தேவதேவனின் கவிதையுலகம்

மிழ் கவிதையுலகில் தேவதேவனின் இடம் அனேகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று . முற்றிலும் ஆரவாரமற்ற , எப்போதும் விசித்திரமான தனிமை சூழ்ந்த , இந்த மனிதர் கடந்த 20 வருடங்களாக எழுதி வருகிறார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சகஜமாக பேசவோ , மற்றவர்களிடம் உரையாடவோ முடியாத ஒரு விசித்திரமான அந்தரங்கத் தன்மை உடையவர் . குறிப்பாகச் சொல்லப்போனால் அவர் தன் கவிதைகளை சம்பந்தப்படுத்தாமல் எதையுமே பேசுவது இல்லை. இலக்கிய விஷயங்கள் மட்டுமல்ல ,சாதரண அன்றாட விஷயங்கள் கூட கவிதையுடன் தொடர்பு படுத்தப்பட்டே அவர் மனதில் எழும்.இலக்கிய வம்புகள் ,கோபதாபங்கள் ,அரசியல்த் தரப்புகள் ,சித்தாந்த விவாதங்கள் ஆகியவற்ரில் இருந்து மூற்றிலும் அப்பாற்பட்டது அவரது உலகம். கரிய சிறிய உடலும் , பளிச்சிடும் கண்களும் கொண்ட இந்த சிறு மனிதர் ஒரு கோணத்தில் அவரது சகமனிதர்களால் [ சரியாகவே] பித்தர் என்று கணிக்கப் படுகிறார். 

தேவதேவன் இளம் வாசகராக சுந்தர ராமசாமியின் நண்பர்வட்டச் சந்திப்பு நிகழ்ச்சியான ‘ ‘ காகங்கள் ‘ ‘ கூட்டத்துக்குச் சென்று இலக்கிய அறிமுகம் பெற்றவர் .தன் முதல் கவிதைத் தொகுப்பான ‘ ‘ குளித்துக் கரையேறாத கோபியர்கள் ‘ ‘ க்கு அவர் சுந்தர ராமசாமியிடம் முன்னுரை கேட்டார் , சுந்தர ராமசாமிக்கு இவர் ஒரு கவிஞர் என்றே தோன்றவில்லை. அத்தொகுப்பு பிறகு ‘ பிரமிள் ‘ ளால் அறிமுகம் செய்யப்பட்டது. அதீதமான கற்பனாவாதப்[ரொமான்றிக்] பண்பு உள்ள தொகுப்பு அது. கச்சிதமான மின்னணுப்பொறி போல கவிதையை ஆக்க முயன்று வந்த க நா சுப்பிரமணியத்தின் யுகத்தில் , அப்போக்கின் மிகச்சிறந்த உதாரணமான சுந்தர ராமசாமியால் தேவதேவன் நிராகரிக்கப்பட்டதும் , க நா சு வால் அங்கீகரிக்கப் படாத பிரமிளால் அவர் ஏற்கப்பட்டதும் முக்கியமான விஷயங்கள் .

தேவதேவனை அறிமுகம் செய்யும் பிரமிள் அவரது கவிதையின் ஊற்றை சரியாகவே அடையாளம் கண்டு முன்வைத்தார்.

பக்தி யுகத்து கவிதைகள் போல ஒரு ஆழமான உணர்ச்சி நிலையை , பரவச நிலையை , அடையாளம் காட்டுபவை அவரது கவிதைகள் என்றார் பிரமிள் . நவீனத்துவ [மாடர்னிஸ்ட் ] கவிதையின் சமநிலையும் , இறுக்கமும் , தருக்கத் தன்மையும் கொண்ட கவிதைகளில் இருந்து முற்றும் மாறுபட்டவை இவை. அக்கால வாசகர்களாலும் , சககவிஞர்களாலும் , விமரிசகர்களாலும் இவை ஏற்கப்படவில்லை. தன் இயல்பின் படி தேவதேவன் இவை குறித்து கவலை கொள்ளவுமில்லை. அவர் கவிதையே வாழ்க்கையென்றானவர். அதன் பித்து -பரவச நிலையில் வாழ்பவர் . அவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. அவரை அடையாளம் கண்டு கொண்ட சில வாசகர்களும் இருக்கவே நூல்வடிவம் பெற்றன.

ஒரு தலைமுறைக்கு பிறகு நவீனத்துவத்தின் கொடி தாழ்ந்த பின்பு தேவதேவன் கவனிக்கப்பட்டார். கவிதையும் கலைகளும் அவற்றின் ஆதி உத்வேகத்தினாலேயே ஆக்கப்படுகின்றனவே ஒழிய , சமநிலையினால் அல்ல என்று பின் நவீனத்துவ அழகியல் சொல்ல ஆரம்பித்தபோது தேவதேவனின் இடம் உறுதிப்பட ஆரம்பித்தது.1998 ல் நான் தேவதேவனை பற்றி ஒரு விமரிசன நூலை எழுதி வெளியிட்டேன். [ ‘ ‘நவீனத்துவத்துக்குப் பின் தமிழ்க் கவிதை -தேவ தேவனை முன்வைத்து ‘ ‘ கவிதா பதிப்பகம் ,சென்னை வெளியீடு]

 

தேவதேவனின் கவிதைகளின் சிறப்பம்சங்கள் என்ன ? அவரது கவிதைகள் எப்போதும் நான் நான் என்று பேசினாலும் அவரது நான் நவீனத்துவ யுகத்து தத்துவ தரிசனங்களால் தொகுக்கப் பட்டதும் சமூகம் , மானுடம் போன்றவற்றில் இருந்து அன்னியப்படுத்திக் கொள்வதனூடாக மட்டுமே தன்னை அறியமுடிவதுமான நான் அல்ல . தமிழ் நவீனக்கவிதையில் நாம் கண்டு பழகி , மெல்ல அலுத்துப்போன அந்த ‘நான் ‘ இன் அந்தரங்க டைரிக்குறிப்புகளுக்கு நேர் மாறாக தேவதேவனின் நான் மிக மர்மமான ,அதே சயம் கவிதைகளில் மிக எளிமையான அழகுடன் வெளிப்படுகிற ஒரு ‘ நான் ‘ ஆகும் . அது நம் மரபில் இருந்து முளைத்ததும் ,சமகால அல்லல்களையும் துயரங்களையும் உள்வாங்கிக்கொண்டதுமான ஒரு சுயப் பிரக்ஞை. அதை நாம் பக்தியுகக் கவிதைகளில் காணலாம்

இந்த ‘ நான் ‘ ஒரு பார்வையில் இன்றில் வேரூன்றியவன் , இன்னொரு கோணத்தில் காலாதீதமானவன். [ ஒரு உரையாடலில் தேவதேவன் அதீதமான சுயநம்பிக்கையுடன் விழிகள் பளிச்சிட ‘ ‘ நான் தான் யேசு 1 ‘ ‘ என்ற போது அவை நெளிந்தது] தன் முழுமையினை குறித்த அவனது பிரக்ஞை ,அவனுடைய முடிவற்ற தேடல் ,அவன் தோல்விகள் எல்லாமே இந்த இரு தளங்களிலும் அடையாளப்படுத்தப்பட வேண்டியவை.
தேவதேவன் கவிதைகள் குறித்து நவீனத்துவ யுகத்து புகார் ஒன்று உண்டு. அவரது கவிதைகளில் அவ்வப்போது உபதேசம் செய்யும் ,அறைகூவும் ,அழுது புலம்பும் அதீத சுயத்தோரணை வந்து விடுகிறது என்பது தான் அது . கவிஞனை மற்ற மனிதர்களின் சகஜ மனநிலையில் மட்டும் வைத்துப் பார்த்து , அவர்களின் கச்சிதமான பிரதிநிதியாக உருவகித்துக் கொள்ளும் பார்வையின் விளைவு இப்புகார்.

ஒரு மனிதனாகக் கவிஞன் சாதாரணமானவனாக இருக்கலாம். ஆனால் கவிதை ஒரு போதும் சாதாரணமல்ல. அதை எழுதும் போது அம்மனநிலையில் அக்கவிஞனும் சாதாரணமானவனல்ல. அந்நிலையில் ‘ ‘கேளடா மானுடா! ‘ ‘ என்று அவன் குரல் எழுவது முற்றிலும் இயல்பே .வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் ,ஒரு பழங்குடி சமூகத்துக்கு சாமியாடி எப்படியோ அப்படியே நமக்கு கவிஞன். அவனில் நம் மூதாதையரை ஆவேசித்திருந்த தெய்வங்கள் நம்மிடம் உரையாடும் பொருட்டு குடியேறுகின்றன. அவன் நம் ஆழ்மனம் வரை தோண்டப்பட்ட ஆழ்துளைக்கிணறு .

தேவதேவனின் கவிதைகளில் அவரது கவிதை சுயத்தின் குறியீடாக ‘ வீடு ‘ என்ற படிமம் வந்தபடியே உள்ளது . ‘ ‘ கவனி ,நீ இளைப்பாறு கணமே வீடுகள் தோன்றுமிடம் ‘ ‘ என்று ஒரு கவிதையில் சொன்னாலும் கூட அவரது கவிதையில் வீடு என்ற படிமம் பலவாறாக வளர்ந்து கொண்டே உள்ளது .

 

நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்காக கட்டிக் கொண்டது
வானம் இறங்க விரித்த
தன் மொட்டை மாடிக்களத்தை
.
என்று ஒரு கவிதை கண்டடைகிறது.

இரண்டு வீடுகளை
மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது
ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக் கொள்ள வேண்டும்
மற்றொன்றை சிட்டுக்குருவியிடமிருந்து

என்று பிறிதொரு கவிதை . தேவதேவனின் வீடு தானில்லாத பெருவெளியின் முடிவின்மையில் இருந்து தனக்கென செதுக்கி எடுத்துக் கொண்ட ஒரு சிறு இடம் ,ஒரு சதுர சுயம். அதை ஒரு கணம் மார்புடன் அணைத்தும் , மறுகணம் வானோக்கி ஏங்கியும் அவரது கவிதை
மானுடத்தின் முடிவற்ற நாடகத்தை நடத்திக்கட்டுகிறது .

 

தேவதேவனின் கவிதைகளில் அவரை சுற்றி பரந்து ,அவரை அணைத்து தன் அனைத்து இருப்பாலும் அவருடன் உரையாடும் பேரிருப்பான இயற்கையின் குறியீடாக ‘ மரம் ‘ வருகிறது . ஒவ்வொரு கவிதையிலும் வளர்ந்து மாற்றமடையும் ஒரு உயிர்ப்புள்ள படிமம் இது . அதன் ‘ பொருள் ‘ ஒருபோதும் முழுமையடைவது இல்லை. தன் கருணை , அக்கருணையை புறக்கணித்தும் சுரண்டியும் வாழ நேரும் வாழ்வு தரும் கசப்பு , என பல தளங்களில் மரம் விரிவடைகிறது.
சிவந்த பூக்களுடன்
சன்னலை உரசும் மரக்கிளை
உன் முத்தம்
கூரையின் மீது குனிந்து
உச்சி முகர்கிறது உன் அன்பு ஸ்பரிசம் …

வீட்டுக்கு எப்போதுமே ஒரு மன்னிப்புகோரும் பாவனை உள்ளது .பொருந்தாத இடத்துக்கு வந்து விட்டதுபோலவே அது எந்த
மண்ணிலும் தன்னை உணர்கிறது. சில சமயம் அந்தச் சிறுமையை வெல்ல தருக்கி நிமிரும் பாவனையைகூட அது மேற் கொள்ளக்கூடும்
ஆனால் ஒரு மரத்தின் அடியில் அது அமைதிகொள்கிறது, தாய் அருகே மகவு போல!

 

குருவிக்கூடு

நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டை மாடியை தந்தது வீடு

இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்

அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி!

தேவதேவன் கவிதைகளில் மூன்றாவது முக்கிய படிமம் ‘ பறவை ‘ .விண்ணின் ஒளியுடனும் மகத்துவத்துடனும் மண்ணுக்கு வருவது அது.மரம் மண்ணில் இருந்து விண்ணுக்கு ஏற முயல்வதற்கு விண் அளிக்கும் பதில் போல. பிசிராந்தையார் கண்ட தென் குமரியாடி வடமலை செல்லும் அந்த எல்லைகள் இல்லாத பறவை தான் இது. ஆழ்வார் ‘ ‘ பொ ன்னுலகாளீரோ புவன முழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்! ‘ ‘ என்று முகுந்தனுக்கு தூது விட்ட பறவை .

 

ஒரு சிறு குருவி

என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
விருட்டென்று தாவுகிறது அது
மரத்துக்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்வி பாய்கிறது
மரணமற்ற பெருவெலளிக்கடலை நோக்கி

சுரீலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின் ஆனந்த பெருமிதத்துடன்

நீந்திய படியே திரும்பிப்பார்த்தது வீட்டை


ஓட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
வீட்டு அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.

தேவதேவனின் கவிதையின் இயக்கத்தை குறுக்கி சூத்திரப்படுத்தும் முயற்சியல்ல இது.அவரது கவிதைகள் இத்தகைய முதல் கட்ட புரிதலையும் வகைப்படுத்துதலையும் எப்போதுமே தாண்டிச்செல்வபவையாகவே உள்ளன. பெரும்பாலான முக்கிய கவிஞர்களுக்கு இப்படி அடிப்படை படிமங்கள் சில இருக்கும். இவை அவர்களு டைய தனிமொழியில் உள்ள சொற்கள் .இவற்றை கோர்த்து தான் அவர்கள் பேசுகிறார்கள் .அவர்களை புரிந்துகொள்ள மிக முக்கியமான வாசல்கள் இப்படிமங்கள் .
எந்த முதல்தரக் கவிஞனையும் போலவே தேவதேவனின் கவிதையும் எந்த புறவய தத்துவ நிலைபாட்டையும் கொண்டதல்ல . எதையும் முன்வைப்பதல்ல. அதன் அழகே அதன் செய்தி. அதன் அழகே அதன் நிலைபாடு. பிரமிள் ஒருமுறை தன் கவிதைகள் வைரங்கள் என்று சொன்னார் என்பதை தேவதேவன் ஒரு இடத்தில் மேற்கோள் காட்டுகிறார். வைரங்கள் ‘ உபயோகமற்றவை ‘ ‘ஒரு பார்வையில் அவை ஆடம்பரங்கள் கூட! ஆனால் இந்த உபயோகமற்ற பொருளுக்கு எந்த உபயோகமுள்ள பொருளையும் விட அதிக மதிப்பு தந்திருக்கிறான் மனிதன். காரணம் அது ஒரு அடையாளம் என்பதே .அந்த அடையாளம் அவனுக்கு எந்த நுகர்வையும் விட முக்கியமானது என்பதே. நுகர்வே ஒரே இன்பமாக ஆன வாழ்வை நோக்கி வெறும் அடையாளம் மட்டுமான வைரம் விடுக்கும் செய்தி என்ன ? -என்கிறார் தேவதேவன் அந்தப் பேட்டியில்.[ ‘கவிதை பற்றி … ‘ தேவதேவனின் உரையாடல் .]
தீவிர அனுபவத்தின் நேரடியான பரவசம் நிரம்பிய மொழியால் அடையாளப்படுத்தப்பட்டவை தேவதேவனின் கவிதைகள்.அப்பரவசத்தை மொழியினூடாக தொட்டுணரும் கூரிய வாசகருக்கு மட்டும் உரியவை. மொழியின் நுட்பமான சாத்தியங்களிலேயே எப்போதும் தன் வெளிப்பட்டை கண்டடைபவை. வசன நடையில் நீண்டு , தருணம் வரும்போது மட்டும் இயல்பான உத்வேகமிக்க இசைத்தன்மையை அடைபவை.

யார் உண்டாக்கிக் கொண்டிருப்பது
நூறு நூறு மின்னல்களினால் அறியப்படும்
இவ்வாளின் சுழற்சியை ?
எவருடைய சிந்தனைகள் இவை ?

போன்ற வரிகளில் உரைநடையின் கற்பனை வீச்சே அழகையும் உத்வேகத்தையும் உருவாக்கிவிடுகிறது.

மலை உருகி பெருக்கெடுத்த நதி
மடியுமோ நிரந்தரமாய் ?

அவ்வளவு பெரிய கனலை
வெளிப்படுத்த வல்லதோ
ஒரு சிறு சொல் ?

போன்ற வரிகளில் உள்ளடங்கி ஒலிக்கும் இசையழகே அதன் உத்வேகத்தை தொடர்பு படுத்துகிறது. அபூர்வமாக இவ்விரு தளங்களும் அழகாக முயங்கிய கவிதை சாத்தியமாகிறது.

அமைதி என்பது…

தேவதேவனின் கவிதை வந்தமர்ந்த பறவைக்கும் எழுந்துசென்ற பறவைக்கும் நடுவில் முடிவின்றி ஆடும் ஒரு மரக்கிளை .

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்

அமைதி என்பது மரணத் தறுவாயோ ?

வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?

வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.

அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ ?

எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?


தேவதேவனின் நூல்கள்


1] குளித்து கரையேறாத கோபியர்கள்
2]மின்னற் பொழுதே தூரம்
3] மாற்றப்படாத வீடு
4] பூமியை உதறி எழுந்த மேகங்கள்
5]நட்சத்திர மீன்
6]நுழை வாயிலிலேயே நின்று விட்ட கோலம்
7]அந்தரத்திலே ஒரு இருக்கை
8]புல்வெளியில் ஒரு கல்
9]சின்னஞ்சிறிய சோகம்


கிடைக்குமிடம் , கவிஞர் விலாசம்


தேவதேவன்
4 –5 மணி நகர்
தூத்துக்குடி
சிதம்பரனார் மாவட்டம்
தமிழ் நாடு
இந்தியா
போன் 0462 338240


[நன்றி .சொல் புதிது 6]
**
குறிப்பு: கவிதைகள் பக்கத்தில் தேவதேவனின் கவிதைகள் தேர்வு ஜெயமோகன்

 

 

CopyrightThinnai.com

This entry was posted in கவிதை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s