர் கூறுவார். ஆனால் தனிவாழ்வில் புலன்கள் மீது கட்டுப்பாடு கொண்ட ஒழுக்கவாதியாகவே அவர் இருந்தார்.

பின் நவீனதத்துவ காலகட்டத்தில் சுந்தர ராமசாமி போன்ற நவீனத்துவ எழுத்தாளர்கள் •பிராய்டிசம் மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான பற்று குறைந்து விட்டது. பின்-நவீனத்துவ சிந்தனையாளரான ழாக் லக்கான  •பிராய்டின் கோட்பாடுகளை குறியீட்டு ரீதியால்தான் காணவேண்டும் என்று கூறி விரிவான விளக்கங்கள் அளித்திருக்கிறார். ஆயினும் இன்றும் புலன்கள் மீது கட்டுப்பாடில்லாத உளச்சுதந்திரம் என்ற கோட்பாடு மீது எழுத்தாளர்களுக்கு மோகம் உள்ளது. கட்டுப்பாடுகள் அனைத்துமே தடைகள் என்றும் மீறிச் செல்லவே படைப்பூக்கம் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். தனி வாழ்வில் அப்படி மீறிச்சென்ற எந்த எழுத்தாளரும் இல்லை என்பதும் உண்மை.

இரண்டு மனிதர்கள் எப்போது கூடிவாழ ஆரம்பிக்கிறார்களோ அப்போதே உளக்கட்டுப்பாடு தொடங்கி விடுகிறது. கூட்டாக வாழும் எல்லா உயிர்களும் உளக்கட்டுப்பாடும் படிக்க வரையறையும் அச்சமூகத்தால் வலியுறுத்தப்படுகின்றன. ஜேன் குடால் போன்ற நவீன ஆய்வாளர்கள் சிம்பன்ஸி சமூகத்தில் பலவிதமான பாலியல் கட்டுபாடுகள் உள்ளதை எடுத்துக்காட்டியுள்ளனர். பாலியல் கட்டுபாடு இல்லாத பழங்குடிச் சமூகம் ஏதும் கண்டடையப்பட்டதில்லை. அப்படியானால் •பிராய்டியக் கோட்பாடுகளை சிம்பனிஸிக்களுக்கும் போட்டுப் பார்க்கலாமா என்ன?

மனித மனம் இச்சையே வடிவானது, ஓயாது சிதறிப் பரப்பது என்று கீதை கூறுகிறது. பரந்து பரவி எல்லா முலை முடுக்குகளையும் முகர்ந்து இன்பம் இன்பம் என்று தவிக்கிறது அது. அதைக் கட்டுப்படுதாமலிருக்க மண்ணில் எந்த உயிரினத்தாலும் இயலாது. முதல் கட்டுப்பாடு உயிர்களின் உடல் விடுப்பதேயாகும். உள்ளத்தின் இச்சையில் ஒரு சிறு பகுதியைக் கூட உடலால் அடைய இயலாது. உடலுக்கு அதற்கான எல்லைகள் உள்ளன. •பிராய்ட் கூற்றுப்படிப் பார்த்தால் உள்ளத்தைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்கவே முடியாது என்பதனால் பூமியில் உள்ள எல்லா உயிர்களும் உளச் சிக்கலுக்குள் ஆழ்ந்துதான் தீரவேண்டும். இரண்டாவது தடை புறச்சூழல். ஒரு மனத்தின் இச்சை எதுவானாலும் அதன் ஈடேற்றம் என்பது பல்லாயிரம் புறக்காரணிகளைச் சார்ந்து உள்ளது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் எந்த உயிரும் வாழ இயலாது. மூன்றாவது கட்டுப்பாடு கூடிவாழும் பொருட்டு உருவாக்கப்படுவது.

இன்றுவரை உலகமெங்கும் புழக்கத்தில் உள்ள ஒழுக்கச் சட்டங்கள் இத்தகைய சமூகக் கட்டுபாட்டின் பல்வேறு வடிவங்களேயாகும். உலகம் முழுக்க செல்லுபடியாகும் சில ஒழுக்கங்கள் உள்ளன – உதாரணம் தாய் மகன் புணர்ச்சியை அனுமதிக்கும் சமூகமே இல்லை. சில சட்டங்கள் அந்தந்த சமூகத்திற்கு உரியவை. உதாரணம் தாய்மாமன் மருமகளை மணப்பது தமிழ்நாட்டில் பல சாதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் அது பெரும்பாபம். ஆக, ஏதோ ஒரு வகை ஒழுக்கச் சட்டம் இல்லாத சமூகம் இல்லை. ஒரு மக்கள் திரளை சமூகமாக ஆக்குவது அது தனக்கென விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் மற்றும் தன் புழக்க நெறிகள் மூலமே.

பாலியல் நெறிகளை மனித மனம் மீதான தளைச்சங்கிலிகளாகப் பார்க்கும் பார்வை மேலைநாட்டில் உருவாகி நவீனத்துவ இலக்கியம் மூலம் பிரபலமாகி, அதன் விளைவாக அந்நெறிகளைத் தளர்த்திக் கொண்ட பல சமூகங்கள் ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. அங்கு பாலியல் கட்டற்றதாகவும், உளச்சிக்கல்கள் அற்றதாகவும் மாறிவிட்டதா என்ன? நேர் எதிரான பதிலையே சமூகவியலாளர் அளிப்பார்கள்.

மேலை நாடுகளில் உருவான இந்த சிந்தனைப் போக்குகளை அங்குள்ள வரலாற்றுப் பின்புலத்தில், சிந்தனைப் பரிணாமப் பின்புலத்தில் வைத்துப் பார்ப்பதே சிறந்த வழிமுறையாகும். கிறிஸ்தவ மத அமைப்பு ஒழுக்க நெறிகளை இறைவனின் சட்டங்களாக பிரகடனப்படுத்தி அவற்றைக் கடுமையாக செயல்படுத்தி வந்தது. இவ்வாறு மொத்தச் சமூகமே மதத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த மத்திய காலகட்டம் ஐரோப்பிய வரலாற்றின் இருண்டகாலம் என்று அழைக்கப்படுகிறது.

இக்காலகட்டத்தில் தனிமனிதனின் சுயசிந்தனை, ஆன்மிகமான தேடல் அனைத்தும் மதத்திற்கு எதிரான பெரும்பாலம் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டன. இதற்கு எதிராக உருவான சிந்தனை எழுச்சியே ஐரோப்பிய மறுமலர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய மறுமலர்ச்சி கலை, இலக்கியம், அரசியல் என்று பல தளங்களில் நிகழ்ந்த ஒரு ஒட்டுமொத்த மாற்றமாகும். தத்துவத்தில் நிகழ்ந்த ஐரோப்பிய மறுமலர்ச்சியை சுதந்திர இச்சை (free will) இயக்கம் மூலம் அடையாளப்படுத்தலாம்.

ஒரு தனிமனிதனுக்கு சுயமாகச் சிந்திக்கவும் முடிவுகள் எடுக்கவும் அதன்படி செயல்படவும் உரிமை உண்டு என்பதே சுதந்திர இச்சை இயக்கத்தின் மையக்கருத்தாகும். எந்த அடிப்படையில் அவன் தன் முடிவுகளை எடுப்பான் என்னும் வினாவுக்கு இயல்பிலேயே நலம்நாடிச் செல்லும் ஒரு தனித்தன்மை மனித அகத்தில் உறைகிறது என்றும் அதுவே மனிதப் பண்பாட்டை பல தளங்களில் வளரச் செய்து இன்று வரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்றும் பதில் கூறப்பட்டது.

இவ்வாறு மனித மனத்தில் இருந்து அவனை வளர்த்து பரிணாமம் கொள்ளச் செய்யும் அடிப்படை விருப்பு என்ன என்ற வினாவுக்குப் பதிலாகவே பல்வேறு கருத்துமுதல்லாத தத்துவத்தரப்புகள் விரிவான விவாதத்தில் ஈடுபட்டன. அந்த அடிப்படை விருப்பு என்பது ஒரு தூய கருத்துநிலை என்றும் மனிதர்கள் வழியாக அது தன்னை நிகழ்த்திக் கொள்கிறது என்றும் வாதிடப்பட்டது. புறப்பொருட்களின் மாற்றம் பரிணாம வாதம் மூலம் விளக்கப்பட்டபோது இந்த அக்கருத்தின் பரிணாமமும் அதேபோல விளக்கப்பட்டது. மேலும் மேலும் மேலான ஒரு பண்பாடு நோக்கி, இன்றும் சிறந்த மானுட நிலை நோக்கி, அந்தக் கருத்து மனிதனை பரிணாமம் கொள்ளச் செய்கிறது என்று கூறப்பட்டது.

இமானுவேல் கண்ட், ஹெகல், கிர்கேகாட் பெனடிக்ட் குரோச்சே, ஹென்றி பெர்க்ஸன் என்று இந்தக் கருத்து முதல்வாதத் தரப்பை விரிவாக விவாதித்த தத்துவ அறிஞர்கள் ஏராளமானவர்கள் உண்டு. இந்த மாபெரும் தத்துவ இயக்கமே மேலை நாடுகளில் அசைக்க முடியாதபடி வேரோடியுள்ள ‘தனிமனித சுதந்திரம்’ என்ற கருதுகோளின் பின்னணிப் புலமாகும். தனிமனித சுதந்திரம் என்ற கருத்துநிலையின் அதிகமாக இழுக்கப்பட்ட அதீத நிலையே ‘கட்டற்ற புலனின்ப சுதந்திரம்’ என்பது.

இக்கோட்பாட்டை நம்புபவர்கள் ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தில் அரசோ, மதமோ, சமூகமோ தலையிடக்கூடாது என்றும் பிறருக்கு அது தீங்கிழைக்காத வரை தன் இன்ப வேட்கையை அவன் தனக்குப் பிரியமான விதத்தில் தீர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகிறார்கள்.. இன்று பல ஐரோப்பிய நாடுகளில் ஒழுக்கச்சட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளது இந்த நோக்கே. இது சரியா தவறா என்பதை வாசகர் தன்நோக்கில் விரிவாகச் சிந்தித்துப் பார்க்கலாம்.

என் நோக்கில் ஒரு தனிமனிதனின் இன்ப நாட்டத்தில் அரசோ, மதமோ, சமூகமோ, தலையிடக்கூடாது என்ற தனிமனிதச் சுதந்திர கோட்பாடானது தன் இன்ப நாட்டத்தை எவ்வகையிலும் அவன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்ற நிலையாக விளக்கப்பட்டுவிட்டது என்பதே முக்கியமான பிழை என்று படுகிறது. விளைவாக புலன்கள் மீதான கட்டுப்பாடு குறித்துப் பேசுவதேகூட பத்தாம்பசலித்தனம் என்ற நிலை உருவாகிவிட்டது.

நித்யாவிடம் ஒரு வாகரும் நானும் நடத்திய உரையாடலை இங்கு நினைவு கூர்கிறேன். அந்த வாசகர் சிறந்த இலக்கியப்பயிற்சி உடையவர். ஐரோப்பிய இலக்கியத்தில் தனி ஈடுபாடும் ஐரோப்பிய தத்துவத்தில் ஆராய்ச்சிப்பட்டமும் உடையவர். ‘புலன் இன்பங்களை நான் ஏன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்?’ என்று அவர் கேட்டார். ”எனக்கு  அவற்றில் தடையே இல்லை. பிறரை நான் தொந்தரவு செய்வதும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கும் வரை என்ன தவறு உள்ளது?”

“முதலில் உன் கேள்விக்கு ஒரு வைத்தியனாக என் பதில்” என்றார் நித்யா. “கிட்னி கெட்டுப் போய்விடும்.” நண்பர் புன்னகை செய்ததும் நித்யா தொடர்ந்தார். “இனி உளவியலாளனாக என்பதில் தவறே இல்லை. ஆனால் காம உறவில் உன்னுடைய தன்னகங்காரம் கலக்கவே கலக்காது என்று நீ உறுதி செய்துகொள்ளவேண்டும். முடியுமா?”

நண்பர், “அதெப்படி?” என்றார்.”அங்கேதான் பிரச்சினையின் வேர் உள்ளது. இதோ போகும் இந்த நாயிடம் போய் புலன்களை கட்டுப்படுத்து என்று கூறவேண்டியதில்லை. அதன் புலன்கள் அதன் உடலின் எல்லைகளாலும், சூழலாலும், பருவங்களாலும் இயல்பாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மனிதனின் புலன் நாட்டம் இயல்பானது அல்ல. அது தன்னகங்காரத்துடன் இணைந்துள்ளது. உன் அந்தரங்கப் பகற்கனவுகளை எடுத்துப்பார். அவை காமம் மூலம் உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றனவா, இல்லை உன் தன்னகங்காரத்தை வருடிவிடுவதன் மூலம் மகிழ்ச்சியளிக்கின்றனவா என்று கவனி. உலகில் எழுதப்பட்ட எல்லா பாலியல் இலக்கியங்களிலும் தன்னகங்காரத்தையே சீண்டி கிளுகிளுப்பு அடைய வைக்கின்றன. அகங்காரம் காற்று. காமம் தீ. இரண்டும் இணைந்த காட்டுத்தீதான் மனிதனின் வேட்கை.”

“சிங்கத்திடம் போய் வன்முறையை தவிர்க்கும்படி உபதேசிக்கவேண்டிய தேவை இல்லை. அதன் பசிக்கு அது கொல்லும். பசியாறிய பிறகு அதன்மீது மான்குட்டி ஏறிவிளையாடினாலும் ஒன்றுமில்லை. மனிதனின் இயல்பான வன்முறையை அகங்காரம் எல்லையில்லாமல் பெருக்கி வளர்க்கிறது. இதோபோகும் இந்த விவசாயிக்கு ஹிட்லருக்குக் கிடைத்த வாய்ப்பு கிடைத்தால் இவரும் நாற்பது லட்சம் பேரை கொல்லக் கூடும்…”

நித்யா தொடர்நதார் ”மனிதனின் இச்சைகளுடன்  அவனது தன்னங்காரம் இணையும்போது அது எல்லையின்றி பெருகிவிடுகிறது. அது ஒர் அழிவு சக்தி. இச்சையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அதனுடன் இணைந்துள்ள தன்னங்காரத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். கீதையில் கிருஷ்ணன் கூறுவது அதையே.”

நாங்கள் ஊட்டி குருகுலத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம் அப்போது. நித்யா கூறினார், ”உன்னால் பிறரது தன்னகங்காரத்தை சீண்டாமல் ஒரு உறவையாவது மேற்கொள்ள முடிந்திருக்கிறதா? கீதையில் கிருஷ்ணன் புலனடக்கம் தேவை என்று கூறுவது எதற்காகத் தெரியுமா? அது புனிதமான இறைவனின் சட்டம் என்பதற்காகவோ மூதாதையர் சொன்னது என்பதற்காகவோ அல்ல, அது மனதை அலையவிடாமல் ஒரு முகப்படுத்தவும் செயல்களைச் சிறப்பாக செய்யவும் இன்றியமையாதது என்பதற்காக மட்டும்தான்.”

புலனடக்கம் குறித்து கீதை குறிப்பிடுவதை கூர்ந்து அவதானித்தால் இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம். புலன்கள் மனதை ஒருமை குலைத்து சிதறவைக்கும் இயல்புடையவை. காரணம் அவை புற உலகில் இன்பம் தேடிப் பறந்தலைகின்றன. புலன்கள் மீது கட்டுப்பாடு உருவாவதற்கு புலனறிதல்களில் இருந்து புலன்களை தடுத்தலும் விலக்கலும் முக்கியமான வழியாகும். ஆயினும் புலன்கள் அடங்குவதில்லை. ஏனெனில் புலன்கள் ஆத்மாவின் வெளிப்பாடுகள். ஆத்மாவில் அகங்காரம் குடிகொள்வது வரை புலன் இச்சைகளும் இருக்கும். புலன்களை வெல்வதற்குரிய வழி ஆத்மாவை அறிந்து ஆத்மாவில் நிலைபெற முயல்தலே.

புலன் அடக்கம் குறித்த கீதையில் கருத்தை வாசகர்கள் தங்கள் சொந்த அனுபவங்களில் இருந்து ஊகிக்கலாம். ஒரு பத்தாம் வகுப்புத் தேர்வை வெல்வதற்குக்கூட அந்த அளவிற்க்கு புலன்களை அடக்கி வென்றாக வேண்டிய நிலை உள்ளது. புலன்கள் மீது கட்டுபாடில்லாதவர்களுக்கு எதையும் செய்யக்கூடிய மன ஒருமை கைகூடுவதில்லை. என் சொந்த அனுபவத்தில் எல்லா தளங்களிலும் புலன்களை என் கட்டுக்குள் வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருப்பதாகவே எண்ணுகிறேன். என் வாழ்வில் பிற்பாடு நினைத்து வருந்தத்தக்க ஏதும் செய்ய நேரிடவில்லை என்பதற்கும் என் துறையில் எனக்கு கிடைத்த வெற்றிக்கும் அது காரணம் என்றும் எண்ணுகிறேன்!

This entry was posted in ஆன்மீகம், கீதை, வாசிப்பு and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s