கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

இரண்டு பின் நவீனத்துவக் கதைக்கோட்பாடுகள் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளைப் படிக்கையில் நம் நினைவுக்கு வரவேண்டும். ஒன்று: நவீனத்துவம் முடியும்போது எல்லா கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன, ஆகவே இனி சொல்லபப்ட்ட கதைகளை திருப்பிச் சொல்வதும் கதைகளைக் கொண்டு விளையாடுவதும் மட்டுமே இலக்கியத்தில் சாத்தியம். இரண்டு: வடிவ உறுதி கொண்ட ஒரு கதை ஒரு மையத்தைச் சுற்றியே அந்த இறுக்கத்தை உருவாக்குகிறது. அம்மையம் வாசகன் மீது கருத்தியல் சார்ந்த கட்டாயத்தை உருவாக்குகிறது. ஆகவே மையமில்லாத கதைகள் எழுதப்படவேண்டும். அவை நியதமான வடிவம் இல்லாதவையாக இருக்கும்.

இவ்விரு கூற்றுகளையும் நான் ஏற்கவில்லை. எல்லா கதைகளும் கதைகள் சொல்லப்பட தொடங்கியபோதே சொல்லபப்ட்டுவிட்டன. அதன் பின் இன்று வரையிலான எல்லா கதைகளும் சொல்லப்பட்டவற்றை மீண்டும் சொல்லியபடித்தான் இலக்கியத்தை உருவாக்குகின்றன. ‘வியாஸோச்சிஷ்டம் ஜகத் சர்வம்’ [வியாசனின் எச்சிலே இவ்வுலகத்தில் உள்ள எல்லா பேசுபொருட்களும்] என்ற புகழ்பெற்ற சொலவடையானது எல்லா கதைகளையும் தன்னுள் கொண்டது மகாபாரதம் என்ற புரிதலின் விளைவாகும். பின் நவீனத்துவக் கதை மட்டுமல்ல எல்லா கதைகளுமே கதைவிளையாடலையே செய்கின்றன. இது கதை என்று அறியாத வாசகன் இல்லை. இக்கதையின் ஆட்டவிதிகளை நான் ஏற்கிறேன் என்ற ஒரு ஒப்பந்தம் அவனுக்கும் எழுத்தாளனுக்கும் நடுவே உருவாவதனால்தான் கதையில் பாம்புகடித்தவன் கருமையாகிப்போவதையும் ஒரு குளத்தில் நீராடியவன் பெண்ணாவதையும் அவனால் ஏற்க இயல்கிறது. யதார்த்தவாதக் கதையை வாசிக்கையில் வாசகன் ‘இது யதார்த்தம் என நான் நம்புகிறேன்’ என்று சொல்வதில்லை, மாறாக ‘இதை யதார்த்தம் என இக்கதையின் தளத்தில் நீ சொல்வதை ஏற்று இதைப் படிக்கிறேன்’ என்றே சொல்கிறான். எல்லா கதைகளும் வாசகனின் அறிவுடனும் ரசனையுடனும் விளையாடவே செய்கின்றன. கதையாடலின் சதுரங்கப்பலகைக்கு மறுபக்கம் வாசகன் எப்போதும் இருந்து ஆடிக்கொண்டிருக்கிறான். பின்நவீனத்துவக் கதைகள் அவ்வாட்டத்தை வெளிபப்டையாக ஆடுகின்றன அவ்வளவே.

மையம் கொண்ட கதையும் சரி அது இல்லாத கதையும்சரி வாசகனில் ஒரேவிதமான கருத்தியல் பாதிப்பையே நிகழ்த்துகின்றன. பிரச்சாரக் கதைகளை விட்டு விடுவோம். மிகச்செறிவான ஒரு கதைகூட வாசகனுக்கு அது அளிக்கும் கற்பனைச் சாத்தியங்களின் வழியாகவே தன்னை நிகழ்த்திக் கொள்கிறது. அவ்வாறாக அது வாசகனுக்கு அவனது கருத்தியல் செயல்படுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் வழங்குகிறது. மீண்டும் மகாபாரதம். அதைவிடவா இன்றைய பின் நவீன ஆக்கங்கள் வாசிப்புச் சாத்தியங்களை வழங்குகின்றன? மையமே இல்லாது இயங்கும் ஒரு பின் நவீனச்சிறுகதைகூட கருத்தியல் பாதிப்பையே நிகழ்த்துகிறது. அது ஒரு கதைவெளியை உருவாக்குகிறது. அதற்குள் நின்றபடி வாசகன் தன் கற்பனையை நிகழ்த்தும்படிச் செய்கிறது. அதன் வழியாக தன் நோக்கத்தை அது நிறைவேற்றுகிறது.

யுவன் சந்திரசேகர் பின்நவீனத்துவ படைப்புகளை படித்து தன் வடிவத்தை உருவாக்கிக் கொண்டவரல்ல. மேலே சொன்ன பின் நவீனத்துவக் கூறுகள் இயல்பாகவே அவரது ஆக்கங்களில் படிந்துள்ளன. இதற்கு தமிழில் சில முன்னொடிகள் உண்டு. முக்கியமானவர் நகுலன். கதைகளை பலகதைகொண்ட கோவையாகவும் சுய அனுபவங்களாகவும் சொல்வது , கதை சொல்லலை ஒருவகை உரையாடலாக ஆக்கிக் கொள்வது, தன் கதைகளில் தன்னையே பல ஆளுமைகளாக உடைத்துப்போடுவது என நகுலன் பலவகையான வடிவச்சிதறல்களை எழுதிப்பார்த்திருக்கிறார். அடுத்தபடியாக குறைவாகவே எழுதிய சம்பத். அவரது சாமியார் ஜூவுக்குப்போகிறார் , இடைவெளி போன்ற கதைகளில் கதை உரையாடலாக மாறுகிறது. மேலும் சம்பத்தின் கதைகளில் படைப்பூக்கத்துடன் ‘திருகப்பட்ட’ ஒரு தத்துவார்த்த தன்மை உள்ளது. இவ்விரு படைப்பாளிகளின் நேரடியான பாதிப்பில் இருந்தே யுவன் சந்திரசேகர் தன் வடிவத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். குறிப்பாக சம்பத்தின் படைப்புலகுடன் யுவன் சந்திரசேகர்க்கு இருக்கும் நெருக்கம் வியப்பூட்டுவது.

சம்பத்தின் தினகரன் போல தன் ஆளுமைக்கு மிக நெருக்கமாக வரும் கிருஷ்ணன் என்பவனின் கதைகளையே யுவன் சந்திரசேகர் சொல்கிறார். கிருஷ்ணன் ஒரு வங்கி ஊழியர். அவன் மனைவி பத்மினி அரசு வேலை பார்க்கிறவள். இரு குழந்தைகள். நகர்புற நடுத்தர வர்க்கத்து எளிய வாழ்க்கை. எளிய கனவுகள். இதில் சிக்கல் என்னவென்றால் கிருஷ்ணன் ஓர் எழுத்தாளன். எழுத்தாளன் என்ற ஆளுமைக்கும் அவனது தனியாளுமைக்குமான மோதலே யுவன் சந்திரசேகர்ரின் பெரும்பாலான கதைகளின் பேசுபொருள் என ஒருவாறாகச் சொல்லலாம். எழுத்தாளனாக அவன் தன் சூழலை , தான் வாழும் பிரபஞ்சத்தை தத்துவார்த்தமான பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அதில் உள்ள பிரம்மாண்டம், தற்செயல்களினால் ஆன மாபெரும் வலை, அதன் எளிமை என. மறுபக்கம் இந்த எண்ணங்களுடன் எவ்வித உறவும் இல்லாத எளிய அன்றாட வாழ்க்கை.

யோசித்துப்பார்த்தால் இதில் உள்ள அபத்தத்தின் பிரம்மாண்டம் மனதை அறையும். மகத்தான சாத்தியங்கள் கொண்ட பெருவெளியை ஒருபக்கம் உணர்ந்தபடி அதன் எந்த நுட்பமும் எவ்வகையிலும் தேவைப்படாத அசட்டு அன்றாடவாழ்க்கையை நிகழ்த்திக் கொள்ளுதல். கிருஷ்ணன் இவ்விரு எல்லைகளிலும் அலைந்தபடியே இருந்து சட்டென்று இந்த அபத்தத்தை உணர்ந்து தன்னையே எள்ளம் செய்து சிரித்துக் கொண்டு மீள்கிறான். ஒருவகையில் யுவன் சந்திரசேகர் கதைகளில் மீள மீள நாம் காணும் அமைப்பு இது.

கிருஷ்ணனின் பிரக்ஞை நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் உள்ள ஒரு மர்ம முடிச்சை சென்று தொடும்போது யுவன் சந்திரசேகர்ரின் கதைகள் ஆரம்பிக்கின்றன. நாளிதழ் புகைப்படத்தில் கண்ட ஒரு முகம் நினைவை துளைத்து துளைத்துச் செல்ல ஆரம்பிக்கிறது.[தெரிந்தவர்] யார் இது? அந்த நூல்சரடில் நூற்றுக்கணக்கான அனுபவங்கள் இணைக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தனித்தனியான அனுபவங்கள். ஒவ்வொன்றுக்கும் தன்னளவில் வேறுவேறு மையங்கள், உணர்ச்சிநிலைகள். கதைகளாக அவை இவ்வாறு ஒரு நினைவில் கோர்க்கப்படும்போதே பரஸ்பர உறவு கொள்கின்றன. எந்தமுடிவையும் தராமல் இப்படி அவை கோர்க்கபப்டும்போது ஏற்படும் விசித்திரமான தொடர்பை மட்டும் காட்டியபடி கதை முடிந்துவிடுகிறது.

இவ்வடிவம் காரணமாக யுவன் சந்திரசேகர் எப்போதும் தன் சிறுகதைகளுக்கு ‘கதைகளின் கோவை’ என்ற வடிவத்தை தெரிவு செய்கிறார். அவர் எழுதிய தொடக்ககாலக் கதைகள் முதல் இவ்வடிவத்தின் பலவிதமான சாத்தியக்கூறுகளை பரிசீலனை செய்திருக்கிறார். ‘நூறுகாதல்கதைகள்’,’நூற்றிச் சொச்சம் நண்பர்கள்’ போன்ற கதைகளில் கதைகள், உதிரி நிகழ்வுகள், அனுபவப்புதிர்கள் என பலவகையான கூறல்கள் கதைசொல்லியான கிருஷ்ணனால் தொகுக்கப்படுகின்றன. ‘தாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்கதைகள்’ போன்ற கதைகளில் கதைசொல்லியின் வலுவான கதாபாத்திரத்தால் அக்கதைகள் தொகுக்கப்படும்போது ஒரு குணச்சித்திரத்தை உருவாக்கும் பணியை செய்து கதை வேறு ஒரு பரிணாமத்தை அடைகிறது. ‘கடல் கொண்ட நிலம்’ போன்ற பிற்காலக் கதைகளில் ஒரு கதையால் மறைக்கப்படும் இன்னொரு கதை வெளிப்படும்போது வாழ்க்கை அனுபவத்தின் அல்லது வரலாற்றின் இயங்குமுறை சித்தரிக்கப்படுகிறது. இவற்றை ;கதைக்கதைகள்’ என்று சொல்லலாம்

இக் ‘கதைக்கதைகள்’ அனைத்திலுமே யுவன் சந்திரசேகர்ரின் ஆர்வம் அனுபவங்களில் அல்ல, அனுபவங்களுக்கு இடையேயான இணைப்பில்தான் ஊன்றுகிறது. இக்கதைகளை வாசிக்கும் பொதுவாசகன் இக்கதைக்கூறுகளுக்கு ‘என்ன பொருள்?’ என்று மையம் தேட முயல்கிறான். ஒரு மையத்தை ஊகித்தானென்றால் அடுத்த கதையில் அதன் நீட்சியை காண விழைகிறான். விளைவாக ஏமாற்றமும் சலிப்பும் கொள்கிறான். மிக எளிய கூறல்முறையில் எப்போதும் தவறாத சுவாரசியத்துடன் சொல்லப்பட்ட இக்கதைகளை பல வாசகர்கள் புரியாதவை என்று சொல்வதற்குக் காரணம் இதுவே. ஆசிரியரின் தேடல் இருப்பது இக்கதைகள் இணையும் விதமென்ன என்ற வினாவிலேயே என்று உணர்ந்து வாசிக்கும் ஒரு வாசகர் இக்கதைக்கூறுகள் கதை என்ற ஒரு சதுரங்க களத்தில் அவர் பரப்பும் காய்கள் மட்டுமே என்றும் இக்காய்களை நாமும் நம் விருப்பபடி நகர்த்தி அவருடன் ஆடலாம் என்றும் உணர முடியும். அப்போதுதான் இக்கதைகளின் உண்மையான மதிப்பு தெரியவரும்.

ஒருபேருந்தில் நம்முடன் பயணம் செய்பவரின் கதையின் ஒரு துளி நம்முடைய கதையுடன் இணைந்துள்ளது என்பதை உணரும் போது ஏற்படும் வியப்பிலிருந்து இக்கதைகளை வாசிப்பதை தொடங்கலாம். அந்தப்பேருந்து விபத்துக்குள்ளானால் அக்கதையின் இணைப்பு இன்னும் வலுவாகிறது. அவ்விபத்துக்கு அவர் காரணம் என்றால் அது இன்னும் பெரிதாகிறது. உண்மையில் இதைவிட பெரிய ஓர் இணைப்பு அவருக்கும் நமக்கும் இருந்து அது இருவருக்குமே தெரியாமல் போய்விட்டால்? அத்தகைய சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ளும் கிருஷ்ணன் பல சமயம் மாற்று மெய்மை என்று அவன் குறிப்பிடும் ஒரு தளத்தை அடையாளம் காண்கிறான். நாம் அறிந்து நம்மைச் சுற்றி செயல்படும் தர்க்கஒழுங்குக்கு அடியில் நாம் அறியாத ஒரு பிரபஞ்ச தர்க்கம் ஒன்று ஓடுகிறது என்ற நம்பிக்கைதான் அது. யுவன் சந்திரசேகர் கதைகள் பல சமயம் இந்த மாற்று மெய்மை சார்ந்து ஒரு தேடலைக் கொண்டுள்ளன. ஆனால் எக்கதையிலும் இவற்றை தீவிரமாக அவர் முன்வைப்பதில்லை. கதையின் ஒரு நுனி அந்த தளத்தைச் சென்று தீண்டி விலகுகிறது, அவ்வளவே. நேரடியாக மீமென்ய்மையை சொல்லும் ஒரே கதை மைபோட்டு இறந்தகாலம் சொல்லும் லெப்பையை சித்தரிக்கும் ‘கருநிற மை’

கதையை வைத்து ஆடுவதனால் எந்த நிகழ்ச்சியையும் யுவன் சந்திரசேகர் உக்கிரப்படுத்துவதில்லை. நுட்பங்களை சித்தரிக்க முயல்வதுமில்லை. போகிற போக்கில் ஒருவர் நம்மிடம் உரையாடுவதுபோல அவை சொல்லபப்டுகிறன. அதி தீவிரம் கொண்ட நிகழ்ச்சிகள் கூட. நூற்றிச்சொச்சம் நண்பர்கள் கதையில் முதல் கதை இலங்கையில் இயக்கத்தால் மகனையும் ஆமியால் குடும்பத்தையும் இழந்து நிராதரவாக உயிர்நண்பனை நம்பிக்கையுடன் பார்க்க இந்தியா வந்த இலங்கைக்காரரின் கதை. இரு பக்கங்களுக்குள் சாதாரணமாக முடியும் இக்கதை ஒரு மகத்தான நிராகரிப்பின் சித்தரிப்பு. சுருக்கமாகவும் விளையாட்டு போலவும் அந்த முதியவர் முகத்தில் வாசல் சாத்தப்படும் காட்சியைச் சொல்லி அப்படியே இயல்பாக பள்ளி நாளில் ஆட்டோகிரா·ப் நோட்டில் ‘வான் உள்ளளவும் விண்மீன் உள்ளளவும் மலரில் தேன் உள்ளளவும் உலகில் நான் உள்ளளவும் உன்னை மறப்பேனா ‘என்று எழுதி கையெழுத்திட்ட ஜெயசீலனை டிக்கெட் பரிசோதகராக பாண்டியன் எக்ஸ்பிரசில் சந்தித்து ”என்ன ஜெயசீலன் ஞாபகம் இருக்கா?”என்று கேட்டு அவர் ”ஹல்லோ தாமஸ் ஹௌ ஆர் யூ?’ என்று கைநீட்ட ”நான் கிருஷ்ணன்’ என்று சொல்லி ரயிலேறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார்.

சில கதைகளில் இயல்பாகவே கதைகளின் இணைப்புக்குள் உள்ள உணர்வோட்டம் வெளிப்படுவதைக் காணலாம். ‘மூன்று சாமங்கள்கொண்ட இரவு’ இருவரின் இருவகை அனுபவங்கள். கிருஷ்ணன் அவனது எளிய சமையற்கார அப்பாவை நள்ளிரவில் நினைவுகூர்கிறான். மிஞ்சிய பட்சணத்துடன் ஆற்று மணலில் நள்ளிரவில் அவர் திரும்புவதை காத்திருப்பதும் அவர் வயிறுவீங்கி இறந்தபின் அதே ஆற்று மணலில் அவர் வரக்கூடும் என்ற நம்பிக்கை எஞ்ச காத்திருப்பதும். மறுபக்கம் அவனது நண்பன் சுகவனம் சித்தி பேச்சைக்கேட்டு அப்பா செய்த கொடுமைகளை தாங்க முடியாமல் வீட்டைவிட்டு ஓடி துன்பப்பட்டு மீண்டும் வரும்போது அவனைக் கண்ட கணம் அப்பா அடைந்த ஆழ்ந்த மௌனத்தின் விசித்திரத்தைச் சொல்லும் கதை. இருவகை அப்பாக்களும் இரு இடங்களை நிரப்புகிறார்கள். பிரியத்துக்கும் கசப்புக்கும் இடைப்பட்ட தூரம்.

யுவன் சந்திரசேகர் கதைகளில் வரும் இஸ்மயீல் கிருஷ்ணனின் பூதாகரப்படுத்தப்பட்ட விழைவுப்பிம்பம் போல இருக்கிறார். எப்போதும் ஒரு தத்துவார்த்தமான அங்கதத்துடன் பேசுபவர். எந்நிலையிலும் சாயாத நிதானம் கொண்டவர். பிரபஞ்ச அனுபவம் என்ற யானையை எப்படியோ லௌகீகம் என்ற பானைக்குள் போட்டுக் கொண்டவர் எனலாம். அதற்குரிய திருகலான தர்க்கங்கள் விசித்திரமான கவித்துவத்துடன் அவரால் எப்போதும் முன்வைக்கப்படுகின்றன. யுவன் சந்திரசேகர் கதைகளின் முக்கியமான அழகுகளில் ஒன்று இஸ்மாயீலின் தத்துவவரிகள். உதாரணம் ‘காமம் கலக்காத பிறபால் உறவும் லாபம் கலக்காத தன்பால் உறவும் இருக்குமானால் அந்த ஆதரிச உறவில் ஏதோ ஒரு முனை தொடர்ந்து காயமுறுவதும் அதை வெளிக்காட்ட முடியாமல் மறுகுவதும் இருந்தே தீரும்” [நூற்றுச் சொச்சம் நண்பர்கள்]

யுவன் சந்திரசேகர் கதைசொல்லலின் பலவழிகளை பரிசீலிக்க அவருடைய நெகிழும் மொழி மிகமிக உதவியாக இருக்கிறது. பிராமண வழக்கு முதல் இஸ்லாமிய வழக்கு வரை அனேகமாக எல்லா சாதியினரின் வட்டார வழக்கையும் அவரால் இயல்பாக எழுதிவிட முடிகிறது. அதிக யத்தனம் இல்லாமல் சித்தரிப்புகளை அளிக்கவும் சொற்சிக்கல்கள் இல்லாத நடையை உருவாக்கவும் முடிகிறது. ஆகவே ஒருவர் பல விஷயங்களை தொட்டுத்தொட்டு செல்லும் கதைகூறல் முறையையும் [ ‘மாமா நீங்க அசப்புலே மானேக்ஷா மாதிரியே இருக்கேள்’ . ‘அவன் எனக்கு ஜூனியர்டா.அவந்தான் என்னை மாதிரி இருக்கான்/ நார்ட்டன் துரையின் மாற்றம்] பண்டைய நூல்களை போலிசெய்யும் நடையையும் [கேள் பையா கேள், கேள் சிறுபெண்ணே கேள், ஐயா வயோதிகரே நீங்களும் கேட்கலாம். முந்தாநாள் பூத்து யாருமறியாவண்ணம் நேற்று உதிர்ந்த காட்டுபூவின் மணமும் சேர்ந்ததல்லோ இவ்வுலகின் சுகந்தம்?’ / சோம்பேறியின் நாட்குறிப்பு] ஆர்வமூட்டும் விதமாக மறு ஆக்கம் செய்ய முடிகிறது. இதனால் மெல்லிய நகைச்சுவை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் கதையுலகமாக உள்ளது இது

யுவன் சந்திரசேகர் எழுதிய குள்ள சித்தன் சரித்திரம், பகடையாட்டம், கானல்நதி ஆகிய நாவல்களும் இதேபோல கதைக்கோவை என்ற வடிவை எடுத்து விரித்து பின்னிச்செல்பவையே. சிறுகதைகள் ‘ஏற்கனவே’ [உயிர்மை] ஒளிவிலகல் [காலச்சுவடு] ஆகிய தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

வழக்கமாக கதைசொல்லும் முறையிலிருந்து பலவகையிலும் விலகிச்செல்பவை ஆதலால் அதிகமாக கவனிக்கபப்டாதவை யுவன் சந்திரசேகர் கதைகள். நாம் விரும்பும் கதைகள் நம்மை அவற்றுக்குள் இழுக்க முயலும்போது நம்மை வெளியே வலுக்கட்டாயமாக நிறுத்தி பேச முயல்பவை இவை. கதையில் நாம் அடைய முயலும் உணர்ச்சிகளை முன்னரே கட்டுப்படுத்திக் கொண்டு கதைவிளையாட்டுக்கு அழைப்பவை. கதாபாத்திர உருவகங்களை அளிக்காமல் வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் மட்டுமே உள்ளன, ஆளுமைகள் இல்லை என்று காட்ட முயல்பவை. இக்காரணத்தால் பல கதைகள் நம் நினைவிலேயே நிற்பதில்லை. கதைகள் ஒன்றோடொன்று கலந்து ஒற்றைக் கதைவெளியாகவே யுவன் சந்திரசேகர் கதைகளை நாம் நினைவுகூர முடிகிறது.

ஆனால் இக்கதைகளுடன் நாம் ஒரு புனைவு விளையாட்டுக்கு தயாராவோமெனில் அவை நம்மை நம்முடைய சொந்த கதைவெளி ஒன்றை உருவாக்கும் இடத்துக்கு இட்டுச்செல்லும். நூற்றுச்சொச்சம் நண்பர்களுடன் நம்முடைய நண்பர்களின் கதைகள் ஊடுபாவாக இழையும்போது உருவாகும் கதையுலகம் அக்கதையை விட உயிரூட்டமுள்ளதாக நம்மிடம் பேச முற்படும்

[ஏற்கனவே. உயிர்மை வெளியீடு.]

This entry was posted in சிறுகதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged , , . Bookmark the permalink.

2 Responses to கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

  1. Pingback: jeyamohan.in » Blog Archive » ஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்

  2. Pingback: jeyamohan.in » Blog Archive » மாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s