கனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் 'காடு '

[அ]
ஜெயமோகனின் முதல்நாவலான ‘ரப்பர் ‘ உடன் என் வாசக உறவு தமிழகத்தோடு கேரளத்தை இணைக்கும் பாலக்காடு கணவாயில் , இடையறாது மழை பெய்துகொண்டிருக்கும் இரவு ஒன்றில் நிகழ்ந்தது. விடுதியில் என்னைப்போலவே விழித்திருந்து வாசிப்பில் இன்பம் காணும் தமிழறியா மலையாள நண்பரிடம் என் மகிழ்வை பகிர்ந்துகொண்டேன், தமிழில் ராட்சசக் குழந்தை ஒன்று பிறந்துள்ளது என. வாரக்கடைசியில் கோவை ஞானியுடன் அந்நாவல் குறித்து ஒரு நாள் முழுதும் உரையாடினேன். ஞானியும் என் உணர்வுகளை பகிர்ந்துகொண்டார். ஓர் இளம்படைப்பாளியின் முதல் நாவலுக்கு உண்டான பலவீனங்களையும் பெருநாவல் ஒன்றுக்கான அடையாளங்களையும் ஒருசேரக் கொண்ட நாவல் அது.அப்போது படைப்பளியிடம் எனக்கு அறிமுகமே இருக்கவில்லை.
விமரிசகன் பேராசை கொண்டவன். இலக்கியப் பரப்பில் எப்போதாவது நிகழும் பெருநாவல் மட்டுமே அவனுடைய எதிர்பார்ப்பு. அதுமட்டுமே மரபை முன்னெடுத்துச்செல்லும் தகுதிபெற்றது . இதனாலேயே பெருநாவலை நிகழ்த்திய, அல்லது நிகழ்த்தக்கூடும் என்ற நம்பிக்கையைத்தரும் ,படைப்பாளிகள்மீது புகழ்மொழிகளைச் சொரிய விமரிசகன் என்றுமே தயங்குவது இல்லை. ஆனால் பெரும்பான்மையான தமிழ்ிப்படைப்பாளிகள் இந்த நம்பிக்கையை அளிப்பது இல்லை. தங்கள் படைப்புலகச் சாதனையின் வெளிவட்டத்தை இவர்கள் முதல் படைப்பிலேயே வரையக்கூடும். பிறகு அதை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டம். அல்லது சிறு சிறு வட்டங்கள் வரைந்து தங்கள் இருப்பை படைப்புலகுக்கு உணர்த்தும் யத்தனங்கள். இதன் மீது எரிச்சல் கொள்ளும் விமரிசகன் இவர்களால் எதிரியாக இனம்காணப்படுகிறான்.இச்சூழலில் ஜெயமோகனின் படைப்பியக்கம் விமரிசகனுக்கு ஆர்வமூட்டுவது, ஏனெனில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு எப்போதுமே இடமளிப்பது அது.
பெருநாவல் என்ற ஓன்றை மட்டுமே இலக்காகக் கொண்டது ஜெயமோகனின் படைப்பியக்கம். ‘விஷ்ணுபுரம் ‘ ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ இரண்டுமே இதை உறுதி செய்கின்றன. அதில் அவர் கொண்ட வெற்றி தோல்விகள் குறித்து விவாதம் எழக்கூடும், எழுதல் இயல்பே. ஆனால் அவரது முயற்சியின் முக்கியத்துவத்தை உணர தமிழ் நாவலின் அண்மைக்கால தேக்கத்தை நாம் உணரவேண்டும். இது தமிழ் நவீனத்துவத்தின் தேக்கத்தில் இருந்து உருவானது. தமிழ் நவீனத்துவத்திற்கு இருகிளைகள். ஒன்று கசடதபற இதழை மையமாகக் கொண்டு ஞானக்கூத்தன் ந.முத்துசாமி சா.கந்தசாமி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அசோகமித்திரன், நகுலன் ஆகியோர் இவ்வியக்கத்தை சேர்ந்தவர்கள் .தமிழ் நாவலில் இவர்கள் ஒரு வடிவ மாதிரியை உருவாக்கினார்கள். இவர்கள் எழுதியவை செறிவான சிறுநாவல்கள்.
முற்போக்கு அரசியல் மீது அதிருப்திகொண்டு விலகி எழுத வந்தவர்களினால் ஆனது நவீனத்துவத்துக்கு சற்று பிந்தி வந்த அடுத்த கிளை. சுந்தர ராமசாமி, ஜி நாகராஜன் ஆகியோர் இவ்வியக்கத்தை சேர்ந்தவர்கள்.கசடதபற வகுத்துத்தந்தபாதையில் இவர்கள் எளிதாக சென்றார்கள். ஆனால் மார்க்ஸிய அரசியலின் அடிப்படைக் குணமான விமரிசன அம்சம் இவர்களிடம் இருந்தது.
ஒட்டுமொத்தமாக நவீனத்துவத்தின் குணங்களாக அறிவுவயபட்ட பார்வை, பாரம்பரியம் மீதான உதாசீனம், புராணத் தொன்மங்களில் இருந்து அன்னியப்படல் போன்றவை இவர்கள் வழியாக நம் இலக்கியத்தில் ஊடுருவி இலக்கணங்களாக ஆயின. நம் இலக்கியப்போக்குகளைப் பாதித்த ‘ஜெ.ஜெ .சிலகுறிப்புகள் ‘, ‘நாளை மற்றுமொரு நாளே ‘ போன்ற நாவல்களை நவீனத்துவம் உருவாக்கியது என்றாலும் அந்நாவல்களின் இயல்புகளே நாவ்ல்களின் பொதுக்குணங்களாக அடையாளம்காணப்பட்டன என்பதில் இருந்தே நம் தேக்கம் ஆரம்பித்தது. எழுத்தின் சமூகப்பாதிப்பு மறுதலிக்கப்பட்டு வடிவநேர்த்தி மொழிநேர்த்தி ஆகியவை மட்டுமே இலக்கியத்தின் நோக்கங்களாக முன்வைக்கப்பட்டன.வடிவநேர்த்தியும் மொழிநேர்த்தியும் இலக்கியத்துக்கு இன்றியமையாதனவே. ஆனால் அவையே இறுதி இலக்காக ஆகும்போது இலக்கியம் ஓர் எதிர்மறை எல்லைக்குச் சென்றுவிட நேர்கிறது. செயற்கையாக உருவாக்கப்பட்ட நுட்பங்கள் கொண்ட எழுத்துமுறை இதன்மூலம் பிறக்கும்.
‘விஷ்ணுபுரம் ‘ ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ ஆகிய இரு நாவல்களுமே நவீனத்துவ முன்னோடிகள் வகுத்தளித்த பாதையில் இருந்து தெளிவான விலகலைக் காட்டுவனவாக உள்ளன. ஜெயமோகனின் படைப்புமொழி ஓர் எல்லையில் கவிதையின் செறிவை எட்டிவிடும்போது மற்றொரு எல்லையில் மிகவும் நெகிழ்வு கொண்டதாகவும் உள்ளது . படைப்புமொழியின் செறிவு அதன் தீவிரத்தைப்பொறுத்து இயல்பாக அமையவேண்டும். ஆனால் படைப்புமொழி தன் உயிர்ப்பை இயல்பான பேச்சுமொழியில் இருந்துதான் பெறுகிறது. செறிவான மொழி இந்த தொடர்பை துண்டித்துக் கொண்ட பிறகே அடையப்பட முடியும். ஆகவேதான் அது இயல்பாக நிகழ்வேண்டும் எனப்படுகிறது. செயற்கையாக செறிவு அடையப்படுகையில் படைப்புமொழியின் உயிரோட்டமான நெகிழ்வு அகன்றுவிடுகிறது. நம் நவீனத்துவ புனைகதை மொழி இப்படிப்பட்ட இறந்த மொழிகளை நிறையவே உருவாக்கிவிட்டது .ஜெயமோகனால் நெகிழ்வும் செறிவும் கொண்ட புனைகதைமொழியை படைத்துவிடமுடிகிறது. அதற்கு அவருள் செயல்படும் நாட்டார் மரபுக்கூறுகள் வெகுவாக உதவி செய்கின்றன.
தமிழ்ி நவீனத்துவம் முன்வைத்த வடிவச் செய்நேர்த்தி ஜெயமோகனின் இலக்கு என அவரது படைப்புகள் காட்டவில்லை.பின் தொண்டரும் நிழலின் குரல் ‘ அதுவரை நவீனத்துவம் கட்டமைத்த வடிவ ஒழுங்குகளை முற்றாக உடைத்தெறிகிறது .எல்லா ஒழுங்குகளையும் மீறியதன் விளைவாகத் தோற்றம் கொள்ளும் ஒருவகை ஒழுங்கையே அந்நாவல் தன் வடிவ இயல்பாகக் கொண்டுள்ளது.ஒருவகையான எதிர்நாவல் என்று அதைச் சொல்லலாம். நவீனத்துவம் இங்கே துவங்கிய போதே அதற்கான முயற்சிகள் இருந்தன என்பதை நாம் இங்கே நினவில் கொள்ள வேண்டும். ஜெயமோகன் படைப்புகளில் இருந்து உணரமுடிகிற அவரது படைப்பியக்கத்தின் இறுதி இலக்கு முழுமையான நாவல் ஒன்றை தமிழ்ில் உருவாக்குவதுதான். நாவல் வாழ்வின் முழுமையை உள்வாங்கிக்கொள்ள எல்லையற்ற விரிவை அடையவேண்டும். விரிவு என்பது குவிதலுக்கு நேர் எதிரான ஒன்று. தமிழ் நாவல் என்றுமே விரிவை எதிர்கொள்ளாத ஒன்றுதான். இந்த விரிவ்னை அடைய அனைத்துப் பரிமாணங்களிலும் வாழ்க்கை குறித்த உணர்வு அடிப்படையிலான விவாதங்களை அது முன்னெடுத்துச்செல்லவேண்டும். விவாதத்துக்கான புதிய புதிய தளங்கள் படைப்பில் தொடர்ந்து இனம் காணப்பட இடமிருக்கவேண்டும். இத்தகைய ஒரு முழுமையான நாவலே ஜெயமோகனின் படைப்பியக்கத்தின் இறுதி இலக்காக இருக்கிறது.

[ஆ]
காடு ஜெயமோகனின் ஐந்தாவது நாவல். ஜெயமோகனின் நாவல் என்பதனாலேயெ மிகுந்த விமரிசன எதிர்பார்ப்பினை இயல்பாகவே கொண்டுள்ளது.
கனவையும் வாழ்க்கையின் குரூர யதார்த்ததையும் இழைகளாகக் கொண்டு நெய்யப்பட்ட நாவல் காடு. சங்க இலக்கியத்தின் குன்றக்குறமகள் இரண்டாயிரம் வருடங்கள் கழித்து சங்கக் கவிஞனின் அதே கனவுச்சாயையுடன் நம் புனைகதைப்பரப்பில் கால்பதிக்கிறாள். கிரிதரன் அவளோடு காட்டில் உறவாடியது சில நாட்கள் மட்டுமே. ஆனால் அவளுடனான அவனது காமம் [ சங்கப் பாடல்களின் பொருளில் ] ஓர் ஆயுள் முழுக்க அவனுள் அந்தரங்கமான கனவாக நிறைகிறது. மனநோயின் விளிம்பைத்தொட்டு மீள்வதுவரை அவனை அலைக்கழிக்கிறது. ஆனால் அவளோடு பழகும்போதும் சரி, நினைவுகளிலும் சரி, அக்காமம் உடலுடன் சம்பந்தமுடையதாக இல்லை. நாவலில் கிரிதரன் வாழ்வில் தோல்விகளின் வலிகளை நேரிடும்போதெல்லாம் அவள் நினைவை அசைப்போட்டு அதை தாண்டுகிறான். அப்போது ஈடில்லாத மன எழுச்சி அவனுக்குள் நிறைகிறது.
மலைவாழ்க்கையின் பாலுறவுச் சுதந்திரம் ஒரு களியாட்டமாகவும், கனவற்ற அப்பட்டமான யதார்த்தமாகவும் நாவல் நெடுகிலும் தொடர்கிறது. கிரிதரனின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவன் சந்திக்கும் குரூரமான யதார்த்தங்கள் இக்கனவுத்தளத்துக்கு சமானமான கோடாக நாவல் நெடுகிலும் நீள்கின்றன. பாலுறவின் கட்டற்றதன்மையும் வேட்கையும் நாவல் முழுக்க வெளிப்பட்டபடியே உள்ளன. செல்வச்செழிப்பில் திளைக்கும் மாமியும் சரி, அன்றாட உழைப்பையே நம்பிவாழும் எளிய மக்களும் சரி தங்கள் வேட்கையாலும் சுயநலத்தாலும்தான் இயக்கப்படுகிறார்கள். மீறப்படாத வேலிகள் எதுவுமே இல்லை, சாதிகள் சமூகத்தளங்கள் எல்லா எல்லைகளும் கரைந்து இல்லாமலாகின்றன.சினேகம்மை ஓர் இடத்தில் சொல்லுவது போல கல்யாணம் செய்துகொண்டதனால் ஒற்றிக்கோ பாட்டத்துக்கோ தங்களை கொடுத்திருப்பதாக எவரும் எண்ணவில்லை .ஒழுக்கம் என்ற கோட்பாடே இவ்வழ்க்கையில் செயல்படவில்லையா என்ன என்ற கேள்வி எழக்கூடும். மலைவாழ்க்கையில் உயிர்வாழ்க்கையே பெரிய சவாலாக உள்ளது. அங்கே காமம் எளிய கேளிக்கை அல்லது அவசியத்துக்கு விற்கவேண்டிய பொரூளாகத்தான் உள்ளது .கீழே வாழும் மக்களுக்கு அது வெற்றி தோல்விகள் சம்பந்தபட்ட விஷயம்.
இந்நாவல் தன் மையத்தில் கொண்டுள்ள கனவு இந்த குரூரமான யதார்த்ததில்தான் பதிந்துள்ளது. அந்தக்கனவை அதன் பின்புலமான யதார்த்தம்தான் அர்த்தப்படுத்துகிறது . அந்த யதார்த்த்தின் குரூரமும் வலியும் அக்கனவால்தான் தீவிரம் கொள்கின்றன.


‘காடு ‘, ‘இருள் ‘ ‘கருமை ‘ போன்ற சொற்களும் படிமங்களும் தமிழ்ில் காலகாலமாக எதிர்மறையாகவே எதிர்கொள்ளப்பட்டுள்ளன. முதல்முறையாக இந்நாவலில் எதிர்திசையில் அந்த படிமங்கள் நகர்த்தப்பட்டுள்ளன. காடு அழகின் உறைவிடம்.தெய்வங்கள் மனிதர்களுடன் வாழும் இடம் . ‘கந்தர்வ களி ‘ நடக்கும் மேடை .மனிதனை அது ஆழ்ந்த போதையில் ஆழ்த்தி தன்வசப்படுத்திக் கொள்கிறது.கருமையே அதன் நிறம். இரவில்தான் காடு காடாகிறது . இருண்டு கொட்டும் மழையில்தான் காட்டின் முழுமை வெளிப்படுகிறது. இந்நாவலின் விரிவான வனச் சித்தரிப்புகள் நம் மனதில் பெரும் கனவை எழுப்பக் கூடியவை.
ஆனால் காட்டுக்கும் மனிதனுக்குமான உறவு என்ன ? அவன் தன் சுயநலவேட்கையால் காட்டை அழித்துக் கொண்டே இருக்கிறான். காட்டை ஊராக நகரங்களாக மாற்றியபடியே இருக்கிறான். நகரமே நாகரீகம் எனப்படுகிறது. கிரிதரனுக்கும் அந்த மிளாவுக்கும் இடையேயான உறவு என்ன ? எந்த விதமான கொடுக்கல் வாங்கலும் இல்லை. காட்டின் பிரதிநிதியாக வந்து அது நாகரீகம் மீது தன் முத்திரையை பதித்துவிட்டு செல்கிறது. நீலிக்கு இணையாக அதுவும் அவன் மனதில் ஆயுள்முழுக்க வாழ்கிறது .அது அவனது மறுபக்கம், தராசின் மறுபக்க எடை. காட்டுக்கு பெயர் இல்லை, இட அடையாளங்கள் இல்லை. மனிதன் அதற்கு பெயரும் அடையாளமும் போடுகிறான். அடையாளங்கள் வழியாக காடு காடல்லாமல் ஆகிறது . அவனுடைய நுகர்பொருளாக ஆகிறது.
இங்கே மழையீரத்துடனும் பசுமையுடனும் முடிவில்லாத அழகுகளுடனும் விரிந்து கிடக்கும் இந்தக்காடு உண்மையில் என்ன ? நாவலில் பல காடுகள் வருகின்றன. அவற்றில் கிரிதரன் மீண்டும் மீண்டும் வழிதவறி சென்றபடியே இருக்கிறான். மனித உறவுகளின் காடு. கட்டடங்கள் மண்டிய நகரம் என்ற காடு. வளைந்தும் நெளிந்தும் சூரிய ஒளியை பெற்று தன்னைத்தானே தக்கவைத்துக் கொள்ளும் காட்டுமரத்தைப்போலத்தான் மனிதர்களும் இங்கே வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன் மனதுக்குள் ஓர் காட்டை கொண்டிருக்கிறான். அதன் அழகில் பசுமையில் போதையேறி அவன் அலையும் காலம் ஒன்று உண்டு. ஆனால் அதை அழிக்க வேண்டியிருக்கிறது, சிறுகச் சிறுக. அதை அழித்தால் தான் வெற்றி, லாபம், நாகரீகம் எல்லாமே. இழக்கப்பட்ட காடு ஒரு சூனியம் நிரம்பிய வெட்டவெளியாக நம்முள் எஞ்சியபடியே உள்ளது. அதை வேறு எதைக் கொண்டும் நாம் நிரப்பிவிடமுடியாது .காட்டை இழந்து வெவ்வேறு திசைகளுக்கு சென்று வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் உண்டு. காட்டை கடைசிவரை இழக்காதவர்கள் குட்டப்பனும் அய்யரும் மட்டுமே.
[உ]
சமகாலத் தமிழிலக்கியப் பரப்பில் தமிழின் இரண்டாயிரவருட மரபின் அடையாளங்களை இனம்காணமுடியுமா ? இத்தொடர்பை நாம் புதுமைப்பித்தன், ப.சிங்காரம் ஆகியோரின் ஆக்கங்களில் இனம்காணமுடிவதைப்போல பெரும்பாலான படைப்பாளிகளில் காணமுடிவது இல்லை. இவ்வுறவுத்துண்டிப்பினை நவீனத்துவமே நிகழ்த்தியது. நீண்ட இடைவெளிக்குப் பின் காடு தமிழின் செவ்விலக்கிய மரபின் தொடர்ச்சியாக தன்னை இயல்பாக அடையாளம் கண்டுகொண்டிருபதைக் காண்கிறோம். சங்க இலக்கிய வாசிப்பு உடைய ஒரு வாசகன் இந்நாவலில் பலவகையான நுட்பங்களை மீண்டும் மீண்டும் அடையாளம் காணமுடியும். மலை அனைத்துவகையிலும் குறிஞ்சித் திணையை சேர்ந்ததாக உள்ளது. கருபொருளும் உரிப்பொருளும் உணர்வுகளும் எல்லாமே சரியாக அமைந்துள்ளன. யானை , பன்றி ,மான் போன்ற விலங்குகள் .பலா வேங்கை போன்ற மரங்கள். கூதிர்காலம்.. இரவு நேரம். அனைத்தையும் இணைக்கும் கபிலனின் குளிர்ந்தவரிகள். அவன் கனவில் இருந்து வந்த குன்றக்குறமகள்.
அதேபோல இந்நாவலின் ஊர்ச்சித்தரிப்புகள் பெருந்திணையினைச் சார்ந்தவை என்று காணலாம். தீராத பெருங்காமம் பசித்து அலைந்தபடியே உள்ளது. பொருந்தாத உறவுகளும் இணையாத மனங்களுமாக மனிதர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்கிறார்கள். அன்னியமாகி அலைகிறார்கள். தலைக்குமேல் ‘ வறன் உறல் அறியா சோலை ‘ இருந்தபடியெ உள்ளது . பசுமைமாறாக்காடான குறிஞ்சி . சங்க அழகியலின் இவ்விரு திணைகளும் இரு இழைகளாக பின்னி பிணைந்து இந்நாவலை ஆக்கியுள்ளன. ஒன்றை இன்னொன்று வேறு தளத்துக்கு கொண்டுசென்று அர்த்தப் படுத்துகிறது .ஒவ்வொரு முறையும் குறிஞ்சியின் கனவு நாவலில் வரும்போதும் சங்கிலித்தொடராக பெருந்திணையின் வலியும் துக்கமும் சேர்ந்துவருகின்றன. காட்டின் குளிர்ச்சிக்குள் கூட பெருந்திணை ஊடுருவிச் செல்கிறது.
அதேபோல கிரிதரனின் இரண்டாம் கட்டவாழ்க்கையில் அவன் உணர்வுகளின் வெளிப்பாடுகளாக வரும் கம்பராமாயண வரிகள் நாவலை வேறு பல தளங்களுக்கு கொண்டு செல்கின்றன. சங்கப்பாடல் வரிகளை அவன் மறந்து விலக செய்கிறன அவை. கிரிதரன் வாய்விட்டு கூவி அழமுடியாத இடங்களில் அவனது குரலாக கதறி அலறி ஒலிக்கின்றன கம்பனின் வரிகள்.
[ஊ]
தமிழ் நவீனத்துவம் நாட்டார் வழக்காறுகளுடன் தன் தொடர்பை துண்டித்துக்கொண்ட ஒன்று. நவீனத்துவம் நம் கலாச்சாரத்தில் இருந்து விலகி தேக்கநிலையை அடைந்தமைக்கு இதுவும் ஒரு காரணம். ‘காடு ‘ நாவலில் இந்த உறவினை ஜெயமோகன் மீட்டுக் கொண்டிருக்கிறார். நீலி என்ற கதாபாத்திரம் குமரிமாவட்ட நாட்டார் மரபில் இருந்து உருவம் கொண்டது. ஒருவகையில் இது விஷ்ணுபுரத்தில் உள்ல நீலி என்ற கதாபாத்திரத்தின் நீட்சியே. அவரது கதைகளான ‘படுகை ‘ , ‘ மண் ‘ போன்ற கதைகளில் பயன்படுத்தப்பட்ட நாட்டார் அழகியல் கூறுகளின் வளர்ச்சிநிலை இது. இந்நாவலிலும் நாட்டார் தெய்வமான மேலாங்கோட்டு அம்மன் கோவிலின் சித்திரம் கிரிதரனின் அம்மாவுடன் நுட்பமாக தொடர்புபடுத்தப்படுகிறது. நாட்டாரியல் உருவகமும் செவ்வியல் உருவகமும் இயல்பாக ஒரு புள்ளியில் இணைவதுதான் நீலி.
இந்நாவலின் பல பக்கங்களை வாசகன் விரைவாக கடந்து சென்றுவிடக்கூடும். ஆனால் நுட்பமான மெளன இடைவெளிகளினாலான இந்நாவலை அவன் கூர்ந்து படித்து அர்த்தப்படுத்திக் கோண்டு முன்னகர்ந்தால் மட்டுமே அவனால் நாவலை உள்வாங்க முடியும். உதாரணமாக ரெசாலம் போன்ற கதாபாத்திரத்தை மிக மிக குறைந்த சொற்களில் ஆங்காங்கே சில குறிப்புகளை மட்டும் சொல்லி முழுமையான கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கிறார் ஜெயமோகன். டாக்டர், ஆக்னீஸ் மேரி போன்ற பற்பல கதாபாத்திரங்களை அப்படிச் சுட்டிக்காட்ட முடியும். அதேபோல மலையில் கிறிஸ்தவ மதம் ஆற்றும் சேவையின், அதன்மூலம் உருவாக்கும் மிகப்பெரிய சமூக மாற்றத்தின் முழுமையான சித்திரம் மிக மிகக் குறைவான சொற்களில் இந்நாவலில் முழுமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாவலின் அமைப்பு ஒரு வீணை, தேர்ந்தவிரல்களே இசையை அடைய முடியும். வாழ்க்கையின் எத்தனையோ தளங்களை தொட்டு தாவிச்செல்லும் இந்நாவலை வாசகன் மிகுந்த கவனத்துடன் வாசித்துத்தான் முன்னெடுத்துச்செல்லமுடியும்

This entry was posted in இலக்கியம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s