பன்னாலால் பட்டேலின் 'வாழ்க்கை ஒரு நாடகம்'

குஜராத்தி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக, நவீன குஜராத்தி உரைநடையின் பிதாமகராக காந்தி கருதப்படுகிறார். பெரிதும் பக்திக்கே பயன்பட்டுவந்த நெகிழ்ச்சியான, இசைத்தன்மைகொண்ட , அலங்காரம் நிறைந்த உரைநடையை காந்தி அக்கால பிரிட்டிஷ் உரைநடையின் இடத்துக்குக் ஒரே தாவல் மூலம் கொண்டுவந்தார். கறாரான கூறுமுறை, கச்சிதமான சொற்றொடர்கள், உணர்ச்சிகள் வெளிப்படாத நேரடியான எளிய நடை ஆகியவை காந்திக்கே உரியவை. அது குஜராத்தி இலக்கியத்தை சட்டென்று அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்றது.

உரைநடையில் வரும் மாற்றம் என்பது உண்மையில் கண்ணோட்டத்தில் வரும் மாற்றமேயாகும். அதுவரை வாழ்க்கைக்கு அதீதமான விஷயங்களைப்பேசிவந்த இலக்கியம் சட்டென்று நேரடியான அன்றாட யதார்த்ததை நோக்கி திரும்பியது. யதார்த்தவாதம் இலக்கியத்தில் பிறந்தது. குஜராத்தி யதார்த்தவாதத்தில் காந்தியத்தாக்கம் மிகவும் அதிகம்.

காந்திய யுக படைப்பாளிகளில் முதன்மையானவர் பன்னாலால் பட்டேல். அவரது வாழ்க்கை ஒரு நாடகம் , மூலத்தில் ‘மானவீனி£ பவாயி ‘ குஜராத்தி யதார்த்தவாதத்தின் ஒரு பெரும் சாதனையாகவே கருதப்படுகிறது. 1946ல் எழுதப்பட்டு 1973ல் தமிழில் மொழியாக்கம்செய்யபப்ட்ட இந்நாவல் இன்றும் அதன் அடிப்படையான சத்திய வேகத்தால் முக்கியமான படைப்பாக விளங்குகிறது.

இது குஜராத்தின் வரண்ட மாளவம் பகுதியில் நிகழும் கதை. எண்பத்தைந்து வயதான கிழவன் காலுவின் நினைவுகள் வழியாக அதற்கும் முந்தைய ஒரு நூற்றாண்டுக்கால விவசாய வாழ்க்கை விரிகிறது. காலு ஹ¥க்காவைப் பிடித்தபடி கீழ்த்திசையில் மௌனமாக எழுந்து நிற்கும் குன்றுகளையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் அங்கே எதைப் பார்க்கிறான் என்று ஊராருக்குப் புரிவதில்லை. அவனால் தெளிவாகப் பதில் சொல்லவும் முடிவதில்லை. அவன் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான். ‘அந்தக் குன்றுகளில் அதற்கு அப்பால் உள்ள குன்றுகளில் அதற்கு அப்பால் கூட நான் என் இழந்துபோன வாழ்க்கையைத்தேடுகிறேன்.!’ குன்றுகள் காலத்தின் வடிவமாகி நிற்கின்றன. நிகழ்ந்தவற்றுக்கெல்லாம் மௌன சாட்சியங்களாக நிற்கின்றன

வாலா கிழவனுக்கு வயதான காலத்தில் காலு மகனாகப் பிறந்தான். அவனுக்கு ஏற்கனவே அரை டஜன் குழந்தைகள் பிறந்து இறந்தன. வாலாவின் தம்பி பாரமாவும் அவன் மனைவி மாலி இருவரும் அவனுடைய சொத்துக்காக காத்திருந்தனர். அப்போது பிறந்த குழந்தை காலு. ஒருபக்கம் தந்தைக்கு அவன் இறைவனின் வரமாக இருந்தான். மறுபக்கம் அவனை வெறுக்கும் அவன் மரணத்தை விரும்பும் ஒரு குடும்பம். உடலுடன் பிறந்த உறுப்புகள் போன்று ஒருபோதும் விலக்க முடியாது கூடவே வரும் உதிர உறவுகள். வாழ்க்கை முழுக்க காலுவின் கூடவே இருந்து தீராத வலியைக் கொடுக்கின்றன அவை. இப்படி கறுப்புவெளுப்பினாலான ஒரு சதுரங்கக் கட்டத்தில் காலு பிறந்து விழுகிறான்.

அதன் பின்னர் நிகழ்வது மிக நீண்ட உக்கிரமான வாழ்க்கைப்போராட்டம். இயற்கையின் ஆட்படுத்தும் சக்திகளுடனும் சமூகத்தின் கட்டுப்படுத்தும் சக்திகளுடனும் ஒவ்வொரு தனிமனிதனும் கொள்ளும் சமர். ஒவ்வொரு துளியிலும் வாழ்க்கை ஒரு மரணப் போராட்டமாகவே உள்ளது. காலுவுக்கு இரண்டுவயதானபிறகும் கூட அவனுக்கு ஜாதகம் கணிக்க வாலா பட்டேலால் இயலவில்லை. பிராமணர்களுக்கு அளிப்பதற்கு கையில் பணமில்லை. மாலியின் குத்தல்பேச்சுகளையும் வசைகளையும் கேட்டு கொதிக்கிறான். அப்போது அங்கே வரும் காசிப் பண்டிதன் ஒருவன் ஒருவேளை உணவை கூலியாகப் பெற்றுக்கொண்டு காலுவின் ஜாதகத்தைக் கணிக்கிறான். அவனுக்கு ராஜ வாழ்க்கை அமையும் என்று சொல்கிறான். காலுவின் ‘ராஜ வாழ்க்கை’யே இந்நாவல் எனலாம்

காலுவின் குழந்தைமணமும் அப்படியெ. பெண்ணுக்கு பரிசம் போட்டு மணம் செய்யவேண்டிய சாதி. பரிசத்துக்குப் பணம் இல்லை. பல சதிகள் சிக்கல்களைத் தாண்டி மருத்துவச்சி பூலியின் தீவிரத்தால் அவனுக்கு ராஜி மனைவியாக நிச்சயிக்கப்படுகிறாள். காலு வளர்கிறான். கைகால்கள் உரம் பெற்றதுமே நிலத்தில் உழுதுவாழத்தொடங்குகிறான். நோயுற்று இறக்கும் வாலா தன் தம்பி பாரமாவை அழைத்து ‘என் மகனை உன்னிடம் ஒப்படைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு இறக்கிறான்

வறுமையை உடலின் ஒவ்வொரு கணுவாலும் போரிட்டு அடக்கவேண்டிய நிலையில் உள்ள அம்மக்களிடையே எரியும் குரோதத்தின் வெம்மையை மீண்டும் மீண்டும் நாவல் சொல்கிறது. அவர்களை மனிதர்களாக ஆகவிடாமல் புழுக்கூட்டங்களாக ஆக்க முனைவது அவர்களுள் எரியும் அந்த குரோதமும் கூடத்தான். இயற்கையின் வரட்சியை விர குரூரமானதாக இருப்பது அந்த அகவரட்சிதான்.குறிப்பாக பாரமா பட்டேலின் குடும்பம், அவன் மனைவி மாலி. பொறாமையால் ஆன அகம் அவளுக்கு. ஆகவே ஒருபோதும் அவளுக்கு இன்பமில்லை. தன் ஓரகத்தியின் குடும்பத்தின் துயரம் மட்டுமே அவளுக்கு சிறிதேனும் இன்பத்தை அளிக்க முடியும். ஒவ்வொன்றாக அவள் அவர்களுக்கு தீங்குகள் இழைக்கிறாள். எப்போதும் சதிகள் செய்துகொண்டிருக்கிறாள்.பொறாமையால் அவள் பைத்தியம் போலவே ஆகிவிடுகிறாள். அவளைக்கண்டு அவள் கணவனும் குழந்தைகளுமே அஞ்சுகிறார்கள். தீய ஆவி என்று கற்பனைசெய்கிறார்கள்.

மிக நுட்பமாக இக்கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் பன்னாலால் பட்டேல்.மாலி முதிர்ந்து கிழவியாகி மடிவதுவரை அடிப்படைக் குணமான குரோதத்தை விட்டு விலகுவதேயில்லை. இத்தகைய கதாபாத்திரங்கள் ஒருதலைபட்சமாகவோ தட்டையாகவோ சித்தரிக்கப்படும் அபாயம் எப்போதும் உண்டு. ஆனால் அவளுடைய இயல்பை ஓரிசிலச் சொற்களில் சொல்லிச்செல்லும் ஆசிரியர் மிகுந்த நம்பகத்தன்மையை அதற்கு உருவாக்குகிறார். மாலியை துன்புறுத்துவது அவளுக்குள் உறையும் தீமையைப்பற்றிய அவளுடைய தன்னுணர்வேதான். ”ஆமாம் நான் கெட்டவள். நான் பொறாமைக்காரி .என்னை எல்லாரும் வெறுக்கிறார்கள். ‘ என்றுதான் அவள் கூவி அழுகிறாள். ஆனால் அவளுடைய அடிப்படை இயல்பு காரணமாக மேலுமேலும் அதில் ஈடுபடவே அவளால் முடிகிறது. காரணம் அவளுடைய மனம் அதில்தான் இன்பத்தைக் கண்டுகொள்கிறது

அவள் கணவன் பராமா எளியமனிதன். மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவன். பின்னர் அண்ணா தன்னிடம் ஒப்படைத்துப்போன காலுவுக்காக அவனுடைய அறவுணர்வு மேலெழுகிறது. மனைவியை எதிர்க்கிறான். அடிப்படையில் தந்தையைக் கொண்டிருக்கும் நாதா பட்டேலும் தாயை எதிர்க்கிறான். ஆனால் மாலியில் குடிகொள்ளும் குரோதம் ஒரு தீய ஆவியைப்போல. அது அழிவில்லாதது. அவள் மகன் நாநா பட்டேலின் வடிவில் அது அடுத்த தலைமுறைக்கும் நீள்கிறது.

ஆனால் நல்லியல்பு கொண்டவர்களால் அதன் எல்லையை விட்டு வெளியே வர முடிவதில்லை. மாலியின் சாபம் கேட்டு ஒரு கட்டத்தில் தாளமுடியாமல் வாலாவின் மனைவி பாய்ந்து வெளியே வருகிறாள். ”இதோபார் பத்தினிப்பெண் சாபம் கொடுக்கமாட்டாள். அதை நினைவில் வைத்துக்கொள். கொடுஞ்சூரி..” அதற்குள் கணவன் குறுக்கே விழுந்து தடுத்துவிடுகிறான். ‘பேசாதே பேசாதே… கடவுள் அவனுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டார்.போ உள்ளே போ.. உலகத்திலே சண்டையை விட பெரிய சாபக்கேடு வேறு ஒன்றுமில்லை’ .அந்த கைப்பிடியளவு நல்லியல்பை வைத்துக்கொண்டு பொறாமைய் எரியும் கொடும்பாலையை கடக்க முனிகிறது வாலாபடேலின் குடும்பம்.

வாலா இறந்தபின் தன் அன்னையுடன் அனாதையாகும் காலுவின் போராட்டம் மேலும் தீவிரமடைகிறது. ஆடிமாதத்தில் உழுவதற்கு மாடும் ஆளும் இல்லாமல் தாயும் சேயும் கண்ணிருடன் தவித்திருக்கிறார்கள். ஆடி மாதத்தில் விதைக்காதவனுக்கு புழுதிதான் விளையுமென்பது விதி. துணிந்த ரூபா மகன் காலுவுடன் அவளே வயலுக்குச் செல்கிறாள். கலப்பையை ஏந்தி உழுகிறாள். பெண் நுகத்தை தொடுவதா என்று கிராமமே கொந்தளிகிறது. மழை பொய்த்துவிடும் என்ற நம்பிக்கை. ‘நானும் என் மகனும் பட்டினி கிடந்து சாவதை விட இது மேல். அண்டிவாழக்கூடாது, உழைத்தால் என்ன தப்பு?’ என்கிறாள் ரூபா.

மழை சற்று தவறும்போது அது ரூபாவின் தவறால்தான் என்று மாலியிடமிருந்து வசை கிளம்புகிறது. ஊர் அதை நம்புகிறது. சாஸ்திரப்படி ரூபாவையே மண்ணில் போட்டு உழவேண்டும். கைகூப்பி பிரார்த்தனை செய்தபடி அவள் மண்ணில் நிற்கையில் மழை வருகிறது. அவளை இறைவன் அருள் பெற்றவள் என்று கொண்டாடுகிறது ஊர். ‘எப்படி இதை சாதித்தீர்கள், எப்படி இறைவனைத் தொழுதீர்கள்” என ஊர்ப்பெண்கள் கேட்கும்போது ரூபா சொன்னாள், ‘நான் இறைவனை தொழவில்லை, திட்டி சாபம்தான் போட்டேன். நான் வேண்டிக்கொண்டது இறந்த என் கணவனிடம்’ என்று.

காலுவின் வாழ்க்கையில் இறுதிவரை நீங்காத்துயரமாக ஆன ஒரு நிகழ்ச்சி அரங்கேறுகிறது. நாநா ராஜி மீது ஆசைகொள்கிறான். அவளை அடையத்துடிக்கும் அவன் தமையன் உதவியுடன் ராஜியின் தாய்மாமனை கைக்குள் போட்டுக்கொள்கிறான். லஞ்சம் கொடுத்து பஞ்சாயத்தாரை வளைகிறான். குஜராத்தில் பெண்ணைக் கிட்டத்தட்ட பெற்றோருக்கு காசு கொடுத்து வாங்கவேண்டும். பரிசத்தொகைக்காக ஆசைப்பட்டு பெற்றொர் என்ன செய்யவும் தயாராக இருக்கிறார்கள் காரணம் கைகால் திடமான ஒரு பெண் நன்றாக வேலைசெய்யக்கூடிய ஒரு மாடு போல, ஒரு சொத்து அவள். ரணசூட் தன் தம்பிக்காக ராஜியின் மாமா அசரும்படி கையில் இருக்கும் எல்லாவற்ரையும் எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். விளைவாக அவள் பெற்றோர் மனம் மாறுகிறார்கள்.

ஆனால் அந்த திருமணம் நடக்கவில்லை. நாநா முன்னரே கல்யாணமானவன். அதை பஞ்சாயத்தார்முன் சொல்லும் அவன் தந்தை பாரமா கல்யாணத்தை நிறுத்திவிடுகிறான். காலுவுக்கு நிச்ச்சயம் செய்யப்பட்ட ராஜி இன்னொருவனுக்கு மனைவியாகிறாள். ராஜியின் கணவ்னின் அழகில்லாத தங்கை பலீ காலுவுக்கு மனைவியாகிறாள். மனித வாழ்க்கை பஞ்சாயத்தாரின் விருப்பத்தின்படி கிராமத்தவ்ர்களின் உணர்ச்சிப்போக்குகளின்படி பகடையாடப்படுகிறது.

மிகையான உணர்ச்சிவேகங்கள் இல்லாமல் ஆனால் அழுத்தமாக இந்த வாழ்க்கைநாடகத்தை பன்னாலால் பட்டேல் உருவாக்குகிறார். நினைவுதெரிந்த நாள் முதல் அவளையே மனைவியாக எண்ணி அவள் அழகில் மயங்கி வளர்ந்தவன் காலு. அவர்கள் இருவரும் கணவன் மனைவியாகவே கற்பனை செய்துகொண்டபடி கிராமத்து தெருக்களில் விளையாடியவர்கள். அவனுக்குள் அவளுடைய பிரிவு பெரியதொரு புண்ணாக வலித்தபடியே இருக்கிறது. அவனல் அவளை அன்றி வேறு எவரையும் மனைவியாக கற்பனையே செய்ய முடியவில்லை. பலீ சீக்கிரமே அதை அறிந்துகொள்கிறாள். அவளை பிறந்தகத்திலிருந்து அழைத்துவருவதற்கே காலு முயலவில்லை. பின்னர் அழைத்துவருவதுகூட கடுமையான விவசாயவேலைகளை ஒருவனாக செய்து முடிக்க முடியவில்லை என்பதனால்தான்

இந்நாவலில் ராஜியின் கதாபாத்திரம் மிக அழகாகவும் நுட்பமாகவும் உருவாகிவந்துள்ளது. அவள் நெஞ்சின் ஆண்மகன் காலுதான். ஆனால் அவளை மீறிய சக்திகளால் அவள் வாழ்க்கை பந்தாடப்படுகிறது. மாணத்துக்குக் காத்திருக்கும் வறுமைமிக்க நோயாளிக்கு மனைவியாகிறாள். அவள் ஒருவாரம் கூட அங்கே வாழமாட்டாள் என்று ஊர் சொல்கிறது. அவள் அங்கே தன்னை பொருத்திக் கொள்கிறாள். அங்கே உழைக்கிறாள். மகிழ்ச்சியாகவே இருக்கிறாள். அவளுடைய கண்ணீர் மிகத் தனிமையில் அவள் மட்டுமே அறிய சொட்டிக்கொண்டிருக்கிறது. அதை காலு கூட அறியவில்லை. அவளுடைய மகிழ்ச்சி அவனை சினப்படுத்துகிறது. அவளுடைய குதூகல பாவனைக்குள் ஒளிந்திருக்கும் துயரை மிக அபூர்வமாக அவள் பாடும் பாடல்கள் வழியாகவே காலுகூட உணர்ந்துகொள்கிறான்

”அழுதுகொண்டே சிரிக்கவைத்தலும்
சிரித்துக் கொண்டே அழ வைப்பதும்
ஓ மாமியே
வாழ்க்கையின் கடையல் அல்லவா?
இந்தாருங்கள் மாமி
எடுத்துக் கொள்ளுங்கள் மத்து!

எப்போதாவது சந்திக்கும்போது ராஜி அவனுடன் பேசும் சொற்களுக்கு அப்பால் அவர்கள் கண்களும் சந்தித்துக் கொள்கின்றன.மறுகணமே தன் கூண்டுக்குள் அவள் புகுந்து மூடிக்கொள்கிறாள். பலீயை கூட்டிச்செல்லவரும் காலுவிடம் அவள் சொல்கிறாள். ‘ …நாம் மனிதர்கள். வீட்டுமாடுகளே வெளியேயிருந்து வந்த மாடுகளை துரத்த ஆரம்பிப்பது சரியா?” காலு சிரித்துக்கொண்டே அவளிடம் ” நீ என்னை மாடு என்றா சொல்கிறாய்?’ என்றான். நீ என்று அவன் அழைத்ததும் அந்த பழைய உறவை அவன் கண்களில் அவள் கண்டாள். அடுத்தக்கணமே அவள் அதைக் காணவில்லை என்று நினைத்துக் கொண்டாள்.’

நாநா மீண்டும் பஞ்சாயத்தாரை வளைத்து மீண்டும் பணத்தை இறைத்து ராஜியை அடைய முயல்கிறான். அவள் தன் நோயாளிக்கணவனை துறந்து தன்னிடம் வர வற்புறுத்துகிறான். அவள் பெற்றோரும் அதற்கு சம்மதித்துவிட்ட நிலை. அந்தச்செய்தி காலுவுக்கு கிடைக்கிறது. தன் வாழ்க்கையையே அழித்த நாநாவுக்கு ராஜி கிடைப்பதை தன் மரணமாகவே காலு நினைக்கிறான். இதைப்பற்றி அவன் ராஜியிடம் பேசும் இடம் இந்நாவலின் மிக நுட்பமான காட்சி. அவனுடைய பதற்றம் தன் சொத்தை எதிரி கொண்டுபோவதை தடுப்பதில்தான் என அவள் ஆத்மா உணர்கிறது. அது அவளை கூச வைக்கிறது. பட்டுபோல நழுவிச்செல்லும் அவளுடைய உரையாடலில் அவளுக்கு அவன் மீதான காதலும் ஏமாற்றமும் மாறி மாறி ஒளிர்கின்றன.

நான் நாநாவை மணந்தால் என்ன செய்வீர்கள் என்று அவள் கேட்க அவன் வேறு ஒன்றும் செய்யமுடியாவிட்டால் மகாத்மாக்களுடன் போய் சேர்ந்துகொள்வேன் என்கிறான். ராஜி ” இங்கே சாம்பலுக்கு குறைவேயில்லை.சொன்னால் இப்போதே பூசிக்கொள்ள யார் வீட்டு அடுப்பிலிருந்தாவது எடுத்துக் கொண்டுவந்து தருகிறேன்.” என்கிறாள். அவன் சினம் கொள்கிறான். அவள் அழுத்தமாக ‘ ராஜி அவ்வளவு பைத்தியமல்ல. இரண்டு வாழ்க்கை போதாதென்று….’ என்கிறாள். அவள் மனம் அவனுக்குப் புரிகிறது. அவளால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை பறிக்க முடியாது.

அவளுடைய பேச்சு எப்போதுமே கச்சிதமானது. வீட்டில் கல்யானம் பேச வந்து அமர்ந்திருக்கும் ஊரார் முன் திடமாக வந்து நின்று சொல்கிறாள். ”வயிறு கோதுமையாலும் நிரம்பும் தினையாலும் நிரம்பும். என்னைப்பற்றி நீங்கள் கவலைபப்ட தேவையில்லை சித்தப்பா. புத்தாண்டுக்கு அம்மாவைப் பார்க்கவந்தீர்களென்றால் பார்த்துவிட்டு போங்கள்” நாநா வேறு திருமணம் செய்துகொள்கிறான். ஆனால் அவனுடைய குரோதம் எரிந்தபடியே இருக்கிறது.

நாவல் முழுக்க ராஜிக்கும் காலுவுக்குமான உறவு புரிந்தும் புரியாததுமான ஒரு நுட்பத்துடன் இயங்குவதைக் காணலாம். அவர்கள் இனவழக்கபப்டி அவள் எளிதாக தன் கணவனை விட்டுவிட்டு காலுவுடன் வந்து விடலாம். காலு அதற்காக காத்திருக்கிறான். ஆனால் அவள் அதைச்செய்யவில்லை. காரணம் பலீ மீதான பரிதாபம் மட்டுமல்ல,அவளால் அப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய முடியாது என்பதே. இச்சைகளைப் பின் தொடர்வதோ துயரங்களை வெளிக்காட்டுவதோ அவளால் இயல்வதல்ல. படிப்பறிவில்லாதவள் என்றாலும் அவளுடைய மனம் நாவலில் எப்போதுமே ஒருவகையான நாட்டுப்புற கவித்துவத்துடன்தான் வெளிப்படுகிறது.

உறவுகளின் நாடகத்தை இயற்கையின் பெருநாடகம் அப்படியே விழுங்குவதை நாவல் தொடர்ந்து காட்டுகிறது. இந்நாவலை ஒரு இந்தியப்பேரிலக்கியத்தின் தகுதிக்கு உயர்த்துவது இதில்வரும் மாபெரும் பஞ்சக்காட்சிதான். இந்திய நாவல்களில் மிக உச்சமான பஞ்சச் சித்தரிப்பு இந்நாவலிலேயே உள்ளது. மழைபெய்து நிலம் ஊறி மக்கள் கூத்தாடுவதுடன் அது தொடங்குகிறது. சோளம் விதைக்கிறார்கள். பின் மழை இல்லை. சோளம் கருக கருக விவசாயிகள் வானத்தைப் பார்த்தபடி தவமிருகிறார்கள். கார்த்திகை மழை தவறுகிறது. மார்கழிப்பனி. மழை இல்லாமல் வயல்காடுகள் கருகி பொட்டலாகின்றன. பஞ்சத்தின் வருகையை மூத்தோர் அறிவுறுத்துகிறார்கள். தானியங்களையும் புல்லையும் சேமிக்கிறார்கள். ஆனால் உறுதியாக நிதானமாக் பஞ்சம் வந்து சூழ்ந்துகொள்கிறது.

மேகங்கள் வானில் எங்கோ செல்கின்றன. காலு ஆவேசமாக சொல்கிறான், ‘இந்தக்கடவுள்களுக்குக் கருணை இல்லை. எனக்கு மட்டும் வலிமை இருந்தால் ஈட்டியை வீசி மேகத்தில் துலைபோட்டு நீரை எடுப்பேன்.!’ மேகம் மண்ணை மறந்துவிட்டது. கொடுமையான சூரியன். ராஜஸ்தானை ஒட்டிய குஜராத் பகுதிகளில் பஞ்சம் ஓரளவு பழக்கமானதுதான் என்பதை அம்மக்களின் செயல்பாடுகளிலிருந்து ஊகிக்க முடிகிறது. ஆனால் ஐம்பத்தாறு வருடத்தைய பஞ்சம் என அவர்கள் சொல்லும் அப்பஞ்சம் அவர்களின் எல்லா கற்பனைகளையும் மீறியது. கையில் கிடைத்தனவற்றையெல்லாம் மக்கள் சாப்பிடுகிறார்கள். இலைதழைகளை கிழங்குகளை வேகவைத்து தின்கிறார்கள். மெல்ல அவையும் தீர்ந்தபின் புளியம் இலைகளை தின்கிறார்கள். பசி பசி என எங்கும் ஒரே எண்ணம்தான்.

பயங்கரமான பஞ்சக் காட்சிகள். மலைக்குறவர்கள் ஊருக்குள் புகுந்து திருடிச்செல்கிறார்கள். அவர்கள் திருடிச்செல்லும் எருமை ஒன்றை மீட்க காலு பின் தொடர்ந்து செல்கிறான். எருமையைக் கொண்டு செல்பவர்கள் பட்டினி கிடந்து மெலிந்து நடைபிணமாக இருக்கும் நிர்வாணமான மலைமக்கள். எருமையைக் கண்டதும் சிதறிக்கிடக்கும் பிணங்களின் நடுவேயிருந்து சாகக்கிடந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பாய்ந்துவருகிறார்கள். எருமை மீது ஈக்கூட்டங்கள் போல அவர்கள் ஆவேசத்துடன் மொய்க்கிறார்கள். கையிலகப்பட்ட கத்திகளால் கற்களால் எருமையை கிழித்து பச்சை ரத்தத்தை குடிக்கிறார்கள். எருமை உயிருக்காக போராட அதன் மிதிபட்டு மனிதர்கள் சாகின்றனர். தாய் மிதித்து குழந்தை சாகிறது.

பார்த்து நின்ற காலு கூவினான் ”தெய்வமே நீ நாசமாகப்போ! மனிதப்பிறவிகளின் நிலையா இது?” குன்றுகளே வெடித்துவிடும்படி பெருமூச்சுவிட்டு அவன் சொன்னான் ” இவ்வுலகில் எல்லாவற்றையும் விடக்கொடிது ஒன்று உண்டென்றால் அது பசிதான்!” தன் கையிலிருந்த கத்தியை அங்கிருந்த ஒரு தாயை நோக்கி வீசிக் கொடுத்துவிட்டு அவன் கீழே ஓடினான். காலு ஊருக்குள் புகுந்து சொல்கிறான், இனி இங்கே இருக்க இயலாது. கிளம்புவோம் என. ஆனால் அதற்கு மக்கள் தயாராக இல்லை. மழை பெய்யக்கூடும் என எதிர்பார்த்து விதைத்தானியத்தை பாதுகாத்தபடி வாழவே விரும்புகிறார்கள். நம்பிக்கையே இந்திய உழவனின் செல்வம்

பஞ்சம் உருவாக்கும் பல விதமான மனநிலைகளை விரிவாக அளித்துச் செல்கிறார் பன்னா லால் பட்டேல். மலைக்குறவர்கள் கொள்ளையடிக்க திரண்டுவருகிறார்கள். அவர்கள் கிராமத்தினருக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள்தான். ‘கையில் ஒன்றுமில்லை அண்ணா!’ என்று கூவி அவர்கள் கெஞ்சுகிறார்கள். பசுக்களை வீட்டுக்குள் தனி ரகசிய அறை அமைத்து ஒளித்துவைக்கிரார்கள். குறவர்களுக்கு அது உயிர்போராட்டம். ஆனால் இன்னொரு பக்கம் அவர்களுக்கு அது ஒரு விடுதலை. பஞ்சம் என்ற வலிமையான காரணம் அவர்கள் காப்பாற்றிய கட்டுப்பாடுகளையெல்லாம் உதறுவதற்கு கைகொடுக்கிறது. அதை அவர்கள் கொந்தளித்து கூவிக் கொண்டாடுகிறார்கள். கொள்ளையடித்த பொருளைக்கொண்டு குடிக்கிறார்கள். கடும் துன்பமே நுட்பமாக திசைமாறி கொண்டாட்டமாக ஆகிறது

பஞ்சம் மக்களை அழிக்கும்போதுகூட வியாபாரிகளின் களஞ்சியங்களில் தானியம் நிறைந்திருக்கிறது. ஒரு மணங்கு தானியத்துக்காக கற்பையோ பரம்பரை நிலத்தையோ இழக்க தயாராக மக்கள் துடிக்கும் நிலை என்பது வணிகர்களுக்கு ஒரு அறுவடைக்காலம். பிராமணர்கள் காசிக்கும் பிரயாகைக்கும் இடம்பெயர்கிறார்கள். நிலத்துடன் கட்டப்பட்டு மூழுகுபவர்கள் விவசாயிகள் மட்டுமே. ஆனால் விதிவிலக்குகளும் இருக்கின்றன. வரிவசூல் செய்யவரும் பட்டேல் கண்ணிருடன் வெறுங்கையுடன் திரும்பிச்செல்லும் இடம் ஓர் உதாரணம்.

இந்நாவலில் மிக உருக்கமான இரு இடங்கள் ஒன்று வணிகனின் தானியவண்டிக்காக காவலாக வரும் காபூலிவாலாவுக்கும் காலுவுக்குமான உறவு. பஞ்சத்தில் கிராமமே சாகும்போது ஊர்வழியாக காவலுடன் செல்லும் தானியவண்டியை போகவிடக்கூடாது என காலு முடிவெடுக்கிறான். துப்பாக்கியுடன் வந்த காபூலி வாலா அதற்கு சவாலாகிறான். இருவருக்கும் போர். அது உண்மையில் மன உறுதியினால் மோதிக்கொள்ளும் போர். காபூலிவாலா சுட காலுவின் கையில் குண்டுபாய்கிறது. அடுத்த குண்டுக்குள் காலு பாய்ந்து அவனை தாக்குகிறான். காபூலிவாலா பெரிய உருவம் கொண்டவன். ஆனால் அந்த ஆவேசத்தைக் கண்ட அவன்மனம் உருகிவிடுகிறது. பாலைநிலத்தின் கடும் வறுமையை வெல்ல ஊர்விட்டுவந்தவன் அவன். காலுவில் ஒரு கணம் தன் மகனைக் காண்கிறான். அவன் ஒன்றும் செய்யவில்லை. பின்னர் ஊர் அவனை விடுவிக்கும்போது காபூலிவாலா காலுவை மார்புடன் தழுவிக்கொண்டு கண்ணிருடன் பிரிந்துசெல்கிறான்

காலு ஊரைவிட்டுவந்து பஞ்சப்பரதேசியாக அலைந்து திரியும் நாட்களில் சேட் ஒருவர் தானமாக அளிக்கும் தானியத்தை வாங்கும் வரிசையில் நிற்க மறுக்கும் காட்சி இன்னொன்று. அங்கே செட்டின் தானியக் களஞ்சியத்தில் உள்ள தானியமெல்லாம் தன்னுடையது, தன்னைப்போன்ற பட்டினிவிவசாயிகளுடையது என்கிறான் அவன்.தன் பொருளை தானே பிச்சை எடுபப்தா?பசி கொடுமையானதுதான், பிச்சை எடுப்பது அதைவிட பலமடங்கு பயங்கரமானது. கண்ணிருடன் அவனை அணைத்துக் கொள்கிறார் சேட். ‘ஆம் நீதான் எனக்கெல்லாம் சோறு போடுகிறவன். இது உன் சொத்து .எடுத்துக்கொள்!’ என்கிறான்.

எலும்பும்தோலுமாக இருநடைபிணங்களாக ஆகிவிட்ட ராஜியும் காலுவும் ஒருவரை ஒருவர் உணர்ந்து நெருங்கும் காட்சி நாவலின் உச்சம். அதன் பின் காலுவின் உலகில் எதுவுமே இல்லை. அவர்கள் தழுவிக்கொள்கிறார்கள். தாகத்தால் வெந்து மரணத்தை நெருங்கும் அவனுடைய உதடுகளுக்கு அவள் தோல்பைகளாக மாறிவிட்டிருந்த தன் மார்புகளைத் திறந்து அமுதூட்டுகிறாள். அன்று பெய்கிறது பஞ்சத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மழை. நாவலுக்கு முன்னுரை எழுதிய ‘தர்சக்’ இது சற்று அதிகபப்டியான காட்சி என்று எண்ணுகிறார். அது யதார்த்தப்பார்வையின் விளைவு. அது அவர் எண்ணுவது போல காமபூர்த்தி அல்ல. ஒரு குறியீடாகவே அது நாவலில் உச்சம் கொள்கிறது. காலுவின் உதடு நனைகையில் மண் நனைவது கவித்துவமான ஒரு முடிவாகவே எனக்குப்படுகிறது. ராஜியின் மார்பிலிருந்து சுரப்பது அன்னையின் கருணையல்லாமல் வேறென்ன?

*

குஜராத்தி வாழ்க்கையின் நுட்பமான தகவல்களால் ஆனது நாவல். நாவலெங்கும் விரவியுள்ள நாட்டுப்புறப்பாடல்களும் அழகிய பேச்சுவழக்குகளும் சரிவர மொழியாக்கம் செய்யப்ப்டவில்லை என்பதை வாசகர் உணரலாம். முக்கியமாக இந்நாவல் ஹிந்தி வழியாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பன்னாலால் பட்டேலின் மூலமொழிநடை அழகும் நுட்பமும் கொண்டதாக இருக்கும் என்பதை பல வரிகள் மூலம் ஊகிக்க முடிகிறது. ‘காட்டுக்குள் சென்ற குறவனையும் பிறந்த வீட்டுக்கு வந்த பெண்ணையும் பிடிக்க முடியுமா ?’ என்பதுபோன்ற நாட்டுப்புறச் சொலவடைகள், ‘வாயில் எண்ணையுடன் ஆழமான கிணற்றில் இறங்கி அதை நீர்ப்பரப்பில் உமிழ்ந்தால் கிணற்றின் அடித்தளம் ஒளிபெற்று மூழ்கியவையெல்லாம் தெரிவது போல நெஞ்சில் கடந்தகால நினைவுகள் தெளிந்தன ‘ என்பது போன்ற வர்ணனைகள் இப்படைப்பை உயிர்துடிப்புமிக்கதாக ஆக்குகின்றன.

இந்திய விவசாயியின் ஒருபோதும் தோற்காத பேராண்மையின், தன்மானத்தின் பெரும் சித்தரிப்பு பன்னாலால் படேலின் இந்நாவல் எனலாம். காலுவின் வாழ்க்கை என்பதே அவனை துரும்பாக மாற்றும் இயற்கையின் குரூர நாடகத்தின் முன் தோற்காமல் நிமிர்ந்து கடைசி வரை நிற்பதுதான். ஒரு கோணத்தில் அவன் அந்தக் குன்றுகளைப் பார்த்து இப்படி சொல்லிக் கொள்கிறான் போலும், ‘நீங்கள் என்னை வெறும் புழுவாக ஆக்க முயன்றீர்கள். நான் என்னை கடைசிவரை மனிதனாகவே வைத்துக் கொண்டேன். இதோ நான் மனிதனாகவே மரணத்தை எதிர்கொள்கிறேன். நன்றி!’
[வாழ்க்கை ஒரு நாடகம் : குஜராத்தி நாவல். பன்னாலால் பட்டேல் தமிழாகம் துளசி ஜயராமன். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு]

This entry was posted in இலக்கியம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s