கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு

திண்ணையில் திரு. சுரேஷ் அவர்கள் எழுதியக் குறிப்பை ஒரு வாசகர் எனக்கு அனுப்பி என் எதிர்வினையைக் கோரியிருந்தார். அதே வினாவை அவரை நோக்கிப் பலர் எழுப்பியிருந்ததாகவும் சொல்லியிருந்தார். உண்மையில் தமிழில் மிகப் பரவலாக எழுப்பப் படும் கேள்விகளில் ஒன்று இது. இதை அதி புத்திசாலித்தனமாக எழுப்பி இலக்கியவாதிகளை மட்டம் தட்டி விட்டதாக எண்ணுபவர்கள் அறிவியலாளர்கள், அரசியல் கோட்பாடாளர்கள், சமூக செயலாளிகள் முதல் சாதாரண வயிற்றுவாதிகள் வரை பலவிதம். நான் எட்டாம் வகுப்பில் படிக்கும் போதே என் அறிவியலாசிரியரால் இதே கேள்வி என்னிடம் கேட்கப் பட்டுள்ளது . இன்றும் நான் சரியான பதில் என்று எண்ணும் ஒரு மறு கேள்வியைக் கேட்டேன். அவர் ஏன் பல வண்ணக் கோலங்கள் கொண்ட உடை அணிய வேண்டும்? உடையின் வேலையைச் செய்ய எந்த ஒரு துணியும் போதுமே?

சமீபத்தில் நண்பர் ஜீவா சொன்ன ஒரு நிகழ்வு. இதை அவர் ‘சாம்பல்’ என்ற சிற்றிதழில் படக் கதையாகவும் எழுதியிருக்கிறார். அவரது பெண் ரயிலில் என் ‘பனிமனிதன்’ குழந்தைகள் நாவலை படித்துக் கொண்டிருந்திருக்கிறாள். எதிரில் இருந்த ஒருவர் அது என்னவென்று கேட்டாராம். நாவல் என்றதும் முகம் சுளித்து அதை ஜன்னல் வழியாக வெளியே வீசு, பாடப் புத்தகங்களைப் படி என்றாராம். தன் விசிட்டிங் கார்டை எடுத்து தந்து ‘நான் பாடப்புத்தகம் தவிர வேறு எதையுமே படித்தது இல்லை, இப்போது ஒரு டாக்டராக இருக்கிறேன், நீயும் என்னை மாதிரி டாக்டர் ஆகவேண்டாமா?’ என்றாராம். டாக்டரானபிறகு எனக்கு எழுது, நான் சொன்னதை நீ நன்றியுடன் நினைவு கூர்வாய் என்றாராம். ஜீவாவுக்கு நான் சொன்னேன். அவர் தன் பெண்ணிடம் சொல்லவேண்டியது, அவள் அந்த டாக்டர் மாதிரி ஆக வேண்டுமா, ஜனாதிபதி அப்துல் கலாம் மாதிரி ஆக வேண்டுமா என்றுதான். கலாம் என் நாவல்களைப் படிப்பதாக எனக்கு மின்னஞ்சல் எழுதியிருக்கிறார்.

எம் வேதசகாயகுமாரின் கல்லூரிக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு இலக்கியப் பேராசிரியர் என்னிடம் பேசிய சில நிமிடங்களில் அவர் எதையுமே படிப்பது இல்லை என்று சொல்லிவிட்டார். காரணம் அதனால் வாழ்க்கைக்குப் பயன் இல்லை . நீங்கள் நவீன இலக்கிய வகுப்பு எடுக்கவேண்டுமே என்றேன் . சுய சிந்தனை இருப்பவனுக்குப் படிப்பே தேவை இல்லை என்றார் அவர். சிந்திக்கதெரியாமல் ‘கதைகேட்கும் பிராயத்தில் ‘ இருக்கும் சிலரே புத்தகங்களை தூக்கிச் சுமப்பார்கள் என்று வேதசகாயகுமாரை கண்காட்டினார். தமிழ்நாட்டில் பேராசிரியர்களில் 90 சதவீதம்பேர் இவரைப்போன்றவர்களே. ஆக சுரேஷ் அவர்களின் நண்பர் சுயமாகச் சிந்தித்துக் கேட்கவில்லை, தமிழில் காற்றெங்கும் நிரம்பியுள்ள கேள்வியையே கேட்கிறார்.

வயிற்றுவாதிகளின் இக்கேள்வியை ஒவ்வொரு தளத்திலும் மீண்டும் மீண்டும் தோற்கடித்தாக வேண்டும். காரணம் இது இன்று நம் கல்வித்துறை முதல் எங்குமே ஊடூருவியுள்ள கேள்வி. பாடமாக உள்ள நூல்களைக்கூட படிக்கவெண்டியதில்லை உரைநூல் படித்து மதிப்பெண் வாங்குவதே புத்திசாலித்தனம் என்ற எண்ணம்.இது நீண்டகால அளவில் நம் சிந்திக்கும் திறனை பரிசீலிக்கும் திறனை மழுங்கடித்து வெறுமே ‘ தெரிந்துகொள்ளும் ‘ எந்திரங்களாக மாற்றிவிடும். ஆகவே இப்பதில் .

**

ஒருவர் அவருக்கு இலக்கியம் தேவையில்லை என்று சொல்கிறார் என்றால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை . உடை தேவையில்லை என்று சொல்பவர்களும் உண்டு . அவரது விருப்பம், வசதி அது. சமூகத்துக்கு தேவையில்லை என்கிறார் என்றால் , உலகமெங்கும் இலக்கியம் படைப்பவர்களை, படிப்பவர்களை, கற்பிக்கும் அமைப்புகளை , கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசுகளை , உலக இலக்கிய மரபையே ஒட்டுமொத்தமாக அசடுகளாக எண்ணுகிறார் என்றால்தான் சிக்கலே.

இக்கேள்வியை இருகோணங்களில் கேட்டுக் கொள்ளலாம். 1] இலக்கியத்தின் பயன்மதிப்பு என்ன ? 2] இலக்கியத்தின் ஒட்டுமொத்த மதிப்பு என்ன ?

இலக்கியத்தின் பயன்மதிப்பு என்ன ?

====

நூற்றுக்கு தொண்ணூறு பேர் இலக்கியத்தின் பயன் என்ன என்று கேட்கும்போது இதைத் தான் உத்தேசிக்கிறார்கள். பயன் என்றால் என்ன என்ற கேள்வியை நாம் எழுப்பவேண்டும் . மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு உடை உறையுள் போதும். அதற்கான பயன்பாடே அடிபப்டை பயன்மதிப்பு. வாழ்தல் என்றால் உயிர்வாழ்தல் என்று ஒருவர் புரிந்து வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு இவ்வுலகின் எத்தனையோ விஷயங்கள் தேவையில்லை . கல்வியே தேவையில்லை . கல்வி தேவையே இல்லை என்று வாதிடக்கூடிய பல வெற்றிகரமான வியாபரிகளை நான் பார்த்ததும் உண்டு.

ஆனால் மனிதனுக்கு அதற்குமேல் பல விஷயங்கள் தேவை. அவன் மிருகம் அல்ல. ஆகவே அவன் வாழ்வதனால் திருப்தி அடைவது இல்லை. வாழ்க்கையை அறிந்தாகவேண்டிய தேவையும் அவனுக்கு இருக்கிறது. மிருகத்துக்கும் மனிதனுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடே இதுதான். மிருகம் வெறுமே உயிர்வாழ்கிறது . மனிதனின் வாழ்க்கை தொடர்சியான ஓர் அறிதலாகும் , ஒவ்வொரு கணமும் அவன் எதையாவது கண்டடைந்தபடியே இருக்கிறான் .அப்படி அறிவதை மேலும் தீவிரமாக ஆக்க , மேலும் நுட்பமாக ஆக்க அவன் முயல்கிறான். பிறரது அறிதல்களை தன் அறிதல்களுடன் சேர்த்துக் கொள்கிறான். இவ்வாறுதான் மனிதனின் முடிவற்ற அறிவுத்தேடல் உருவாயிற்று. இன்று மனித நாகரீகம் என்று சொல்லும் அறிவியல், தத்துவம் , மதம், சமூக அமைப்பு எல்லாமே இப்படி உருவானதே. ஒருவர் தனக்கு ‘சுய அறிவு ‘ உள்ளதாக சொல்கிறார் என்றால் அந்த அறிவு அவருக்கு சூழலில் இருந்து அவரையறியாமல் இயல்பாக கிடைத்த ஒன்று என்றே பொருள்.

ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டு அதற்காக சி வி ராமன் பாராட்டப்பட்ட நாட்களில் கல்கத்தாவில் ஒருவர் அதனால் மனிதனுக்கு என்ன பயன் என்ற கேள்வியை எழுப்பினார் என ராமனின் வரலாற்றில் வருகிறது . கடும் கோபம் கொண்ட ராமன் உரத்த குரலில் சொன்னாராம். ‘அறிவின் பயன்மதிப்பு என்ன என்று கேட்பவன் அறிவைப் பற்றிய பிரக்ஞையே இல்லாத பாமரனாகவே இருக்க முடியும் . அறிவு ஒளிபோல. அதை எப்படியும் எவரும் பயன்படுத்தலாம் ‘ ‘. பலவருடம் கழித்தே அவரது கண்டுபிடிப்பு அணுக்கதிர் அலைவீச்சை அளக்க உபயோகமாக இருப்பது அறியப்பட்டது .

ஆக அறிவை, அதன் இடைவிடாத தேடலை , முன்னகர்வை குறைந்த அளவேனும் சிந்திக்கும் பழக்கம் கொண்ட ஒருவர் மறுக்கமாட்டார். அப்படியானால் சுரேஷ் அவர்களின் நண்பர் மறுப்பது இலக்கியம் என்ற துறையை மட்டுமே. எனக்கு கணக்கு அறிமுகமே இல்லை. ஆகவே அது பயனற்றது என்று சொன்னால் கணிதம் தெரிந்தவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் ? இலக்கியம் தேவையா இல்லையா என அதை அறிந்தவர்கள் அல்லவா சொல்லவேண்டும் ?

இலக்கியம் ஒருவகை அறிதல்முறை. அறிவியல், தர்க்கவியல் அல்லது தத்துவம் போல அதுவும் தனித்துவம் கொண்ட அறிதல்முறை. இந்திய மரபு மூன்று அறிதல்முறைகளை சொல்கிறது. தர்க்கம் [அறிவியல், தத்துவம்] கற்பனை[ இலக்கியம் கலைகள்] தியானம் [ உள்ளுணர்வு]முழுமுதல் அறிவு மூன்று தளங்களையும் திருப்திப்படுத்தவேண்டும் என்கிறது. கற்பனை ஓர் முக்கிய அறிதல்முறையாக எல்லா காலத்திலும் எல்லா பகுதிகளிலும் இருந்துள்ளது. இலக்கியம் மனித மனதை, அதற்கும் சமூக அமைப்புகளுக்குமான உறவுகளை, வாழ்க்கையை அது நேர்கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்களை அறிய முயல்கிறது . அதற்காகவே இந்தப் பல்லாயிரம் நூல்கள்.

உதாரணமாக இன்று தமிழில் மழை , உயிர்மை முதல் ராணி வாராந்தரி வரை வரும் கதைகளில் பாதிக்கும் மேல் ஆக்கங்கள் குடும்பம் என்ற அமைப்பில் பெண்களின் இடம் மாறுவதைப் பற்றிப் பேசுகின்றன. பல கோணங்களில் பல தளங்களில்விவாதிக்கின்றன. தமிழ் சமூகத்தின் மனதில் நிகழும் சிந்தனைகள், சுய விசாரணைகள் அவை. இப்படித்தான் சமூகத்தின் சிந்தனைகள் உருவாகின்றன. சமூக நெறிகள் உருவாகின்றன. சமூகம் இயங்குகிறது.

சுரேஷ் அவர்களின் நண்பரின் பிரச்சினை என்னவென்றால் அவர் இலக்கியத்தை ஓர் அறிதல் முறையாகக் கருதாமல் ஒரு உபதேச அமைப்பாக , அல்லது பிரச்சார அமைப்பாக மட்டுமே கருதுகிறார் என்பதே . அதாவது இலக்கியம் என்பது அவருக்கு அது சொல்லும் கருத்துக்கள் மட்டுமே. கடந்த இரண்டாயிரம் வருடத்து இலக்கண, திறனாய்வு முறைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வது என்னவென்றால் இலக்கியம் என்பது கருத்தல்ல என்பதே. அது மொழியின் வழியாக கற்பனையை செயல்படுத்தி வாழ்க்கையை ஆராயும் ஓர் அறிதல் முறை என்பதே . அதை கருத்து மட்டுமாக ஒருவர் கருதுகிறார் என்றால் எது இலக்கியம் என்று சொல்லப்படுகிறதோ அதை முழுமையாக தவிர்த்துவிட்டுதான் இலக்கியத்தை அணுகுகிறார் என்றே பொருள் .அதாவது இலக்கியம் என்று சொல்லபடுவதை அவர் எப்போதுமே உணர்ந்தது இல்லை .

மொழிபு மூலம் அறிதல் முறை

====

இலக்கியம் ஓரு தனி அறிதல் முறை என்னும்போது எழும் வினாக்கள் மிகச் சிக்கலான விவாதங்களுக்குள் இட்டுச் சென்று விடக்கூடும்.ஆகவே எளிதாகவும் சுருக்கமாகவும் இப்படி சொல்லலாம். இலக்கியம் ஒன்றை ‘கற்பனைசெய்து சொல்லிபார்த்து ‘ அறியும் முறை.

சுரேஷ் அவர்களின் நண்பர் ஒன்றை யோசித்துப் பார்க்கவேண்டும். ஏன் ஆதிமனிதன் கதை சொன்னான் ? அவனுக்கு நடைமுறை பயன் உடையது ‘ தெரிவித்தல் ‘ மட்டும்தானே ? பிறகு ஏன் கதையாக நிகழ்த்தி சொல்லிக் காட்டவேண்டும் ? அதர்கான தேவை என்ன ? அந்த தேவை இன்றூ உள்ளதா ?

அறிதல் என்பது முதற்கட்டத்தில் எப்போதுமே தகவல்கள்தான். அத்தகவல்களை தொகுத்துக் கொள்ளுதலே அறிதலின் இரண்டாம் நிலை . அப்படி ஏதேனும் ஒருவகையில் தொகுத்துக் கொள்பவர்களையே நாம் சிந்திப்பவர்கள் என்றோ அறிவாளிகள் என்றோ சொல்கிறோம். தகவல்களை முன்னர் சொன்னதுபோல மூன்றுவகையில் தொகுக்கலாம். முதல்வகை, தர்க்கப்படுத்துவது. ஏதேனும் ஒரு ஒழுங்கில் அவற்றை அமைத்துப் பார்த்து அவற்றை ஒரு மையத்தை வெளிப்படுத்துவனவாக அல்லது வலுப்படுத்துவனவாக அமைப்பது. இது தொகுத்தறிதல் பகுத்தறிதல் என இருவகை. அரிஸ்டாடில் காலம் முதல் மேலை தர்க்கவியலும் வாத்ஸாயயன்ர் காலம் முதல் கீழை நியாய இயலும் இதற்கு எத்தனையோ வழிகளை உருவாக்கியுள்ளன. இதுவே பொதுவாக பிரபலமாக உள்ள ஓர் அறிதல் முறை. நாம் சாதாரணமாக சிந்திப்பது என்னும்போது இதையே செய்கிறோம். அதாவது தகவல்களை ஏதேனும் ஓர் ஒழுங்கில் அடுக்கிக் கொள்கிறோம்.

அதே தகவல்களை ஓர் உண்மைநிலைபோலவே கற்பனைசெய்தும் பார்க்கலாம். இது மேலே சொன்னதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அறிதல்முறை. இதுவே இலக்கியத்தின் வழிமுறை. இவ்வாறு சொல்லிப்பார்த்தலை மொழிபு [Narration ] என்கிறார்கள். [ முன்பு வெறுமே சொல்லுதல் , விவரித்தல் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்ட நரேஷன் என்ற சொல்லாட்சி இன்று மிக விரிவாக பயன்படுத்தப்படும் கலைச்சொல்லாகும் . அதனால்தான் மொழிபு என்ற தனிக்கலைச்சொல் தேவையாகிறது . மொழிபியல் என்றால் Narratologyமுன்பு கதையாடல் என்ற சொல் கையாளப்பட்டது. ஆனால் அத்துறையின் புதிய வளர்ச்சிகள் கதையற்ற சொல்லலையும் உள்ளடக்குகின்றன. இப்போது கணிதத்தையும் உள்ளே கொண்டுவருகிறார்கள் ] இந்திய அவசரநிலைக் காலகட்டம் குறித்த சில ஆயிரம் தகவல்களை அடுக்கி தர்க்கபடுத்தி அக்காலகட்டத்தின் பல உள்ளுறை உண்மைகளை நாம் அறியலாம். அதன் உள்நோக்கம் என்ன, அரசியல் இலக்குகள் என்ன, நடைமூறைச் சிக்கல்கள் என்ன என்றெல்லாம். அதைப்போல அவற்றை கொண்டே நாம் இந்திய அவசரநிலைக் காலகட்டத்தை மனதில் உண்மைபோல எழுப்பிக் கொள்ளவும் முடியும். அப்போது நாம் அதை வேறு ஒருவகையில் முழுமைப்படுத்தி சாராம்சப்படுத்தி உண்மைகளை அறிகிறோம்.

நடைமுறையில் மேலே சொன்ன இரு அறிதல்களும் ஒன்றையொன்று நிரப்பியபடித்தான் நம் அனைத்து சூழல்களிலும் செயல்படுகின்றன. உதாரணமாக ஷெர்லக் ஹோம்ஸ் அவர் துப்பறியும் விதம் குறித்து சொல்லும்போது நடந்த குற்றத்தை கிடைத்த தகவல்களின்படி உண்மைபோல கற்பனையில் நிகழ்த்திப் பார்த்துக் கொள்கிறார் என்பதை குறிப்பிடுகிறார். அதன் பின் அதையே தர்க்கபூர்வமாக அடுக்க ஆரம்பிக்கிறார், விளக்க முயல்கிறார். கொள்கையளவில் இப்படி சொல்லலாம். கற்பனை , அல்லது மொழிபு அம்சமே இல்லாத தூய தர்க்கம் கணிதம். தர்க்கமே இல்லாத தூய கற்பனை கவிதை. நாவல் , சிறுகதை எல்லாமே தர்க்க அடிபப்டை கொண்ட் கற்பனைவடிவங்களே. எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளும் கற்பனையின் வலிமையான் துணையுடன் நிகழ்த்தப்படுவனவே. அதை பலர் ஆவணப்படுத்தியுள்ளனர். குறிப்பாக அறிவியல் கொள்கைகள் அல்லது அடிப்படை ஊகங்கள் கற்பனையின் துணையுடன் செய்யப்படுவனவே.

இப்படிச் சொல்லும்போதே நாம் அறிவோம் , நாம் வரலாறு என்பது தகவல்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட கற்பனைதான் என. அல்லது மொழிபு .பின்நவீனத்துவர்கள் வரலாறு என்பது ஒரு மொழிபுமட்டுமே என்பவர்கள் என நாம் கேள்விப்பட்டிருப்போம். நவீன மொழிபியல் வரலாற்றை ஒரு பெரும் மொழிபாக பார்க்கிறது. அறிவியலையும் ஒருவகை மொழிபாகவே பார்க்கிறது. அதாவது சோழர் வரலாறு , சார்பியல் கோட்பாடு, தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவல் முதலியவை மூன்றுவகையான மொழிபுகள் அவ்வளவுதான். அது வேறு துறை. விட்ஜென்ஸ்டானில் இருந்து தொடங்கும் விரிவான ஆய்வுமுறைமை அதற்கு உண்டு. பொதுவாக பார்த்தோமென்றால் கூட மொழிபு என்பது வரலாற்றை, வாழ்க்கையை, சிந்தனைகளை ஆராயக் கூடிய உள்வாங்கக் கூடிய முக்கியமான வழிமுறை எனலாம். அதையே இலக்கியத்தின் வழிமுறை என்று சொல்கிறோம். அறிவியக்கத்தில் அதன் பங்களிப்பு தத்துவ, அறிவியல் ஆகியவற்றின் பங்களிப்புக்கு நிகரானது. உலக ஞானமென நம் சொல்லும் கணிசமானவை சொல்லிபார்த்து அடையப்பட்டவையும்கூட .

உள்ளுணர்வு இவ்விரு அறிதல்முறைகளிலும் அடியோட்டமாக ஓடுகிறதென்றே நான் எண்ணுகிறேன். அதை நேற்று நான் சொன்னால் என்னை மதவாதி என மார்க்ஸியர்களும் மொழியியலாளார்களும் வசைபாடியிருப்பார்கள். இன்று நான் ‘நாம் சாம்ஸ்கி ‘யை துணைக்கழைத்து மூளையின் திசுக்களின் முடிவற்ற இணைவுச்சாத்தியங்கள் மூலம் உருவாகக் கூடிய வகுத்துவிடவே முடியாத அறிதல்முறை அது என்பேன். ஒரு குழந்தை எப்படி மொழியின் அல்லது இசையின் சிக்கலான பாதையை தன் புது மூளையின் புதிய சாத்தியங்கள் மூலம் சட்டென்று பிந்தொடர்ந்துவிடுகிறதோ அப்படி மனிதமூளை பிரபஞ்ச இயக்கத்தின் சிக்கல்களை முற்றிலும் புதிய ஒருவழியில் சென்று தொட்டுவிட முடியும். உள்ளுணர்வை மனிதன் வளர்த்துக்கொள்ள முடியும், பயில முடியும். பிற இரு அறிதல்களை காட்டிலும் பல மடங்கு நுட்பமான அறிதல்களை அடையமுடியும் — அது என் சொந்த வாழ்வனுபவங்கள்மூலம் நான் உறுதியாக அறிந்த உண்மை. இலக்கியமேகூட தன் உச்சநிலையில் உள்ளுணர்வின் பாதையை கண்டடையமுடியும். – இது என் சொந்த அனுபவம்.

இலக்கியத்தின் ஒட்டுமொத்த மதிப்பு என்ன ?

====

மேலே சொன்னது இலக்கியத்தின் பயன்மதிப்பு பற்றி. ஆனால் இலக்கியத்தின் ஒட்டுமொத்த மதிப்பு அது ஒரு கலை என்பதையும் சார்ந்தே உள்ளது. சுரேஷ் அவர்களின் நண்பர் சொன்ன நியாயப்படி பார்த்தால் எல்லா கலைகளும் மனிதனின் முதிராத மனநிலையை திருப்திசெய்பவையே. முதிர்ச்சி அடைந்த மனிதனுக்கு கலையே தேவையில்லை . அந்நண்பர் வண்ண ஆடைகள், நல்ல உடைகள் அணிபவரா ? அழகாக வடிவமைக்கப்பட்ட வீட்டில்தானே குடியிருக்கிறார் ? அழகு என்று சிவவற்றையாவது அவர் கருதுவது உண்டல்லவா ? அழகான பொருளைப்பார்த்த்தால் மகிழ்வாரல்லவா ? அவ்வப்போதாவது ஓரிருவரி சங்கீதமாவது அவர் கேட்பதுண்டல்லவா ? இது எதற்குமே அவர் இல்லை என்று பதிலளித்தால் அவரது விலாசம் எனக்குதேவை. அவர் சாமானிய மனிதரல்ல, ஜீவன்முக்தர். மனிதவாழ்வெனும் பெருநாடகத்தை வெளியே நின்று பார்க்கும் பரமஹம்சர்.

இசை என்றால் என்ன ? ஆதிமனிதனின் மொழி அவனது உணர்வுகளை வெளிப்படுத்த போதவில்லை.ஆகவே பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றின் ஒலிகளையெல்லாம் போலிசெய்து பாடி தன் உணர்வுகளை வெளிப்படுத்தினான் . கருவிகள் மூலம் சத்தங்களை பயன்படுத்தினான். இன்றும் அது ஒரு குறியீட்டமைப்பாக வளர்ச்சிபெற்று தொடர்கிறது. மொழி வளர்ந்துவிட்டபிறகு அதற்கு என்னதேவை ? நடனம் என்பது என்ன மிருகங்கள்[மான் முக்கியமாக] பறவைகள் [மயில் ] மரங்கள் போன்றவற்றின் அசைவுகளை போலி செய்து காட்டி தன்னை வெளிப்படுத்தமனிதன் முயன்றமுறை. நிறங்கள்.ஏன் சிவப்பும் பொன்னிறமும் இனிதாக உள்ளது ? ஏன் பச்சை அமைதி அளிக்கிறது ? இப்படியே போகலாம்.

கலைகள் மனிதனின் ஆதிநிலைக்கு பக்கத்தில் உள்ளன என்பது அவற்றின் பலவீனமல்ல, பலம். இசைகேட்கும்போது நீங்கள் ஒரு வெறும் மிருகமாக ஆகும் கணங்கள் உண்டு என்பதே அதன் உன்னதம். பல்லாயிரம் வருட பண்பாட்டின் இப்பால் நின்றாலும் நாம் அந்த புள்ளியிலிருந்து நம்மை மீட்டுக் கொள்கிறேம் அப்போது. இலக்கியம் இன்று எத்தனையோ அலைகளை கோட்பாடுகளை தாண்டிவந்துவிட்டது . இன்றும் நிலவும் , வானமும் , நதியும்தான் கவிதையின் அடிப்படை படிமங்கள். என்றும் அப்படித்தான் இருக்கும். அதுவே கலையின் ஆதிமத்தன்மை [Primitiveness] யின் காரணம் என்பார்கள்.

நாம் அறியும் உணரும் ஒன்று உண்மையிலேயே எந்த அளவுக்கு நமக்கு முக்கியமென நம் ஆழ்மனதுக்கு அடிமனதுக்கு சென்றுதான் அறியமுடியும். நாம் அறிந்துள்ளதில் எது நமக்கு முக்கியமென்றும் அப்படித்தான் அறிய முடியும். நமது சிந்தனையின் பாதை ஒன்று, கனவின் பாதை இன்னொன்று இல்லையா ? கனவின் தளமே ஆழ்மனம் என எளிமையாக நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆகவே நமது மனம் சார்ந்த எந்த ஒரு இயக்கத்திலும் ஆழ்மனதின் ஒரு தரப்பு உள்ளது. சாதாரணமான செய்திஅலசலில் கூட . அந்த ஆழ்மனமே நம்மை நமது இறந்தகாலத்துடன், நமது மரபுடன் பிணைக்கிறது. அதாவது நமது உடனடியான தேவைகள் கட்டாயங்கள் ஆசைகள் ஆகியவற்றிலுருந்து விடுபட்டு, நாம் நம்மைப்பற்றி கொண்டுள்ள கற்பனைகளிலுர்ந்து விடுபட்டு , நாம் ஒரு வகை குரங்கு என்பதிலிருந்து தொடங்கி நமது

அடிப்படை இயல்புகளிருந்து தொடங்கி அறிய ஆரம்பிப்பதையே ஆழ்மன வெளிப்பாடு என்கிறோம். நம் கனவுகள் நம் கல்வியை நாகரீகத்தை சமூக இடங்களை பொருட்படுத்தாத ஓர் ஆழத்தின் விளைவுகள் என நாம் அறிவோம். அந்த ஆழத்திலிருந்து ஒன்றை அறிவதுதான் ஆழ்மன அறிதல் அல்லது ஆழ்மன வெளிப்பாடு. கலையில் வெளிப்பாடும் அறிதலும் ஒரேசமயம் நிகழ்கின்றன.. அவ்வகை அறிதலை கலைகள்தான் நிகழ்த்துகின்றன.

பிற அறிதல்முறைகளை விட கலைகள் வேறானவை. காரணம் அவை ஆழ்மன வெளிப்பாடுகளை தர்க்கம் தொடமுடியாது என்பதே. இந்திய ஞானமரபின் சொற்களால் சொல்லப்போனால் ‘ஜாக்ரத் ‘ ஐ தாண்டி ‘ஸ்வப்னம் ‘ ‘சுஷுப்தி, ‘ ‘துரிய ‘ நிலைகளின் வெளிப்பாடுகள் தான் கலைகள். ஸ்வப்னம் ஆனதமய கோசத்தாலனது , கலைகள் அந்த ஆனந்தத்தின் மூலம் உலகையும் உலகைத்தாண்டியதையும் அறிபவை என்பது இந்தியமரபின் நம்பிக்கை. ஃப்ராய்ட் அல்லது யுங் அல்லது ழாக் லக்கனை வைத்துச் சொன்னால் முறையே நனவிலியின், கூட்டுநனவிலியின், குறியீட்டு ஒழுங்கின் வெளிப்பாடுகள் அவை. எப்படியும் சொல்லலாம். நாம் அனைவருமே அதை அனுபவித்திருப்போம், அதுதான் ஆதாரம். அந்த அழ்தள அறிதலை நிகழ்த்த கலைகளே உள்ளன. கலைகள் நம்மில் நிகழ்த்துவது ஒருவகை கனவின் வெளிப்பாட்டைத்தான். ஆகவேதான் முற்றிலும் கலையே தேவைப்படாத மனிதன் ஏதும் இல்லை — இருந்தால் அவன் கலைகள் எந்த கடலின் திவலைகளோ அந்த கடலையே அறிந்து அதில் கலந்தவனாக இருப்பான்.

இலக்கியம் ஓர் அறிவுத்துறை என்பதுடன் ஒரு கலையும் ஆகும் என்பதே அதன் முக்கியமான சிறப்பம்சம். ஓர் அறிவுத்துறையாக அது உண்மையை அறிய எத்தனிக்கிறது. ஓரு கலையாக அந்த உண்மையை மிக மிக ஆழத்துக்கு கலாச்சாரத்தின் தொடக்கத்துக்கு கொண்டுசென்று பரிசீலிக்கிறது. இப்படி சொல்லலாம். ஒரு பெரும் சிக்கலை நாம் சந்திக்கும்போது அதை அந்த தருணத்தைமட்டும் வைத்தல்ல, நம் இறந்தகாலத்தின் கடைசிஎல்லைவரை, பாலியம்வரை, கொண்டுசென்று பரிசீலிப்பதுபோல.

ஆக இலக்கியத்தின் ஒட்டுமொத்த பயன் என்ன ? அது ஓர் அறிதல்முறை. அறிந்தவற்றை மனிதனின் உணர்ச்சிசார்ந்த ஆழத்தால் பரிசீலனைசெய்யும் கலை. இரு தளங்களையும் இணைத்து அது செயல்படும்போது எல்லா பிற அறிவுத்துறைகள் எதுவும் சென்று தொடமுடியாத இடங்களை தொடுவதாக உள்ளது. இது மீண்டும் மீண்டும் வரலாற்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் கலீயியோவும் டாவின்சியும் காலாவதியானாலும் தாந்தே காலாவதியாகமலிருக்கிறார். மார்க்ஸ் பழசாகிவிட்டார், ஷேக்ஸ்பியர் மேலும் புதியவராகிவருகிறார்.

 

 

This entry was posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, கேள்வி பதில் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s