வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை

பி. கே. சிவக்குமார் எஸ் வையாபுரிப்பிள்ளையைப்பற்றி எழுதும் தொடர் கட்டுரைகள் மிகுந்த முக்கியத்துவம் உள்ளவை. வையாபுரிப்பிள்ளை எந்த அரசியல் அமைப்பின் பின்பலமும் இல்லாதவர். திராவிட இயக்கத்தில் கடும் எதிர்ப்புக்கு அவர் ஆளானார். அதேசயம் காங்கிரஸின் ஆதரவினைப்பெற அவர் முயலவுமில்லை. வேளாளச்சாதியினராக இருந்தும் அச்சாதியின் குரலை புறக்கணித்தமையால் ஒதுக்கப்பட்டார். அன்றைய தமிழ் அரசியல்சூழல் உருவாக்கிய மரபு சார்ந்தப் போலிப் பெருமிதங்களை ஆய்வடிப்படையில் ஏற்க மறுத்தமையால் நிராகரிக்கப்பட்டு வசைபாடப்பட்டவர் அவர். அவரை இன்று நினைவுகூர்கையில் சிலவிஷயங்களை வகுத்துச் சொல்லலாம் என்று படுகிறது

1] கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு தமிழின் தொன்மையை கொண்டுசென்றவர்களை மறுத்து தொல்பொருள் மற்றும் ஒப்பிலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் தமிழிலக்கியங்களின் காலக்கணக்கை வகுக்க முயன்றார். ஒருவேளை அவரது கணிப்புகள் பிறரால் இன்றும் இனிமேலும் நிராகரிக்கப்படலாம். ஆனால் அவரது முறைமை மிகவும் மதிக்கத் தக்கது. ஆங்கில மொழியறிவும் ஐரோப்பிய ஆய்வுமுறைமையும் தேவை என்பதே அவரது கருத்து. அப்படிப்பட்ட அறிவியல் சார்ந்த முறைமை பிற தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள் பலரிடம் இல்லை என்பது இன்று தெளிவாகிப்போன விஷயம். ஆனால் இன்றும் ஆய்வாளர்கள் தனிப்பேச்சில் வையாபுரிப்பிள்ளையின் முறைமையை சிலாகிப்பார்களேயொழிய எழுத்தில் சங்கடகரமான மெளனத்தையே சாதிப்பார்கள்

2] தமிழ்ப்பண்பாடு ஆரம்பம் முதலே எப்படி சம்ஸ்கிருதமரபைச் சார்ந்துள்ளது என்று விளக்கிய வையாபுரிப்பிள்ளை தமிழ்பண்பாட்டை சம்ஸ்கிருதக் கல்வி இன்றி முழுக்க புரிந்துகொள்ள இயலாதென்றார். தமிழின் தனித்துவத்தை அங்கீகரித்தவர் அவர். தமிழாய்வுக்கு சம்ஸ்கிருதக்கல்வியை வலியுறுத்தியதோடு சமஸ்கிருதம் என்ற வளம் மிக்க மொழிமீது தமிழர்களுக்குள் உருவாக்கப்பட்ட வெறுப்பு ஆபத்தானது என்று வாதிட்டார். ஆகவே அவர் பிராமண ஆதரவாளர் என்று சொல்லப்பட்டார். ஆனால் மொத்தமாகப் பார்க்கையில் மனோன்மணியம் சுந்தரனார் வழிவந்த வையாபுரிப்பிள்ளையிடம் பிரமாண நிராகரிப்பு நோக்கே விஞ்சி நின்றது என இன்று காணமுடிகிறது

3] வையாபுரிப்பிள்ளை தனித்தமிழ்வாதம் செயற்கையான உரைநடையையும் பழமைநோக்கையும் உருவாக்கி தமிழில் வளர்ச்சியை தடைசெய்கிறதோ என்று ஐயுற்றார். திசைச்சொற்களை ஏற்க தமிழில் இலக்கண அனுமதி உள்ளபோது அடிப்படைவாத நோக்கை கடைப்பிடிப்பது மூடத்தனம் என்றார். நவீன இலக்கியத்தை பண்டிதர்கள் முற்றாகப்புறக்கணிப்பதை கண்டித்தார். அவர்மட்டுமே புதுமைப்பித்தனை அங்கீகரித்த சமகால பெரும்புலவர். நாவல் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.[ராஜம்]

இந்நோக்குகளுக்காக அவர் மீது அன்று எழுந்த வசைகளை பலரால் கற்பனையே செய்ய முடியாது. சமீபத்தில் அன்றைய சில தனித்தமிழ் மற்றும் திராவிட இயக்க இதழ்களை நோக்கியபோது அவ்வசைகளின் ‘கனம்’ கண்டு அரண்டே போனேன். அவரை ‘பொய்யாபுரியார்’ என்று சொல்லி எழுதிய அறிஞர்களே அதிகம். பேராசிரியர் சி.ஜேசுதாசன் மட்டுமே அவரை அங்கீகரித்து அவருக்காகப் பேசிய முக்கியத் தமிழறிஞர்.

இந்த அழுக்காறு காரணமாக வையாபுரிப்பிள்ளையின் சாதனைகள்கூட தமிழில் புறக்கணிக்கப்பட்டன. வையாபுரிப்பிள்ளை ஆசிரியராக இருந்து சென்னைப் பல்கலையால் 1924 முதல் 1936 வரை வெளியிடப்பட்ட தமிழ்ப் பேரகராதி [1982ல் இது மறு அச்சாகி இப்போது வாங்கக் கிடைக்கிறது.] தமிழ் மொழிவளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாகும். முதன்முதலில் ஒரு பேரகராதியை தொகுப்பதில் உள்ள சிக்கல்களும் தேவைப்படும் உழைப்பும் என்ன என்று இப்போது ஊகிக்க முடியும். [துணை ஆசிரியர்கள் வி நாராயண அய்யர், மு ராகவையங்கார், வி எம் கோபாலகிருஷ்ண ஆச்சாரியார், சோமசுந்தர தேசிகர், மீனாட்சிசுந்தர முதலியார்] அதன் பிறகு வந்த அத்தனை அகராதிகளும் இந்நூலில் இருந்து முளைத்தவையே. இந்நூலின் முக்கியக் குறைபாடுகள் இந்த முக்கால்நூற்றாண்டில் களையப்படவும் இல்லை. சமீபத்தில் காலச்சுவடு இதழில் செம்மொழியாதல் குறித்த விவாதத்தில் திராவிடச் சார்புள்ள தமிழறிஞரும் ஆய்வாளருமான முனைவர் ஆ இரா வேங்கடாசலபதி தமிழ்ப்பேரகராதியின் சாதனை இன்னும் விஞ்சப்படவில்லை என்று சொல்கிறார்.

ஆனால் இந்நூல் வெளிவந்தகாலத்தில் தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் தொடங்கி அன்றைய திராவிட இயக்க தமிழறிஞர்கள் என்ன எழுதினார்கள் என்பது இன்னும் அக்கால இதழ்களில் உள்ளது. தமிழுக்கு வையாபுரிப்பிள்ளை பெரும் துரோகம் இழைத்துவிட்டதாகவும், தமிழை அழிக்கும் ஆரியச்சதியின் ஒருபகுதியாக்வே இந்த பேரகராதி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எழுதித்தள்ளினார்கள். தமிழர் ஆட்சி வரும்போது இவ்வகராதி வங்கக் கடலில் வீசப்பட்டு சரியான அகராதி தொகுக்கப்படும் என்றனர். வையாபுரிப்பிள்ளை அதிகமான வசை கேட்டது இந்த அகராதிக்காகத்தான்.

இரண்டு அடிப்படைகளில் வசைகள் இருந்தன. சம்ஸ்கிருதம் என்று திராவிட இயக்கத்தினர் கருதிய பல சொற்களை[ அவை அன்றும் இன்றும் மக்கள் வழக்கில் உள்ளவை] அகராதியில் சேர்த்தமையால். [ பிற்பாடு அச்சொற்களை பகுப்பாய்வு செய்து அவை தமிழ்ச் சொற்களே என்று அதே தேவநேயப்பாவாணர் தன் சொற்பிறப்பியல் அகரமுதலியில் எழுதினார்] இரண்டு சாதி குறித்த சில சொற்களுக்காக. உதாரணமாக முதலி என்ற சொல்லை சேர்த்தமைக்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. முதலியார் என்று மட்டுமே சேர்க்கவேண்டும் என்று வாதிடப்பட்டது. அப்போது சேன்னையிலேயே பல முதலி தெருக்கள் இருந்தன. பெயர்கள் முதலி என்றே சொல்லப்பட்டன. வையாபுரிப்பிள்ளை முதலி என்ற சொல்லை சேர்த்து பார்க்க முதலியார் என்று கொடுத்திருந்தார். இது சாதிவெறி என்று முத்திரைகுத்தப்பட்டது.

தன் அகராதி நினைவுகளை வையாபுரிப்பிள்ளை தொகுத்து எழுதியுள்ளார். அவரை அறிய அது முக்கியமான நூலாகும். டாக்டர் அ கா பெருமாள் வையாபுரிப்பிள்ளையின் காலக்கணிப்பு குறித்து எழுதிய நூலும் முக்கியமானது. எனினும் அவரது நடையழகை அறிய ‘தமிழ்ச் சுடர்மணிகள் ‘ நூலே முக்கியமானது. அதில் கம்பராமாயண அரங்கேற்றத்தை அவர் விவரித்துள்ள பகுதி தமிழிலக்கியத்தின் சிறந்த உரைநடைச் சித்திரங்களுள் ஒன்று

உண்மையை தன் ஆயுதமாகக் கொண்ட ஆய்வாளன் அழிவதில்லை, அவனை மீண்டும் மீண்டும் தலைமுறைகள் அடையாளம் காணும் என்று காட்டும் ஆதாரங்களுள் ஒன்று சிவக்குமார் தன்னிச்சையான ரசனை மூலம் வையாபுரிப்பிள்ைளையைக் கண்டடைந்தமை.

This entry was posted in ஆளுமை, இலக்கியம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை

  1. Pingback: jeyamohan.in » Blog Archive » அபிதான சிந்தாமணி: கடல் நிறைந்த கமண்டலம்.

  2. Pingback: வையாபுரிப் பிள்ளையும் சமஸ்கிருதமும் « கூட்டாஞ்சோறு

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s