தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)

1991ல் நான் பாலகோட்டு [தருமபுரி மாவட்டம்] சுந்தர ராமசாமியைப் பார்க்க நாகர்கோயில் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போது சுந்தர ராமசாமி கோடு போட்ட உயர்தர முழுக்கைச் சட்டையை பாண்ட்டுக்குள் விட்டு நல்ல இடைப்பட்டை கட்டி காலுறை அணிந்து பவ்யமாக அமர்ந்திருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இனிய புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். நேர்த்தியான உடை நாஞ்சில் நாடன் பவ்யம் நாஞ்சில் நாடன் இனிய புன்னகை…. யாரவர்? மனிதர்களைப் பற்றிய என் நுண்ணுணர்வால் உடனே அவரை ஒரு எல்.ஐ.ஸி முகவர் எனப் புரிந்துகொண்டேன். இந்த வயது வரை சுந்தர ராமசாமி  காப்பீடு செய்யாமலா இருக்கிறார்?

சுந்தர ராமசாமி என்னைப் பார்த்து சிரித்து, “வாங்க. இவர்தான் நாஞ்சில் நாடன்,” என்றார். நான் திரும்பி காலை உணவுமேஜையை ஐயத்துடன் பார்க்க அவர் மேலும் புன்னகை விரிந்து, “இவர்தான்… நம்ப முடியல்லை இல்லையா?” என்றார்.

நாஞ்சில் நாட்டு விவசாயியின் பேச்சையும் எண்ணங்களையும் எழுத்தில் கொண்டுவந்த கலைஞன் என நான் அவரை மனதில் பகுத்து வைத்திருந்தேன். எந்த வகையான நவீன விஷயங்களும் அவரில் ஒட்டமறுத்தது என் மனதில். ஆனாலும், “வணக்கம் சார்” என்றேன்.

“படிச்சிருக்கேன்” என்றார் நாஞ்சில்.

அப்படி விஷமத்தனமாக சிரிக்குமளவுக்கு நான் எதையுமே எழுதவில்லையே என்ற குழப்பத்துடன் “அப்டியா?” என்றேன்.

“நல்லா எழுதறீங்க…” என்றார்.

நான் அருகே மோடாவில் அமர்ந்து கொண்டேன்.

“உங்களுக்கு குலசேகரம் பக்கமில்ல?”என்றார்

“ஆமா”

“…அந்தப் பக்கமெல்லாம் அவியலிலே மாங்கா போடுக வழக்கம் கெடையாது சார்…” என்று நாஞ்சில் நாடன் சுந்தர ராமசாமியிடம் பேச்சைத் தொடர்ந்தார். “ஆனா சாம்பாரிலே சேம்பங்கிழங்கு போடுவா. கல்யாணச் சமையல்ணா சேம்பக்கெழங்கு இல்லாம சாம்பார் இல்ல. காயம் கொஞ்சம் ஜாஸ்தியாப் போட்டு பருப்ப ஒருமாதிரி முக்கா வேக்காட்டா விட்டு… அதும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கும். இங்க நம்ம தெரிஞ்சவங்க வீட்டு சமையலுக்கு ஒரு நாயர் திருவட்டாரிலேருந்து வந்தாரு. குறிப்படிகளைப் பார்த்ததுமே சேம்பங்கெழங்கு இல்லாம சமைக்கிறது பொண்ணு இல்லாம கல்யாணம் செய்யியது மாதிரில்லான்னு சொல்லிட்டாரு..”

கேரளத்துச் சாம்பாரை மலையாளி அல்லாத ஒருவர் பாராட்டி நான் கேட்பது அதுவே முதல் முறை. கடைசி முறையும் கூட. கேரளத்தில் பதினேழாம் நூற்றாண்டில் சாம்பார் வந்தது, படையெடுத்துவந்த மங்கம்மாளின் படைகளுடன். அந்தக் கோபம் இன்றும் மலையாளிகளுக்கு உண்டு. ‘தெய்வதிண்டே ஸ்வந்தம்’ சாம்பாரைக் கண்டடையும் முயற்சியில் நம்மூர் ரசவாதம் போல அதில் இன்றுவரை பரிசோதனைகள் செய்துகொண்டே இருக்கிறார்கள். அது பலவடிவங்களில் பரிணாமம் கொண்டும் வருகிறது. கேரள இட்லி இவ்வாறு பரிணாமம் செய்த பாதையில்தான் அங்கு இன்னும் பிரபலமாக இருக்கும் பலவிதமான பசைகளும் கூழ்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

நான் நாஞ்சில் நாடனை வாயைத் திறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பேசப் பேச சட்டை பேண்ட் எல்லாம் போய் அவர் தோளில் வடசேரி ஈரிழைத் துவர்த்தும் இடுப்பில் பலராமபுரம் புளியிலைக்கரை வேட்டியும் அணிந்து, நெற்றியில் பாதி அழிந்த திருநூறும் வாயில் வெற்றிலையுமாக ஒரு முத்தாலம்மன் கோயில் கல் திண்ணையில் அமர்ந்திருக்கும் சித்திரம் உருவாயிற்று. அதன்பின் நான் அவரை பேண்ட் சட்டையில் பார்த்ததே இல்லை.

அதன்பின் நீண்டநாள் நாஞ்சில் நாடனிடம் பழகிய பின்னர்தான் அந்த ஆச்சரியம் கரைந்தது. அவர் நானறிந்து எந்த உணவுப் பண்டத்தையும் நிராகரித்ததே இல்லை.

போன வருடம் நவம்பரில் காசியில் நானும் சுரேஷ் கண்ணனும் நடந்துகொண்டிருந்தோம். கடுகெண்ணையில் பூரி சுட்டு சாலையோரங்கள் எண்ணெய்ப் புகையால் கரித்தன. குதத்தில் இருந்தே குமட்டலெடுக்க வைக்கும் கடும் நெடி.

“இதைப்போய் எப்டி திங்கிறானுக?” என்றார் சுரேஷ்.

“…சித்தப்பா கதையிலே நாஞ்சிநாட்டு ஹீரோக்கள் பாதிநேரம் இதைத்தானே திங்கிறானுக…? அய்யோ பாவம்…கூப்பிட்டு ஒரு வார்த்தை பேசிப்பிடுவோம். பாவம் அவாள் வட இந்தியாவிலே புளிசேரி எரிசேரி சாப்பாட்டுக்கு எப்டி ஏங்கியிருப்பாக!”

செல்பேசியில் அழைத்து “சித்தப்பா…நல்லாருக்கேளா? நானும் நாயர்வாளும் காசியிலே நடந்திட்டிருக்கோம். இங்க ஒரே கடுகெண்ணை—”

“அய்யோ சூப்பரா இருக்குமே… நெனைச்சாலே எச்சில் ஊறுது” என்று நாஞ்சில் நாடன் பரவசக்குரல் எழுப்பினார். “… சுரேஷ் அங்க கடுகெண்ணையிலே பெரிசா நம்மூர் போண்டா சைசுக்கு ஒண்ணு போடுவான். அதைச் சூடா பச்சமிளகாயும் நல்ல மொளகாப் பொடியும் வச்சு நாட்டுபிரட் நடுவிலே வைச்சு குடுப்பான். அற்புதமா இருக்கும். வடா பாவ்பாஜின்னு பேரு… விடாதீங்க…”

சுரேஷ் பரிதாபமாக என்னைப் பார்த்தபின், “..ஆனா சித்தப்பா, அந்த வாசனை…” என ஆரம்பிக்க நாஞ்சில் நாடன் ஆவேசமாக “…அந்த வாசனைதான் அதோட ஸ்பெஷல். எப்டி இருக்கு பாத்தேளா? பானிபூரி சாப்பிட்டேளா? அந்த ஊர் ஜாங்ரியெல்லாம் ஒருமாதிரி லேசான புளிப்போட இருக்கும். அதுக்கு ஒரு தனி ருசி… இந்த அலஹாபாத் வாரணாசி பக்கமெல்லாம் பால்கோவா ரொம்ப விசேஷமாமே…”

“சித்தப்பா இங்க கங்கை கரையெல்லாம் ஒரே எருமை. பாலுக்குப் பஞ்சமேயில்ல… அதான்…”

“ஆமாமா. பாலை பெரிய கடாயிலே போட்டு நல்லா சுண்டக் காச்சிட்டே இருக்கான். அது ஒருமாதிரி பேஸ்டா ஆனதுமே சீனியை போட்டு கிண்ட ஆரம்பிச்சிடறான்….”

“முழூஉ…க்க்கையையும் விட்டு கிண்டுதானே சித்தப்பா. அக்குளிலேருந்துல்லா வழிச்சு போடுதான்?”

“அதுபின்ன சமையக்காரன் அக்குள்லா? பலதடவ வழிச்சதுக்குப்பிறவு சுத்தமாத்தான் இருக்கும். இதைச் சொல்றியோ. இங்க தோசமாவு கலக்கிறவன் என்ன செய்யுகான்?..”

“சித்தப்பா கோயிலுக்கு வந்துட்டோம். நான் நாளைக்கு கூப்பிடுதேன்…” செல்பேசியை அணைத்து “மனுஷனை நிம்மதியா சாப்பிட விடமாட்டாக…”

“என்ன சொன்னார்?”

“ஆ? பால்கோவாயையே அக்குளை வச்சுத்தான் கிண்டணும்னு சொல்லுதாரு… சும்மா வாங்க மோகன், கடுப்ப ஏத்தாம…”

ருசிதான் நாஞ்சில் நாடன். உண்மையில் அது இயற்கை மீதான ருசி. இயற்கையில் இருந்து மனிதன் தேர்வுசெய்து தொகுத்து உருவாக்குவதனால் சமையல் மீதான ருசி. நாஞ்சில் நாடன் படைப்புகளில் அந்த ஈடுபாடு ஒரு மதநம்பிக்கை போலவே தீவிரமாக வெளிப்படுகிறது. பாலக்காடு வழியாக கேரளா போய்விட்டு வந்து தொலைபேசியில் அழைத்தார்.

“மோகன் இப்பதான் வந்தேன்… கேரளா முழுக்க நல்ல மழை. வரிவரியா பெரிய மலைகள். மலையுச்சிகளிலே கரும்பாறை. மழைபெய்றப்ப என்ன ஒரு கருப்பு… மழைத்தண்ணி அதிலே அருவிகளா கொட்டுறப்ப ஆனைக்க தந்தம் தெரியற மாதிரி இருக்கு… ஒரு எள வெயில் நடுவிலே அடிச்சுது பாருங்க… அப்டியே கை கூப்பி கும்பிட்டுட்டேன். கண்ல தண்ணி வந்து கன்னத்திலே வழியுது…”

நாஞ்சில் ஆரோக்கியமானவரல்ல. சர்க்கரை வியாதி உண்டு. இதயம் ஒரு முறை சிறு மக்கர் செய்து ஆஞ்சிபிளாஸ்ட் செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும் எனக்குத் தெரிந்து தமிழ் படைப்பாளிகளில் மிக அதிகமாகப் பயணம் செய்வது அவர்தான். பயணப் பையை அவர் கலைப்பதேயில்லை. வந்து இறங்கி ஆச்சியிடம் நாலு நல்ல வார்த்தை பேசி சாப்பிட்டு தூங்கினால் அடுத்த நாளே மீண்டும் பயணம்.

பயணம் மூலம் அவர் இயற்கை நடுவில் இருக்கிறார். இயற்கையில் அவருக்கு ஒரு ‘மறைஞான’ உணர்வு இருக்கிறது. அதை அவர் தத்துவப்படுத்துவதே இல்லை.

“…பெரிய மணல் வெளி… ஆளே இல்ல. கொஞ்சமா தண்ணி. ஓடுது…. காயத்திருமேனி எண்ணை வழிஞ்சு போறது மாதிரி பச்சையாட்டு… அந்தப் பக்கம் சிவன் கோயில். இந்தப் பக்கம் ஒரு சின்ன காளி கோயில்… பறவைகளோட சத்தம் மட்டும்தான்… என்னமோ பண்ணுது மோகன்” அவரது அதிகபட்ச வெளிப்பாடு என்பது இது மட்டும்தான்.

நாஞ்சில் நாட்டு இயற்கையை அவர் சொன்ன விதமே அவரை தமிழிலக்கியத்தின் முக்கியமான மையமாக ஆக்கியிருக்கிறது. யோசித்துப் பார்ப்போம், அவர் அசாதாரணமான கதாபாத்திரங்களை உருவாக்கியதில்லை. மகத்தான மனமோதல்களை படைத்ததும் இல்லை. எளிய மக்கள், எளிய சித்திரங்கள். ஆனால் அவர்கள் பேருருவம் கொண்ட ஒரு இயற்கையின் மடியில் இருக்கிறார்கள். அனைத்துக்கும் சாட்சியான தாடகை மலை. வற்றாத ஆறு. உயிர் ததும்பும் வயல்கள். ஆகவே அவ்வாழ்க்கை அழியாத பேரியற்கையின் ஒரு நிகழ்வாக ஆகிவிடுகிறது.

“சுப்ரமணியம் நல்ல வேளையா சென்னையிலே இல்லை. இருந்திருந்தா எப்டியும் ஒருதடவை கூவத்திலே குளிச்சிருப்பார்…” என்றார் சுந்தர ராமசாமி. நாஞ்சில் நாடன் ஆற்றைப் பார்த்தால் குளிக்காமல் வரமாட்டார். மீண்டும் மீண்டும் ஆற்றில் குளிக்கும் சித்திரங்களை நாம் அவரது படைப்புலகில் காண்கிறோம். அவரது கதாபாத்திரங்களுக்கும் இந்த ஈர்ப்பு உண்டு. பூலிங்கத்தின் [எட்டுத் திக்கும் மதயானை] பயணமே வீர நாராயண மங்கலம் ஆற்றில் இருந்து கிருஷ்ணா கோதாவரி என்று மாறி மாறிக் குளிப்பதாகவே இருக்கிறது. “…சும்மா கண்ட கண்ட கானல் நதிகளிலே குளிக்கிறதுக்கு, இருந்திட்டிருக்கிற நதிகளிலே குளிக்கிறது எவ்ளவோ பெட்டர்” என்று நாஞ்சில் நாடனின் யதார்த்தவாதத்தைப் பற்றிச் சொல்லும்போது சுந்தர ராமசாமி குறிப்பிட்டார்.

யதார்த்தவாதம் நாஞ்சில் நாடன் தேர்வுசெய்துகொண்ட அழகியல் அல்ல. அவரது ஆளுமையே முற்றிலும் யதார்த்தமயமானது. பாலாஜி சக்திவேலின் பிரபலமான ‘காதல்’ படம் வந்தபோது சுரேஷ் கண்ணனும் நாஞ்சிலும் சேர்ந்து அதைப் பார்த்தார்கள். அதில் நகரவிடுதியில் அந்த இயக்குநர், “டைரக்டா ஹீரோவா?” என்று கேட்கும்போது “..ஆமா சார் அப்டியே சி.எம்” என்று சொல்லும் விரிச்சிக காந்த் என்ற பல்லவர் பிற அனைவரிலும் சிரிப்பை உருவாக்கியபோது நாஞ்சில் அனுதாபத்துடன் சொன்னார். “பாவம் சுரேஷ், யோசிச்சுப்பாருங்க. எவ்ளவு கனவோட அந்த ஆள் இருக்கான். இதுக்குன்னே ஊரிலேருந்து பஸ் ஏறி வந்து மெட்ராஸிலே அலைஞ்சு…” சுரேஷ் இதற்கு தனியாகச் சிரித்ததாகச் சொன்னார்.

வாழ்க்கையை நாஞ்சில் நாடன் ஒரு பெரிய யதார்த்த நாடகமாகவே பார்க்கிறார். இன்னும் உருவகமாகச் சொல்லப்போனால் ஒரு மாபெரும் கல்யாண விருந்தாக. இதிலே மாப்பிள்ளை வீட்டுப் பெரிய மனிதர்களுக்கு நல்ல சாப்பாடு. மெல்ல மெல்ல சாம்பாரில் கஞ்சித்தண்ணி கலக்கிறது. சோறு வேகாமலாகிறது. அப்பளம் மீண்டும் கேட்டால் கிடைப்பதில்லை. பாயசம் பரிமாறுகிறவன் ஒரே அகப்பையை ஒன்பது இலையில் தொட்டுத் தொட்டுச் செல்கிறான். [நாஞ்சிலின் சொற்கள், ‘எளவு பாயசத்தாலே எலயில பொட்டு வச்சிட்டுல்லா போறான்?’]. ஒன்றும் சொல்வதற்கில்லை. மனக்குமுறலுடன், “செரி, இப்ப என்ன? நம்ம வீட்டு கல்யாணம். நம்ம புள்ளைக… நல்லாருக்கட்டும்” என்று சொல்லி புன்னகைப்பதல்லாமல்.

சாப்பாடுப் பந்தி நாஞ்சிலுக்குரிய ஒரு சிறப்பான உருவகம். ஜார்ஜ் லூயி போர்ஹெவுக்கு நூலகம் போல. போர்ஹெ போல இவரும் மேலே சொர்க்கமும் ஒரு பெரிய சாப்பாட்டுப் பந்திதான் என்று அவர் உருவகித்திருக்கிறாரா தெரியவில்லை. அவரது சிறுகதைகளில் ஏராளமான கல்யாணப் பந்திக் கதைகள் இருக்கின்றன. சம்பந்தமில்லாத விஷயங்களுக்கும் இங்கே உருவகம் அகப்படும். பின் நவீனத்துவ சிந்தனைகள் வந்து அலம்பல் செய்த காலத்தில் நாஞ்சில் சொன்னார். “… பக்கத்து எலையிலேருந்து ரசம் ஓடி நம்ம எலைக்கு வாறதுல்லா அது? செரி போட்டுன்னு வக்கலாம்னா நாம சாப்பிடுகது பாயசம் பாத்துக்கிடுங்க…..”

நாஞ்சில் நாடனின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த ஒரு வடுவைப்பற்றி அவர் மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார். பள்ளியில் வகுப்பை விட்டுவிட்டு நாலுமைல் தூரம் ஓடி ஒரு கல்யாணப் பந்தியில் அமர்ந்து எளிய உடை காரணமாக கைபிடித்து தூக்கி வெளியே விடப்பட்டதன் அவமானம். தன் அறுபது வயதிலும் அது நெஞ்சைச் சுடுகிறது என்று அவர் சொல்லியிருக்கிறார். அதிலிருந்து வளர்ந்தது அந்தப் பந்திப்பாசம். பந்திப்பாசமறுத்து உய்வடைவதே முக்தி என்றால் அதை அவரது ஒரு கதாபாத்திரம் அடைகிறது. எல்லாக் கல்யாணத்திலும் கையில் திருவாசகக் கவசத்துடன் புகுந்து சுவையறிந்து உண்ணும் அவரை சமையற்குழுவே ஆஸ்தான ‘சுவைபார்ப்புன’ராக அமர்த்திக் கொள்கிறது. அதனால் அவருக்கு பந்திச் சாப்பாட்டில் ருசி இல்லாமலாகிறது. பாசமறுத்து பதியில் ஒடுங்கிய ஒரு பசு.
 

[தொடரும்]

This entry was posted in அனுபவம், ஆளுமை, கட்டுரை and tagged , . Bookmark the permalink.

8 Responses to தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)

  1. Pingback: jeyamohan.in » Blog Archive » நாஞ்சில் நாடனின் கும்பமுனி

  2. Pingback: jeyamohan.in » Blog Archive » கனடிய இலக்கியத்தேட்ட விருதுகள்

  3. Pingback: தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1) | நாஞ்சில்நாடன்

  4. Pingback: தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் | நாஞ்சில்நாடன்

  5. Pingback: நாஞ்சில் நாடனின் புனைவுலகு | நாஞ்சில்நாடன்

  6. Pingback: உதிரிப்பூக்கள் 24 டிச, 2010 | மலர்வனம்

  7. Pingback: படித்ததில் பிடித்தது (9) | மலர்வனம்

  8. Pingback: தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2) | jeyamohan.in

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s