இளமுருகு எழுதிய ‘பாத்ரூம்’ பற்றிய கட்டுரை பற்றி

ளமுருகு எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒன்று. இந்தியர்களில் பெரும்பாலோருக்கு சுகாதார உணர்வு இல்லை. ஏன்? அதற்கான காரணங்கள் பல. அவை இந்திய சமூக அமைப்பு மற்றும் தட்பவெப்ப நிலை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. உதாரணமாக இந்தியர்கள் உடலை மிக, மிக சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள் என்பதில் ஐயமில்லை. பெரும்பாலோனோர் எளிய முறையிலானாலும் வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள்தான். ஆனால் சுற்றுபுறச் சூழலை அசுத்தமாக வைத்திருக்கிறார்கள். இதற்கு காரணம் தட்ப வெப்ப நிலை. சூரியன் சுட்டெரிக்கும் இந்த தேசத்தில் குப்பைகள், அழுக்குகள் ஆகியவை எளிதாக காய்ந்து மட்கி போகின்றன. இன்றுகூட நமது பெருநகரங்கள் மனிதர்கள் சாகாமல் வாழும் இடங்களாக இருப்பது கணிசமான மனிதக் கழிவுகளை வெயில் காய வைத்து விடுவதனால் தான். ஆனால் மக்கள் தொகை குறைவாக இருக்கும் போது தான் வெயில் சரிப்படும். நவீன கும்பல் கலாசாரத்தில் அது சரிப் படாது. இரண்டாவதாக இங்குள்ள சமூக அமைப்பு. நமக்கு ஒரு சிவில் சமூக கற்பனை உருவானதே நூறு வருடத்துக்குள் தான். அதற்கு முன்பு சில திருவிழாக்கள் தவிர மற்ற நாட்களில் சாதி சாதியாக, சாதிக்கு ஒரு தெருவாக நாம் பிரிந்து வாழ்ந்தோம். நமக்கு கும்பல் உணர்வு உருவானதே ஒழிய சமூக உணர்வு உருவாக வில்லை. இப்போது கூட எந்த ஒரு விஷயத்துக்கும் [குடிதண்ணீர் உதாரணம்] ஒரு சாதி அல்லது ஒரு தெரு கும்பலாக இறங்குமே ஒழிய ஒரு சமூகமே திரண்டு மெல்ல அணி வகுத்து நீண்டகால போராட்டத்தில் ஈடுபடுவது இங்கு கிடையாது. இது சுகாதார விஷயத்தில் அப்பட்டமாகத் தெரிய வருகிறது. பொது இடத்தில் அசிங்கம் செய்து விட்டு உடனே அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டால் போதும். பிறகு வருபவன் அவனது வேலையை கவனிக்கட்டும் என்ற உணர்வு வருவது இப்படித் தான். இது எல்லா விஷயங்களிலும் நம்மிடம் உள்ளது. மூன்றாவதாக துப்புரவு என்பது இழிவான தொழில், அசிங்கத்தில் வாழ்வது அதை விடமேல் என்ற எண்ணம். இது நமது சாதி மன நிலையிலிருந்து உருவாவது. நமது பெரும்பாலான வீடுகள் அலுவலகங்களில், கழிப்பறைகளை அதைப் பயன் படுத்துவோர் துப்புரவு செய்வது இல்லை. துப்புரவு என்பதே தெரியாத சூழலில் வாழும் எளிய மக்கள் தான் செய்கிறார்கள். [இதைப் பற்றி அருமையான கட்டுரையை ஒருவர் மருதம் இதழுக்கு அனுப்பியுள்ளார். வெளியாகப் போகிறது.]

இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்ட கடைசி தலைவர் காந்தி என்றால் உடனே ஒரு கும்பல் என்னை வசை பாட கிளம்பி விடும். ஆனால் அது உண்மை. தன் செய்திகளில் முக்கியமானதாக காந்தி பொது சுகாதாரம் என்ற அம்சததை கொண்டிருந்தார். சர்க்கா போலவே ஒரு கக்கூஸையும் போகுமிடமெல்லாம் கொண்டு சென்றார். துப்புரவைத் தானே நிகழ்த்துவதன் அருமையை நமது உயர் சாதியினருக்கு ஓயாமல் எடுத்துச் சொன்னார். தானே பொது கழிப்பிடங்களை தொடர்ந்து சுத்தம் செய்தார். இதை நாராயண குருவிலும் காணலாம். ஆனால் அதன் பிறகு நமக்கு வந்த தலைவர்கள் சந்தன மணம் கமழும் கக்கூஸ்களையே கண்டு வளர்ந்தவர்கள். அவர்கள் நம் சுத்தத்தை பொருட் படுத்த வில்லை. [செல்வி ஜெ ஒரு முறை பர்கூர் போகும் வழியில் ஒருமுறை கழிப்பிடம் போகலாம் என்பதற்காக தர்மபுரி அரசு பேருந்து நிலையத்தில் 30 லட்ச ரூபாய் செலவில் கக்கூஸ் கட்டப்பட்டது] இது தான் நமது தேசம். காந்தியை மனித விரோதியாக காட்ட வேண்டியது இன்று நமது அரசியல் தரப்புகளுக்கெல்லாம் அவசியத் தேவை. அந்த வேகத்தில் துப்புரவையும் விட்டு விட்டார்கள். நான் சில தருணங்களில் இதைப் பற்றி பேசப் போக சுத்தம் X அசுத்தம் என்றெல்லாம் சூத்திரங்களை போட்டு பின் நவீனத்துவ விளக்கம் அளித்து அசுத்தமாக இருப்பது உரிமை, எதிர்ப்பு, வர்க்க குணம் என்று விளக்கி நான் சொல்வது சாதி வாதம் என்று சொல்லி விட்டார்கள். இளமுருகு கட்டுரையும் தமிழ் நாட்டில் உயர் சாதி கண்ணோட்டமாகக் கருதப் படும். நாம் முதலில் இதைப் பற்றி மீண்டும், மீண்டும் பேச ஆரம்பிக்கலாம். ஆனால் இதை பற்றி பேசுவதே கொடுமை என்கிறார்கள் அறிவுஜீவிகள். 1997ல் சில தருமபுரி கிராமங்களில் சுகாதார முகாம்களில் பங்கு கொண்டேன். மக்களை சென்றடைய முடியும் என்ற எண்ணத்தை அவை ஏற்படுத்தின. ஆனால் அது ஒரு இயக்கமாக நடக்க வேண்டும்.

This entry was posted in கட்டுரை, கலாச்சாரம், காந்தி, சமூகம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s