என் குர்-ஆன் வாசிப்பு

‘The absolute is adorable’- Nadaraja Guru. [Wisdom]

க்கலை தர்ஹா ஷெரிஃபில் அடங்கிய பீர் முஹம்மது அப்பா அவர்களைப் பற்றி தமிழில் ஏராளமான அற்புதக் கதைகள் உண்டு. தமிழ் நாட்டு இஸ்லாமியக் கலாசாரத்தில் அவர்கள் பங்கு மிக அதிகம். தென் தமிழ்நாட்டில் பீர் முஹம்மது என்ற பேரில் ஏராளமானோர் உள்ளனர். இலக்கிய உலகிலேயே களந்தை பீர் முஹம்மது, சை. பீர் முஹம்மது [மலேசியா], எச். பீர் முஹம்மது [விமரிசகர்], பீர் முஹம்மது [இந்தியா டுடே] எனப் பலர். தமிழகத்தில் வாழ்ந்த பெரும்பாலான சூஃபிகளிடம் பீர் முஹம்மது அப்பா அவர்களுக்குத் தொடர்பு இருந்ததாக ஐதீகம் இருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் குற்றாலத்துக்கு அருகேயுள்ள கணிகபுரம் ஊரில் பிறந்த அவர் தக்கலைக்கு வந்து வாழ்ந்து இங்கேயே மறைந்தார்.

பீர் முஹம்மது அப்பா அவர்கள் ஓர் எளிய நெசவாளியாக இருந்தார். இஸ்லாமிய சட்ட திட்டங்கள் எதையுமே அவர் கடைப் பிடிக்கவில்லை. தறியிலிருக்கையில் ஒரு பசு கத்தினாலோ அல்லது ஒரு நாய் ஊளையிட்டாலோ கூட பாங்கு கிடைத்து விட்டது என அவர் தொழுகைக்கு அமர்ந்து விடுபவார். புகார்கள் அன்று காயல்பட்டினத்தில் வாழ்ந்த இஸ்லாமிய வரலாற்றின் ஆகப் பெரிய மதப் பேரறிஞராகிய சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களிடம் கொண்டு செல்லப் பட்டன.

சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களைப் பற்றியும் பலவிதமான ஐதீகக் கதைகள் உண்டு. அனேகமாக தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் அவர் வந்ததாக கதைகள் சொல்லப் படுகின்றன. ஏழு வயதில் குர் ஆன் முற்றோதி எழுபத்து மூன்று வயது வரை நிறை வாழ்வு வாழ்ந்த சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் அரபு மற்றும் தமிழில் பெரும் பண்டிதர். அவர்களுக்கு அவர் வாழ்ந்த காலத்தைய தமிழறிஞர்களில் கணிசமானவர்கள் மாணாக்கர்களாக இருந்தார்கள். படிக்காசு புலவர், நமச்சிவாய புலவர் என பலர் குறிப்பிடப் படுகிறார்கள். சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களால் தான் தமிழின் சிறந்த பெருங்காவியங்களில் ஒன்றான சீறாப் புராணம் எழுதப்பட்ட சந்தர்ப்பம் அமைந்தது. சீறாப் புராணத்தின் ஆசிரியர் உமறு புலவர், சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் சீடர் மஹ்மூது தீபி அவர்களிடம் தான் மார்க்கக் கல்வியை கற்றார்.

தக்கலைக்கு வந்த சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் பீர் முஹம்மது வலியுல்லாஹ் அவர்களை மத விசாரணை செய்ததாக கதை சொல்லப் படுகிறது. அப்போது பீர் முஹம்மது வலியுல்லாஹ் அவர்கள் தன்னுடைய செயல்களெல்லாம் குர் ஆனில் உள்ளவையே என்று சொன்னாராம். குர் ஆனில் அவை இல்லை என சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களை விட தெளிவாக தெரிந்தவர் எவரும் இருக்க முடியாது. ஆனால் குர் ஆனை எடுத்துப் பார்க்கும்படி பீர் முஹம்மது வலியுல்லாஹ் சொன்னார். அவ்வாறே எடுத்துப் பார்த்த சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் அங்கே அவையெல்லாம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருப்பதைக் கண்டார்கள்.

இது கதை தான். இஸ்லாமியச் சட்டப்படி குர் ஆனில் எதையாவது சேர்ப்பது குறித்து பேசுவதே பெரும் பாவம். ஆனால் பெரும்பாலான சூஃபி கதைகளில் மேல் மட்டத்தில் இந்த இயல்பு காணப் படுகிறது. இது மேல் மட்ட தோற்றம் தான் என கற்றவர்கள் கூறுவதுண்டு. இக்கதையின் கவித்துவமான உருவகப் பொருளையே நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

லக்கியத்தில் என் ஆசிரியர்களான சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, பி. கெ.பாலகிருஷ்ணான், ஞானி அனைவருமே நாத்திகர்கள். அவர்களுக்கும் எனக்கும் இடையேயான வேறுபாடு என்ன? ஒரு முறை நான் சொன்னேன். ‘அவர்கள் நவீனத்துவ காலகட்டத்தினர். நான் பின் நவீன கால கட்டத்தைச் சேர்ந்தவன். அவர்களுக்கு அறிவின் வல்லமை மீது ஆழமான நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையே அறிவியல், தத்துவம், தர்க்கம், சித்தாந்தம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையாக வெளிப்படுகிறது. நான் அறிவு ஆழ்ந்த அவநம்பிக்கைக்கு உள்ளாகி விட்ட ஒரு காலகட்டத்தில் வாழ்கிறேன். அறிவு என்பது ஒரு போதும் முழு முதல் தன்மை கொண்டதல்ல என நவீன ஊடகங்களும், நவீன கல்வி முறையும் காட்டி விட்ட ஒரு காலத்தில் சிந்திக்கிறேன். அறிவு முற்றிலும் சார்பு நிலை உள்ளது. அது அளிக்கும் உண்மை காலத்தால், சந்தர்ப்பத்தால் நிர்ணயிக்கப்படுவது என நான் அறிவேன். ஆகவே அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றை அறிவுக்கு மாறாத அடிப்படையாக விளங்கத் தக்க ஒன்றை நான் தேடுகிறேன்.’

இரண்டு விதமாக இதைப் பார்க்கலாம். நவீனத்துவத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு உலகம் முன்னகர்ந்து ஆன்மிகத்தை அடைந்தது. பின்னகர்ந்து மதத்தை அடைந்தது. அறிவின் சாரமாக விளங்கும் விவேகத்தின், மெய்மையின், உள்ளுணர்வின் ஊற்று தேடி ஆன்மிகத்தை அடைவது முதலில் சொன்னது. நவீன உலகம் உருவாக்கும் கடுமையான உலகியல் போட்டி, கட்டுப்பாடற்ற போக வெறி, சுயநலப் பாங்கு, இவற்றின் விளைவாக ஒவ்வொரு மனிதனிலும் உருவாகும் தனிமை மற்றும் இறுதி நிராசை ஆகியவற்றைக் கண்டு அஞ்சி பின்னகர்ந்து மதத்தின் இறுக்கமான நெறிகளுக்குள்ளும், சடங்குகளுக்குள்ளும் அடைக்கலம் கண்டடைவது இரண்டாவது. நவீன உலகை நாம் நிராகரிக்க முடியாது, வென்று முன்னகரவே முடியும். உண்மையில் இந்த இரண்டாம் போக்குதான் உலகம் முழுக்க மத அடைப்படைவாதமாக உருவெடுத்துள்ளது. எங்கும் மத அடிப்படைவாதம் பேசும் இளைஞர்களில் நவீனக் கல்வி பெற்றவர்கள் அதிகம் என்பதைக் காணலாம்.

குர் ஆனை நோக்கி என் கவனம் திரும்பியது முதலில் சொன்ன விவேகத்தின், மெய்மையின் ஊற்று தேடியே. இக்கட்டுரைக்காக நான் என் குர் ஆன் நூலை எடுத்துப் பார்க்கையில் நான் முதலில் வாசிக்கத் துவங்கிய தேதி அதில் குறித்திருப்பது கண்ணில் படுகிறது. 30-04-1995. முக்கிய நூல்களை தொடர்ச்சியாக வாசிப்பது பெரும்பாலானவர்களால் முடிவதில்லை. அதற்கு நான் கண்டு பிடித்த எளிய வழி அன்றாடம் செய்யும் ஏதோ ஒன்றுடன் அதை இணைத்துக் கொள்வது. சாப்பிடும் போது, படுக்கப் போகும் முன் என அந்நூல்களில் ஒரு பகுதியைப் படிப்பது.

இப்போது கணிப்பொறியின் அருகே குர் ஆனை வைத்திருக்கிறேன். காலையில் மின்னஞ்சல் பார்க்க கணிப்பொறியைத் திறக்கும் முன் சில வசனங்களை படிப்பேன். இணையத்தில் பக்கங்கள் இறங்கிவர ஆகும் நேர இடைவெளியில் சில வரிகள்.பெரும்பாலும் உடனே மறந்து விடும். பிறகு சம்பந்தமில்லாமல் எதையோ செய்து கொண்டிருக்கும் போது, வேறு எதைப் பற்றியாவது பேசும் போது சட்டென ஒரு வரி நினைவுக்கு வரும். அப்போது அது முழு அர்த்த விரிவு கொண்டதாக, முளைத்து மரமாகி விழுது பரப்பியதாக இருக்கும். மூளையில் பொருத்துவதை விட மனதில் விதைப்பதே கவிதைகளுக்கும், ஆன்மிக நூல்களுக்கும் சிறந்த வாசிப்பு என்பது என் அனுபவம்.

எனக்கு இணையத்தைக் குறித்து பயம். அது ஒரு கடல். பெரும் பசி கொண்ட மாமிசப் பட்சிணிகள், முத்துக்கள் எல்லாம் நிரம்பிய பிரம்மாண்டம். அது ஒரு மாபெரும் மூளை. எந்த மூளையிலும் பாதி பங்கு சைத்தான்தான் குடியிருக்கிறது. ஆகவே அதனுள் இறங்குகையில் ஒரு பிடிமானம் தேவையாகிறது. கடந்த ஏழு வருடங்களாக நான் குர் ஆன் படிக்கிறேன் என்றாலும் அதைப் பற்றி திட்ட வட்டமாக எந்தக் கருத்தும் கூறுமளவுக்கு நான் முதிரவில்லை என்றே உணர்கிறேன். இது ஓர் எளிய அனுபவ மனப்பதிவு மட்டுமே.

எல்லா அறங்களும் சார்புநிலை கொண்டவை தற்காலிகமானவை என நமக்கு நவீன சிந்தனை கற்பிக்கிறது. நாம் அதை ஒரு சித்தாந்தமாக கற்கா விட்டால்கூட நம் மனதை ஆள்வது அக்கருத்தே. ஆகவேதான் நாம், நமது எல்லா செயல்பாடுகளையும் தர்க்கம் செய்து நியாயப் படுத்தலாம் என நம்புகிறார்கள். எந்த நூலிலும், எந்த இதழிலும், மேடையிலும் நாம் காண்பது எண்ணற்ற தர்க்கங்களை, உதாரணங்களை, நிரூபணங்களை. ஒன்றுக்கு மேற்பட்ட தர்க்கங்கள் மோதி சமநிலையை அடைந்து அந்த சந்திப்பு புள்ளியில் உருவாவதே உண்மை அல்லது அறம் என நமது பாட புத்தகங்களில் அதிபுத்திசாலிகள் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இன்று உலகமே ஒற்றை விவாதப் பரப்பாக மாறி விட்டது. கிளிண்டன் செய்தது தப்பா, சரியா என நாம் திண்ணையில் அமர்ந்து அலசுகிறோம். ஒவ்வொரு அறிவுத் துறையும் மற்ற அனைத்து அறிவுத் துறைகளுடன் இணைந்து பேருருவம் கொண்டிருக்கிறது இன்று. பேரறிஞன் என்பவன் கூட அறிவுத் துறையின் ஏதேனும் ஒரு தளத்தை மட்டுமே அறிந்தவன் என்றாகி விட்டிருக்கிறது. ஓர் அறிவுத் துறையின் உண்மையை பிறிதொன்று முற்றாக மறுதலிக்கிறது. தர்க்கங்களும், தரப்புகளும் எண்ணிறந்து பெருகிவிட்டிருக்கின்றன. ஆம், உண்மையை அறியும் திறனை அறிவுத் துறைகள் இழந்து விட்டிருக்கின்றன. மனிதனின் மரபணு வரைபடத்தை உருவாக்குவது உயிரியலின் வேலை. அதைச் செய்தால் உருவாகும் அழிவுகளைப் பற்றி யோசிக்க வேண்டியது ஒழுக்கவியலின் வேலை. இரு துறைகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதே இன்றைய நிலை. [பார்க்க மரபணுவியல் மேதை எரிக் லாண்டர் பேட்டி. சொல்புதிது 9.]

ஆம், ‘சார்பானது’ என்ற சொல்லை இன்று ‘இல்லாதது’ என்ற பொருளிலேயே பயன்படுத்தலாம். இன்று நான் வாசித்த இணைய தளத்தில் சில பெட்ரோலிய மூலப் பொருட்களைக் கொண்டு எப்படி மலிவாக வீட்டிலேயே தரமான போதைப் பொருட்கள் தயாரிப்பது என்பதை விளக்கியிருந்தார்கள். ‘இன்று போதைப்பொருட்கள் பெரிய குற்ற அமைப்புகளால் மிகப் பெரிய லாபம் வைத்து விற்கப் படுகின்றன. மக்கள் அவற்றை உபயோகிப்பதனால் பெரும் பணம் குற்றவாளிகள் கைகளுக்குச் சென்று பல வகையான சமூக அழிவுகள் ஏற்படுகின்றன. மேலும் போதையை நுகர்வோருக்கு பெரிய பொருளிழப்பும் ஏற்படுகிறது. அப்பொருளிழப்பை ஈடுகட்ட அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் சீக்கிரமே இழந்து தெருவுக்கு வந்து விடுகிறார்கள். போதைப் பழக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள தேவையான பொருள் வசதிகூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. போதைப் பழக்கத்தில் அவர்களை ஆழ மூழ்கடிப்பது இதுவே. இது போதையை விட கொடூரமானது. அறிவு ஒரு ஆயுதம்தான். அதை பயன் படுத்துவதிலேயே வெற்றி, தோல்வி அடங்கியுள்ளது’ என்று வாதாடுகிறது அந்த இணையதளம். அந்த அறிவியலறிஞனின் மூளையுடன் மோத என்னால் முடியாது. ஆகவே நான் வெளியே வந்து குர் ஆனைத் திறக்கிறேன்.

குர் ஆன் என்ன சொல்கிறது என்ற வினாவுக்கு என் எளிய வாசிப்பறிவை கொண்டு ‘அறத்தின் மாற்றமின்மையை, முழு முதலான நிரந்தர மதிப்பீடுகளை’ என்று சொல்வேன். அவை ஒரு தளத்திலும் சிந்தித்து பெறப் பட்டவை அல்ல. விவாதித்து நிறுவப் பட்டவையும் அல்ல. விண்ணிலும், மண்ணிலும் நிரம்பியுள்ள பிரபஞ்ச ரகஸியம் ஒரு மனித மனத்தை வந்தடையும் கணங்கள் மூலம் பெறப் பட்டவை. குர் ஆன் ஒரு வாள் போல. பெரும் கருணையால் நிரப்பப் பட்ட நீதிமானின் கையில் உள்ள வாள். ‘மனிதர்களே நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களைச் சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர் தாம்….’ [அல் ஹுஜுராத் 13] என அது மீண்டும் மீண்டும் மானுட சமத்துவத்தின் குரலையே முழங்குகிறது.

அந்த சமத்துவ போதத்தின் அடிப்படையிலான நீதிக்கான குரலை மீண்டும், மீண்டும் குர் ஆன் எழுப்பியபடியே இருக்கிறது ‘…இறை நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் அல்லாஹ்விற்காக வாய்மையில் நிலைத்திருப்போராகவும் நீதிக்கு சான்று வழங்குவோராகவும் திகழுங்கள். எந்த ஒருகூட்டத்துக்கு எதிராகவும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக் கூடாது. நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்துக்கு மிகப் பொருத்தமானது… ‘[அல் மாயிதா.8] அதற்காக போராடும்படியே அது அறை கூவுகிறது ‘எவர் பூமியில் ஒடுக்கப் பட்டிருந்தார்களோ அவர்களை தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம்..’ [அல் கசல் 5] ‘பலவீனர்களக்கப் பட்ட அடக்கி ஒடுக்கப் பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நீங்கள் போராடாமலிருக்க என்னதான் காரணம்?’ [அன்னிசா 75]

இந்த கட்டளைகளில் எந்த விதமான சமரசத்தையும் குர் ஆன் அனுமதிக்கவில்லை. ‘கடவுளுக்குரியது கடவுளுக்கும், சீசருக்கு உரியது சீசருக்கும் என்ற இரட்டை நிலையை நபி அங்கீகரிக்கவில்லை. இக பரங்களை அவர் இரண்டாக காணவில்லை. ஒன்றின் இரு பக்கங்களாகவே கண்டார். ஆகவே நபி ஒரே சமயம் தீர்க்கதரிசியும், ஆட்சியாளருமாக ஆனார். மதநிறுவனரும், தேசிய அமைப்பாளரும ஆனார். உலக வரலாற்றில் இப்படிப் பட்ட ஒரு இணைவு முதல்முறையாக நிகழ்ந்தது’ என்கிறார் நவீன மலையாளச் சிந்தனையாளாரில் முதல்வரான மறைந்த எம்.கோவிந்தன். [எம்.கோவிந்தனின் கட்டுரைகள்.]

குர் ஆனை பிற மத நூல் பழக்கம் உடையவர்கள் முதலில் படிக்கும் போது ஒரு குழப்பம் ஏற்படும். அது மீண்டும், மீண்டும் நெறிகளை, சட்டங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறது என்று தோன்றும். அது உண்மையே. மெய்மையின் முழுமையனுபவத்தை பெற்ற ஞானிகளால் ஆக்கப்பட்ட மற்ற மத நூல்கள் அவர்கள் பெற்ற அந்த அதீத அனுபவத்தை விளக்க முயல்கின்றன. அது முற்றிலும் ‘அப்பாற்பட்ட’ ஓர் அனுபவம். ஆனால் அதை மனித மொழியில் சொல்லிப் பிறருக்கு விளக்க வேண்டுமென்றால் இவ்வுலகு சார்ந்த அனுபவத்தை உதாரணம் காட்டித் தான் விளக்க முடியும். நாம் அறிந்த சில விஷயங்களை சொல்லி அதல்ல அது, அதற்கெல்லாம் அப்பாற் பட்டது என விளக்க முற்படுகின்றன மத நூல்கள். ஒளி, இனிப்பு, கடல்,வானம் என; சூரியன், காற்று என எண்ணற்ற உதாரணங்கள் அளிக்கப் பட்டுள்ளன. மிக ஆரம்ப காலம் முதல் விளக்கங்கள் அவ்வாறு தான் அளிக்கப் பட்டுள்ளன.

உதாரணமாக ரிக் வேதம் கூறுகிறது.

‘சூரியனே
இருளை அகற்றி
உலகை ஒளிமயமாக்கும்
உன் பேரொளி
எங்கள் வறுமையையும்
சுயநலத்தையும்
எல்லா துக்கங்களையும்
இல்லாமல் செய்வதாக!
எங்கள் அறியாமையின்
தீக்கனவுகளை
அழிப்பதாக!’

[ரிக் வேதம்.மண்டிலம் 10]

இந்த சூரியன் எது? ரிக் வேதமே அதைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

‘எங்கும் சுடரும் அக்னி ஒன்றே
எங்கு ஒளிரும் சூரியனும் ஒன்றே
இவற்றையெல்லாம் ஒளிவிடச்செய்யும்
உஷையும் ஒன்றே
அந்த ஒன்றே இவையெல்லாம்’

[ரிக் வேதம்.மண்டிலம் 10]

இந்த மாபெரும் ஒருமை தரிசனமே ரிக் வேதத்தின் செய்தியாகும். நூற்றாண்டுகளுக்கு பிறகு ராமலிங்க வள்ளலாரின் பாடல்களிலும் நாம் காண்பது இதையே.

தீயிடை சூட்டியல் சேர்தரச் செலவியல்
ஆயுற வகுத்த அருட்பெருஞ்சோதி!

தீயினில் வெண்மை திகழியல் பலவாய்
ஆயுற வகுத்த அருட் பெருஞ்சோதி!

தீயிடை பூவெலாம் திகழுறு திறமெலாம்
ஆயுற வகுத்த அருட் பெருஞ்சோதி!

[அருட்பெருஞ்சோதி அகவல். தீயியல் விரி]

மெய்மை வைர ஊசி நுனியால் மட்டுமே தொட்டெடுக்கப்படக் கூடிய அளவு நுண்மையான ஒன்று என்கின்றன உபநிடதங்கள். அதற்கான கவனமும், மனநிலையும் கொண்டவர்கள் அபூர்வம். அவர்களால் உருவகங்கள் வழியாக தியானித்து முன்னகர்ந்து ஞானிகளின் அப்பேரனுபவங்களின் நுனியையாவது தொட்டுணர முடியும். ஆனால் சுட்டிக் காட்டப் படும் பொருளை விட சுட்டும் விரலையே கவனிக்கும் மனநிலை கொண்டவர்கள் எளிய மக்கள். உருவகிக்கப் படுவதை மறந்து உருவகங்கள் கோயில் கொண்டதையே வரலாறு காட்டுகிறது. எது எளிதில் புரிகிறதோ அதை புரிந்து கொள்ள முற்படுகிறவர்கள். எது கடைப் பிடிக்க வசதிப் படுகிறதோ அதை கடைப் பிடிக்க முயல்பவர்கள். எது லாபகரமானதோ அதை நம்புகிறவர்கள்.

குர் ஆன் மெய்ம்மையனுபவத்தை விளக்க அதிகமாக முற்படவில்லை. அதன் சாரம் விளக்க முடியாத அந்த ஒருமைத் தரிசனமே. அத்தரிசனத்தின் அடிப்படையில்தான் அது நெறிகளை, சட்டங்களை வகுத்தளிக்கிறது. அச்சட்டங்களின் வழியாக நாம், நமது கவனம் மூலம் முன்னகர்ந்தால் அடைவது அந்த முழுமையனுபவத்தையே. அதை எப்படியும் விளக்கலாம். மனிதர்களாகிய நாம் படைப்பாளிகளல்ல, படைப்புகள் மட்டுமே. இப்புவியின் விதியை நாம் தீர்மானித்து விட முடியாது. கோடானு கோடி உயிர்களால், அவற்றுக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவுகளின் அளப்பரிய பெரும் வலையால் ஆன இப்புவியில் நமது வாழ்க்கை நம்மை மீறிய பெரும் நியதிகளாலேயே தீர்மானிக்கப் பட்டுள்ளது. அந்நியதி ஒவ்வொரு உயிரையும் அதன் இடத்தில் வைத்துள்ளது. அதன் கடமைகளை வகுத்துள்ளது. நீதி என்பது அந்த இடத்தை மறுக்காமலிருப்பது. முழுமையான ஒத்திசைவு அது. அச்சத்துக்கும், சுயநலத்துக்கும், ஆணவத்தும் ஆட்பட்டு அடிப்படை நியதிகளை மீறாமலிருத்தல். இவை சொற்களே, இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஓர் ஆழ்நிலை உணர்தலே குர் ஆனின் செய்தி.

காசர்கோடு மாவட்டத்தில் ‘பேக்கல்’ என்ற கோட்டை உள்ளது. இப்போது அது பிரபலமாகி விட்டது. 1987ல் நான் அங்கு வேலை பார்க்கும்போது அங்கு மாதத்துக்கு ஒரு பார்வையாளர் வந்தால் அதிகம். முற்றிலும் தனிமை நிரம்பிய இடம். கோட்டைமேல் நின்றால் இருபக்கமும் தெரியும் வளைந்த கடற்கரையில் கூட எங்குமே மனித நடமாட்டம் இருக்காது. என் தாயும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டதன் அதிர்ச்சியில், ஓயாத மன அலைபாய்தலில் நான் இருந்த காலம் அது. அடிக்கடி பேக்கல் கோட்டைக்கு சென்று அமர்ந்திருப்பேன். கோட்டை கடலுக்குள் நீண்டு சென்றிருக்கும். மதிலின் கீழ் எல்லையில் வேகம் தணியாத அரபுக் கடல் அலைகள் நுரைத்து ஓலமிடும். எனக்கு அந்த தனிமையில் அவ்வலைகளுடன் ஓர் அபூர்வமான லயம் உருவாகி விடும்.

ஒருமுறை எண்ணற்ற கேள்விகளால் கனத்து உறைந்த மனத்துடன் கோட்டை மீது நடக்கும் போது மிக அருகே இருந்த சிறிய பள்ளி வாசலில் இருந்து ‘அல்லாஹு அக்பர்!’ என்ற பாங்கு கேட்டது. அதன் ஓங்கார ஒலியை அக்கோட்டையும், கடலும் காற்றில் சிகையலைக்கும் தென்னைகளும், வெண்மணல்வெளியும் சேர்ந்து முழங்குவது போல இருந்தது. ஒரு கணம் திடுக்கிட்டு மறு கணம் மிக அபூர்வமான அந்த மன எழுச்சியை அடைந்தேன். அதை விளக்க நான் நாவல் தான் எழுத வேண்டும். பின்பு தான் அச்சொற்களின் பொருளை – ‘இறைவேனே பெரியவன்!’ தெரிந்து கொண்டேன். பல வருடங்கள் கழித்து நித்ய சைதன்ய யதி அவர்களிடம் அவ்வனுபவத்தை சொன்னேன். அதே போன்ற அனுபவத்தை அவர் லெபனானில் அடைந்தது குறித்து சொன்னார்.

குர் ஆனை பல வருடங்கள் பயின்றிருக்கிறேன். நித்ய சைதன்ய யதி அந்நூலை பாடம் கேட்ட போது இறுதி நாட்களில் கவனித்திருக்கிறேன். அந்நூலின் முக்கியமான வரி, ஒட்டு மொத்தமாக நூலையே சமன் செய்யுமளவுக்கு முக்கியமானது, அவ்வரி அதன் முதல் வரியே என்று எனக்கு படுகிறது. ‘அளவிலாக் கருணையும், இணையிலா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்…’ செயல்கள், இருப்புகள் அனைத்துடனும் மெளனமாக வந்து இணையும் தன்மை கொண்டது அது.

ந்த நூலிலிருந்தும் மேலும் அறியாமை நோக்கி போக முடியும் என்பதை வரலாறு முழுக்க மக்கள் நிரூபித்து வந்திருக்கிறார்கள். மனிதர்களின் இயல்பான சுயநலம் எதையும் தாண்டிச் செல்லும் வல்லமை கொண்டது. இந்துக்கள் மூலநூல்களை முடிவின்றி மறுவிளக்கம் செய்வதனூடாக அவற்றை நிராகரிக்கிறார்கள். கிறித்தவர்கள், கிறிஸ்துவை மதநிறுவனமாக்கி செயலிழக்கச் செய்துவிட்டார்கள். இஸ்லாமியர் கைகால் கழுவி விட்டு ஓதி வணங்க வேண்டிய புனித நூலாக குர் ஆனை மாற்றி அதன் ஆணைகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடைமுறையில் ஒவ்வொருவரும் இம்மூல நூல்களை வெறுமே தங்கள் குழு அடையாளமாக மாற்றிக் கொள்கிறார்கள். அவ்வடையாளத்துக்காக சாகவும், கொல்லவும் தயாராகிறார்கள். உலகம் முழுக்க வரலாறு முழுக்க நடந்ததும், நடந்துகொண்டிருப்பதும் இதுவே. நானறிந்த ராமாயணம் மாபெரும் கருணையின் இதிகாசம். தியாகம் மூலம் மனித உறவுகளைக் கனிய வைக்க முடியுமென்பதே அதன் செய்தி. பான் பராக் குதப்பித் துப்பி, கொடியுடன் கொலை வெறி கொண்டு தெருவில் நடனமிடும் இன்றைய ராமபக்தர்களை தொலைகாட்சியில் பார்க்கும்போது அவர்கள் படித்த ராமாயணமே வேறு என்று படுகிறது.

ஒருவேளை மதங்களிலேயே உறுதியான நம்பிக்கையை முன்வைக்கக்கூடிய மதம் இஸ்லாம்தான். ஆனால் முடிவற்ற பொறுமையை அது மீண்டும், மீண்டும் இறை நம்பிக்கையாளார்களுக்கு ஆணையிடுகிறது. ‘கூறி விடுவீர்களாக, ‘ஓ நிராகரிப்பாளர்களே நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை. நான் யாரை வணங்குகிறேனோ அவனை நீங்கள் வணக்குபவர்கள் அல்லர்… உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு என்னுடைய மார்க்கம்’ [அல் காஃபிரூன் 1,2,3,6] நபி சொன்னார், ‘ ஓர் அவிசுவாசியை [திம்மியை] எவராவது தொல்லைப் படுத்துவார்களானால் அவன் என்னையே தொல்லைப் படுத்துகிறான்.’ பொறுமைக்கான இந்த ஆணையிலிருந்தே நாம் ஒரு வெறி பிடித்த மதவெறி ஆணையை பெற்றுக் கொள்ள முடியும். பெரும் சாந்தி மந்திரங்களிலிருந்தே கொலை ஆயுதங்களை உருவியெடுக்க நம்மால் முடியும். மனிதனின் அடிப்படை அப்படிப் பட்டது என வரலாறு காட்டியுள்ளது.

ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால் கூட குர் ஆன் அளவில் பெரிய நூல் அல்ல. சில நாட்களிலேயே நாம் அதை படித்து முடித்து விட முடியும். ஆனால் அறிவின் மறு எல்லைகளில் நகர்ந்தபடி அவ்வரிகளை மீண்டும், மீண்டும் நாம் வாசித்தறிய வேண்டியுள்ளது. கருணையாலும், அன்பாலும், எளிமையாலும் அதை நம் அகம் உள்வாங்க வேண்டியுள்ளது. ஆம், நூலை வழிபடுவதோ சுமந்து திரிவதோ அல்ல; நம் ஆத்மாவில் வாங்குவதே முக்கியமானது. அது எளிய விஷயமல்ல.

ராளமான சூஃபிகளின் கதைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இன்று அவர்கள் வரலாற்றை முழுக்கத் தொகுத்துப் பார்க்கும்போது ஒரு பொது அம்சம் நம் கண்களுக்குப் படுகிறது. கொடும் பஞ்ச காலங்களில் இவர்கள் அன்னதானம் செய்திருக்கிறார்கள். தமிழகத்தை பஞ்சங்கள் பிடித்தாட்டிய 18,19ஆம் நூற்றாண்டுகளிலேயே அதிகமான சூஃபிக்கள் அடையாளம் காணப் பட்டிருக்கிறார்கள். மனிதர்களை பாகுபடுத்தும் சமூகச் சட்டங்கள் நிறைந்திருந்த அக்கால கட்டத்தில் இவர்கள் மனிதர்களை சமமாகவே கருதினார்கள். அதற்காக சமூகத்தால் விலக்கப் பட்டார்கள், சொந்த மதத்தினரால் கூட. ஆகவேதான் ஏழைகளின் ஐதீகங்களில் அவர்கள் இடம் பிடித்தார்கள். இன்றும் தர்ஹாக்களில் அதிகமாக வழிபாடு செய்பவர்கள் தாழ்த்தப்பட்ட குலங்களை சேர்ந்த இந்துக்களே.

பெரும்பாலான சூஃபிக்கள் ஃபக்கீர்கள். அல்லாஹ்வின் உடைமைகள் எல்லாமே எனக்குரியவை, ஆகவே எனக்குரியதென ஏதுமில்லை என வாழ்ந்தவ்ர்கள். ‘கருவேலம் பட்ட கடும் பஞ்ச’ காலத்தில் இவர்கள் மட்டும் எப்படி பிறரை ஊட்ட முடிந்தது? அதை புரிந்து கொள்ள முடியாத சாமானிய மக்கள் அவர்களை அற்புதங்கள் செய்த மகான்கள் என எண்ணினார்கள். ஆனால் இன்று வரையிலான மானுட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒன்று தெரியும். தனக்கென ஏதுமில்லாதவ்ர்களே மிக அதிகமாக பிறருக்கு ஈந்திருகிறார்கள். மனம் கருணையால் நிறைந்திருக்கும் போது ஒரு கஞ்சித் தொட்டி நிறைவது தானா பெரிது?

எல்லா சூஃபிக்களையும் பற்றிய அக்கதை பீர் முஹம்மது வலியுல்லாஹ் அவர்களைப் பற்றியும் சொல்லப்படுகிறது. பசித்த மக்களுக்காக உணவு சமைக்க அவர் முற்றத்திலிருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி மனைவி கையில் அளித்து சமைக்கச் சொன்னாராம். அது சோறாயிற்றாம். சதக்கத்துல்லா அப்பா அவர்களுக்கு பீர் முஹம்மது அப்பா அவர்கள் கற்பித்த அந்த பொன்னெழுத்துக்களிலான செய்தி என்ன? கருணையும், எளிமையும் நிரம்பிய மனதுடன் குர் ஆன் படிக்கும் ஒருவரால் காண முடியக் கூடிய ஒன்று தான் அது. மண்ணை அமுதமாக்கும் மந்திரம்.

[இஸ்லாமிய அறிஞர் ஆர்.எம். சதக்கத்துல்லா ஹசனீ ஆசிரியத்துவத்தில் யுனீக் பப்ளிகேஷன்ஸ் [Unique Publications, No 1 North VeLi Street, Madurai 625001. EMail-sadhaqathullah@rediffmail.com] சார்பில் வரவிருக்கும் ரமளான் மலருக்காக எழுதப்பட்டது. இக்கட்டுரையின் மூல வடிவம் மலையாள இஸ்லாமிய இதழ் ‘பிரபோதனம்’ வெளியிட்ட ‘குர் ஆன் சிறப்பிதழ் ஏப்ரல் 2002’ல் வெளியானது.

This entry was posted in தத்துவம், மதம், வரலாறு and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s