<![CDATA[இறுதிச்சடங்கிற்கு பேரா.பத்மநாபன் வந்திருந்தார். அன்று வந்திருந்த சுந்தர ராமசாமியின் நண்பர்களில் அவரே மிகவும் மூத்தவர், நெடுங்கால நண்பர். சுந்தர ராமசாமியின் முதிய நண்பர்களில் எம்.எஸ் ஆரம்பத்தில் காத்துவந்த உறுதியை இழந்து பிறகு மிகவும் அழுது கலங்கிவிட்டார். ஆற்றூர் ரவிவர்மா அஞ்சலி செலுத்த திரிச்சூரில் இருந்து சிரமப்பட்டு வந்திருந்தார். முழுக்க முழுக்க நிதானமாகவே இருந்தார், ஆனால் அவர் கலங்கிவிட்டார் என அவரை மிக நெருங்கி அறிந்த என்னால் உணர முடிந்தது. உடனே சென்றுவிட்டார். பத்மநாபன்தான் மிக நிதானமாக இருந்தார். நானும் அன்புவும் சுந்தர ராமசாமி வீட்டுமுன் பந்தலில் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது காந்தியைப்பற்றி விரிவாகப்பேசிக் கொண்டிருந்தார். சுந்தர ராமசாமிக்கு 1986 வாக்கில் காந்தி பற்றிய எண்ணம் உயர்வாக இருக்கவில்லை, அவர் அப்போது எ.என்.ராயின் பாதிப்பிலிருந்தார். காந்தியின் அணுகுமுறையில் தர்க்கபூர்வத்தன்மை அதிகமில்லை, அது உள்ளுணர்வு சார்ந்தது என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். ஒரு தனிமனிதனின் உள்ளுணர்வு, அது எத்தகைய மகத்தான ஆழம் கொண்டிருந்தாலும், அவர் மகாத்மாவாகவே இருந்தாலும் ஒரு தேசத்தை வழி நடத்தலாகாது என்றார் சுந்தர ராமசாமி. அத்தேசத்தின் கோடிக்கணக்கான மக்களின் உலகியல் தேவைகள், கலாச்சார ஓட்டங்கள் ஆகியவற்றாலான பெளதீக சக்திகளின் முரண் இயக்கமே அத்தேசத்தை வழிநடத்த வேண்டும். அச்சக்திகளை அரசியல்வாதிகள் ஒருங்கிணைக்கவேண்டும். ராஜதந்திரிகள் [ஸ்டேட்ஸ்மென் என்று சுந்தர ராமசாமி] அந்த மோதல் வன்முறையின் மூலம் நிகழாமல் சுமுகமாக நடக்க வழிவகை செய்யவேண்டும். அந்த இயக்கம் ஆக்கபூர்வமான முறையில் முன்னோக்கிச்செல்ல அரசியல் ஞானிகள் [ பொலிடிகல் ஸீயர்ஸ் — சுந்தர ராமசாமி ] அவர்களை தங்கள் தத்துவ தரிசனங்களாலும் தங்கள் ஆளுமையாலும் வழிநடத்த வேண்டும். எந்த அரசியல் ஞானியும் தன் நோக்குக்கு ஏற்ப தன் சமூகத்தை முழுமையாக இழுத்துச்செல்ல இயலாது. அது அடக்குமுறைக்கும் வன்முறைக்குமே வழிவகுக்கும். நேரடி வன்முறை போலவே கருத்துத்தள வன்முறையும் அழிவை உருவாக்குவதே. விவேகானந்தர், அரவிந்தர், காந்தி, எம்.என்.ராய், ராம் மனோகர் லோகியா, அம்பேத்கர் போன்றவர்கள் அரசியல் ஞானிகள். நேரு, இ.எம்.எஸ், ராஜாஜி, காமராஜ், மொரார்ஜி தேசாய் போன்றோர் ராஜதந்திரிகள். இ.கெ.நாயனார், நல்லக்கண்ணு, சி.என்.அண்ணாதுரை போன்றோர் அரசியல்வாதிகள். காந்தியின் அணுகுமுறை வன்முறை மிக்கது என்று என்னிடம் சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். காரணம் அவர் தன் அரசியல் தரிசனத்தை ஜனநாயகப் பரிசீலனைக்குக் கொண்டுவர மறுத்தார். அவற்றுக்கான ஊற்றுமுகத்தை தர்க்கபூர்வமாக முன்வைக்காமல் உணர்ச்சிகளை நோக்கி ஏவினார். அவர் மாமனிதர், ஆகவே அது சரியான விளைவுகளை உருவாக்கியது. ஆனால் அதே வழிமுறைகளை ஒரு கொடுமையான சர்வாதிகாரி கையாண்டு இந்தியாவை தன் மந்திரப்பிடியில் வைத்துக் கொண்டாரென்றால் என்ன ஆகும் ?
மதம் ஒரு வாழ்க்கைமுறையாக அன்றி ஒரு முழு வாழ்க்கையாகவே இருக்கும் இந்தியாவில் மதசார்பின்மையே முக்கியமான விழுமியம் என்பதில் சுந்தர ராமசாமி ஆழ நம்பிக்கை கொண்டிருந்தார். இந்திய அரசியலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்குவந்தபின்னரே மதசார்பின்மை பற்றிய கோஷங்கள் வலுப்பெற்றன. ராமர் கோயில் இயக்கம் மூலம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை நெருங்கிய பின்னரும் அவர்களுடன் ஒத்துழைத்து வி.பி.சிங் அரசை அமைக்க இடதுசாரிகளுக்கு தயக்கம் இருக்கவில்லை. ஏகாதிபத்திய காட்,டங்கல் திட்டங்கள் மீதான எதிர்ப்பு அப்போது அவர்களுக்கு சாக்காக இருந்தது. தீயை அணைக்க சாக்கடையை பயன்படுத்துதல் என்ற பிரபல படிமம் அப்போதுதான் அமுலுக்கு வந்தது. ஆனால் சுந்தர ராமசாமி அன்றே மதசார்பின்மைக்கு அடிவிழுகிறது என்ற பதற்றத்தில் இருந்தார். பிறகு அது ஒரு பிரபல கோஷமாக ஆனபின் அதைபற்றிப்பேசுவதை அவர் கூச்சம் தருவதாக உணர்ந்தார் என்று எண்ணுகிறேன். ஆச்சரியம் என்னவென்றால் அவர் நோக்கில் மத சார்பின்மைக்கு எதிரான போக்கு காந்தியில் இருந்து தொடங்குகிறது என்பதேயாகும். காந்தி மதவெறிக்கு எதிரானவர் என்பதில் சுந்தர ராமசாமிக்கு ஐயமே இல்லை. அவருக்கு மதச்சார்புகூட இல்லை என்றே எண்ணினார். ஆனால் அரசியலுக்கு மதத்தைக் கொண்டுவந்தவர் அவர் என்றார் சுந்தர ராமசாமி. இருவகையில் இதைக் காந்திசெய்தார். கிலா•பத் இயக்கத்தை ஆதரித்ததன் மூலம் அவர் மதநம்பிக்கை ஓர் நவீன அரசியல் ஆயுதம் என்பதைக் காட்டினார். முஸ்லீம் லீக் முதல் இன்றைய இஸ்லாமிய தீவிரவாதம் வரை இங்கிருந்து தொடங்குகிறது என்றார் சுந்தர ராமசாமி. இஸ்லாமிய சமூகத்தை அரசியலுக்குக் கொண்டுவர அதை பயன்படுத்தலாம் என்பது காந்தியின் கனவு. ஆனால் அதில் உள்ள பிழை இஸ்லாமியர்களை இஸ்லாமிய மதநம்பிக்கையாளர்களாக, அந்த அடையாளத்துடன் அரசியலுக்குக் கொண்டுவந்தது அது என்பதே. நாட்டில் நடந்துவந்த அரசியல் இயக்கத்தில் அவர்கள் தொழிலாளார்களாக, மாணவர்களாக, எளிய குடிமக்களாக ஏன் கலந்துகொண்டிருக்கக் கூடாது ? அப்போது மதம் அவர்களுடைய அந்தரங்க நம்பிக்கையாகவே இருந்திருக்குமே ? இது எம்.என்.ராயின் எண்ணம் என்று நினைக்கிறேன். இரண்டாவதாக காந்தி மதக்குறியீடுகளை நவீனஅரசியலுக்குக் கொண்டுவந்தார். ராம பஜனை, கீதை வாசிப்பு, சமணதுறவி போன்ற தோற்றம், துறவு வாழ்க்கை, மகாத்மா மற்றும் அடிகள் போன்ற பட்டங்கள் எல்லாமே மதம் சார்ந்தவை. அதுவே இன்று திரிசூலமும் காவிக்கொடியும் பிறையும் பச்சைக்கொடியும் அரசியல் அடையாளங்கள் ஆக மாறுவதற்கான அடிப்படைகள். காந்தியின் உள்ளுணர்வின் குரல் மதம் மூலமே ‘அக்னாலட்ஜ் ‘ செய்யப்பட்டது என்றார் சுந்தர ராமசாமி. ” நாளைக்கு மேல்மருவத்தூர் சாமியார் குறிசொல்லி உத்தரவு போட்டு தமிழ்நாட்டை ஆளுவார்னா எப்டி…அது மாதிரித்தான்…. ”
அதேபோல காமம் பற்றிய காந்தியின் கண்ணோட்டமும் சுந்தர ராமசாமிக்கு உவப்பானதல்ல. காந்தி காமத்தை பாவமாக எண்ணினார். அது அவருக்கு இயல்பாக வந்த தரிசனம் அல்ல, அது அவர் தன் தந்தைக்கு பணிவிடைச் செய்யும்போது மனைவியுடன் பாலுறவுக்குப் போக, அப்போது தந்தை இறந்ததனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியின் வெளிப்பாடு என்றார் சுந்தர ராமசாமி. காந்தி பாலுணர்வைக் கட்டுப்படுத்தியமையால்தான் அழகுணர்ச்சியே இல்லாதவரானார். நுண்ணிய உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடியாதவரானார். வாழ்நாளின் பிற்பகுதியில் அவருடன் நெருக்கமாக எவருமே இல்லை. ” நேசிச்ச பெண் கூட உடல் உறவு வைச்சுக்கிறதுன்னா என்ன ? யோசிச்சுப்பாத்தீங்களா ? அது எவ்ளவு அந்தரங்கமான ஒரு தொடர்புன்னு… அப்ப ரகசியங்களே இல்லை. தனிமை இல்லை. அவ்ளவு திறந்து போட்டுண்டு நாம் நம்ம மனசை எங்கயுமே காத்தாட விடுறதில்லை…அது ஒரு பெரிய எக்ஸஸைஸ்…பகிர்ந்துக்கிறதுக்கான பயிற்சி…காந்திக்கு அது இல்லாமப் போச்சு.. அதனாலத்தான் அவர் மீராபென் கூட அந்தப் பரிசோதனையைச் செய்யமுடிஞ்சது. அவர் அந்தப் பெண் கூட உறவு வைச்சுக்கிட்டிருந்தார்னா அது பெரிய விஷயம் இல்லை. ஆன இது கேவலம்…. அந்தப்பொண்ணுக்கு தெரியாம அதை அவர் பண்றார். அது நம்பிக்கை துரோகம். அந்தப்பொண்ணோட •பீலிங்ஸை அவர் கணக்கில எடுத்துக்கல்லை. அது ஆணவம்…. அதை கஸ்தூர்பா செஞ்சிருந்தா அவர் எப்டி ரியாக்ட் பண்ணியிருப்பார் ? யோசிச்சுப்பாருங்க…அதில இருக்கிற ஆணாதிக்கப் போக்கு தெரியும்…. “சுந்தர ராமசாமி சொன்னார். அன்று நாங்கள் அவரது மாடியில் பெரிய பலாமரத்தின் இலை நிழல்கள் ஆடும் வெளியில் அமர்ந்திருந்தோம். “இதைவிட என்னால நேருவை ஏத்துக்க முடியுது..அவர் அழகை ரசிக்கிறவர். அவருக்கு பெண்கள் தேவைப்பட்டாங்க. அவங்களை அவர் தேடிப்போனார்…லேடி மவுண்ட்பாட்டன் பத்மஜா நாயிடுன்னு…அந்தக் காதல்களில ஒரு நேர்த்தி இருக்கு…. அதில ரொமான்ஸ் இருக்கு… “. நான் காந்தியைப்பற்றிய அவரது தொடர் விமரிசனங்களால் புண்பட்டிருந்தேன். ஆனால் அன்று எனக்கு காந்தியை ‘காப்பாற்றத் ‘ தெரியவில்லை. ஆகவே நான் குரூரமாக உள்ளே நுழைந்தேன், “நீங்க இப்ப நேரு செஞ்ச மாதிரி செய்வீங்களா ? உங்களுக்கு காதலிகள் உண்டா. ? “.சுந்தர ராமசாமி சாதாரணமாக “நேக்கு அப்டி ஒரு பொண் மேல லவ் வந்தா அதை பாத்து பயப்பட மாட்டேன். அதை மூர்க்கமா ஒடுக்க மாட்டேன். உடனே அது பின்னாலபோய்டுவேன்னு சொல்லலை. அது பலபேர் வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட விஷயம். அதனால யோசிப்பேன், நிதானமா இருப்பேன். ஆனா அதுக்காக குற்ற உணர்ச்சி கொள்ளமாட்டேன். நான் ஒருத்தியை லவ் பண்ணனுமானா கமலாகூட உறவை முறிச்சுக்கணும். அதான் நியாயம். அவளை நான் ஏமாத்தக் கூடாது. மேரேஜ்ங்கிற அமைப்பையும் ஏமாத்தக் கூடாது. நேரு யாரையும் ஏமாத்தலை… “.
பிற்பாடு காந்தியைப்பற்றிய சுந்தர ராமசாமியின் எண்ணங்கள் மாறின. அதற்கு பத்மநாபன் ஒரு காரணம். அவர் காந்தியை ஆழமாக உள்வாங்க தொடங்கி அதற்குள் பத்துவருடங்கள் ஆகிவிட்டன. ஒரு பத்து வருடங்களில் சுந்தர ராமசாமி பத்மநாபன் மூலம் காந்தி பற்றிய ஆழமான மறுபரிசீலனையைச்செய்தார் என்று எண்ணுகிறேன். காந்தி பற்றிய அவரது விமரிசனங்கள் அப்படியேதான் இருந்தன. ஆனால் அவற்றுடன் சேர்த்தே காந்தியை புரிந்துகொள்ளவும் ஏற்கவும் இயலும் என சுந்தர ராமசாமி உணர்ந்தார். காந்தி இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான முன்னுதாரணம் என்பதை மூன்று அடிப்படைகளில் சுந்தர ராமசாமி மதிப்பிட்டார்.பொருளை நுகர்வதென்பது பூமியை சிறிய அளவில் நுகர்வதே. நுகர்வுநோக்கு பூமியையே ஒருநாள் குப்பையாக வீசிவிடநேரும் என்பதை உணர்ந்த அரசியல் ஞானி காந்தி. அந்த அறிதல் நேருவுக்கு இருக்கவில்லை, சொல்லிக்கேட்டபோது புரியவும் இல்லை. இது இந்தியாவைப்பொறுத்தவரை மிக துரதிருஷ்டவசமான ஒன்று. இந்தியாவின் இயற்கைவளங்களை அழிக்க நேரு காரணமாக அமைந்தார். நேருவும், அம்பேத்கரும், எம்.என்.ராயும் இந்தியாவின் சாரத்துக்குள் செல்ல இயலவில்லை. அவர்களுடைய ஐரோப்பிய நோக்கே இதற்குக்காரணம்.அவர்கள் மேலைநாட்டு ஜனநாயகத்தை மட்டுமே அறிந்திருந்தனர். அதையே அவர்கள் பின்பற்ற விரும்பினர். “சாராம்சத்தில அவங்க மூணுபேரும் ஒண்ணுதான்… ” என்றார் சுந்தர ராமசாமி. “வாழ்க்கையில கடைசிக்காலத்தில அம்பேத்கர் வெளியே வந்தார். ஒரு பெரிய மாற்றத்தை உண்டுபண்ணியிருப்பார்… அது நடக்காமப்போச்சு. “ஐரோப்பிய ஜனநாயகம் என்பது சிறிய நாடுகளை சார்ந்து உருவானது.ஆகவே மைய அமைப்பு சார்ந்தது அது. நேரடியானது. இந்தியா சீனா போன்ற மாபெரும் தேசங்களுக்கு அது சரிவராது. இங்கே உள்ள மையம் தேசத்தின் விளிம்புகளை விட்டு மிகவும் தள்ளி இருக்கும். அது எவ்வளவு முயன்றாலும் விளிம்புடன் நேரடியான தொடர்பை கொண்டிருக்க முடியாது. இந்த சிக்கல் காரணமாகவே கடந்த காலத்தில் இங்கு ஓர் அதிகாரப்பரவலாக்கம் தேவையாயிற்று. வரலாற்றுக்காலத்துக்கு முன்னரே இந்த பரவலதிகார அமைப்பு இங்கே உருவாயிற்று. காலம்தோறும் அது புதுப்பிக்கப்பட்டது. அதிகாரப் பரவலாக்கம் இயல்பாகவே ஜனநாயகப்பண்புகளைக் கோருகிறது. ஆகவே இங்கு நமக்குரிய ஒரு ஜனநாயக அடிப்படை உருவகி வந்தது, இன்றும் அது ஒருவகையில் தொடர்கிறது. கிராமங்கள் ஒவ்வொன்றும் தன்னிறைவாக இருந்த காலம் நமக்கு இருந்தது. மாமன்னர்களைக் கட்டுப்படுத்தும் மக்கள் அவைகள் இருந்தன. சாதி இவ்வமைப்பில் இருந்தமுக்கியமான ஓட்டை. நீதியை அது குறுக்கியது, முன்னோக்கிய நகர்வை இல்லாமலாகியது. அந்தக் குறையை நீக்கி அதன் அடுத்த கட்டம் நோக்கிக் கொண்டுசெல்வதுதான் தேவை. அதைக் காந்தி புரிந்துகொண்டார்,நேருவும் அம்பேத்கரும் மகலானோபிஸும் புரிந்துகொள்ளவில்லை என்றார் சுந்தர ராமசாமி
நானும் சுந்தர ராமசாமியும் நடந்து நாகர்கோயிலில் இருளப்பபுரம் போய்ச்சேர்ந்தோம். நெருக்கமான வீடுகள். திறந்த சாக்கடைவாய்கள். குப்பைக்குவியல்கள். எங்கும் மலம் மலம் மலம்…. சுந்தர ராமசாமி “பாத்தேளா ? சுதந்திரம் கெடைச்சு அம்பது வருஷம் ஆச்சு. இன்னும் சரியா கக்கூஸ் போகத்தெரியலை நமக்கு. இந்த ஒருவிஷயத்தால ெ ?ல்த் பிரச்சினை கெளம்பி நம்ம நாட்டுக்கு வருஷத்தில எவ்வளவு கோடி நஷ்டம்னு கணக்கு போட்டிருக்கோமா ? இதைப்பத்திக் கவலைப்பட்ட கடைசி அரசியல்வாதி காந்தி. தேச விடுதலைக்குச் சமானமா கக்கூஸ் போறதைப்பத்திப் பேசிட்டிருந்தார். அவர் ஒரு கிராமத்துக்குப் போறச்ச பின்னால ஒருத்தர் அவரோட டாய்லெட்ட கொண்டு போறார். அதை அவரோட பதாகை மாதிரின்னு டாமினிக் லாப்பியர் அவன் புஸ்தகத்தில சொல்றான். கம்பு வச்சிண்டுருக்க காந்தியை சிலையா நிக்க வைக்கிறோம். கக்கூஸ் க்ளீன் பண்ற குச்சியோட நிக்கிற காந்தியைன்னா வைக்கணும்…. அவருக்கு இந்த மக்களோட பிரச்சினை என்னான்னு தெரியும். அதுக்கு உள்ளுணர்வு காரணமில்ல, அவர் இங்கல்லாம் வந்தார். இந்த ஜனங்க கிட்ட பேசினார்.அவ்ளவுதான். இண்ணைக்கும் சுதந்திரம் கிடைச்சு அரை நூற்றாண்டுக்கு அப்றமும், நாம இங்க வர ஆரம்பிக்கலை. நம்ம அரசாங்கம் இந்த மக்களுக்கு கோடிக்கணக்கில பணம் செலவு பண்ணி நலத்திட்டங்களை போடறாங்க. ஆனா இவங்க கிட்ட உனக்கு என்ன வேணும்னு கேக்கிறதில்ல. வெட்டினரி டாக்டர்னா நம்ம அரசியல்வாதிங்க… இதெல்லாம் ஆடுமாடுங்க… ” என்றார். இருளில் ஏதோ ஒரு சாலைக்கு வந்து பஸ்பிடித்து வீடு திரும்பினோம். ” இங்க இருந்த அமைப்புகள்லாம் தாறுமாறாப்போச்சு. புதிய அமைப்பை இத்தனைவருஷம் கழிச்சும் சரியா உருவாக்க முடியலை. இந்த அளவுக்கு பெரிய தேசத்தில கீழ்மட்டத்தை மேல் மட்டம் நேரடியா ஆளணுமானா அந்த தொலைவை இணைக்கிற அளவுக்கு அதிபிரம்மாண்டமான அதிகாரவற்கம் தேவை. அதை வெள்ளைக்காரன் உருவாக்கினான். நேருவும் அம்பேத்கரும் அதே மையப்படுத்தற போக்கை பின்பற்றினதனால அந்த அதிகார அமைப்பு பெரிய பூதம் மாதிரி வளந்து போச்சு. அதுதான் இண்ணைக்கு இந்தியாவோட மிகப்பெரிய சாபம். வீட்டுமுன்னாடி மரம் நிக்கிற மாதிரி அரசாங்கத்துக்கு பக்கத்தில அதிகாரஅமைப்பு நிக்கணும். இங்க என்னன்னா மரத்துமேல வீடு இருக்கிற மாதிரி இருக்கு…. அதை அரசாங்கம் ஒண்ணுமே செய்ய முடியாது, மக்களும் ஒண்ணும் செய்ய முடியாது… உண்மையில இங்க சுதந்திரம் கிடைச்சது அவங்களுக்கு மட்டும்தான்… ” அக்காலகட்டத்தில் டாக்டர் ஜி.எஸ்.ஆர் கிருஷ்ணன்,அ.கா.பெருமாள் இருவரும் சுந்தர ராமசாமியை பெரிதும் பாதித்துவந்தனர். பெங்களூரிலிருந்து சிலதடவை நாகர்கோயிலுக்கு வந்து கிருஷ்ணன் தங்கியிருந்து சுந்தர ராமசாமியிடம் விவாதித்திருக்கிறார். கிருஷ்ணன் தரம்பாலின் ஆய்வுகளையும் அது சார்ந்து மேலே சென்ற ஆய்வுகளையும் சொல்லிவந்தார். இந்திய அமைப்பில் நீர் நிர்வாகம், உபரி பங்கீடு, ஆபத்துகளை எதிர்கொள்ளும் நோக்கு ஆகியவற்றில் நன்கு பயின்று தேறிவந்த ஓர் அமைப்பு இருந்துவந்தது என்று தரம் பால் கூறியதை சுந்தர ராமசாமி அறிந்தார். அதேசமயம் மத்திய அரசு நிதி ஒன்றை பெற்று குமரிமாவட்ட நீர்நிலைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்த அ.கா.பெருமாள் அந்த கோட்பாடுகளை அங்கீகரிக்கும் தரவுகளை, தரம் பால் பற்றிய அறிதல் இல்லாமலேயே, அளித்து வந்தார். குமரிமாவட்டத்தில் இருந்த குளங்கள் வெட்டப்பட்ட விதம், அவை பராமரிக்கப்பட்ட ஒழுங்கு ஆகியவற்றில் இருந்த ஜனநாயக அம்சங்கள் சுந்தர ராமசாமியை வியப்புற வைத்தன. அவை அப்போது பாதிக்குமேல் நிர்வாகக் குளறுபடிகளினால் அழிந்துவிட்டதை அவர் தெரிந்து மிக வருந்தினார். அவரை பத்மநாபனின் காந்தியம் நோக்கி தள்ளிய ஆய்வுப்]
]>
Pingback: jeyamohan.in » Blog Archive » காந்தியின் எளிமையின் செலவு
Pingback: jeyamohan.in » Blog Archive » ஹிட்லரும் காந்தியும்
Pingback: காந்தி பற்றி ஜெயமோகன் « கூட்டாஞ்சோறு