கேள்வி பதில் – 24

திரைப்படங்கள் பார்ப்பதுண்டா? தற்காலத் தமிழ்த்திரைப்படங்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

— ஹரன்பிரசன்னா.

திரைப்படங்களை நாகர்கோவிலில் தவிர்க்கவே முடியாது. என் குழந்தைகளையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு வெளியே போவதாக இருந்தால் பெரும்பாலும் திரைப்படத்துக்குத்தான் போயாகவேண்டும். ஆகவே சுமாரான தரத்துக்கு மேல் உள்ள எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவோம். சமீபத்தில் பார்த்தபடங்களில் ஆட்டோகிராஃப் [சேரன்] மிகவும் பிடித்திருந்தது. தமிழின் சிறந்த சில படங்களுள் அது ஒன்று. சென்ற சில வருடங்களில் பார்த்த படங்களில் சொல்லமறந்த கதை, அழகி, மகாநதி, கேளடி கண்மணி போன்ற சில படங்களை நல்ல படங்களாக எண்ணுகிறேன்.

பொதுவாக என் திரைப்பட ரசனை மலையாளப்படங்கள் சார்ந்தது. எம்.டி.வாசுதேவன் நாயர், லோகிததாஸ், ஸ்ரீனிவாசன் ஆகியோரின் பெரும்பாலான திரைக்கதைகள் தரமானவை என நினைக்கிறேன். கேரள இயக்குநர்களில் சிபி மலயில், கமல், சத்யன் அந்திக்காட், பரதன், பத்மராஜன், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் என் மனம் கவர்ந்தவர்கள். என் மனம் கவர்ந்த நடிகர்கள் மோகன்லால், கோபி, நெடுமுடிவேணு, மம்மூட்டி, திலகன் ஆகியோரே. தமிழ்நடிகர்களில் கணிசமானவர்கள் எனக்குப் பிடிப்பது இல்லை. பழைய நடிகர்களில் முத்துராமன், பிந்தைய நடிகர்களில் சிவகுமார் போல அதிகமாக அலட்டிக் கொள்ளாத நடிகர்களை ஓரளவு பிடிக்கும். கமல்ஹாசனை அவரது நல்ல படங்களில் பிடிக்கும்- மைக்கேல் மதன காமராஜன், மகாநதி போல.

1990 வரை காஸர்கோட்டில் இருந்தபோது நான் காஸர்கோட் திரைப்பட சங்க உறுப்பினர். செவ்வியலாக்கங்கள் என்று சொல்லப்பட்ட படங்களை அப்போதுதான் பார்த்தேன். பொதுவாக தீவிரமான கலை என்ற வகையில் திரைப்படங்களைப் பார்க்கும் அளவுக்கு அதில்நான் கவனம் செலுத்தவில்லை. எனக்கு இங்க்மார் பர்க்மான் மேல் மட்டும் ஓர் ஆழமான பற்று ஏற்பட்டது. தத்துவம், மதக் கோட்பாடுகள் என மனம் திரும்பி விட்டிருந்தமையால் திரைப்படங்கள் அதிகம் பார்க்க நேரிடவுமில்லை

பொதுவாக கலைகளை பதிவுக்கலை, நிகழ்கலை என பிரிக்கலாம். திரைப்படம் இலக்கியம் ஓவியம் போல பதிவுக்கலை ஆனாலும் நடைமுறையில் அது நடனம் நாடகம் போல ஒரு நிகழ்கலையாகவே உள்ளது. ஆகவே அது உடனடியான வாசக ஏற்பினைப் பெற்றாகவேண்டும். ஆகவே அது எதிர்கொள்ளும் பார்வையாளர்களின் தரம் அதைத் தீர்மானிக்கும் கூறுகளில் ஒன்றாக அமைகிறது. ஆகவே தமிழ்த் திரைப்படம் தமிழ் ரசிகனின் சராசரி ரசனையைப் பிரதிபலித்தாக வேண்டியுள்ளது.

இதிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி ரசிகர்களை வரையறுத்துக் கொள்வதுதான். பரதநாட்டியம், செவ்வியல் இசை, நவீன நாடகம், நவீன ஓவியம் போன்ற கலைகள் இவ்வாறு அக்கறையும் பயிற்சியும் கொண்ட சிறுபான்மையினருக்காக தங்களை வரையறுத்துக் கொண்டுள்ளன. கேரள, கன்னட, வங்க மொழிகளில் தீவிரமான திரைப்படங்களும் இவ்வாறு பார்வையாளர்களை வரையறுத்துக் கொண்டுள்ளன.

தமிழில் அவ்வாறு செய்வதற்கு அவசியமான, குறைந்தபட்சப் பார்வையாளர்கள் கூட இல்லை. குறைந்தது 60 லட்சம் ரூபாய் இன்று திரைப்படம் எடுக்க செலவாகிறது. அதை வழங்குமளவுக்கு பார்வையாளர் தமிழில் இல்லை. நவீன நாடகத்துக்குக் கூட நிதியுதவிகள் மூலமே இங்கே நிற்க முடிகிறது.

பொதுவான தமிழ் ரசிகனின் ரசனைத்தரம் மிக மிகக் குறைவானது என்பதை பல்வேறு கிராமங்களில் திரைப்படம் பார்த்த அனுபவம் மூலம் என்னால் சொல்ல முடியும். வெறும் பொழுதுபோக்குக்காக, தாங்கள் அறிந்தவற்றையே மீண்டும் திரையில் காணவருபவர்களே அதிகம். கடந்த ஐம்பதாண்டுகாலத்தில் கிராம வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நாட்டார்கலைகள் பல அழிந்துவிட்டமையால் ஏதேனும் ஒரு கலைவடிவில் பழக்கம் பெறும் வாய்ப்பும் மக்களுக்கு இல்லை. ஆகவே ஒரு கலைநிகழ்வுக்கு அளிக்கப்படவேண்டிய குறைந்தபட்ச கவனத்தைக் கூட மக்கள் இப்போது திரைப்படத்துக்கு அளிப்பது இல்லை. நாடகம், தெருக்கூத்து எதற்குமே அளிப்பதில்லை.

இப்படிப்பட்ட சூழலிலும் நல்ல படங்கள் வருவது திரைப்படம் என்ற கலையுடன் தொடர்புள்ள கலைஞர்கள் அவர்களின் அனைத்து வியாபார உத்திகளுக்கும் அடியில் கலைஞர்களுக்குரிய தாகத்துடன் இருப்பதனாலேயே. சம்பாதித்த அனைத்தையுமே கொட்டி ஆட்டோ கிராஃப் போன்ற ஒரு படத்தை எடுக்கும் துணிவு சேரன் போன்றவர்களுக்கு வருவது வியப்புக்கும் மரியாதைக்கும் உரியதே. நல்ல படங்களுக்காக அவர்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

தமிழகத்தின் பொதுவான கல்வித்தரமும் வாழ்க்கைத்தரமும் உயரும்போது, அதனுடன் இக்கலைஞர்களின் முயற்சியும் சேர்ந்துகொள்ளும்போது நல்ல ரசனை உருவாகி வரக்கூடும். தரமான படங்களும் வரலாம்.

This entry was posted in கேள்வி பதில், திரைப்படம் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s