இரு கலைஞர்கள்

ஜெ.கருணாகர் காலையில் தூங்கி எழ தாமதமாகும். இரவு வெகுநேரம்வரை , சிலநாட்களில் விடிகாலை நான்குமணிவரைக்கூட, அவரது ‘மன்ற’த்தில் பேச்சு நீள்வதுண்டு. மாடிமீது தாழ்வாகக் கட்டப்பட்ட கூரைப்பந்தல் அது. நீளவாட்டில் பெஞ்சுகள் நடுவே நீளமான மேஜை. எல்லாம் காயமும் கறையும் பட்ட பழைய உருப்படிகள். வலதுபக்கம் முனையில் தன் நாற்காலியில் அவர் பின்மதியம் மூன்று மூன்றரை வாக்கில் வந்து அமர்வார். சாதாரணமாக லுங்கி கட்டிக் கொண்டு மேலே சட்டையில்லாமல் நீளமான வெண்தலைமயிர் சிலும்பிப் பறக்க தூங்கிக் களைத்த கண்களுடன் வந்து அமர்வதும் உண்டு.குளிர்ந்த நீரில் குளித்து தலைசீவி மடிப்பு கலையாத ஜிப்பாவும் காற்சட்டையுமாக வருவதும் உண்டு. எல்லாம் அவரது மனநிலையைப் பொறுத்ததே ஒழிய வருபவர்களின் தகுதியைச் சார்ந்தது அல்ல. அவரது மன்றத்தில் எப்போதும் கிடைக்கும் கஞ்சாப்புகைக்காக வந்து அமரும் குடிசைவாசிகள் முதல் அவரது நீண்ட தன்னுரையாடல்களையும் ஊடாகக் பொழியும் வசைகளையும் நக்கல்களையும் கேட்பதற்கென்றே வரும் ரசிகர்கள் வரை அங்கே எப்போதும் ஆளிருக்கும். பலசமயம் அவருக்காக சிலும்பியும் இலைப்பொட்டலங்களும் ஆட்களும் காத்திருப்பார்கள். அபூர்வமாக அவர் மட்டும் வந்து தன்னந்தனிமையில் தன்மீசையை ஆழ்ந்து கோதியபடி கூரையை வெறித்து அமர்ந்திருப்பார். மன்றம் நெரியநெரிய ஆள் நிரம்பி சமகாலப்பிரச்சினைகள் மிக உக்கிரமாக விவாதிக்கப்படும்போதும்கூட சட்டென்று அவர் தன் முழுத்தனிமைக்குள் சென்றுவிடுவதுண்டு. அவரை நெருங்கியறிந்தவர்கள் அவர் மிகமிகத் தனிமையான மனிதர் என்பதை அறிவார்கள். அது தினம் ஆயிரம்பேர் புழங்கும் பேராலயத்தில் கருவறை இருளில் நிற்கும் மூலச்சிலையின் தனிமை. அங்கே வருபவர்கள்கூட அத்தனிமையால் ஈர்க்கப்பட்டவர்கள் போலும். அவரது நெருக்கமான நண்பரும் வாசகருமான கெ.எஸ்.ராவ் ஒருமுறை கூறியதுபோல அவர் தன் வாழ்நாள் முழுக்க எப்போதும் பிறரிடம் பேசியதேயில்லை, எழுதியதுமில்லை.

அன்றுகாலை வழக்கத்துக்கு முற்றிலும் மாறாக அவர் அதிகாலையிலேயே எழுந்து தூக்கத்தில் நடப்பவர் போல நடந்து கொட்டகைக்கு வந்து கைகளால் இருட்டில் தடவி முட்டைவிளக்கைப் போட்டுவிட்டு தன் நாற்காலியில் அமர்ந்து தன் எண்ணங்களுள் ஆழ்ந்தவராக மீசையைக் கோதிவிட்டுக் கொண்டு எதிரே நேற்று வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் விட்டுச்சென்ற சிவப்புத் துண்டை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தார். எப்போதோ தன் இருப்பை உணர்ந்து பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்து சுற்றிலும் நோக்கியபோது இரவில் ரீங்காரத்தைக் கேட்டார். அவர் இருந்த பகுதி நகரில் நடுவே குடிசைகளால் சூழப்பட்ட தெரு. எங்கோ ஒரு குழந்தை அழுதது. ஆட்டோ ஒன்று அசிங்கமான ஒலியுடன் சென்றது. மிகத்தொலைவில் ஒருசில நாய்கள் குரைத்துக் கொண்டன. எல்லா ஒலிகளையும் அந்த சில்வண்டு ஒலி இணைத்துக் கொண்டிருந்தது. இதேபோன்ற நகரிலும் எப்படி சில்வண்டுகள் இரவை நிரப்பிவிடுகின்றன என்று வியப்புடன் எண்ணிக் கொண்டார். எல்லாரும் சிறுவயதில் இரவை சில்வண்டின் ஒலியாகவே அறிகிறார்கள். வெளியே நிரம்பியிருக்கும் இருளையும் வானவிரிவையும் விண்மீன்களையும் கோர்க்கும் நீண்ட ஒலி. சில்வண்டின் ஒலி உடனடியாக இளமைநினைவுகளை உருவாக்கிவிடுகிறது. அம்மாவை, அவள் மென்மையான சருமத்தின் வெம்மையை, புழுக்கவீச்சம் நிறைந்த பாய்தலையணைகளை நினைவுக்குக் கொண்டுவருகிறது. இப்போது உடனே கிளம்பி பஸ் பிடித்து கடலூர் சென்று தன் ஊருக்குப் போய் இறங்கினால் என்ன? என்ன இருக்கும் அங்கே? அவருடைய இளமைக்காலம், அன்றிருந்த மனிதர்கள், மரங்கள் எதுவும் இருக்காது. மண் கூட இருக்காது. மண்மீது காலம் ஒரு சினிமாபோல காட்சிகளை ஓடவிடுகிறது. சென்ற காட்சிகள் மீள்வதேயில்லை.

ஏன் ஒருநாளும் இல்லாத இந்த விழிப்பு, இந்த நிலைகெட்ட எண்ணங்கள் என்று எண்ணிக் கொண்டார். தொண்டையில் ஒரு தவிப்பை உணர்ந்து எழுந்துசென்று மண்கூஜாவிலிருந்து நீரை கண்ணாடி டம்ளரில் விட்டு குடித்தார். அதன் பயணம் குளுமையாக இதமாக இருந்தது. ஏன்? சிலும்பி மேஜைமீதுதான் கிடந்தது. ஒரு முறை புகைபோடலாம்தான். ஆனால் அப்போது சலிப்பாக இருந்தது. புகைபோட்டு பிந்தித் தூங்கிய ஒருநாளும் அவர் விழித்துக் கொண்டதில்லை. இப்போது ஏன்? அவருக்கு விழிக்கும்போது கண்ட கனவு நினைவுக்கு வந்தது. ஆனால் கனவல்ல அது. ஒரு நினைவுபோல அது ஓடியது. கடுமையான நெஞ்சுவலி. கூவுகிறார் , யாருக்குமே அது கேட்கவில்லை. எல்லாரும் அவரைச்சுற்றித்தான் இருந்தார்கள். நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாருமே அவரைக் கேட்கவில்லை, காணவும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை ஏற்கனவே அவர் இல்லாமலாகிவிட்டிருந்தார். விழித்துக் கொண்டதும் பெருமூச்சுடன் இருண்ட வீட்டில் ஜன்னல்வழியாக வந்த தெருவிளக்கின் ஒளி பரவிக் கிடந்த கூரைப்பரப்பை பார்த்தபடி கிடந்தார். பிறகு தூக்கம் வரவில்லை.

புன்னகைத்துக் கொண்டு மீசையைத் தடவினார். நேற்று கெ.எஸ் மூத்த தோழர் ஒருவரின் மரணத்தைப்பற்றிச் சொன்னார். மாரடைப்பு. வயலுக்குப் போனவர் வரப்பில் இறந்துகிடந்தார். நாற்பதுவருடம் முன்பு சிலவருடங்கள் அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். சேர்ந்தே தலைமறைவாக மதுரை, சின்னமனூர் பக்கம் சுற்றியிருக்கிறார்கள். அதிகம் படிக்காவிட்டாலும் உண்மையான நம்பிக்கை கொண்டிருந்த கம்யூனிஸ்ட் அவர்.

”கம்யூனிஸ்டுகள்லாம் சாகவேண்டிய நேரம் எப்பவோ வந்தாச்சுய்யா… இந்தாள் எதுக்கு அவசியமில்லாம இவ்ளவுநாள் லேட் பண்ணினான்? காடு வா வாங்குது கட்சி போ போங்குது.. ” என்று நக்கலாகச்சிரித்து அதைத் தாண்டிவந்தார். ஆனால் உள்ளே தூண்டில்முள் தொடுத்தியிருக்கிறது. அத்தனை பயமா? யாரைப்பற்றி அல்லது எதைப்பற்றி? தன் மரணம். எல்லா உயிருக்கும் தன் மரணம் பெரிது. எழுத்தாளனுக்கு இன்னும் பெரிது. மரணபயமில்லாதவன் ஏற்கனவே இல்லாமலாகிவிட்டவன். இல்லாமலாகிவிட்ட ஒருவன் எப்படி இருப்பான். அவனைக் காண்பவர்கள் என்ன உணர்வார்கள்? என்ன சிந்தனை இது? நான் ஒரு பொருள்முதல்வாதி அல்லவா? சிரித்தபடி ‘ இல்லை நான் ஒரு சுயமுதல்வாதி ‘ என்று முனகிக் கொண்டார்.

கீழே ஒரு காரின் ஹார்ன் ஒலி கேட்டது. பலமுறை கேட்டபின்னரே அது தன் வீட்டை உத்தேசித்தது என்று கருணாகர் உணர்ந்தார். எழுந்து நோக்கியபோது வெள்ளைஉடையணிந்த ஒருவர் நீளமான பெரிய காரிலிருந்து இறங்கி கேட்டருகே நிற்பதும் காரின் முகவிளக்குகள் சுடர்வதும் தெரிந்தது. படிகளில் தடுமாறி இறங்கி வீட்டுக்குமுன் வந்தார். அதற்குள் அவர் மனைவி எழுந்து விளக்கைப் போட்டு கதவைத்திறந்து வெளிவாசலைத் தாழ்நீக்கி திறந்துவிட்டாள்.

அது யுவராஜ். நரை கலந்த பத்துநாள் முடிபரவிய மொட்டைத்தலை, முகவாய். உருண்டையான கரிய முகம். வெண்ணிற ஜிப்பா , வேட்டி. நாற்பதுவருடம் முன்பு முதல்முதலாக தேனியில் கட்சிக்கூட்டத்தில் தன் சகோதரர்களுடன் பாடவந்திருந்து அறிமுகமாகும்போது முதலில் மனதைக் கவர்ந்த அதே அழகிய குழந்தைக் கண்கள், குழந்தையின் சிரிப்பு. கையில் ஒரு பிளாஸ்டிக் பை.

”வாய்யா…என்ன அதிகாலையிலேயே… ” என்றார். ” ஆச்சரியமா இருக்கே”

“நீங்க காலையிலேயே எந்திரிச்சிருக்கிறதுதான் ஆச்சரியம் ஜெ.கெ” என்றபடி யுவராஜ் உள்ளே வந்தார்.

“என்னமோ முழிப்பு வந்தது… உள்ள வா.. ”

யுவராஜ் உள்ளே வந்து அமர்ந்தார். அவரது வருகையால் வீடே மெல்லிய பரபரப்பு கொண்டது. ஊரிலிருந்து வந்திருந்த அவரது பெண்ணும் மகனும் எழுந்துவந்து வணக்கம் சொன்னார்கள். யுவராஜ் அவர்களிடம் நலம் விசாரித்தார். காபி டீ எதுவுமே குடிப்பதில்லை என்றார்.

“இப்ப அவன் ஆச்சாரிய ஸ்வாமிகள் மாதிரி. பழங்கள்தான் குடுக்கணும். அதில ஒண்ணை எடுத்து ஆசீர்வாதம் பண்ணி நமக்கு பிரசாதமா எறிஞ்சு குடுப்பான். ஏன்யா? ” என்றார் கருணாகர். ”அதிகாலையிலேயே குளிச்சிருக்கே. கிட்டத்தட்ட ஞானி ஆயிட்டே…”

யுவராஜ் அவரது கிண்டல்களை பொருட்படுத்தவேயில்லை. ” கெளம்புங்க ஜெகெ. நாம ஒரு எடத்துக்குப் போறோம். ”

“எங்கய்யா? ”

“பக்கம்தான். உடனே போய்ட்டு வந்திருவோம். ”

“இப்பவேயா?நான் பல்லுகூட தேக்கலை”

” தேச்சு குளிச்ச்சிட்டு வாங்க… நான் காத்திருக்கேன்..”

“குளிக்கிறதா, நல்ல கதை. நான் மத்தியான்னம்தான் குளிக்கிறது. இப்டியே வரதுன்னா வரேன்”

“இல்லை ஜெகெ. குளிச்சிட்டுதான் போகணும்.எனக்காக வாங்க…”

” என்னய்யா… ஆசிரமம் கீசிரமம் கட்ட ஏதாவது எடம் பாத்திருக்கியா? சினிமாப்பாட்டு போடறதையெல்லாம் விட்டுரப்போறியா. பாவம்யா நம்ம ஊர் விரகதாபக் காதலர்கள்… கைவிட்டுராதே …”

“சொல்றேன். போய்ட்டு வாங்க ஜெகெ” யுவராஜ் தன் கையிலிருந்த பொட்டலத்தை நீட்டினார். ” குளிச்சுட்டு இதைப் போட்டுட்டு வாங்க”

”என்னய்யா விளையாடறியா? ” கருணாகர் அதை உருவினார். வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும். ” காவியைக் கீவியை கொண்டாந்துட்டியோன்னு பயந்துட்டேன் .நல்லவேளை”

”சீக்கிரம் ஜெகெ”

கருணாகர் காரில் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்ததும் அருகே யுவராஜ் ஏறிக் கொண்டார். கார் கிளம்பியது.

“என்ன பாட்டு போடணும் ஜெகெ ? ” என்றார் யுவராஜ்.

” ஏதாவது போடு. நான் பாட்டு கேட்டே ரொம்ப நாளாச்சு”

“ஹிந்துஸ்தானி போடறேனே ” என்றபடி யுவராஜ் குண்டேச்சா சகோதரர்களின் குறுந்தகடை எடுத்து டிரைவரிடம் கொடுத்தார். மெல்லிய ஒலியில் ஆழமான குரல்கள் காருக்குள் நிறைந்தன. வெளியில் அலைகிளம்பும் சுத்த ஆலாபனை.

யுவராஜ் கருணாகர் ஏதாவது கேட்பார் என்று எதிர்பார்த்தவர் போல திரும்பிப் பார்த்தார். ஆனால் அவர் சாலையோரங்களில் நீலஒளியுடன் விடியல் விரிவதை பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்தார். கைகள் மீசையில் ஓடிக்கொண்டிருந்தன.

இசை நிற்கும்போது மட்டும் கருணாகர் அசைந்து எழுந்து பெருமூச்சுவிட்டார். அவரது மனநிலைக்கு ஏற்ப குறுந்தகடுகளை தேர்வுசெய்து யுவராஜ் போட்டுக் கொண்டிருந்தார்.

கார் திருவண்ணாமலைக்குள் நுழையும்போதாவது கருணாகர் ஏதாவது கேட்பார் என்று யுவராஜ் எதிர்பார்த்தார். கருணாகர் சற்று நிமிர்ந்து அமர்ந்து மலையை வெறித்த கண்களுடன் நோக்கினார். கார் ரமண ஆசிரமம் நோக்கிச்சென்றது. சிமிட்டி முகப்பைத் தாண்டியதுமே அவரது காரை ஆசிரமவாசிகள் அடையாளம் கண்டுகொண்டார்கள். பலர் முகப்புக்கு வந்து எட்டிப்பார்த்தார்கள். அப்போது அதிக பயணிகள் இல்லை. இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வட இந்தியர்கள். அவர்களுக்கு இருவரையுமே அடையாளம் தெரியவில்லை.

இறங்கி மீசையை வருடியபடி மரக்கிளைமீது இருந்த மயில்களை நோக்கி நின்ற கருணாகரிடம் யுவராஜ் ” இதுக்கு முன்னாடி வந்திருக்கீங்களா?” என்றார்.

” ம்” என்றார் கருணாகர்

யுவராஜ் ஆர்வத்துடன் ” எப்ப?” என்றார்

கருணாகர் திரும்பாமலேயே ” ரொம்ப முன்னாடி ” என்றார்.

ஆசிரமப் பொறுப்பாளர் ஓடிவந்தார். ” வாங்க ராஜா சார். வாங்க…” என்றார். அவருக்கு கருணாகரை அடையாளம் தெரியவில்லை. அவருக்கும் ஒரு வணக்கம் போட்டார்.

யுவராஜ் ,” இது ஜெ.கருணாகர். பெரிய எழுத்தாளர்” என்றார்

ஆசிரமப் பொறுப்பாளருக்கு எழுத்தாளர் என்பதும் சரிவரப் பிடி கிடைக்கவில்லை. ” அப்டீங்களா? வாங்க…”

யுவராஜ் கிளர்ச்சி அடைந்திருந்தார். கைகளில் இருந்த பூஜைப்பொருட்களை அடிக்கடி மாற்றி மாற்றி பிடித்தார். ஆசிரம ஆட்கள் அவரைச் சுற்றி பணிவும் பிரியமும் கலந்து பேசிக்கொண்டிருப்பதில் அவர் மனம் செல்லவில்லை. படிகளில் ஏறி உள்ளே சென்றார். கருணாகர் மீசையை வருடியபடி ஆழ்ந்த மௌனத்துடன் பார்த்தபடி நடந்தார். அவர் ஏதாவது சொல்வார் என்று யுவராஜ் எதிர்பார்த்தார். அவரையே ஓரக்கண்ணால் பார்த்தார்.

இருவரும் ரமணரின் அறைக்குள் மௌனமாகவே நுழைந்தனர். காலையின் குளிர் அங்கே மிச்சமிருந்தது. ரமணர் படத்தில் கோவணத்துடன் கையில் பெரிய தண்டம் ஏந்தி புலித்தோல்மீது அமர்ந்திருந்தார்.

யுவராஜ் ” உக்காரலாமா?” என்றார்.

கருணாகர் ஒன்றும் பேசாமல் அமர்ந்துகொண்டார். யுவராஜ் சற்றுதள்ளி தரையில் அமர்ந்தார். ஹாலில் இருந்த சிலர் எழுந்துவிலகினர். கதவருகே சிலர் நின்று வேடிக்கை பார்த்தனர்.

யுவராஜ் ரமணரின் படத்தையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அவரது தலை சற்று ஆட ஆரம்பித்தது. தலையைக் குனித்து கைகளை புத்தகம் போல விரித்து பார்த்தார். மீண்டும் தலைதூக்கி உதட்டைக்கடித்தபடி ரமணரைப் பார்த்தார். ஒருமுறை குரலைச் செருமிக் கொண்டார்.

அவரது செருமல் ஒலியில் கருணாகர் திடுக்கிட்டுவிழித்து அவரை நோக்கி புன்னகையுடன் மீசையை வருடினார்.

யுவராஜ் மெல்ல முனகினார். சுத்த தன்யாஸி. பிறகு ”ஹிமகிரி தனயே ஹேமலதே” என்று குரல் எழுந்தது. சற்றே சுருதிவிலகியதும், அதனாலேயே நாட்டுப்புறப்பாடல்களுக்குரிய உண்மையின் வசீகரம் கலந்ததுமான குரல். பிறகு ”அகிலாண்டேஸ்வரீ ” பிறகு ” ஸ்ரீசக்ரராஜசிம்மனேஸ்வரி ” . பாடப்பாட அவர் குரல் கனிந்து வந்தது. ஆரம்பத்தில் அடித்துத் தாளமிட்டுப்பாடியவர் பிறகு மெல்ல விரலால் தொடையில் தொட்டு தாளமிட்டார். ”ஜனனீ ஜனனீ ” பாடியபோது சட்டென்று குரல் கம்மி கரகரத்தது. பாடமுடியாது திணறி விசும்பி கேவினார். சரசரவென கண்ணீர் கொட்ட தோள்கள் குலுங்க அழத்தொடங்கினார்.

கருணாகர் யுவராஜ் அழுவதையே எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்து அமர்ந்திருந்தார். வாசலில் கூடிய ஆட்கள் முகத்தில் வியப்புடனும் சிரிப்புடனும் வேடிக்கைபார்த்தனர். ஒரு முதிய வெள்ளைக்காரமாது இடுப்பில் கைவைத்து நின்று முகச்சுருக்கங்கள் நெளிய நோக்கினாள். யுவராஜ் மேலும் மேலும் அழுகைவலுத்து ஒரு கட்டத்தில் கேவிக்கேவி அழுதுகொண்டே தரையில் படுத்துவிட்டார். அப்படியே தேம்பல்களாகி மெல்ல அடங்கி அமைதியாக வெறுந்தரையில் குழந்தைபோலக் கிடந்தார்.

ஆசிரமத்து முதியவர் ஒருவர் வந்து மெல்ல அவர் தோள்களைத் தொட்டு ” ராஜா சார் ” என்று அழைத்தார். யுவராஜ் விழித்து எழுந்து ஒன்றும்புரியாதவர் போல அவரையும் ரமணரின் படத்தையும் பார்த்தார். நீண்டபெருமூச்சுடன் கண்களையும் கன்னங்களையும் துடைத்தார். எழுந்து தன் ஜிப்பாவை இழுத்து விட்டுக் கொண்டார். அவர் முகம் தெளிந்திருந்தது. ரமணரைப் பார்த்தபோது அவர் முகத்தில் மெல்லிய இளநகை கூடியது.

”வாங்கோ” என்றார் முதியவர் புன்னகையுடன். ” இதே இடத்திலே உக்காந்துதான் பால் பிரண்டன் அழுதார். ஜூலியன் ஹக்ஸ்லி அழுதார். உலகம் முழுக்க இருந்து எத்தனையோபேர் இங்கவந்து இப்டி அழுதிருக்கா….”

சட்டென்று நினைவுகூர்ந்த யுவராஜ் ” ஜெகெ சார் எங்கே? ”என்றார்.

கிழவர் திரும்பி ” தோ இருக்காரே” என்றார்

கருணாகர் தன் கண்கள் ரமணரில் ஊன்றியிருக்க விரைப்புடன் அமர்ந்திருந்தார். ரமணரை அவர் முறைப்பதுபோலிருந்தது

“ஜெகெ !”

கருணாகர் விழித்தார். அவசரமாக எழுந்தபடி ” முடிச்சிட்டியா?” என்றார் ”போலாமா? பசிக்குது”

“போலாம்”

இருவரும் விடைபெற்று படியிறங்கி காரை நோக்கி நடந்தனர். கருணாகர் மீண்டும் மயில்களையும் மரங்களையும் நோக்கியபடி மீசையை முறுக்கினார்.

காரில் ஏறி சாலைக்கு வந்தனர். கருணாகர் சாலையில் சென்ற ஆட்களை பார்த்தபடி ” அப்பல்லாம் இந்த ஊரிலே ஏகப்பட்ட தொழுநோயாளிகள் இருப்பாங்க” என்றார்.

யுவராஜ் ஒன்றும் சொல்லவில்லை. அவர் திரும்பி விலகும் ரமணாசிரமத்தையும் , ஆசிரமத்தை மடியிலமர்த்திய மலையையும் நோக்கிக் கொண்டிருந்தார்.

கார் நகர்மையம் சென்றதும் டிரைவரை அனுப்பி பழங்கள் வாங்கிவரச்சொல்லி காரிலமர்ந்தபடியே உண்டார்கள். கருணாகர் சற்று அமைதியிழந்திருப்பதை யுவராஜ் கண்டார்.

கார் மீண்டும் கிளம்பியதும் யுவராஜ் பாட்டு போடப்போனார் ” வேண்டாம்” என்றார் கருணாகர் .

திருவண்ணாமலை தாண்டியதும் கருணாகர் பெருமூச்சுடன் சரிந்து அமர்ந்தார். கிண்டலாக சிரித்தபடி ” என்னய்யா அப்டி ஒரு அழுகை?” என்றார்.

“தெரியலை அண்ணே…அழணும்னு தோணிச்சு அவ்ளவுதான்… ”

” யோகக்காரன்யா நீ ” என்றார் கருணாகர். ”என்னால அப்டி அழமுடியல”

அந்தக்குரல் யுவராஜை ஆச்சரியப்படவைத்தது. பரபரப்புடன் திரும்பி ” ஏன் ஜெகெ?” என்றார்.

கருணாகரின் கண்கள் காற்றுபட்ட கங்குபோல சீறியணைந்தன ” கள்ளமோ கரைந்தழும் . அதான் ” என்றார்.

யுவராஜ் முகம் மாறியது. குரல் தாழ ” ஏண்ணே அப்டி சொல்லிட்டீங்க? ” என்றார்.

“ஏன்னா அது அப்டித்தான்”

“எங்கிட்ட அப்டி என்ன அண்ணே கள்ளத்தைக் கண்டீங்க? சொல்லுங்க”

“என்னமோ சொன்னேன். விடு”

“இல்லண்ணே…என்னை ஆதிமுதல் தெரிஞ்சவர் நீங்க. சொல்லுங்க ,எந்த அர்த்தத்தில சொன்னீங்க? ”

” ஏதோ சொல்லிட்டேன்யா. போட்டு உசிர வாங்காத ” கருணாகர் சாய்ந்து அமர்ந்து மீசையை அழுத்தமாக முறுக்க ஆரம்பித்தார்.

கண்கள் மெல்ல ஈரமாகி நீர்ப்படலமாகி நிறைய யுவராஜ் அவரையே நோக்கி அமர்ந்திருந்தார்.

கார் நெடுஞ்சாலையில் அசைவின்றி சென்றது. சற்று நேரம் கழித்து கருணாகர் திரும்பிப்பார்த்தபோது யுவராஜின் கன்னங்களில் நீர் வழிந்து தாடிமுட்களில் பரவியிருப்பதைக் கவனித்தார். பொருள்கொள்ளாதவர் போல அதையே பார்த்தார். மீண்டும் திரும்பிக் கொண்டார்.

ஒரு சந்திப்பில் கருணாகர் திரும்பி ” ஒரு எளநி சாப்டலாம்யா” என்றார். கார் நின்றது.

கருணாகர் கதவைத்திறந்து இறங்கினார். ”வாய்யா”

”இல்ல. நீங்க சாப்பிடுங்க”

“என்னய்யா ஆச்சு உனக்கு?”

யுவராஜ் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். கருணாகர் ஒரு இளநீருக்குச் சொன்னார். அதைக் குடித்து முடித்ததும் ஏறி அமர்ந்துகொண்டார்.

கார் கிளம்பியது. யுவராஜின் உதடுகள் அழுந்தியிருந்தன.

”ஜெகெ” என்றார்

கருணாகர் திரும்பினார்

” என் மேல கொஞ்சமாவது பிரியம் இருந்தா சொல்லுங்க… அப்டி என்ன கள்ளத்தைக் கண்டீங்க?”

கருணாகர் பேசாமலிருந்தார்.

”கள்ளம்னு இருந்தா அது சங்கீதம்மேல நான் கொண்டிருக்கிற ஈடுபாட்டிலதான் இருக்கணும். ஏன்னா அதுதான் நான் . மத்ததெல்லாம் பூச்சுகள்தான். சொல்லுங்க, ஏன் அப்டி சொன்னீங்க? ”

”ஏய் விடுய்யா..போட்டு நோண்டிட்டு”

” எங்கியோ எல்லாம் போகணும்னு ஆசைப்படறேன். எல்லாம் இங்கேருந்துதான் தொடங்கணும். இங்கேயே தப்பு இருக்குன்னா…எனக்கு தெரிஞ்சாகணும் ”

“யோவ், அது பாரதியோட வரி. சும்மா பழக்கதோஷத்தில வாயில வந்திட்டுது. எதையும் உத்தேசிச்சு சொல்லல.”

“உண்மையாவா ? ”

“உண்மையாத்தான்யா. முழுக்க முழுக்க உண்மை. போருமா ?”

யுவராஜ் சற்று முகம் தெளிந்தார். சற்று நேரம்கழித்து அவர் முன் இருக்கை மீது கைவிரல்களால் தாளம்போடுவதை கருணாகர் கண்டார். அதையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார்

சென்னை புறநகரை நெருங்குவதுவரை பேச்சு ஏதும் நிகழவில்லை. சட்டென்று கருணாகர் ” காலையில நெஞ்சுவலி வாரதுமாதிரி ஒரு கனவு” என்றார்.

யுவராஜ் பதற்றம் அடைந்து ” கனவா? நிஜமாவே வலி ஏதாம் வந்திருக்கப்போகுது ஜெகெ. நாம நேரா இப்டியே நம்ம சௌரிராஜனைப் பார்த்திருவோம்…”

”சும்மா இருய்யா…கனவுதான்…”

“இல்ல.அப்டி விடக்கூடாது. விடிகாலைல வரதுன்னா…”

“அடச் சும்மா இருய்யா.” என்றார் கருணாகர் ” அதான் காலையிலேயே முழிச்சுக்கிட்டேன். இப்ப நல்ல தூக்கம் வருது”

“மேலே போய் ஜமா சேராம பேசாமப் போய் தூங்குங்க”

”பாப்பம்”

”இல்லண்ணா… எதுக்குச் சொல்றேன்னா…”

” நாப்பது வருஷமா பேசி, எழுதி, கேட்டு ஏகப்பட்ட வார்த்தைகள் மூளைக்குள்ள நிரம்பிப்போச்சுய்யா . புகையைப்போட்டா கொசு ஓடுறமாதிரி ஒவ்வொண்ணா ஓடிப்போயிரும். அப்றம் கொஞ்சநேரம் நிம்மதி…. ” கருணாகர் கைகளைதூக்கி சோம்பல் முறித்தார் ” வார்த்தைகளை வச்சிருக்கிறவனால அப்டி சாதாரணமா அழுதிர முடியாது”

கார் கூவியபடி நகருள் நுழைந்தது. கட்டிடங்கள் வெயில் ஒளிரும் சன்னல்களுடன் நெற்றியில் எழுத்துக்களுடன் விலகிச்சென்றன. சுற்றும் சீறும் கூவும் கார்கள். கனத்து சரிந்து செல்லும் பேருந்துகள். நிழல் நீண்ட சந்துகளில் கழட்டப்பட்ட சக்கரங்கள், இரும்புக்குப்பைகள், டீசல் கறைகள், சோர்ந்து வியர்த்த மனிதர்கள்….

அந்த சில்வண்டுகள் இப்போது என்ன செய்யும் ? எங்கே இருக்கின்றன அவை?பிரவுக்காக காத்திருக்கின்றனவா? இந்த மொத்தப் பகலும் அவற்றுக்கு ஒரு வெறும் ரீங்காரம்போலும்….கருணாகர் தலையை உசுப்பி அவ்வெண்ணங்களை உதற முயன்றார்.

வீடுமுன் கார் நின்றபோது ”அப்ப பாப்பம்யா” என்றபடி கருணாகர் இறங்கினார் ” நீ பாட்டுக்கு இறங்கிராதே. அப்றம் தெருவே கூடிரப்போகுது”

யுவராஜ் சங்கடமாகப் புன்னகைத்தார்

சட்டென்று கருணாகர் உரக்கச்சிரித்தார் ” அசடுய்யா நீ. ஒருத்தன் தன்னால அழமுடியலைன்னு சொல்றப்ப ஏன்னு கேக்கலாமா என்ன? ” என்றார் . கதவை சாத்தும் முன் ” ஒரு வேளை அப்டி கேக்கிறவனா நீ இருக்கிறதனாலத்தான் உன்னால அழமுடியுதோ என்னமோ” என்றார்.

அவர் பிடரி பறக்கும் நிமிர்ந்த தலையுடன் மிடுக்காக நடந்து தன் வீட்டுப்படிகளில் ஏறுவதை யுவராஜ் பார்த்தார். புறப்படும்படிச் சொல்ல டிரைவரைத் தொட்டார்.

================================

This entry was posted in சிறுகதை and tagged . Bookmark the permalink.

2 Responses to இரு கலைஞர்கள்

  1. Pingback: jeyamohan.in » Blog Archive » கடிதங்கள்

  2. Pingback: ஜெயமோகன் சிறுகதை – “பழைய பாதைகள்” « சிலிகான் ஷெல்ஃப்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s