இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா

இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்
கடந்த ஆண்டிலிருந்தே ஜெயமோகனின் ‘கொற்றவை’ உருவாக்கம் குறித்து எழுத்துவட்டம் பேசத் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் பரபரப்பாக விற்பனையான புத்தகங்களில் ‘கொற்றவை’யும் ஒன்று.தனித்தமிழில் எழுதப்பட்டுள்ள கொற்றவை, ‘புதுக்காப்பியம்’ என்கிற அடைமொழியோடு வெளிவந்திருக்கிறது.

சிலப்பதிகாரத்தை அடித்தளமாகக் கொண்டு கொற்றவை எழுதப்பட்டிருப்பினும், அதனினும் விரிந்த களத்தில், குமரிக்கரையிலிருந்து தொடங்குகிறது கொற்றவை. இதன் ஐந்து பகுதிகளிலும் முறையே நீர், காற்று, நிலம், எரி, வான் என்று பகுக்கப்பட்டுள்ளன.

குமரி நிலத் தமிழ்க்குலத்தின் தொன்மையைப் பேசத் தொடங்கும் பகுதி நீராகவும், கண்ணகி-கோவலன்-மாதவி வாழ்ந்த வாழ்வு காற்றாகவும், புகாரிலிருந்து கண்ணகி கோவலன் வெளியேறி மதுரை செல்லும் பகுதி நிலமாகவும், மதுரை எரியுண்ட காதை எரியாகவும், கண்ணகி தெய்வமான பகுதி வானாகவும் பேசப்பட்டுள்ளன.

தாய்த்தெய்வம், தாய்மையின் கனற்சினம், தாய்மையின் எல்லையில்லாப் பெருங்கருணை ஆகியவற்றை விரிவுறப் பேசும் கொற்றவை, சிலப்பதிகாரத்தின் அரசபாட்டையில் நடை பயின்றாலும் புதிய எல்லைகளிலும் பயணமாகிறது.

அருகனை வழிபடும் கவுந்தியடிகளை இளங்கோவடிகள் காட்டுகிறார். கொற்றவையிலோ, கண்ணகியும் கோவலனும் கண்ட கவுந்தியடிகளும் வழித்துணையாய் வருகிற கவுந்தியடிகளும் வேறு வேறானவர்கள்.

இரண்டாவது கவுந்தியடிகள், புன்னைக் காட்டு நீலி. கண்ணகி கண்களுக்கு நீலியாகவும் கோவலன் கண்களுக்குக் கவுந்தியடிகளாகவும் தெரிபவள். இடைச்சியர் வணங்கும் தெய்வம் அவள்!

நீலி, கண்ணகியிடம் ”அவர் கண்களை நான் வெல்வேன். என்னை அவர் கண்கள் உங்களுக்கு வழித்துணையாக உடன் வந்த கவுந்தியடிகளாகவே காணும். கதைகளும் காப்பியமும் கூட அப்படியே அறியும். வழித் துணையாக வந்த வடிவிலாத் தெய்வமென்பதை நீ மட்டுமே அறிவாய்” என்கிறாள்.

இடைக்குலப் பெண்ணாகிய மாதவியிடம் கண்ணகியை அடைக்கலப்படுத்தி கவுந்தியடிகள் பிரிந்ததாக சிலப்பதிகாரம் சொல்கிறது. ‘கொற்றவை’யிலோ ஒரு புன்னை மரத்தின் கீழ் நிற்கிறாள் நீலி. மதுரையில் ஆய்ச்சியர் வணங்கும் புன்னைக் காட்டு நீலியின் அமர்விடம் அது.

புகாரில் புறப்படும்போது ”என்னை நீ கை கூப்பி அழைத்தால் உன்னுடன் வருவேன்” என்று சொன்ன நீலி, கண்ணகியிடம் விடைபெறும் காட்சி, ‘கொற்றவை’யில் இவ்வாறு விரிகிறது.

”அக்கணம் நீலி தன் பேயுருவில் ஓங்கி நின்றாள். தன் முன் வன்பால் வெறியெலாம் கொண்டு மென்பால் உடலாகி நின்ற கண்ணகியை நோக்கிக் கைகூப்பித் தலைதாழ்த்தி நீலி சொன்னாள். ”என் பணி நிறைவுற்றது அன்னையே. என்னை ஆண்டருள்க!! பின்பு அவள் மெல்லிய காற்றாக அந்தக் கல்மீது சென்றமர்ந்தாள். அவள் மீது புன்னைமரத்தின் மலர் ஒன்று உதிர்ந்தது”.

இது, சிலப்பதிகாரத்திலிருந்து வேறு படுகிறதா உடன்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பினால் இருவேறு விடைகள் கிடைக்கின்றன. சிலம்பில், கண்ணகியால் முதலில் வணங்கப்பட்ட கவுந்தியடிகள், மாதவியிடம் அடைக்கலப்படுத்தும் போது

”கற்புக் கடம்பூண்டஇத் தெய்வமல்லது

பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்” என்று பேசுகிறார்.

அதே பணிவை மதுரை வந்த புன்னைக் காட்டு நீலியிடத்தும் காண்கிறோம்.

சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரை, புலனடக்கம் பொருந்திய, அறக் கொள்கைகளை போதிக்கிற பாத்திரம் கவுந்தியடிகள். எனவே, அந்தப் பாத்திரத்தை உயிர்ப்புமிக்க ஒன்றாக உலவ விட வாய்ப்பில்லை. ஆனால் ஜெயமோகனின் கொற்றவையில் கவுந்தியடிகளாகத் தோற்ற மளிக்கும் நீலி, கதையை சூடுபறக்க நகர்த்திச் செல்கிறாள். செல்லும் வழியில் கண்ணகியையும் கோவலனையும் இழித்துப் பேசிய களிமகனையும் பரத்தையரையும் ‘முள்ளுடைக் காட்டில் முதுநரியாகுக’ என்று கவுந்தியடிகள் சபிப்பதாய் இளங்கோவடிகள் எழுதுகிறார். இந்தக் காட்சி கொற்றவையில் மேலும் நாடகத்தன்மை கொண்டு பொலிகிறது.

கவுந்தி எழுந்தாள். கண்ணகி அவளையே நோக்கித் தனக்குள் மென்முறுவல் கொண்டாள். கோவலன் ”அன்னையே இவர்களுடன் உரையாடுதல் தகாது. நாம் செல்வோம்” என்றான்.

அவர்கள் சற்றே சென்றதும் பின்னால் சிரித்து நின்ற களிமக்களை நோக்கி நீலி மெல்லத் திரும்பினாள். அப்போது அவள் தோற்றத்தைக் கண்ட களிமக்கள் மூவரும் அச்சத்தில் குளிர்ந்து வாய் திறந்து சிலைபோல நின்றனர். பரத்தை ஒருத்தி நெஞ்சு கிழிபடும்படி அலறித் தளர்ந்து விழுந்தாள். களிமகன் நரிபோல ஊளையிட்ட வனாக முள்காடுகளைத் தாண்டி ஓட பிறிதொரு பரத்தை அவனைத் தொடர்ந்து அலறி யோடினாள்.

சிலம்பைப் பொறுத்தவரை ”அரசியல் பிழைத்தோர்” என்ற குற்றச்சாட்டுக்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் இலக்காவது, கோவலனுக்குத் தரப்பட்ட தண்டனையில்தான். ஆனால் கொற்றவையிலோ சற்றும் பொறுப்பற்ற மன்னனாய், வரம்புகள் மீறிய வேந்தனாய்ப் பாண்டியன் பேசப்படுகிறான். பாண்டிய நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டிருந்ததாகவும், பாண்டியனின் மாமனாராகிய மோகூர் பழையன், தன் மகள் கோப்பெருந்தேவியின் வழியே தன் ஆதிக்கத்தை செலுத்தியதாகவும் இந்தப் படைப்பு சொல்கிறது. இது குறித்து சிலம்பில் ஆதாரமில்லை. ஒரு நிரபராதி கொல்லப் பட்டமைக்காக ஒற்றைச் சொல் வழியே தன் உயிரைப் போக்கிக்கொள்ளும் அளவு நீதியை உயிர்க் கொள்கையாக பாண்டியன் பேணியிருக்கிறான்.

கோவலன் இறந்த செய்தி புகாரை எட்டியதும் மாதவியையும் மணிமேகலையையும் தாக்குவதற்குப் பலர் முயன்றதாகவும், இருவரும் அடைக்கலம் நாடித் தவித்ததாகவும் கொற்றவை சொல்கிறது. இளங்கோவடிகள், மணிமேகலையின் அறநிலையத்தில் அவளைச் சந்தித்து செய்திகளைக் கேட்டறிந்ததாகவும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.

இத்தகைய அணுகுமுறைகள், மூல நூலாகிய சிலப்பதிகாரத்தை ‘பொன்னேபோல் போற்றி’ எழுதாமல் புதிய கற்பனை வெளிகளிலும் படைப்பாளி சஞ்சரித்திருப்பதையே உணர்த்துகின்றன.

அதேபோல, அய்யப்பன் கதைக்கும் இளங்கோவடிகள் வரலாற்றுக்கும் உள்ள ஒற்றுமையைக் கடந்து, கொற்றவையில் இளங்கோவடிகளே அய்யப்பன் என்பதாக நிறுவுகிறார் ஜெயமோகன். அந்தப் பகுதியை இங்கே தந்திருக்கிறோம்.

வஞ்சிப்பெருநகர் ஆண்ட சேரமான் பெருமான் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் பந்தளத்துக்கு வந்தபோது ஐயப்பனைக் கண்டு அவன் அறிவையும் அழகையும் வியந்து தன்னுடன் அழைத்துத் தன் மகனாக்கி வஞ்சியிலேயே அமரச் செய்தான். செங்குட்டுவனுக்குத் தம்பியாக கேரள தேவிக்கு மகனாக நான்மறையும் அறுசமயமும் முழுமுந்நெறியும் கற்று அங்கிருந்தான் ஐயப்பன்.

ஒருமுறை இரு இளவல்களும் கிழக்குக் காட்டில் புலி வேட்டைக்குச் சென்றபோது அடர்பசுங்காட்டு நடுவே கரும்பாறை மீது எழுந்து நின்ற எட்டடிப் பெருவேங்கையை நோக்கி செங்குட்டுவன் வில் வளைத்து ஆவம் தொடுக்க முற்பட்டபோது ஐயப்பன் தன் கரங்களால் வில்லைப் பற்றி அவனைத் தடுத்தான். வேங்கை பாய்ந்து மறுபுறம் சென்றதும் அவன்மீது அழுக்காறு கொண்டிருந்த படைத்தலைவன் எள்ளலுடன் ஐயப்பன் தன் அச்சத்தையே அங்ஙனம் வெளிப்படுத்தினான் என்றான். அவன் உதிரத்தில் அரசர்குலம் இருக்குமென்றால் ஒரு போதும் அத்தகைய வழிகளை அவன் மேற் கொள்ளமாட்டான் என்றான் படைத் தலைவனுக்குத் துணையாக அமைச்சன் ஒருவன்.

சீறிச் சினந்து அவர்களை நோக்கித் தன் வாளை ஓங்கிய தமையனைத் தடுத்து, அஞ்சிப் பதறித் தொடர முயன்ற படையினரை நிறுத்தி, வெறும் கையுடன் காட்டுக்குள் சென்றான் ஐயப்பன். புதர்களை விலக்கி வேங்கையின் உகிர்த்தடம் தேர்ந்து கொடுங்காட்டுக்குள் சென்று மலைக்குகைக்குள் ஊன் நாற்றமெழும் பூமி மண்ணில் தன் குட்டிகள் நடுவே கிடந்த வேங்கையைக் கண்டான். இரு கைகளையும் விரித்து அன்பு நிறைந்த கண்களுடன் ஒளிரும் நகையுடன் அதை நோக்கிச் சென்றான். வெருண்டு எழுந்த வேங்கை உறுமியபடி பின்வாங்கி உடல் குறுக்கிப் பதுங்கியது. இளஞ்சேரன் அருகே செல்ல எழுந்து கூர் மூக்கு நீட்டி மணம் கொண்ட குருளைகள் மகிழ்ந்து குற்றொலி எழுப்பிப் பாய்ந்து அவனை நோக்கி ஓடி வந்து அவன் கால்களைப் பற்றி ஏற முயன்றன. உடல் முறுக்குத் தளர்த்தி வேங்கை அவனைக் கூர்ந்து நோக்கியது. உறுமல் ஒலியெழுப்பி அவன் யார் என்று கேட்டது. பின்பு மெல்ல முன்வந்து தன் குருளைகளுடன் தானும் சேர்ந்து அவனிடம் விளையாட முற்பட்டது.

வேங்கையின் மீது ஏறித் தன் கூட்டத்தாரிடம் மீண்ட ஐயப்பனின் புகழ் வஞ்சி நாடெங்கும் பரவியது. மண்ணில் உள்ள அனைத்து உயிர்களும் அவனையே தலைவனாக ஏற்கின்றன என்று ஊரெங்கும் சொல் நிறைந்தது.

சேரர் தென்எல்லையில் மலைக்காடுகளுள் பதுங்கி வணிகர்களையும் இடையர்களையும் கொன்று கொள்ளையிட்டு வந்த எருமைக்குலம் ஒன்றை வெல்ல அவனை அனுப்பினான் சேரமான். எருமி என்னும் குலமூதன்னையின் தலைமையில் போரிடும் அவர்கள், படைகள் திரும்பியதும் புத்தெழுச்சியுடன் மீள்வதும் வழக்கம். துணையின்றி எருமைநாடு வந்த அய்யப்பன் தனியாகக் காட்டுக்குள் சென்று எருமியன்னையைக் கண்டான். அவன் இன்சொல் கேட்டுப் பணிந்த அன்னையை வென்று சேரன் குலக்கொடியை அவள் நாட்டு உச்சிப்பாளை மீது ஏற்றி மீண்டான்.

பட்டம் சூட்டும் பொருட்டு அமைச்சு கூட்டி ஆவதென்ன என்று தேர்ந்தான் நெடுஞ் சேரலாதன். கேரளதேவியும் அவள் குடி மூத்தோரும் குலமுறை நெறிகளை ஒருபோதும் மீறலாகாது என்று கூறினர். அமைச்சர் குழுவும் அதையே சொன்னது. நெடுஞ்சேரலாதன் செங்குட்டுவனுக்கு இளவல் பட்டம் சூட்டுவதென முடிவெடுத்தான். ஆனால் அம்முடிவைச் சொல்ல எண்குல மன்று கூடியபோது எண்குலத்து மூப்பர்களும் சேர்ந்து எடுத்த முடிவை அவர்கள் சார்பில் முது நிமித்திகன் காரிக்கண்ணன் மன்னனிடம் சொன்னான். சேரநாட்டு மக்கள் ஒரு போதும் மாலும் முக்கண்ணனும் தேர்ந்தனுப்பிய இளவலையன்றிப் பிறரை மன்னராக ஏற்க மாட்டார்கள் என்றான் அவன். அவை அதை வலியுறுத்திக் குரலெழுப்ப அரியணை மீது தன் தந்தையும் தாயும் சொல்லிழந்து அமர்ந்திருப்பதைக் கண்டான் ஐயப்பன். அக்கணமே எழுந்து தன் அரச உடைகளைத் துறந்து அவை முன் நின்றான். அரசும் செல்வமும் அடைவதற்கென வந்தவன் தானல்ல என்றான். அழியாப் பேரறிவைத் தேடி அனைத்தையும் துறந்து செல்லவிருப்பதாகவும் இனி எப்போதும் வஞ்சி நாட்டிலும் பந்தள மண்ணிலும் கால் வைக்கப் போவதில்லை என்றும் வஞ்சினம் உரைத்தான். வியந்து ஓவியமென உறைந்த அவையிலிருந்து இறங்கி அரையாடையுடன் நடந்தான்.

அரசு துறந்த இளவல் நடந்து வடபுலம் ஏகித் தன் நண்பன் வாவரைத் தேடிச் சென்றான். யவனரும் சோனகரும் இணைந்து கடற்பாடி அமைத்த வடகொல்லம் துறைநகர் அருகே அமைந்த குணவாய் நல்லூரில் வாவர் அமைத்துத் தந்த அறச்சோலை சூழ்ந்த சிறுபள்ளியில் தங்கி மெய்ந்நூல்களைக் கற்று வாழ்ந்தான். சேர மணிமுடியைச் செங்குட்டுவன் ஏற்ற பின்னும் மக்கள் நாவில் அவனே இளங்கோ என்று அழைக்கப்பட்டான். வடவணிகர் மூலம் அருகமாவீரனின் அழியாப் பெருநெறியை அறிந்து அதை ஆழ உணர்ந்து அணியும் ஆடையும் துறந்து ஓடும் துவர்கூறையும் ஏற்று அவன் துறவியானான். அவனை இளங்கோ அடிகள் என்று வணங்கினர் சேர மக்கள்.

கொற்றவையின் இன்னொரு பகுதி, இளங்கோவடிகள் சபரிமலையில் சமாதியானதை சேரனவையில் இரவன் ஒருவன் விவரிப்பதாய் விரிகிறது.

காலையில் வெய்யோனொளி தொட விரியும் தாமரையென என அவர் விழி மலர்ந்தார். என்னை நோக்கி மென்னகை புரிந்தார். என்னை அவர் அறிந்திருந்தார். அவர் எழுந்ததும் நான் அருகே சென்று அவர் கால்களைப் பணிந்தேன். ஒரு சொல்கூட சொல்லவில்லை, நான் எண்ணியனவெல்லாம் சொல்லப்பட்டு விட்டிருந்தன. அவையோரே, அவருடன் எட்டுத் திங்கள் உடனிருந்தேன். ஒரு சொல்லும் சொல்லவில்லை. அவரை இடைவிடாது விழிப்பிலும் கனவிலும் நோக்கியபடி அங்கு இருந்தேன். சென்ற ஆண்டு கார்த்திகைத் திங்கள் ஐந்தாம் வளர்பிறை நாளில் என்னை அழைத்துக் கொண்டு அவர் மலையிறங்கினார். குகை ஒன்றுக்குள் இட்டுச் சென்றார். அங்கே பாறையிடுக்கிலிருந்து கமுகுப்பாளையில் சுருட்டி வைத்திருந்த சுவடிக்கட்டு ஒன்றை எடுத்து என்னிடம் அளித்தார். ”அடுத்த மேழ மாத முழு நிலவு நாளில் சேரன் வஞ்சிக்குச் செல். இந்நூலை அங்கு அரங்கேற்று” என்று சொன்னபின் திருப்பி நடந்தார்.

அன்று நள்ளிரவில் நிலவு நடுவான் சேரும் நேரத்தில் அவ்வேங்கை மரத்தடியில் அலங்கைப் புதர் நடுவே ஐயன் ஊழ்கத்திலமர்ந்தார். மூன்று நாட்களுக்கு ஒருமுறை விழித்து பழப் பிழிவுண்டு மீண்டும் தன்னுள் நுழைவார். செய்தி பரவி மலைகளிலிருந்து சாக்கையர் சரணப்பெருவிளி முழக்கி வந்தவண்ணம் இருந்தனர். பின்னர் மலைக்குடிகள் திரண்டு வரத்தொடங்கினர். ஐயன் முன் பழங்களும் தேனும் படைத்து வணங்கினர். அவரைச் சூழ்ந்த அலங்கைச் செடிகளிலிருந்து ஓரிரு இலைகள் கொய்து அவரது தாளில் வைத்து வணங்கி சூடிச்சென்றனர். நாற்பத்தொரு நாள் ஐயன் ஊழ்கத்திலிருந்தார். தைமாதம் முதல்நாள் முழுநிலவெழுந்தபோது ஐயன் முகம் நிலவிறங்கிய காட்டுச்சுனைபோல ஒளிவிடக் கண்டோம். அவரது சிறிய இதழ்கள் செஞ்சிமிழ்விட்டு வெளிவரும் அரதனம் ஒளி பரப்பி உயிர்கொள்வது போலக் குறுநகையொன்றை ஏந்தின. சூழ்ந்த இரவரும், பிறரும் கைகூப்பி அறிவனின் அடி பரவிச் சரணப் பெருவிளியெழுப்பினர். அவ்வொலி அறியாது நிலைத்தபோது ஐயன் சிலைத்திருக்கக் கண்டோம். அப்போது எதிரே ஓங்கிநின்ற பொன்மேடு என்னும் குன்றி

கொற்றவை – ஒருகடிதம்

கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் : அரவிந்தன் நீலகண்டன்

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை. ராமபிரசாத்

கொற்றவை – ஒருகடிதம்

தமிழின் நல்லூழ்:இரா. சோமசுந்தரம்

This entry was posted in வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s