கடிதம் – ரெ.கார்த்திகேசுவிற்கு.

அன்புள்ள ரெ.கார்த்திகேசு அவர்களுக்கு,

திண்ணையில் இந்நூல் மதிப்புரைகளை பாஷாபோஷிணி மலையாள இதழ் வெளியிடும் நூல் மதிப்புரைகளை முன்மாதிரியாகக் கொண்டு எழுதியுள்ளேன். அதாவது அந்நூல்களை இன்னும்படிக்காதவர்களை மனதில் கொண்டு, அதிகமாக நூல்களுக்குள் தலையிடாமல், மாதிரிகளைச் சுட்டி, பொது மதிப்பீடுகளுடன் எழுதுவது. இவ்வகையில் எழுதுபவர் தன் சொந்த பேரில் எழுதுவது முக்கியம். இந்தச் சில வரிகள் அவர் அதுவரை எழுதியவற்றுடன் சேர்ந்தே பொருள் படுகின்றன. ஆகவே சுஜாதா கதையைப்பற்றி அதிகமாகப் பேசமுடியாமலாயிற்று. தாங்கள் பேசியிருப்பதனால் மேலும் சில வரிகள்.

பொதுவாக திறனாய்வு என்பதை நான் ‘பதிவு செய்யப்பட்ட ஒரு வாசிப்பு’ என்றே எண்ணுகிறேன். அவ்வாசிப்பு பிறர் வாசிப்புக்கு உதவலாம். உதவாமலும் போகலாம். வாசிக்கையில் கோட்பாடுகளைப் பயன்படுத்துபவர்கள் குறித்து ஆழமான ஏளனம் எனக்கு உண்டு. நான் வாசிக்க ஆரம்பித்த பிறகு குறைந்தது மூன்று திறனாய்வுக் கொட்பாட்டு அலைகள் அடித்து ஓய்ந்துவிட்டன. நல்ல படைப்புகளும் நல்ல வாசிப்புகளும் இவற்றால் தீண்டப்படாமல் நின்றபடியே உள்ளன. என்னைப் பொறுத்தவரை என் மனதை தொடுகிறதா, என் உணர்வுகளையும் கனவுகளையும் பாதிக்கிறதா என்பதே முக்கியமான வினாவாகும். அப்படி உடனடியாக ஏற்படும் மனப்பதிவையெ வாசிப்பின் முக்கிய அனுபவமாகவும் முடிவுகளை உருவாக்கும் அடிப்ப்டையாகவும் கருதுகிறென்.

திறனாய்வாக எழுதும்போது அந்த வாசிப்பனுபவத்தை மூன்று தளங்களில் ஆராய்ந்து நோக்குவதுண்டு.

1] அப்படைப்பின் மேல்தளத்து மொழி, புனைவு நுட்பங்கள்
2] குறைவாகச் சொல்லி நிறைய குறிப்புணர்த்தும் தன்மை. அது குறிப்புணர்த்தும் விஷயங்களின் விரிவு.
3] அவ்வாறு அப்படைப்பின் மூலம் உணர்த்தப்படும் விஷயத்தின் அறம் சார்ந்த, நீதியுணர்வு சார்ந்த, வாழ்க்கை முழுமைசார்ந்த, பிரபஞ்நோக்கு சார்ந்த எழுச்சி.

பிற்பாடு என் தரப்பை சொல்லும்போதுதான் கலைச்சொற்கள், கோட்பாட்டு உபகரணங்கள் தேவையாகின்றன. அவை அருவமான ஒன்றை புறவயமாகச் சொல்வதற்கான கருவிகளே. என்றுமே இலக்கிய திறனாய்வு எதிர்கொள்ளும் சிக்கல் சுயவாசிப்பனுபவம் என்ற ஆழ்மனம் சார்ந்த, அகவயமான நிகழ்வை புறவயமாக பொதுவாக சொல்வதே. அதற்கு ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோணங்களை, வரையறைகளை அவற்றின் குறியீடுகளான கலைச்சொற்களை பயன்படுத்தி மேலும் சொல்ல முயல்வதே ஒரே வழியாகும். இதுவே என் திறனாய்வு முறை. என் நோக்கில் இதுவே சாத்தியமான சிறந்த வழிமுறை. இதில் உள்ள அந்தரங்கத்தன்மையே உண்மையில் நிலைத்து நிற்பது.

சுஜாதாவின் கதை அதன் குறிப்புணர்த்தப்படும் விஷயங்களின் விரிவினாலும், அக்குறிப்புகளில் உள்ள அடிப்படையான வாழ்க்கை நோக்கினாலும்தான் முக்கியமானது. அக்கதை மிகச்சுருக்கமாக, தாவித்தாவிச் சொல்லிச் செல்கிறது. சொல்லப்படாமல் விட்டுவிட்ட இடங்களே அதில் முக்கியம். இரு இடங்களை உதாரணமாகச் சொல்லலாம். மிகவெற்றிகரமானவனான பாச்சா மது வெறியில் தன் ஆழத்தில் உள்ள ஓர் ஏக்கத்தை, அதில் உள்ள ஈடுசெய்ய இயலாத தோல்வியைச் சொல்லும் இடம் முதலில். வெற்றி தோல்வி என்பதையே ஒருவகையில் தலைகீழாக்குகிறது அது. பலசாலி அப்படி இருப்பதனாலேயே அனுதாபம் என்பதை அடைவதேயில்லை. நோயுற்றவன் நோய் காரணமாகவே அதிக அன்பை அடையும் அதிருஷ்டமுள்ளவனாகிறான். கதை முழுக்க உள்ள ‘ஆமை முயல்’ ஓட்டம் இங்கே தலைகீழாகிறது. இரண்டாவதாக ஆண்டாள் ஏன் ஆராமுதுவை ஏற்கத் திடாரென சம்மதிக்கிறாள்? கதையில் அவள் மாஞ்சு மீது வைத்துள்ள அதீதமான பிரியத்தின் இன்னொரு தளம் இங்கே விரிகிறது. மாஞ்சு இறந்ததுமே அவள் சட்டென்று விடுதலை அடைந்துவிடுகிறாள். அதாவது அவள் மனதில் மாஞ்சு கணவனின் பிரதிபிம்பமாக இருந்தானா? கதையில் ஒரே வரியில் முதலியேயே அந்த சமானத்தன்மையை சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மாஞ்சு அவள் கணவனின் நீட்சி. அவனுக்கு அவள் செய்த பணிவிடைகளுக்குள் மர்மமான பல மன ஓட்டங்கள் உள்ளன. அவன் இறந்ததுமே அவள் கணவன் உள்ளூர முழுமையாக இறந்துவிடுகிறான்.

இக்கதையின் மறைபிரதிகள் [சப் டெக்ஸ்ட்] உருவாக்கும் வாழ்க்கைத்தரிசனமும் எனக்கு மனவிரிவை அளிப்பதாக இருந்தது. மனிதர்கள் நெருக்கமாக ஒருவரோடொருவர் பின்னிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் யாரும் யாருடனும் இல்லைதான். அறுபட சில சூழல்கள் சில தருணங்கள் தேவையாகின்றன. மைந்தர்களுக்காகவே வாழ்ந்த ஆண்டாள் ஒரு கணத்தில் தன்னை தான் மட்டுமாகவே அடையாளம் காண்பது அப்படிப்பட்ட ஓர் அறுபடல், ஓர் சிறகடித்தெழல். அது நம் புனைகதையில் முக்கியமான ஒரு தருணம்தான். சிறந்த ஜானகிராமன் கதைகளின் ஆழமும் நுட்பமும் கொண்ட கதை இது.

நீங்கள் சொன்ன ‘மேலைநாட்டு அச்சம்’ குறித்து. அப்படி நீங்கள் வாசிக்க இடமிருக்கிறது. ஆனால் அதே நோக்கை விரிவாக்கும் வாய்ப்பு உள்ளது. நகரத்தில் வாழ்பவர்களை கிராமத்தார்களை விட சுயநலமிகளாகத்தானே நம் புனைவிலக்கியம் பொதுவாகக் காட்டியுள்ளது? அதன் நீட்சிதானே இன்று அமெரிக்க அல்லது ஐரோப்பியரை அப்படிக் காட்டும் நோக்கு. மேலும் யோசித்தால் செல்வந்தர்களை விட ஏழைகளை முக்கியப்படுத்துவதாக்வே உலக இலக்கியத்தின் பெரும்பகுதி இருந்துவந்துள்ளதைக் காணலாம். இன்னும் சொல்லப்போனால் லெளகீக வெற்றி கொண்டவர்களை ஐயத்துடனும் சற்றே வெறுப்புடனும் தான் இலக்கியங்கள் சித்த்ரிக்கின்றன. வெற்றிகளைவிட தோல்விகளையே இலக்கியங்கள் பாடுகின்றன. அர்ச்சுனனை விட கர்ணன் ஒருபடி மேல்தான். லெளகீகம் மேலேயே கலைக்கு ஆழமான ஒரு மன விலகல் உள்ளது. தன்னை அது லெளகீகத்துக்கு எதிரானதாகவே கற்பனை செய்து கொள்கிறது என்று படுகிறது. இந்த அடிப்படை இயல்பு காரணமாகவே அது அதிகாரத்துக்கு எதிரான நிலையை பொதுவாக எடுக்கிறது. நிறுவப்பட்ட உண்மைகளுடன் மாறுபடுகிறது. கோபுரங்கள் சரியவேண்டுமென்ற ஆசையை அது தன்னகத்தே எப்போதும் கொண்டுள்ளது. வானுயர்ந்த விஷ்ணுபுர ராஜகோபுரம் சரியாவிட்டால் அந்நாவல் உங்களுக்கு நிறைவை அளித்திருக்குமா?

இது கதை என்ற வடிவின் ஆதி நியதிகளில் ஒன்று. அது மனிதனின் ஆழ்மனதில் உருவாகும் நியதி. முற்றிலும் லெளக்கீகராக வாழ்பவர் சுஜாதா. வெற்றிகரமானவர். ஆனால் அவர் தன் கதைகளில் எப்போதுமே லெளகீகத்திற்கு எதிர்நிலையையே எடுத்திருப்பதைக் காணலாம். மீண்டும் மீண்டும் அவர் கதைகள் இதையே காட்டுகின்றன. ஜானகிராமனானாலும் சரி எம். யுவனானாலும் சரி, கதையின் விதி இதுவாகவே உள்ளது.

This entry was posted in எதிர்வினைகள், வாசிப்பு and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s