வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்

எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு குளிர்கால மாலையில் ஊட்டி மலைப்பாதையில் நித்ய சைதன்ய யுதியும் நானும் நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தோம். நான் நித்யாவிடம்  சி ஜி யுங் குறித்து அவரது கருத்து என்ன என்றேன். அதை தன் பல நூல்களில் பலவாறாகச்சொல்லியிருப்பதாக அவர் சொன்னார். நான் ஒட்டுமொத்தமாக அவரது கருத்தைக் கேட்டேன். அவர் அதை சொல்வது கஷ்டம் என்றார். பிறகு எதிரே தெரிந்த மலையைக் காட்டி இதன் வடிவம் என்ன என்றார். நான் ஒழுங்கற்ற கூம்பு வடிவம் என்றேன். நித்யா சிரித்தபடி ‘அப்படியா ? “என்றார் .”நீ என்னிடம் ஒரு விளக்கம் கேட்டிருக்கவேண்டும் ;  எந்த இடத்தில் நின்று நோக்கும் போது என்று . குறைந்தபட்சம் நீ அதைச்சொல்லும் போதாவது ‘நான் நிற்கும் இடத்திலிருந்து நோக்கினால்’ என்று சேர்த்துக் கொண்டிருக்கவேண்டும். . நீ அவசரப்பட்டு சிந்திக்கிறாய். சிந்தனையில் நிதானம் என்பதற்கு ஒரே பொருள்தான், நிதானமான சிந்தனை தன்னை மையமாக்கி நோக்குவதை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டே வரும்”

ஓர் எழுத்தாளனாக நான் முன்வந்த காலகட்டத்தில் என் ஆக்கங்கள் பற்றி உருவாகும் கருத்துக்கள் மீது எனக்கு மிகுந்த பதற்றம் இருந்தது. எதிர்மறைக் கருத்துக்கள் என்னை மிகவும் நிதானமிழக்கச்செய்யும். அக்கருத்துக்களில் தந்திரமும் சமத்காரமும் உள்நோக்கமும் தெரிந்தால் கைபரபரக்கும். மெல்ல அந்த பதற்றத்தை நான் இழந்தேன். என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு பரிணாமமாக அதைக் காண்கிறேன். இன்று என்னைப்பற்றி ஒவ்வொரு மாதமும் ஏன் ஒவ்வொரு வாதமும் மிக மிகக் கடுமையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அடிப்படை நியாயம் கூட இல்லாத விமரிசனக்கருத்துக்கள். மீதியுள்ளவை அப்பட்டமான வசைகள். இவற்றுக்கு என் உணர்வுநிலையில் சிறிதாவது இடம் கொடுத்தால்கூட நான் எதையுமே எழுதமுடியாதவனாகிவிடுவேன் . என் நாட்கள் முழுக்க பதற்றமும் மனவலியும் நிரம்பியவை ஆகிவிடும். இதை எவருமே ஊகிக்கலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. நான் என் வாழ்க்கையை என் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் நூல்களுடனும் மிகமிக உற்சாகமாகக் கழிப்பவன். தொடர்ந்து குன்றாத ஊக்கத்துடன் எழுதி வருகிறேன். மிக அபூர்வமாக, இத்தாக்குதல்களினால் என்னை சார்ந்தவர்கள் அல்லது நான் மதிப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியும்போது மட்டுமே எதிர்வினையாற்றுகிறேன். இன்று என்னைப்பற்றிய எக்கருத்துக்கள் மீதும் எனக்கு பெரிய உற்சாகம் இல்லை. என் நாவல்களை மதிப்புரைகளுக்குக் கூட அனுப்புவது இல்லை. மதிப்புரைகள் தானாகவே வரட்டும்  என்ற எண்ணமே உள்ளது. என் ஆக்கங்கள் குறித்து எனக்கு உள்ளூரத் தெரியும். அதைப்பற்றிய நிறைவும் குறையுணர்வும் என்னை அடுத்த கட்டத்துக்கு இயல்பாகவே கொண்டு செல்லும்.

உண்மையில் இந்த பற்றற்ற நிலை பற்றி பிறருக்கு பாடம் சொல்லக்கூடிய நிலையில் நான் இருக்கிறேன். இதன் அடிப்படையான புரிதலை நித்ய சைதன்ய யதியிடமிருந்து கற்றேன். அதாவது பார்வை அல்லது மதிப்பீடு என்பது பெரும்பாலும் அதை முன்வைப்பவனின் இயல்பையும் திறனையும் நோக்கத்தையும்தான் சார்ந்துள்ளது. உலகப்பேரிலக்கியங்களில் இருந்துகூட அற்பமான அனுபவங்களை ஒருவர் பெறக்கூடும். அவரவர் கையளவே கடலில் இருந்தும் அள்ளமுடியும். ஓர் இலக்கியப்படைப்பைப் பற்றிய மதிப்பீடு என்பது அதை மதிப்பிடுபவனையே முக்கியமாக மதிப்பிட்டுக்காட்டுகிறது, காரணம் இலக்கிய அனுபவம் என்பது அந்த அளவுக்கு அகவயமானது. அதற்கு புறவயமான , திட்டவட்டமான அளவுகோல்கள் இல்லை.

என் நாவல்களுக்கு வந்த எதிர்வினைகளை ஒரு நண்பர் தொகுத்து எனக்கு ஒரு பிரதி அனுப்பியிருந்தார். விஷ்ணுபுரம் முதல் எல்லா நூல்களுக்கும் கடுமையான நிராகரிப்புகளே பொதுவான எதிர்வினைகளாக வந்துள்ளன என்பதைக் கண்டேன். விஷ்ணுபுரத்துக்கு முக்கியமான விரிவான பாராட்டுகள் சில வந்துள்ளன. ஆனால் வசைகள் மற்றும் முழு நிராகரிப்புகள் எண்ணிக்கையில் எட்டு மடங்கு. பின்தொடரும் நிழலின் குரலுக்கு அதைவிட அதிக நிராகரிப்பும் வசைகளும். ஒப்புநோக்க அதிக பாராட்டைப் பெற்ற நாவல் ‘ஏழாம் உலகம்’ தான். ஆனால் அதைப்பற்றிய பாராட்டுகக்ள் வர ஆரம்பித்திருப்பதனாலேயே உடனடியாக கடும் வசைகளும் ‘கட்டுடைப்புகளும்’ வரும் என எதிர்பார்க்கிறேன்.

ஆனால் இதழ்களில் அச்சான இம்மதிப்பீடுகளை தமிழின் தேர்ந்த வாசகர்கள் எந்த அளவுக்குப் பொருட்படுத்துகிறார்கள்? விஷ்ணுபுரத்துக்கு புதியபார்வை, கணையாழி, தினமணிகதிர் ,  சரிநிகர்[ஈழம்] போன்ற பல பிரபல இதழ்களில் எதிர்மறையான மதிப்பீடுகள் பல வந்தன. அது படிக்க மிகவும் சிரமமான நாவல் என்று வாய்மொழிக்கூற்று உருவாக்கப்பட்டது. ஆனால் அந்நாவலின் வாசகச்செல்வாக்கு எனக்கே பிரமிப்பூட்டுவது. இன்றுவரை அதைப்பற்றி தொடர்ச்சியாக கடிதங்கள் வந்ந்தபடி உள்ளன. ஒருவாரம் தொடர்ச்சியாக விஷ்ணுபுரம் பற்றி யாருமே எனக்கு எழுதாமலிருந்தது சென்ற டிசம்பர் மாதம்தான். பின்தொடரும் நிழலின் குரலுக்கு மார்க்ஸிய வட்டாரத்துக்குள் உள்ள செல்வாக்கை நான் ஆச்சரியத்துடன்தான் சொல்லமுடியும். வெளியே ஒரு வகை கருத்து ஒலிக்கிறது, உள்ளிருந்துவரும் குரல் நேர் மாறானது. அக்குரல் அங்கே இருப்பதை அவர்கள் அறிவார்கள் என்பதனால்தான் அந்நாவல் இன்றும் ஓயாத கசப்பை உருவாக்கியபடியே உள்ளது. அதைப்பற்றி எனக்கு எழுதியவர்களில் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள மிகமுக்கியமான இடதுசாரிகள் சிலர்கூட உண்டு.

ஆக சிற்றிதழ் சூழல் சார்ந்து உருவாகும் கருத்துக்களுக்கு நேரடியான மதிப்பு ஏதும் இல்லை. அவை நூல்மீதான மதிப்பீடுகள் அல்ல, மாறாக சிற்றிதழ்ச் சூழலில் என்ன நடக்கிறது என்பதற்கான ஆதாரங்களே. என்னவகையான கருத்தியல்கள், என்னென்ன வகையான வடிவக்கோட்பாடுகள் , எத்தகைய தனிப்பட்ட உறவுகள் செயல்படுகின்றன என்பதை மட்டுமே அவை காட்டுகின்றன.
***
இந்த அடிப்படையிலிருந்து நான் எழுத்து என்ற செயல்பாட்டுக்கும் வாசகன் என்ற நிலைக்கும் இடையேயான உறவென்ன என்று யோசிக்க எண்ணுகிறேன். ‘ இலக்கியம் வாசகனுக்காக எழுதப்படுகிறது, இல்லையேல் அதை பிரசுரிக்கவேண்டிய தேவை இல்லையே ‘ என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டுகிறது. அது உண்மை. ஆனால் எந்த வாசகனுக்காக ? சமகாலத்தைய  பலவிதமான வாசிப்புமுறைகளின் ஒட்டுமொத்த சராசரியாக உருவாகி தன் முன் நிற்கும் வாசக உலகத்தையே இப்படிச் சொல்பவர்கள் வாசகன் என்ற ஒருமை மூலம் குறிப்பிடுகிறார்கள். அவ்வாசகனை எப்படி வரையறை செய்துகொள்வது? அவனைக் கவர்ந்த சராசரிப் படைப்பை வைத்துத்தான் இல்லையா ? அப்படியானால் இலக்கியத்தில் எந்தப் புதிய முயற்சியும் நிகழ முடியாது .

தமிழ் இலக்கியச்சூழலை இரண்டாகப்பகுத்து ஆராயலாம். வணிக நோக்குடன் எழுதப்படும் பிரபல எழுத்தை ஒருவகையாகவும் இலக்கிய நோக்குடன் எழுதப்படும் சிறுபான்மை எழுத்தை இன்னொருவகையாகவும் பிரிக்கிறோம். இவற்றின் சராசரிகள் என்ன ? வணிகஎழுத்தில் 1]  செயற்கையான முறையில் மிகைப்படுத்தப்பட்ட உணர்சிகள் 2] பாலுணர்வின் நியாயப்படுத்தப்பட்ட வெளிப்பாடு என்ற இரு அம்சங்களே மேலோங்கியுள்ளன.அதே சமயம் இதோ மிகையுணர்ச்சி இதோ பாலுணர்ச்சி என்று நேரடியாகப் பரிமாறவும் கூடாது. உரிய பாவனைகளுடன் தான் செய்யவேண்டும். மிகையுணர்ச்சியை வாழ்க்கையைப்பற்றிய ஆழமான பார்வையாகவும் பாலுணர்ச்சியை வாழ்க்கைச்சித்தரிப்பின் பின்புலத்தில் பொருத்தியும் காட்டவேண்டும். இக்கலவையை சரிவரச்செய்தவர்கள் வெற்றிபெற்ற வணிக எழுத்தாளர்கள்.

நம் இலக்கிய எழுத்தில் சராசரி எப்போதுமே முற்போக்கு யதார்த்த வாழ்க்கைச் சித்தரிப்புதான்.  அதற்கு ‘அப்பட்டமான படப்பிடிப்பு’ என்ற முத்திரை இருக்கிறது. அடுத்தபடியாக தனிமனிதன் ஒருவனின் உளவியல் இக்கட்டுகளைச் சித்தரிக்கும் ஆக்கங்கள். ஆனால் நமது நல்ல படைப்புகள் அனைத்தும் இச்சராசரிக்கு சற்று விலகி த்தான் தங்கள் செயல்தளங்களைக் கொண்டுள்ளன.

ஓர் இலக்கியவாதி எழுதும்போது வாசகனை கருத்தில் கொள்வது என்பது உண்மையில் இந்த சராசரியை கருத்தில் கொள்வதுதான்.  வணிக எழுத்தாளனின் நோக்கம் வணிகம் என்பதனால் அவன் கண்டிப்பாக சராசரியை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. அவனது எழுத்து உடனடியாக பல்லாயிரம் பெரை சென்றடையவேண்டிய தேவை உள்ளது. அதேசமயம் அவன்கூட தன் தனித்தன்மையை அச்சராசரியிலிருந்து மாறுபடுவதன்மூலமே அடைய முடியும். இல்லையேல் ஏற்கனவே எழுதப்பட்டவற்றை மீண்டும் எழுதுபவனாக அவன் முடிய நேரும்.  ஆகவேதான் திசைதிறப்பாளர்களான முக்கிய வணிக எழுத்தாளர்கள் இலக்கியப்புலத்தில் ஆழ வேரூன்றி எழுபவர்களாக இருக்கிறார்கள். கல்கி , சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து உதாரணம். ஆக வணிக எழுத்துகூட ஓர் எல்லைவரையே வாசகனை, அதாவது சராசரியை கருத்தில்கொள்ள இயலும்.

இலக்கிய எழுத்தைப்பொறுத்தவரை அந்த சராசரிக்கு அப்பால்செல்லும்போதே அப்படைப்பின் இலக்கிய முக்கியத்துவம் உருவாகிறது என்பதே உண்மை. சராசரி வாசகன் என்பவன் அவனது கண்முன் எக்கணமும் நிற்க முடியாது. ஏனேனில் அவன் இறந்த காலத்தை சேர்ந்தவன்.

இலக்கியவாதியின் முன் நிற்பவன் எதிர்கால வாசகன். அவனது படைப்பு உருவான பிறகு அப்படைப்பின்மூலம் கண்டடையப்படும் புதிய வாசகன். அது ஒரு மானசீக லட்சிய உருவகம். இலக்கியப்படைப்புகள் எல்லாமே உரையாடல்கள்தான். எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையேயான உரையாடல்கள்தான். ஆனால் அவ்வாசகன் அவ்விலக்கியவாதியின் இலட்சியக் கற்பனையால் உருவகிக்கபடுபவன். ஆகவே அவனது இன்னொரு முகம். ஆடிப்பிம்பம். ஆகவே இலக்கியப்படைப்புகள் என்பவை நீண்ட தன்னுரையாடல்கள்.

இலக்கியப்படைப்புகள் பிரசுரிக்கப்படுவதன் நோக்கம், குறைந்தபட்சம் அவ்வெழுத்தாளனைப்பொறுத்தவரை , அந்த இலட்சியவாசகனைக் கண்டடைதலேயாகும். அவ்விலட்சிய வாசகனின் சாயல் கொண்ட ஒருவாசகன் தான் எழுத்தாளனை மகிழ்விக்கிறான். தான் எழுதியது ஏற்கப்பட்டுவிட்டதான மகிழ்ச்சியை அவன் அப்போது அடைகிறான். மாண்டிகிறிஸ்டோ கோமகன் தன் தனிமைச்சிறையின் கரிய கற்சுவரில் தட்டிக் கொண்டே இருக்கிறார். பலநாட்களுக்குப்பின் ஒரு நாள் அந்த ஒலிக்கு எதிர்வினை வருகிறது. அவருக்கு மீட்பு வந்துவிட்டது.

அவ்விலட்சிய வாசகன் ஒருபோதும் எதிர்மறையாக தன்னை நிலைநாட்டிக் கொண்டவன் அல்ல. அவன் கட்டுடைப்பாளன் அல்ல. அத்தகைய வசிப்புகள் படைப்பின் சடலத்தையே வாசகனுக்கு அளிக்கின்றன. இதை கட்டுடைப்புத்திறனாய்வு உச்சத்திலிருந்த எண்பதுகளில் சொல்லியிருந்தால் சிலர் எதிர்க்கக் கூடும். இன்று இது ஒரு சாதாரண உண்மை. ஒரு ரசனைவாசிப்பு என்பது படைப்புக்கு தன்னை ஒப்ப்புக் கொடுத்துவிடுவதோ, அடிமைப்படுவதோ அல்ல. அதை ரசித்து ஒரு நூலையாவது வாசித்தவர்கள் உணர்வார்கள்.  அதிலும் எதிர்மறை நிலைபாட்டுக்கு இடம் உள்ளது. அதிலும் கட்டுடைப்பு நுட்பமாக நிகழ்ந்தபடியே உள்ளது. உண்மையில் கட்டவிழ்ப்பும் மறுஆக்கமும் ஒரேசமயம் நிகழும் ஒரு படைப்புச்செயல்பாடே வாசிப்பு என்பது.

ரசனைவாசிப்பு படைப்புக்கு முன்னால் தன்னுடைய ஆழ்மனதை திறந்துவைக்கிறது, மொழியின் குறிகளும்படிமங்களும் நனவிலியைத் தூண்ட அனுமதிக்கிறது. மற்றவகை வாசிப்புகள் தங்கள் புறமனதை, தர்க்கத்தை மட்டுமே படைப்பை நோக்கி திறந்துவைக்கின்றன. அதில் சிக்குவனவற்றைமட்டுமே அவை அறிமின்றன. துரதிருஷ்டவசமாக  இலக்கியப் படைப்புகள் ஆழ்மனதின்  வெளிப்பாடுகள்.  ஆழ்மனதுடன் பேச முற்படுபவை. அவை தர்க்கபூர்வமான ஒரு முகத்தை கொண்டிருக்கும். ஆனால் அந்த தர்க்கம் ஆழ்மனம் சார்ந்த அதன் இயக்கம் மூலமே பொருள்படக்கூடியதாக இருக்கும். அந்த தளம் இல்லாவிட்டால் சமயங்களில் அபத்தமாக ஆகிவிடும்.

நாய் சகநாய்களுடன் உரையாடும்போது வாயால் பேசுகிறது. கூடவே மேலும் நுட்பமான பேச்சு ஒன்றை வாலால் நடத்துகிறது. உண்மையில் வாய்ப்பேச்சு வால்பேச்சுக்கு துணைமட்டுந்தான். வால்வெட்டப்பட்ட நாய் சகநாயுடன் பேசும்போது வெறும் வாய்ச்சொற்கள் முற்றிலும் தவறான, எதிர்மறையான பொருளைத் தந்துவிடுகின்றன. ‘ஹலோ நான் இந்த தெரு நாய், நீ ? ‘ என்ற அன்புக்குரல் ‘எவண்டாவன் என்
வீட்டுத்தெருவழியாக போகிறவன்?” என்று பொருள்படுகிறது. கடிரகளை ஆகிவிடுகிறது.

அப்படியானால் புற வாசகன் என்பவன் இல்லையா என்ன? ஒரு படைப்புக்கு புறவயமான வாசிப்புத்தளமே இல்லையா? எதை நாம் நம் உள்ளே காண்கிறோமோ அதையே வெளியேயும் காணமுடியும் என்பது அனுபவத்தின் அடிப்படைப் பாடங்களில் ஒன்று . எந்த இடத்தை நான் என் சாரத்தை உணர்ந்தபடி எழுதினேனோ அந்த இடத்தை பல்லாயிரம் வாசகர்கள் தங்கள் சாரத்தை உணர்ந்து வாசிப்பதை மீண்டும் மீண்டும் கண்டிருக்கிறேன். உண்மையில் ஒருமுறைகூட இது தவறியது இல்லை. என் கண்ணீர் துளி விழுந்த பக்கங்களில் என் வாசகனின் கண்ணீர்துளி விழும். உதாரணமாக பின் தொடரும் நிழலின் குரலில் ஏசு வரும் காட்சி. என் ஆக்கங்களில் நான் உச்சகட்ட மனஎழுச்சியை அறிந்த இடம் அது. அதை அடைந்த பல நூறு வாசகர்கள் எனக்கு எழுதியிருக்கிறார்கள். அதேசமயம் மனதை மூடிக்கொண்டு ஒருவர் அதை எளிதாகத்தாண்டிச்செல்லமுடியும் என்பதும் உண்மையே. அத்தருணத்தை உணரவே இயலாதவர்களும் வாசிக்கிறார்கள் என்பதும் உண்மையே. கலையின் இயல்பு அது. ம்னோவசியம் போல. உடன்பட முன்கூட்டியே மறுத்துவிட்டால் கலை தோற்றுவிடும். அதை நன்கறிந்த பிறகு அத்தகைய நுட்பங்கள் முன் கண்களை மூடிக் கொள்பவர்கள் அல்லது காணமுடியாதவர்கள் குறித்து மெல்லிய புன்னகைக்கு அப்பால் எனக்கு சொல்ல ஏதுமில்லை என்று கண்டேன்.

என் ஆக்கங்களில் பல முக்கியமான இடங்கள் மிக மிக மௌனமாக உள்ளன. காடு நாவலில் எவையெல்லாம் நாவலின் மையமான இடங்களோ அவையெல்லாமே வாசகனின் குறிப்புணர்திறனை நம்பி விடப்பட்டுள்ளன. உதாரணமாக அந்நாவலில் குறிஞ்சிப் பூவை காதலர்கள் காணும் இடம். காடு முழுக்க பெய்துகொண்டிருந்த உணர்வுகளின் உக்கிர மழை அங்கே இல்லை. உச்சியில் ஒன்றுமே இல்லை. அம்மலரைப்பார்க்கையில் அபூர்வம் என்பதன்றி எவ்விதச் சிறப்பும் இல்லா எளிய மலராக அது உள்ளது.  

ஏழாம் உலகில் பல கதாபாத்திரங்களின் முழுக்குணச்சித்திரங்கள் ஒரேவரி வசனத்தில் குறிப்புணர்த்தப்பட்டுள்ளன. பல இடங்களில் மௌனமான இடைவெளி மூலமே நாவலின் சாரமான பல பகுதிகள் முன்வைக்கப்படுகின்றன. அவை வாசகர்களிடம் தவறாமல் நுட்பமாகச் சென்று சேர்வதை இப்போதும் கண்டுகொண்டிருக்கிறேன். பேதங்களுக்கு அப்பால் மனிதமனதின் ஆழம் ஒன்றுதான் என்று நான் நம்புவதை இவை உறுதிசெய்கின்றன. இலக்கியம் என்ற ஊடகத்தின் நியாயமும் இதுதான். எல்லா தடைகளையும் கடந்து இலக்கியத்தால் மனித மனத்துடன் உரையாடமுடியும் என்ற அடிப்படையிலேயே இலக்கியங்கள் உருவாகி செயல்படுகின்றன. அவ்வடிப்படையே செவ்வியல் படைப்புக்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. பேதங்களை வலியுறுத்தும் கோட்பாட்டாளார்கள் – முன்பு அவர்கள் மதவாதிகள், இன்றுவரசியல் வாதிகள்– மீண்டும் மீண்டும் குரலெழுப்பி இதை மறுக்கிறார்கள். அவர்கள் கண்ணெதிரே இலக்கியம் அத்தடைகளை தாண்டிச் செல்கிறது. அவர்களுக்கு சமகால உதாரணம் விஷ்ணுபுரம். அந்நாவலை வாசகனிடமிருந்து விலக்கும்பொருட்டு அதைக் ‘கட்டுடைத்து’ பேதங்களின் அடிப்படையில் நிராகரித்து பேசியவர்கள் அந்நாவல் எப்படி அனைத்து தடைகளையும் தாண்டிச்செல்கிறது என தனிமையிலேனும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

இலக்கியம் அகவயமான அணுகுமுறை மூலமே அணுகப்படமுடிவது. அதற்கு புறவய மதிப்பு ஏதும் இல்லை. ஆனால் அதன் மீதான அகவய மதிப்பீடுகள் மெல்ல உருத்திரண்டு இயல்பாகவே ஒரு புறவய மதிப்பீடு உருவாகி வருவது நிகழ்ந்தபடியே உள்ளது. ஆழத்தில்  மனிதமனம் ஒன்றே என்று இலக்கியம் நம்புவதற்கு அதுவே ஆதாரம்
ஒருமுறை நாங்கள் இருவர் திருவனந்தபுரம் ஆலப்புழா  ரயிலில் சென்றுகொண்டிருந்தோம். மலையாள எழுத்தாளர் உறூப் [பி சி குட்டிகிருஷ்ணன்] எழுதிய ‘உம்மாச்சு ‘ என்ற நாவலைப்பற்றி பேச்சுவந்தது. நான் அதில் ஒரு இடத்தைப்பற்றி சொன்னேன். அதில் ஒரு குட்டிக்கதாபாத்திரமான அனாதை முகமது இன்னொரு அனாதையான பாத்துமாவை கண்டடைகிறான். அவள் ஏமாற்றப்பட்டு கருவுற்று முழு கர்ப்பிணியாக வாழ்க்கையில் அடுத்தவேளை உணவுக்கு வழியற்றவளாக இருக்கிறாள். முகமது அவளை மனைவியாக எற்க முடிவுசெய்கிறான். அதை அவன் அவளிடம் சொன்ன கணம் அவர்கள் இருவருமே அனாதைகள் அல்லாமல் ஆகிறார்கள். இருவருக்குமே வாழ்க்கையில் பொருளும் தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது. அக்கணத்தை குறைந்த சொற்களில் சொல்லும் உறூப் ‘அவ்வழியாக தெய்வம் சென்றது’ என்கிறார். அதை நான் படித்தபோது பெரிய மன எழுச்சி கொண்டென் என்றேன்.

நண்பர் ஆவேசத்துடன் அதேவரி அவரை எப்படி மீட்டியது என்றார். அப்போது சற்றுதள்ளி அமர்ந்திருந்த ஒருவர்  கண்கள் மினுமினுக்க அவரையும் அவ்வரி ஆரத்தழுவிய கணம் இருந்தது என்றார். என் நண்பர் ஒரு வகை பதற்றமான ஆள். மலையாளத்தில் ‘சூடன்’ என்போமே அதுபோல. அவர் எழுந்து பக்கத்து பகுதியில் சீட்டாடிக்கொண்டிருந்த கும்பலை அணுகி கைதட்டி ‘யாராவது இங்கே உம்மாச்சு வாசித்திருக்கிறீர்களா?”  என்றார். இருவர் வாசித்திருந்தார்கள். ”அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது?” என்றார் நண்பர். இருவருமே நான் சொன்ன அதே இடத்தை சொன்னார்கள். உற்சாகம்தாங்காத நண்பர் ஊருக்கு ஓணத்துக்கு கொண்டுபோக வைத்திருந்த பெரிய மதுபுட்டியை அங்கேயே உடைத்தார். உறூபின் மனம் அறிந்த ‘மலர் உதிரும் ஒலி ‘ காலங்களைத் தாண்டி பல்லாயிரம் செவிகளுக்கு வந்தபடியேதான் உள்ளது. அதுவே இலக்கியத்தின் வலிமை.

என் ஆக்கங்களை முன்வைத்து நான் இதையே சொல்ல முடியும். அவை என் இலட்சிய வாசகனாகிய இன்னொரு ஜெயமோகனுக்காக எழுதப்பட்டவை. அந்த ஜெயமோகனின் முகங்களை நான் ஆயிரக்கணக்கில் காணமுடிகிறது என்பதே என் எழுத்து வெற்றிகரமானது என்பதற்கான ஆதாரமாகும். அதில் எனக்கு முழு நிறைவு உண்டு.

**

இவ்விரு நாவல்களைப்பற்றிய விமரிசனக்கூற்றுகளுக்கு நான் விரிவான எதிர்வினை ஏதும் அளிக்கப்போவது இல்லை. அவை அவ்விமரிசகர்களின் கருத்துக்கள்.

இவற்றைப்பற்றிய என் சொற்கள் சில இங்கு சொல்லப்படவேண்டுமெனில் இவ்வாறு சொல்வேன். காடு ஒரு காதல் கதை அல்ல. அது காதலின் கதை. காதல் என்றால் நமக்கு குறிஞ்சிதிணை. அவ்விலக்கணத்தின் விரிவுக்குள் செல்லும் நாவல் அது. குறிஞ்சி நிலம், குறிஞ்சிக்குரிய குறமகள்.ஆனால் குறிஞ்சி வாழ்க்கையில் ஒரு வண்ணத்தீற்றல் போல வந்து மறையும் ஒரு மாயம். அதற்கு மேல் ஏதுமில்லை. காலங்களில் சிறியது வசந்தகாலம். ஆனால் அதன் நினைவைக் கொண்டே கோடையும் இலையுதிர்காலமும் எதிர்கொள்ளப்படுகின்றன. கிரி அறிந்தது ஒரு உக்கிரமான காதலை அல்ல. ஒரு காதலாக அது மலர சந்தர்ப்பமே இல்லை. சில சந்திப்புகள் சில உணர்வெழுச்சிகள், அவ்வளவுதான். அவனைச்சுற்றி அதைவிடமேலான பல உணர்ச்சிகள் கொப்பளிக்கின்றன. மகத்தான பல விஷயங்கள் நிகழ்கின்றன.காதலைவிட உக்கிரமான காமம் நுரைபொங்கி அலையடிக்கிறது. உறவுகள் வலையாக பின்னி விரிகின்றன. ஆனால் அவை ஏதும் அவனில் எஞ்சவில்லை. அந்தக் காதலின் வண்ணத்தின் மிச்சங்களே முதியவயதுவரை அவனில் உள்ளன. பாலையாக மாறிய எஞ்சிய வாழ்க்கையில் அவை மட்டுமே துணையாக உள்ளன. காதல் என்ற இந்த கவித்துவ மாயத்தைப் பற்றிய ஒரு வியப்புதான் இந்நாவல். இதுவே இதன் முதல்தளம்.   

ஏழாம் உலகம் மனிதனின் கீழ் எல்லையைப்பற்றிய நாவல். நான் இதை எழுதும்போது அருண்மொழி ஏன் இதையெல்லாம் போய் எழுதுகிறாய் என்று மனம்கசந்து கேட்டாள். எனக்கு அப்போது நோக்கம் இருக்கவில்லை. ஆனால் எழுதி முடிக்கும்போது தெரிந்தது. நான் என் மற்ற நாவல்களில் தேடியவற்றின் நீட்சியே இதிலும் உள்ளது. நான் மனித உன்னதத்தின் தருணங்களை எழுதியுள்ளேன். அப்போது மனிதனில் எஞ்சுவதென்ன என்று நோக்கியிருக்கிறேன். இது மனிதக் கீழ்மையின் தளம். அரசியல் அடையாளம், சமூக இடம், ஆன்மீக அடிப்படை ஏதும் இல்லாத , ஏன் மனித அடையாளம் கூட இல்லாத மனிதர்களின் உலகம். அங்கே மனிதமாக எஞ்சுவது எது என்பதே என் வினா. பல இடங்களில் இவ்வினா நுட்பமாக மீண்டும் மீண்டும் எழுப்பபடுவதை வாசகர்கள் காணமுடியும். வெளிப்படையாக எழுப்பபடும் இடம் அந்த வெள்ளைக்கார சாமியார் இருத்தல் இல்லாமலிருத்தல் பற்றிய வரியை சொல்லும் இடம். ஒரு விரிந்த தளத்தில் அனைவருமே உடலை-  தங்கள் உடல் அல்லது பிறர் – விற்று வாழ்பவர்களே என்ற நோக்கும் அதில் உள்ளது. எங்கெல்லாம் உருப்படி என்ற சொல் எப்படியெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்ற நோக்கு கொண்ட வாசகன் அதை எளிதாக உணர இயலும். பண்டாரம் உருப்படிகளை உபயோகித்து வீசுபவர் என்றால் அவரே கூட அவரது குடும்பத்தினரால் உபயோகிக்கப்படும் உருப்படியாக இருப்பதைக் காட்டுவதே அநாவலின் இன்னொரு மையம்.  எஞ்சுவதென்ன என்று நான் கண்டடைந்தது எனக்கு மிகவும் நிறைவளித்த்து. அது ஓர் ஆழமான சுய கண்டடைதல். அது வாசகர்களுக்கும் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்.
[ 12– 9– 2004 கார்முகில் இலக்கியவட்டமும் , உயிர்மை இதழும் சேர்ந்து திருச்சியில் நடத்திய ‘ காடு , ஏழாம் உலகம் விமரிசனகூட்டத்தில் பேசிய உரை]

ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்:புதியமாதவி, மும்பை

ஜெயமோகனின் ஏழாம் உலகம்”அ.முத்துலிங்கம்

ஜெயமோகனின் ஏழாம் உலகம் “பொ கருணாகர மூர்த்தி

»

ஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா

ஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்

அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்

 

This entry was posted in அனுபவம், இலக்கியம், வாசிப்பு and tagged , , , . Bookmark the permalink.

One Response to வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்

  1. Pingback: jeyamohan.in » Blog Archive » ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s