கேள்வி பதில் – 14, 15, 16

ஒரு படைப்பை விமர்சிப்பதற்கு அடிப்படைத் தகுதிகளாவன யாவை? தகுதிகள் வேறுபடும்பொழுது அல்லது அதன் செறிவு சார்ந்த விஷயங்கள் கூடிக்குறையும் பொழுதில் விமர்சனத்தின் அளவுகளும் மாறுபடுமே! எதை வைத்து மிகச்சிறந்ததை நிர்ணயிப்பது?

— எம்.கே.குமார், சிங்கப்பூர்.

ஒரு படைப்பைத் திறனாய்வு செய்வதற்கு அடிப்படைத்தகுதி நல்ல வாசகனாக இருப்பதே. ஏனெனில் படைப்பு வாசகனுக்காகவே எழுதப்படுகிறது. மற்ற அனைத்து விஷயங்களும் அதன் தொடர்ச்சிகளே.

ஒருபடைப்பு மூன்று தளங்களில் செயல்படுகிறது என நாம் பொதுவாக வகுத்துக் கொள்ளலாம். தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு. அதன் தர்க்கத்தை நோக்கித் தன் தர்க்கத்தையும் அதன் கற்பனையை நோக்கித் தன் கற்பனையையும் அதன் உள்ளுணர்வை நோக்கித் தன் உள்ளுணர்வையும் திருப்பிக்கொள்பவனே சிறந்த வாசகன். சிறந்த வாசகனுக்கே படைப்பு தன்னை முன்வைக்கிறது. வாசகன் தன்னை குறுக்கிக்கொள்ளும்போது சிறுத்துப்போன உயிரற்ற படைப்பே அவனுக்குக் கிடைக்கிறது.

நல்ல திறனாய்வாளன் படைப்பின் வழியாகத் தன்னையும் வளர்த்துக்கொள்ளத் தயங்காதவனாக இருப்பான் என நான் நம்புகிறேன். படைப்பு உருவாக்கும் மன நகர்வுகளின், உணர்வெழுச்சிகளின், உச்சநிலைகளின் எல்லா தளங்களுக்கும் தானும் சென்றடையக் கூடியவனாக இருப்பான். இது ஓரு உதாரண உருவகம். எந்த அளவுக்கு இது சாத்தியம் என்பது மனித மனதின் எல்லைகளைப் பொருத்தது.

திறனாய்வாளன் தன் அந்தரங்கத்திலிருந்து தன் திறனாய்வைத் தொடங்கவேண்டும். தன் சொந்த அழகனுபவத்திலிருந்து தன் சொந்த அறவுணர்விலிருந்து. தன் தரப்பை அவன் தனக்காகக் கூட சமரசம் செய்துகொள்ளக் கூடாது.

திறனாய்வாளன் தன் தரப்பைக் கூடுமானவரை தர்க்கபூர்வமாக முன்வைக்க வேண்டும். அவனது சவால் அகவயமான ஓர் அறிதலை அவன் புறவயமாகச் சொல்லியாகவேண்டும் என்பதே. இலக்கிய அனுபவம் அகவயமானது என்பதனாலேயே ஒருபோதும் இலக்கியத்திறனாய்வு அறிவியல்முறைமையை முழுமையாக அடைந்துவிட முடியாது. இலக்கியத்திறனாய்வு எதையுமே நிரூபிக்க முடியாது. வாசகனிடம் எதையுமே அது வலியுறுத்த முடியாது. ஆகவே அவன் வாசகனின் அந்தரங்கத்தைத் தன் மொழிமூலம் தொட்டு மீட்டியே தன் தரப்பை முன்வைக்கமுடியும். வாசகனின் சொந்த வாசிப்பனுபவத்தை, நுண்ணுணர்வை, அறவுணர்வைத் தொடவே தன் தர்க்கத்தை திறனாய்வாளன் பயன்படுத்தமுடியும். ஆக அதுவும் ஒருவகை படைப்பியக்கமே. இன்றுவரை உலகமொழிகளில் எழுதிய நல்ல திறனாய்வாளர்கள் அனைவருமே பெரும் உரைநடைத்திறன் கொண்டவர்கள்.

இது மூன்றுமே திறனாய்வின் அடிப்படைகள். திறனாய்வாளன் நீதிபதி அல்ல. மதிப்பிட்டு மதிப்பெண் போடும் ஆசிரியனும் அல்ல. அவன் படைப்புகளைக் கவனப்படுத்துகிறான். படைப்பைச் சார்ந்து ஓர் உரையாடலை உருவாக்குகிறான். விளைவாக படைப்பைப் பலகோணங்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நல்ல படைப்பு தன் வாசகர்களைக் கண்டடைய, அவர்களுடன் முழுமையாகப் பேச அது உதவுகிறது. நல்ல படைப்பை எந்தத் திறனாய்வு மேதையும் மறைக்க முடியாது. மோசமான ஆக்கத்தை யாரும் நிலைநாட்டவும் இயலாது. உலக இலக்கியத்திலிருந்தும் தமிழிலக்கியத்திலிருந்தும் உதாரணங்களை அடுக்கியபடியே போகலாம். க.நா.சு ஷண்முக சுப்பையா என்பவரைத் தமிழின் பெருங்கவிஞர்களில் ஒருவராக முன்வைத்தார் என்பதை அறிவீர்களா? கைலாசபதி தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவலாக செ.கணேசலிங்கனின் செவ்வானம் என்ற நூலைச் சொன்னார் என்பதை அறிவீர்களா? அவை எங்கே? எவருமே ப.சிங்காரத்தைச் சொன்னதில்லை. தன் வாசகர்கள் மூலம் அவர் வாழ்ந்தார், முன்னிலைப்பட்டார். திறனாய்வு ஒருபோதும் இலக்கியத்தை மதிப்பிடுவது இல்லை, அதை விவாதிக்கிறது அவ்வளவே. மதிப்பிடுவது வாசகர்கள். அவர்கள் மூலம் ஒரு கலாசாரம். அம்மதிப்பீடு மிக சிக்கலான நுட்பங்கள் கொண்ட ஒரு நிகழ்வு.

-*-

எழுத்தாளர் ஜெயமோகனை விட விமர்சகர் ஜெயமோகன் அதிகமாகப் பரபரப்புக்குள்ளாகிறாரே? என்ன விசேஷம்? ஜெயமோகனுக்குள் உறங்கும் சிங்கம் வெளியே வந்து கர்ஜித்துவிட்டு மீண்டும் போய் படுத்துக்கொள்கிறதா? இல்லை அதுதான் நிஜமான ஜெயமோகனா? :)?

— எம்.கே.குமார், சிங்கப்பூர்.

நான் அறிந்தவரை என் படைப்புகள்தான் அதிகமாகப் பேசப்பட்டுள்ளன. விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின்குரல் முக்கியமாக.

அப்படைப்புகளின் ஆசிரியராக என் கருத்துகளும் பேசப்பட்டுள்ளன. அவற்றை நான் எழுதியிராவிட்டால் என் கருத்துகளும் பரபரப்புக்குள்ளாகியிருக்காது. உதாரணமாக நான் தமிழில் நாவல்கள் வடிவரீதியாக முழுமையாக முயற்சிக்கப்படவில்லை என 1990 ல் ஒரு மேடையில் சொன்னேன். அது ஏறத்தாழ பத்து வருடம் தமிழில் விவாதிக்கப்பட்டது. ஆக்கப்பூர்வ விவாதங்களும் உண்டு, வசைகளும் உண்டு. அதே காலகட்டத்தில் இன்னொரு மேடையில் எஸ்.ராமகிருஷ்ணன் தமிழில் எழுதப்பட்ட எதுவுமே நாவல் அல்ல என்று சொன்னார். அக்கருத்து எந்தச் சலனத்தையும் உருவாக்கவில்லை. நான் சொல்லி விவாதங்களுக்கு உள்ளான கருத்துகளை, அல்லது அதற்குச் சமானமான கருத்துகளை அல்லது அதைவிடத் தீவிரமான கருத்துகளை பிற எழுத்தாளர்கள் சொல்லியிருக்கிறார்களா என்று கவனியுங்கள். அப்படிப்பட்ட கருத்துகள் வந்தபடியே உள்ளன என்பதைக் காண்பீர்கள். சமீபத்தில் மாலதி மைத்ரி தீராநதி இதழில் தமிழ் மரபில் மூன்று பெண் கவிஞர்கள் தவிர வேறு எவருமே முக்கியமானவர்களல்ல என்று சொல்லியிருந்தார். அதை நான் சொல்லியிருந்தால் என்ன ஆகும்? சொல்பவர் விஷ்ணுபுரத்தின் ஆசிரியர் என்பது ஒரு விஷயம். என் குரலைக் கவனிக்க தீவிரமான வாசகர்கள் பலர் உள்ளனர் என தமிழகத்தில் உள்ள இலக்கிய ஆர்வலர் அறிவார்கள். மேலும் நான் சொல்லும் ஒரு கருத்தை விரிவாகத் தர்க்கங்களை முன்வைத்து, தமிழ் மரபை முழுக்க கணக்கில்கொண்டு வாதிட என்னால் முடியும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

இலக்கியச்சூழலில் சிலர் குரலுக்கே கருத்துரீதியான முக்கியத்துவம் இருக்கும். அவர்கள் கருத்துகள் விவாதமாகியபடியே இருக்கும். கூடவே அவர்களைப்பற்றிய வசைகளும் அவதூறுகளும் வரும். க.நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோரைச் சார்ந்து என்னைவிட அதிகமான விவாதங்கள் உருவாகியுள்ளன. இவை ஒருவகையில் சம்பந்தப்பட்டவரின் நேர்மை மீதான நம்பிக்கை வாசகச்சூழலில் உருவாவதைப் பொருத்தது. தமிழில் புரட்சிக் கருத்துகளை சொல்பவர்கள் உண்டு, கலகக்காரர்கள் உண்டு. ஆனால் உண்மையான அதிகாரமையங்களுக்கு எதிராக அவர்கள் குரலெழுப்புவது இல்லை. அதன் விளைவுகள் அவர்களுக்குத் தெரியும். ‘அரசியல்சரி’ [Political correctness] என ஒன்று உண்டு. ஒரு காலகட்டத்தில் எது முற்போக்காகக் கருதப்படுகிறதோ அதை ஒட்டியே கருத்துச் சொல்வது. முற்போக்கு முத்திரையும் அதன் விளைவான பாதுகாப்பும் கிடைக்கும். ஆனால் நேர்மையான அறிவுஜீவி அதன் எல்லைகளை தேவைப்பட்டால் தாண்டத் தயங்கமாட்டான். அப்படித் தாண்டுபவனுக்கே நம்பகத்தன்மை இருக்கும். அவன் குரலே பொருட்படுத்தபடும். பொருட்படுத்தபடும் குரலே விவாதங்களை உருவாக்கும். நேர்மையான குரல் பலசமயம் நரம்புமர்மங்களில் சென்று தொட்டுவிடும்.

-*-

பெண் எழுத்தாளர் கமலாதாஸ் அவர்களுடைய எழுத்தில் உங்களுக்குப் பிடித்தவை எவை??

— எம்.கே.குமார், சிங்கப்பூர்.

கமலாதாஸ் கதைகளை என் நண்பர் நிர்மால்யா மொழிபெயர்த்து கவிதாபதிப்பகம் ‘சந்தன மரங்கள்’ என்றபேரில் ஒரு தொகுப்பாகக் கொண்டுவந்திருப்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன். அதற்கு நான் முன்னுரை எழுதியுள்ளேன்.

கமலாதாஸ் எளிய வட்டாரவழக்கு மொழியில் பெண்களின் அக உலகை எழுதிய முக்கியமான படைப்பாளி. உணர்ச்சிகரமாகத் தாவிச்செல்லும் மனம் கொண்டவர். சந்தன மரங்கள், ருக்மிணியின் பொம்மை, பறவையின் மணம் போன்ற நல்ல கதைகள் எழுதியுள்ளார். அவரது ‘இளமைக்கால நினைவுகள்’ ஒரு சிறந்த படைப்பு.

ஆண்கள், பெரியவர்கள் உருவாக்கும் உலகுக்கு எதிராக, துள்ளிக்குதித்து செல்லும் ஒரு சிறுமி கமலாதாஸின் கதைகளில் உண்டு. சிலசமயம் அவளே கதாபாத்திரமாக வருவாள். சிலசமயம் அவள் கதைசொல்லும் குரல். சிலசமயம் ஆசிரியையின் கண். அவள் கட்டற்றவள். பெரிய விஷயங்களை விட்டுவிட்டு சின்ன விஷயங்களை கவனிப்பவள். அவள்தான் அவரது கதைகளை இலக்கியமாக்குகிறவள்.

This entry was posted in ஆளுமை, இலக்கியம், கேள்வி பதில், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s