அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்

மார்க்ஸியத்தை எடுத்துக்கொண்டு அதிகாரம் கருத்தியல் அறம் ஆகியவற்றின் உள்ளோட்டமான தொடர்புகளை ஆராயும் எனது நாவலான ‘பின்தொடரும் நிழலின் குரலு’க்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. ஐந்து வருடம் முன்பு எனக்கு தபாலில் ஒரு நீளமான ஆய்வுரை வந்துசேர்ந்தது. அது என்னை மிகவும் கடுமையாக மறுத்து நாவலை நிராகரிக்கும் மதிப்பீடு. ஆனால் நாவலை முழுக்க கணக்கில் எடுத்துக் கொண்டு, விரிவாக ஆராய்ந்து, எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர் சோதிப்பிரகாசம்.அந்தக் கட்டுரைக்கு நான் ஒரு மிக நீளமான பதில் எழுதியிருந்தேன். அதில் சோதிப்பிரகாசத்தை முற்றாக மறுத்திருந்தேன்.’நான் ஸ்டாலினியத்தை மார்க்ஸியமாக மயங்குகிறேன், மார்க்ஸியம் ஒரு தரிசனமோ தத்துவமோ அல்ல அது ஓர் அறிவியல் , அதை நான் அறிவியல் ரீதியாகக் கற்க வேண்டும்’ என்று சோதிப்பிரகாசம் வாதிட்டிருந்தார். அக்கட்டுரை அவரது ‘வரலாற்றின் முரணியக்கம்’ என்ற நூலில் பின்னிணைப்பாக உள்ளது.

நான் எழுதிய பதிலில் என் நாவலில் மார்க்ஸியக் கோட்பாட்டை விமரிசனமேதும் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தேன். அந்நாவல் முழுக்க முழுக்க இடதுசாரி அரசியலானது கருத்தியலை எப்படி ஓர் அடக்குமுறை அதிகார ஆயுதமாக பயன்படுத்தியது என்பதையும் எல்லா கருத்தியல்களுக்கும் அப்படி ஒரு முகம் உண்டு என்பதையும் மட்டுமே விரிவாகப்பேசுகிறது. அப்படி பயன்படுத்தப்பட்ட கருத்தியல் என்ற அளவில் மார்க்ஸியம் விவாதிக்கப்படுகிறது. அந்நாவலில் மார்க்ஸியத்தின் தத்துவார்த்தமான வரலாற்றாய்வுமுறையும் அதன் மனிதாபிமான நோக்கும் அதன் அறவியலும் மிக விரிவாக விளக்கவும் பட்டுள்ளன. ஆனால் மார்க்ஸியம் உருவாகி முக்கால் நூற்றாண்டுக்காலம் கழிந்தும் அது பல நாடுகளில் பலவகையில் விளக்கப்பட்டு அதனடிபப்டையில் அதிகாரம் கையாளப்பட்ட பின்னரும் ‘தூய மார்க்ஸியம்’ ஒன்று உண்டு அது மட்டுமே உகந்தது என்று சொல்வது ஒருவகை மதவாதமே என்று வாதிட்டிருந்தேன். இஸ்லாமிய மதவாதிகள் ஒரு இஸ்லாமிய அரசு எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு காணும் என்று வாதிட்டு மதததைப் பரப்புவார்கள். ஏற்கனவே இருக்கும் இஸ்லாமிய நாடுகளை சுட்டிக்காட்டினால் அவையெல்லாம் இஸ்லாமிய கோட்பாட்டை முழுக்க கடைப்பிடிக்கவில்லை என்பார்கள். அதாவது மண்ணுக்கு மேல் நிற்கும் ஒரு ‘தூய’ தத்துவத்தை சுட்டிக்காட்டும் ஆழ்ந்த நம்பிக்கை மட்டும்தான் இது.

அதற்கு சோதிப்பிரகாசம் பதில் எழுதியிருந்தார். பல கடிதங்களுக்குப் பின்னர் தொலைபேசியில் உரையாடினோம். என்றும் நான் ஏங்கும் ஒரு உறவுக்கான தொடக்கமாக இருந்தது அது– முழுமையான கருத்து மாறுபாட்டுடனேயே நெருக்கமான நட்பு நிலவும் உறவு . சோதிப்பிரகாசம் உறுதியான கருத்துக்கள் கொண்டவர். அவற்றை மிக ஆவேசமாக வாதிட்டு நிறுவ முயல்பவர். ஆனால் ஒருபோதும் மாற்றுக்கருத்தாளரை மட்டம் தட்டி புண்படுத்தமாட்டார். அவர்களின் தனிப்பட்ட பலவீனங்களை தொட்டுக் காட்டமாட்டார். அனைத்துக்கும் மேலாக எதிர் தரப்பின் வாதங்களை அவற்றின் சிறந்த நிலைபாட்டை எடுத்துக்கொண்டு வாதிடுவார். அவரது சிரிப்பே அலாதியானது. எந்த விமரிசனத்துக்கும் எந்த விவாதத்துக்கும் சிரிப்பு பின்னணியாக ஒலிக்கும். என் நண்பர்களில் அவரளவுக்கு நகைச்சுவையுணர்வு கொண்டவர் வேறு இல்லை. எப்போதும்ரொருவரை ஒருவர் கிண்டல்செய்தபடியேதான் பேசிக்கொள்வோம். கடிதங்கள்கூட அப்படித்தான்.

ஒருமுறை ஒரு நண்பருடனான உறவில் உருவான சிக்கல்களைப்பற்றி என்னிடம் வருத்தப்பட்டார். நான் ”மார்க்ஸியக் கோட்பாட்டின்படி நீங்கள் நேராக அருகே இருக்கும் கட்சி அலுவலகத்துக்குச் சென்று அங்கிருக்கும் முழுநேர ஊழியர் முன்னால் மூலதனத்தை தொட்டுக்கொண்டு மண்டியிட்டு அமர்ந்து பாவமன்னிப்பு கோரவேண்டும். இல்லாவிட்டால் சமத்துவ சொற்கத்தில் பிரவேசனமில்லை” என்று சொன்னேன். ”செய்யலாம்தான். ஆனால் அந்த கிழவன் தப்பிவிட்டான். அவனை அப்போதே பிடித்து சிலுவையில் அறைந்திருந்தால் ஒரு நல்ல மதம் கிடைத்திருக்கும்” என்று அவர் சிரித்தார்.

மார்க்ஸிய நம்பிக்கை சோதிப்பிரகாசத்துக்கு ஆழமாக நெஞ்சில் ஊறிய ஒன்று. அதை அவர் உறுதியாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை என்றே எண்ணினார். அவ்வுண்மையின் திரிபுகளே ஸ்டாலினியம் மட்டுமல்லாது லெனினியமும் மாவோவியமும். மார்க்ஸியத்தின் சாரம் தேசிய இனங்களின் விடுதலையில் உள்ளது என்ற முடிவுக்கு பிற்பாடு சோதிப்பிரகாசம் வந்துசேர்ந்தார். தேசிய இனங்களை அடக்கி ஒன்றாக்கி பெருந்தேசியங்களை கட்டி எழுப்ப லெனினும் ஸ்டாலினும் மாவோவும் முயன்றார்கள். ஆகவேதான் அங்கே பேரரசுக்கனவுகள் உருவாயின. அடக்குமுறை உருவாயிற்று. தன் வாழ்நாளின் பிற்பகுதியில் சோதிப்பிரகாசம் தமிழ்த் தேசிய இன விடுதலை சார்ந்து ஆழமான ஆர்வம் கொண்டிருந்தார். தமிழின் தனித்தன்மை, தொன்மை ஆகியவற்றை நிறுவும் ஆழமான ஆய்வுநூல்களை எழுதி வெளியிட்டார். அவரது ‘திராவிடர் வரலாறு’ ‘ஆரியர் வரலாறு’ஆகிய இரண்டு நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பிறந்த சோதிப்பிரகாசம் சென்னைக்கு தன் சொந்தக்காரரின் மளிகைக்கடையில் வேலைபார்க்கும்பொருட்டு வந்தார். பின்னர் ஒரு மில் தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கினார். சிவபூஷணம் என்ற தொழிலாளாரால் மார்க்ஸிய அறிமுகம் பெற்ரார். ஆர்.குசேலர், ஏ.எம்.கோதண்டராமன் போன்ற தொழ்ர்சங்க முன்னோடிகளுடன் அறிமுகம்பெற்றார். தோழர் எஸ்கெ என்று அழைக்கப்படும் எஸ்.கிருஷ்ணமூர்த்தியால் வலுவாக ஈர்க்கப்பட்டு தொழிற்சங்க பணியில் ஈடுபட்டார். எஸ்கெ சென்னை நகர மேயராக இருந்தபோது அவருடன் நெருங்கிப்பழக வாய்ப்பு கிடைத்தது. [ வரலாற்றின் முரணியக்கம் நூலில் கோவை ஈஸ்வரன் எழுதிய எஸ்கெ பற்றிய அழகிய நினைவுக்கட்டுரை ஒன்று முன்னுரையாக அளிக்கப்பட்டுள்ளது. பற்பல சாதாரண மனிதர்கள் வரலாற்றில் தூக்கிப்பிடிக்கப்படும்போது மாமனிதர்கள் எப்படி மறைந்துபோகிறார்கள் என்ற ஏக்கத்தை உருவாக்கும் கட்டுரை அது] சோதிப்பிரகாசம் பல தொழிற்சங்கங்களின் தலைமைப்பொறுப்பேற்று நெடுநாட்கள் பணியாற்றினார்.

நான் அவருடன் பழகிய நாட்களில் ஒன்று கவனித்திருக்கிறேன், சோதிப்பிரகாசம் தன் வாழ்க்கையைப்பற்றி சொல்வதை அறவே தவிர்ப்பவர். தன்னை ஒரு எளிய மனிதனாகவே குறிப்பிட்டு முன்னோடி தலைவர்களைப்பற்றி மட்டுமே சொல்வார். அதிலும் தன்னை விலக்கியே விவரிப்பார். பல தருணங்களில் அவ்வப்போது கிடைத்த தகவல்கள் வழியாகவே அவரது வாழ்க்கையின் பல தளங்களை நான் உத்தேசமாக அறிய முடிந்தது. இப்போதும் அவரைப்பற்றி நான் அறிந்தது மிகக் கொஞ்சமே. அவர் மக்கள் உரிமை மன்றம் என்றபேரில் சத்யா ஸ்டுடியோ அருகில் ஒரு அமைப்பை நிறுவி அதை முற்போக்கு கலைகளை வளர்க்க பயன்படுத்தியிருக்கிறார். அப்போது பி ஆர் பரமேஸ்வரன், என் ராம் போன்ற பலர் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். கூவம் கரையின் குடிசைப்பகுதியில் மிக மோசமான சூழல்களில் சோதிப்பிரகாசம் வசித்து வந்ததைப்பற்றி அவரது நண்பர்கள் பலர் சொல்லி கேள்விபப்ட்டிருக்கிறேன். கொசு கடியிலிருந்து தப்பும்பொருட்டு ஏதோ ஒரு தொழிற்சாலைக்கழிவை உடலில் பூசிக்கொண்டு தூங்குவதைப்பற்றி அவர் வேடிக்கையாக ஒருமுறை சொன்னார்.

அதன் பின் தோழர் ஏ.எம்.கோதண்டராமன் உறவால் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு இடதுசாரி தீவிர இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றிய சோதிப்பிரகாசம் தலைமறைவாக நெடுங்காலம் இருந்திருக்கிறார். அவருக்கு ஏ.எம்.கேயுடன் இருந்த உறவைப்பற்றி அவரது நண்பர் சொ.கண்ணன் எழுதியிருக்கிறார். எவருடனும் ஓயாமல் விவாதிக்கும் குணம்கொண்ட சோதிப்பிரகாசம் மார்க்ஸிய முன்னோடிகள் பலர் முறைப்படி மார்க்ஸியம் கற்காமல் அதன் மனிதாபிமான அடிப்படையை மட்டுமேஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணினார். எனவே மார்க்ஸியத்தை முறைப்படி முழுமையாகப் பயில பதினைந்து வருடங்களை முழுமூச்சாகச் செலவிட்டார். அதில் அவரது மொழித்திறனும் கல்வித்திறனும் வளர்ந்தது.

1978ல் பிரகடனம் என்ற சிறு பத்திரிகையை சோதிப்பிரகாசம் வெளியிட்டார். நான்கு இதழ்களுடன் அது நின்றுவிட்டது. அதன் பின்னர் வாழ்க்கையின் கேள்விகள் என்ற நூலையும் கார்ல் மார்க்ஸின் டாஸ் காபிடலின் முதல் அத்தியாயத்தையும் வெளியிட்டார். இக்காலகட்டத்தில்தான் சோதிப்பிரகாசம்க்கு பண்டைய தமிழிலக்கியத்தில் ஆழமான ஆர்வம் ஏற்பட்டது. எனக்குத்தெரிந்து பழந்தமிழின் இலக்கியங்களில் மிக ஆழ்ந்த புலமைகொண்ட மிகச்சிலரில் ஒருவர் அவர். அந்தப்புலமை அவரை தமிழ்த்தேசியம் பக்கமாகக் கொண்டுசென்றது என்று படுகிறது.

மார்க்ஸிய விவாதங்களில் சோதிப்பிரகாசம் அவர்களின் பங்களிப்பை இன்னும் பலர் புரிந்துகொள்ளவில்லை. பல கலைச்சொற்களை அவர் மாற்றியமைத்தார்– உதாரணம் டைலடிக்ஸ் என்ற சொல் இயங்கியல்’ என்றும் பூர்ஷ¤வா என்ற சொல் முதலாளி என்றும்தான் மொழியாக்கம் செய்யாப்ட்டு வந்தது. சோதிப்பிரகாசம் அதை முரணியக்கம் என்றும் முதலாளர் என்றும் மாற்றி அச்சொற்கள் வழக்கத்துக்கு வந்துவிட்டன. பல கலைச்சொற்கள் சோதிப்பிரகாசத்தால் உருவாக்கப்பட்டவை. தத்துவ விவாதங்களை தூயதமிழிலேயே நடத்தவேண்டுமென்ற அவரது ஆர்வத்தின் விளைவு அது. அவரது நூல்களின் பெரிய கலைச்சொல்லடைவுகள் முக்கியமானவை.

என் வாழ்க்கையில் என்னை மாற்றியமைத்த நண்பர்களில் சோதிப்பிரகாசம் முக்கியமானவர். மார்க்ஸிய வரலாற்றாய்வு நோக்கு மீது எனக்கிருந்த ஈர்ப்பை வலுப்படுத்தி விரிவாக்கம்செய்தவர் அவர். அவரது தமிழியக்க ஆர்வமும் என்னைத்தொற்றிக் கொண்டது. அதன் விளைவே ‘கொற்றவை’ என்ற தனித்தமிழ் புதுக்காப்பியம். இலக்கியம் என்பது போதை என்ற எண்ணம் கொண்ட சோதிப்பிரகாசம் என் நாவல்கள் அனைத்தையும் கூர்ந்து படித்து அழுத்தமான கருத்துக்களை பதிவுசெய்திருக்கிறார். கொற்றவையை அவர் படித்த காலத்தில் அனேகமாக தினம் ஒரு கடிதம் வீதம் எனக்கு எழுதியிருக்கிறார்.

சோதிப்பிரகாசம் சுயமாகவே கற்றவர். முதுகலைப்படிப்புக்குப் பின்னர் சட்டம் படித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரானார். அவரது அலுவலகத்தில் அவரை கடுமையாக விமரிசிக்கும் தோழர்களின் கூட்டத்துடன் அமர்ந்து அரட்டையடிப்பவராகவே அவரை பலமுறை சந்தித்திருக்கிறேன். சோதிப்பிரகாசம் நட்பும் தோழமையும் அதன் உச்சநிலைகளில் திகழ்ந்த ஒரு இடதுசாரிப் பொற்காலத்தின் பிரதிநிதி. எத்தனையோ நண்பர்களுக்கு அவர்கள் வாழ்க்கையின் ஒளியாகவே அவர் இருந்திருப்பார் என்று படுகிறது.

ஒருமுறை நான் விகடனில் தருமபுரி நக்சல்பாரியினர் அப்பு,பாலன் இருவரின் நினைவகத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சோதிப்பிரகாசம் எழுதிய கடிதத்தில்’ இறந்தவன் கல்லறையில் முளரியை வைத்து கண்ணீர் உகுக்கும் கற்பனைவாதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இறப்பு மனிதர்களுக்கானாலும் கருத்துக்களுக்கானாலும் இயக்கங்களுக்கானாலும் மிக இயல்பான ஒன்றே. வாழ்க்கை முன்னால் நகரட்டும்’ என்று எழுதியிருந்தார்.

ஆனால் நான் முளரியும் கையுமாக நிற்கும் எளிய கற்பனாவாதிதான்.

This entry was posted in ஆளுமை, கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

One Response to அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்

  1. saam kumar says:

    i knew sothipirakasam well. this anjali is good, emotional

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s