சிகரத்தில் நிற்கும் ஆளுமை :பாவண்ணன்

பாவண்ணன்
தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளராக விளங்கும் ஜெயமோகனுக்கு இன்று பாவலர் வரதராஜன் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாகவும் வேகமாகவும் படைப்பிலக்கிய முயற்சிகளில் இடையறாது இயங்கி, ஆழமும் நுட்பமும் பொருந்திய ஆளுமையாக தன்னை தமிழ்ச்சூழலில் நிறுவிக்கொண்டவர் ஜெயமோகன். சிறுகச்சிறுக வளர்ந்து சிகரமாக நிற்கிற பேராளுமை என்றும் சொல்லலாம். இடைவிடாத உழைப்பு, ஆழ்ந்த அக்கறை, வளர்ந்துகொண்டே போகும் தேடல் முயற்சிகள் ஆகியவற்றின் மறுபெயர் அல்லது அடையாளமாகச் சுட்டிக்காட்டத்தக்க ஓர் ஆளுமை ஜெயமோகன் என்றும் சொல்லலாம்.

படைப்பும் பண்பாடும் சார்ந்த ஜெயமோகனுடைய கட்டுரை நூல்கள் படைப்பிலக்கிய நூல்களுக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவை. அவை ஆர்வத்தோடும் தேடலுணர்வோடும் இலக்கியத்தை நெருங்கவரும் புதிய வாசகர்களுக்கு உருவாகக்கூடிய பலவகையான கேள்விகளுக்கு விடையாகவும் வழிகாட்டியகாவும் விளங்கக்கூடியவை. மிகச்சிறந்த உரையாடல்களாக விளங்கும் அக்கட்டுரைகள் படிப்பவர்களுக்கு உத்வேகம் ஊட்டும் வலிமைகொண்டவை. ஒவ்வொரு கட்டுரையிலும் பிரியத்துக்குரிய நேசத்தோடும் ஒரு குருவுக்குரிய குரலோடும் பல முக்கியமான புள்ளிகளைத் தொட்டுத்தொட்டுக் காட்டிவிட்டுச் செல்கிறார். அக்குரல் ஒரு வற்றாத ஆற்றைப்போல மனத்தின் கதவுகளையும் சாளரங்களையும் திறந்துகொண்டு பாய்ந்து நிரம்பத்தொடங்குகிறது. ஓர் இளம்வாசகனுக்கு அது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும்.

ஒரு கேள்விக்குரிய விடையாகமட்டும் முன்வைத்து ஒருபோதும் ஓய்வதில்லை அவர் குரல். ஒரு கேள்வியையொட்டி எழவாய்ப்புள்ள துணைக்கேள்விகளையும் ஐயங்களையும் அவரே முன்வைத்து மெல்லமெல்ல விடைகளைநோக்கியும் அழைத்துச் செல்லத் தொடங்குகிறார். அந்தப் பயணத்தில் ஒரு வாசகன் உணரக்கூடிய நெருக்கம் மிகஅதிகம். வாசிப்பின் முடிவில் அசைபோடத் தொடங்கும் அவன் மனம் தன்னை வந்தடைந்த புது அனுபவம் கனவா அல்லது நனவா என்று பிரித்தறிய இயலாத பித்துநிலையில் தன்னிச்சையாக எழுச்சியுற்று விரிவடையும். பல இளம் வாசகர்களின் நெஞ்சில் ஜெயமோகன் உருவாக்கிய இந்த மனஎழுச்சி அவர் அடைந்த முக்கியமான வெற்றி. இந்த வாசகர்கள் எதிர்காலத்தில் எழுத்தாளர்களாக ஆகலாம். ஆழ்ந்த சிந்தனையாளர்களாகவும் மாறலாம். விரிவான விமர்சனப்பார்வை கொண்டவர்களாகவும் உருவாகலாம். வாசக அனுபவத்தையே மனநிறைவான அனுபவமாக எண்ணித் திளைத்திருக்கலாம். ஆனால் இப்படி பாதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முடிவுகளுக்குப் பின்னால் உந்துசக்தியாகச் செயல்படுவது ஜெயமோகன் உருவாக்கிய மனஎழுச்சியே விளங்கும்.

தீர்மானமான குரலில் முன்வைத்தாலும் தன் கட்டுரைகளில் ஜெயமோகன் பெரும்பாலும் தீர்மானமான முடிவுகளை முன்வைப்பதில்லை. அவர் கட்டுரைகள் சில பொதுவான பிரிவுகளை எப்போதும் கொண்டிருக்கும். வாசகன் தடுமாறும் ஒரு கேள்வியை முதலில் ஜெயமோகன் தன்னுடையதாக்கிக் கொள்கிறார். பிறகு அக்கேள்விக்குரிய பொருத்தமான விடைகளை எல்லாத் திசைகளிலிருந்தும் திரட்டித் தொகுத்து முன்வைக்கிறார். இப்போது மனம் இரண்டுகிளைகளாகப் பிரிந்துசெல்லும் இரு பாதைகளின் சந்திப்பில் நிற்கும் அனுபவத்தை அடைகிறது. ஒன்று, தன் கேள்விக்குரிய விடையைப் பெற்று எளிய முறையில் நிறைவடைய முடியும். அல்லது தன் கேள்விக்கும் இந்த விடைகளுக்கும் நிகழும் உள்மனச்சமர்வழியாக இன்னொரு பெரிய கேள்வியையும் உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இரண்டாவது பதையைத் தேர்ந்தெடுத்து பயணத்தைத் தொடரும் வாசகனின் மனம் சிற்சில கணங்களுக்குள் மீண்டும் இன்னொரு இரட்டைப்பாதைச் சந்திப்பின் முனையில் நிற்கும். கணக்கின்றி வளரும் இத்தகைய சாத்தியப்பாடுகள்வழியாக கண்ணுக்குப் புலப்படாதவகையில் நிகழும் விவாதத்தன்மைதான் முதலில் குறிப்பிட்ட மனஎழுச்சியின் ஊற்றுக்கண்.

எண்பதுகள் தமிழ்நாவல் உலகத்தின் மிகப்பெரிய சோதனையான காலகட்டம் என்றே சொல்லவேண்டும். விமர்சனம் என்னும் பிரம்பைக் கண்டு மிரளுபவர்களாக மாறித் தவித்தார்கள் படைப்பாளிகள். கண்ணுக்குத் தெரியாத தடுமாற்றத்துக்கும் குழப்பத்துக்கும் ஆட்பட்ட படைப்பாளிகளால் நாவல் உலகம் ஒருவித தேக்கநிலையில் உறைந்திருந்தது என்றே சொல்லவேண்டும். அந்தத் தேக்கத்தை உடைத்ததில் ஜெயமோகனுக்கு பெரும்பங்கு உண்டு. அவருடைய விஷ்ணுபுரம் தமிழ்நாவல் உலகுக்கு புதிய ரத்தத்தையும் சக்தியையும் ஊட்டிய வரவு. விமர்சகர்கள் சூட்டும் மாலைகள்வழியாகவே படைப்பாளிகளுக்கு பெருமையும் முக்கியத்துவமும் கூடுகிறது என்கிற கற்பனையை உடைத்து, தன் படைப்புகள் தாங்கிநிற்கும் வலிமையாலும் சமூக உறவாலும் மட்டுமே சிறுகச்சிறுகப் பெருகி மிகப்பெரும்பான்மையான முக்கியத்துவத்தை ஒரு படைப்பாளி தானாகவே கண்டடையமுடியும் என்கிற நம்பிக்கையை ஜெயமோகன் தன் நாவாலன விஷ்ணுபுரம் வழியாக சக படைப்பாளிகளுக்கும் இளம்படைப்பாளிகளுக்கும் வழங்கினார்.

விஷ்ணுபுரம் தொடங்கிவைத்த பாதையில் தமிழில் இன்று குறைந்தபட்சம் முக்கியமான முப்பது நாவல்களாவது எழுதப்பட்டுவிட்டன. ஆரம்பத் தேக்கத்தை விஷ்ணுபுரம் உடைத்தெறிந்திருந்திக்காவிடில், இந்த அளவுக்கு நாவல்கள் ஒருவேளை எழுதப்படாமல் போயிருக்கலாம். அல்லது எழுதுவதற்கான காலம் இன்னும் கொஞ்சம் பிந்தியிருக்கலாம்.

விஷ்ணுபுரத்தைத் தொடர்ந்து பின்தொடரும் நிழலின் குரல், காடு, ஏழாம் உலகம், கொற்றவை என வெவ்வேறு களங்களில் அமைந்த முக்கியமான படைப்புகளையும் தந்திருக்கிறார் ஜெயமோகன். மானுடவாழ்வின் அடிப்படையான கேள்விகள்பால் அவருக்குள்ள ஈடுபாடும் இடைவிடாத தேடலும் கைக்குக் கிடைக்கிற எளிய விடைகளில் அவ்வளவு விரைவில் நிறைவுறாத போக்கும் மேலும்மேலும் பல புதிய விடைகளைநோக்கி புதிய திசைகளில் அவர் நிகழ்த்தும் பயணங்களுக்குத் தூண்டுகோல்களாக அமைகின்றன. இந்தப் பயணங்களை அறிவதும் தமக்குள் ஆழ்ந்து விவாதிப்பதும் இளம்படைப்பாளிகளுக்கு ஒரு சிறந்த படைப்பூக்க முயற்சியாக அமையக்கூடும்.

ஜெயமோகனுடைய இன்னொரு வலிமை அவருக்குள்ள பலதுறை சார்ந்த ஆழ்ந்தஅறிவு. முக்கியமாக தத்துவத்துறை. விரிவான படிப்புப்பழக்கம் உள்ளவர் அவர். எதைப் படித்தாலும் அதன் முக்கியமான பகுதிகளை ஆழ்ந்த சித்திரங்களாக மாற்றிப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி அவருக்கு இருக்கிறது. அது வழங்கக்கூடிய உண்மையை ஒரு விளையாட்டைப்போல வேகமாகவும் எளிமையாகவும் இயங்கி தனக்குள் உடனடியாகக் கண்டடைகிaறர். பிறகு, அந்த உண்மையை வேறு பல துறைகளின் உண்மைகளோடு பொருத்திப்பார்ப்பதால் கிட்டக்கூடிய விடைகளை நோக்கி நகரத் தொடங்குகிறது அவர் மனம். சின்னச்சின்ன கேள்விகளை பெரியபெரிய கேள்விகளாக வடிவமைத்துக்கொள்கிறார். சின்னச்சின்ன விடைகளை விரிவான பெரியபெரிய விடைகளாகவும் கட்டியெழுப்புகிaறர். சலிப்பில்லாத இந்த முயற்சி ஜெயமோகனுடைய எழுத்துக்கு ஒரு பன்முகத்தன்மையை வழங்குகிறது. இதனால் மிக எளியவகையில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்தைநோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறார் ஜெயமோகன். ஒரு காட்டு யானையைப்போல. ஒரு வாசகனால் இவர் இப்படி என்று எதையும் வரையறுத்துக்கொள்ள இயலாத சித்திரமாகவும் இருக்கிறார் அவர். கனவில் கண்ட சிலையைப்போல.

கடந்த இருபதாண்டுகளில், கருத்துகளை வேகமாக முன்வைத்து வாதிடநேர்கிற தருணங்களில் தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தரக்கூடிய சில கூடுதல் சொற்களை எழுத்துமொழியிலும் பேச்சுமொழியிலும் ஜெயமோகன் பயன்படுத்தியதுண்டு. சமன்செய்து சீர்தூக்கிப் பார்க்கும் இத்தருணத்தில் அவற்றுக்கு எந்தப் பொருளும் இல்லை. அவையனைத்தும் உலர்ந்த சருகாகி மண்ணோடுமண்ணாகக் கரைந்துபோய்விட்டன. இன்று நிலைத்தும் உயர்ந்தும் நெடுமரங்களாக நிற்பவை அவருடைய படைப்புகள். இன்று ஜெயமோகனுக்குக் கிடைத்திருக்கக்கூடிய கௌரவத்தைப்போல இன்னும் பலமடங்கு கௌரவத்துக்குத் தகுதியுள்ளவராக நிலைநிறுத்திக் காட்டுபவை அவை.

This entry was posted in ஆளுமை, நிகழ்ச்சி, வாசிப்பு and tagged , . Bookmark the permalink.

One Response to சிகரத்தில் நிற்கும் ஆளுமை :பாவண்ணன்

  1. radhakrishnan says:

    பாவண்ணனின் ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே வழிமொழியத் தக்கவை. இதை யார் மறுக்க முடியும்?
    ஜெயமோகனுக்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s