பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)

தமிழில் குழந்தைகளுக்கு அறிவியலை அறிமுகப் படுத்தும் முயற்சிகளில் ‘கல்வி’ கோபால கிருஷ்ணனின் முயற்சிகள் முக்கியமானவை. காகிதத்தால் செய்யப் பட்டு மாயா ஜாலத்தால் உருவாக்கப் பட்ட மந்திர பாப்பா காற்று அண்ணனால் காலப்பயணம் செய்கிறது. அப்போது டைனாசார்கள் மற்றும் பரிணாம வளர்ச்சி எல்லாம் குறித்து அறிந்து கொள்கிறது. இரு குழந்தைகள் ஒரு வண்ணத்துப் பூச்சியை பிடிக்கச் சென்று மயங்கி விழுகின்றனர். அவர்கள் ஆத்மாக்கள் பின்னர் பல விலங்குகளின் வாழ்க்கை முறையையும் அவற்றிற்கு மனிதர்கள் செய்யும் கொடுமையையும் கண்டு மனம் வருந்துகின்றனர். (தட்டான் பூச்சி வாலில் நூலை கட்டுவது முதல் சர்க்கஸில் யானைகளை கொடுமை படுத்துவது வரை) இறுதியில் மகாத்மா காந்தியையும், ஜோதி வள்ளலாரையும் கண்டு பிரார்த்தனையில் கலந்து விட்டு பிறகு மீண்டும் கண் விழிக்கின்றனர். அறிவியல் மற்றும் மதிப்பீடுகளை ஒருங்கிணைத்து குழந்தைகளுக்கு வழங்க தமிழில் எடுக்கப் பட்ட முதல் முயற்சி என இவற்றைக் கருதலாம்.
இதற்கு பிறகு தினமணியின் சிறுவர் வார இதழில் தொடராக வந்து சென்ற ஆண்டில் நூலாக வெளிவந்த ஜெயமோகனின் ‘பனி மனிதன் ‘தமிழ் சிறுவர் இலக்கியங்களில் முக்கியமான முயற்சியும் முன்னகர்வும் ஆகும். சாகஸக் கதை, அறிவியல், அதீத கற்பனை, மர்மம், மதிப்பீடுகள் ஆகிய அனைத்தையும் இணைத்து படைக்கப் பட்ட ஒரு சிறுவர் இலக்கியமாக பனி மனிதன் விளங்குகிறது. யதி எனப் படும் பனி மனிதன் இமய மலை சார்ந்த பகுதிகளில் வழங்கப் படும் ஒரு புராண மனிதன். உண்மைக்கும், கற்பனைக்கும் இடைப் பட்டதோர் வெளியில் இருக்கும் அவிழ்க்கப் படாத புதிர் என்றே பலர் கருதும் ஓர் மர்ம புதிர்.
மலைப் பனியில் தெரியும் சில விநோத இராட்சத காலடித் தடங்களை குறித்து அறிந்து வர பணிக்கப் படுகிறான் பாண்டியன் எனும் இராணுவ வீரன். கிராமவாசிகளால் மிகைப் படுத்தப் பட்ட சாதாரண இயற்கை விளைவாக இருக்கும் என நினைத்துப் புறப்படும் பாண்டியன் விரைவில் விநோத நிகழ்வுகளையும், பனி மனிதன் குறித்த உள்ளூர் வழக்குகளையும் அதன் பின் இருக்கும் அதிசய உண்மைகளையும் சந்திக்கிறான்.

ஜூல்ஸ் வெர்னின் அறிவியல், சாகச பயணக் கதைகளை நினைவூட்டும் நிகழ்ச்சிகள் பயணம் முழுவதும். ஆனால் இப்பயணம் வெறும் சாகசப் பயணம் மாத்திரமல்லாது ஒரு புனிதப் பயணத்தின் தன்மையும் கூடவே எடுத்து வளர்கிறது. கதை படிக்கும் குழந்தைகள் வளருகையில் கூடவே வளர முடிந்த நூல் இது. ஒரு உதாரணம் கூறலாம். மிகப் பெரும் கருணையை வளர்த்த பெளத்தம் கூடவே நரபலி மார்க்கங்களையும் கூட தன்னிலிருந்து உற்பவித்ததை விஷ்ணுபுரத்தில் காட்டிய ஆசிரியர், பல பெளத்த மதிப்பீடுகளுடன் வாழும் ஒரு கிராமம் ஒரு சிறுவனை எவ்வித உறுத்தலுமில்லாமல் தனித்து சாக விடுவதை பனிமனிதனில் காட்டுகிறார். இது எந்த காலம் அல்லது, சமயம் அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட மக்கட் சமூகம் சார்ந்த விஷயமல்ல. ஒரு சில மனிதர்கள் சமுதாயத்தால், நம்பிக்கைகளால் நரபலியிடப் பட்டே வருகின்றனர். நிறுவனப் படுத்தப் படுதலின் இன்றியமையாத விலை நரபலி என தோன்றுகிறது. பாண்டியனால் காப்பாற்றப் படும் கிம் எனும் இச்சிறுவனுடன் இந்த சாகஸ குழுவில் ஒரு டாக்டரும் கலந்து கொள்கிறார். இராணுவத்தினனான பாண்டியன், பெளத்த மலைவாசி கிராமச் சிறுவனான கிம், மேற்கத்திய அறிவியல் பார்வை கொண்ட டாக்டர் ஆகியோர் பனிமனிதனை தேடி புறப்படுகிறார்கள். பனிமனிதனை டாக்டர் வெளிப்படையாகவே அறிவிக்கிறார்; ‘நான் பனிமனிதனைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறேன். ஆனால் அது உண்மையில் மனிதனைப் பற்றிய ஆராய்ச்சிதான்.’ (பக். 40)

பாதையில் டாக்டர், பாண்டியனுக்கு இயற்கை உலகின் செயல்பாடுகளையும், பரிணாம அறிவியலையும் விளக்குகிறார். தகவமைவுதான், பரிணாமத்தின் முக்கிய இயக்கு சக்தியாக டார்வின் கண்டறிந்ததாக டாக்டர் குறிப்பிடுகிறார். கேள்விக்குரிய இடம் இது. விடுபட்ட கண்ணியாக பனிமனிதனை ஊகிக்கிறார் டாக்டர். ஆனால் பனி மனிதனை கண்டவனான கிம் டாக்டர் காட்டும் எந்த பேரினக் குரங்கை போலவும் பனிமனிதன் இருப்பதாகக் கூறவில்லை. பின்னர் ஹோமோ எரெக்டஸை போல இருப்பதாக கூறுகிறான். கதை நகருகிறது. சில மன பிம்பங்கள் உடைகின்றன. பாண்டியன் சிறுவன் கிம் யோக சுவாசம் எனும் யோகப் பயிற்சி செய்வதைப் பார்க்கிறான். ’பாண்டியனுக்கு வியப்பாக இருந்தது. பனிமலையில் வாழும் பழங்குடி மக்கள் அத்தனை சிறப்பாக யோகப் பயிற்சி பெற்றிருப்பார்கள் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. ‘ (பக். 59)

இயற்கை, மானுடம் ஆகியவை குறித்த பல பார்வைகள் கதையினூடே குழந்தைகள் முன்வைக்கப் படுகின்றன. இரு உதாரணங்கள். ஒன்று இயற்கை விளைவு பற்றியது. ‘பனிச்சமவெளி ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி போன்றது. சூரிய ஒளியை அது பிரதிபலிக்கிறது. ‘ என்றார் டாக்டர்…… ‘…பனிமலை புத்தரின் மனம் அல்லவா? இங்கு வருவது பெரிய பாக்கியம் என்று என் அப்பா சொல்வார் என்றான் கிம். ‘ஏன் இதை புத்தரின் மனம் என்கிறார்கள்? ‘ என்றான் பாண்டியன். ‘ஏனென்றால் இங்கு எல்லாமே தூய்மையாக உள்ளன. தூய்மையாக இருக்கும்போது பூமியும் வானம் போல ஆகிவிடும். இங்கு எந்த ஒலியும் இல்லை. தியானம் செய்யும் புத்தரின் மனம் போல இந்த இடம் அமைதியாக இருக்கிறது ‘ என்றான் கிம் ‘ (பக் 64, 65) மற்றொன்று பரிணாமத்தில் மனிதனின் இடம் குறித்தது. மனிதனிலிருந்து குரங்கின் பரிணாமத்தை விளக்குகிறார் டாக்டர். (பக். 86,87) (டாக்டர் சோவியத் நூல்களையே படித்து வளர்ந்தவர் போலும் அல்லது அணு உற்பத்தியா?) ஏங்கல்ஸின் தத்துவத்தை விளக்குகிறார். அச்சமயம் கிம் அவர்கள் ஊர் பிட்சுவின் கோட்பாட்டினை கூறுகிறான். ‘திருஷ்ணை ‘ எனும் உள்ளார்ந்த ஓர் அதிருப்தியே மானுட நாகரிகத்தினை முன்னகர்த்தும் சக்தி என்றும் அதுவே அவனை திருப்தியற்று மேலும் மேலும் செயல்பட வைப்பதாகவும் கூறுகிறான்.(பக் 89) டாக்டர் இதனை சரி என ஆமோதிக்கிறார். திருஷ்ணை கிறிஸ்தவத்தின் ஆதிபாவத்தை ஒத்திருப்பது அதிசயமானது. திருஷ்ணையை வெல்ல வேண்டும் என்கிறான் கிம். திருஷ்ணையே மானுடத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படை எனவே அதை இழக்கலாகாது என்கிறார் டாக்டர். பனிமனிதனை தேடக் காரணமே அந்த திருஷ்ணைதானே என சுட்டிக் காட்டுகிறார் டாக்டர். கிம்மின் எதிர்வினை சொல்லப் படவில்லை. அது மெளனமாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்பது ஊகிக்கக் கூடியதே. அடுத்த பக்கங்களில் திருஷ்ணையின் செயல்பாட்டினை ஆசிரியர் காட்டுகிறார். கதையின் ஒரு முக்கிய உச்சம் இங்கு தொடப் படுகிறது. முக்கியமான மதிப்பீட்டு நிகழ்வாக அடுத்த நிகழ்ச்சிகள் அமைகின்றன. பின்னர் வழியில் அவர்கள் தங்கள் லாமாவை தேடும் ஒரு பிட்சு கூட்டத்தை சந்திக்கின்றனர். மீண்டும் வேறுபட்ட உலகங்கள் மோதுகின்றன. இப்போது அந்த பிட்சுக்கள் பனிமனிதனை குறித்து மேலும் கூறுகின்றனர். அவன் விடுபட்ட கண்ணி அல்ல. மாறாக அவன் மற்றொரு பரிணாம சாத்தியகூறு. திருஷ்ணை அற்ற பரிணாமத்தின் பூரணத்துவம் என அவர்கள் கூறுகின்றனர். இறுதியில் நம் சாகஸக்குழு பனிமனித சமுதாயத்தைச் சந்திக்கிறது. ஒருவிதத்தில் விவிலியத்தின் ஆதி தோட்டத்தை நினைவு படுத்தும், அனைத்து உயிர்களும் இசைந்து வாழும் உலகினை நாம் நம் சாகஸக் குழுவுடன் சந்திக்கிறோம். இந்நிலையில் மீண்டும் டாக்டருக்கும், பாண்டியனுக்குமான பேச்சுக்கள் மூலம் மனம், பரிணாமம் ஆகியவை குறித்த பலவித கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. இதற்கிடையில் கிம்மின் மூலம் மற்றொரு உண்மை தெரிய வருகிறது. அவர்கள் அனைவருமே பனிமனிதர்களான யதிகளால் அங்கு வரவழைக்கப் பட்டவர்கள். தற்செயலான நிகழ்ச்சிகள் அனைத்துமே ஓர் பெரும் தூய கூட்டு மனத்தின் பெரும் இயக்க பகுதிகள் என அவர்கள் அறிகின்றனர். கிம் மட்டுமே இப்பெரும் மனத்தின் செயலியக்கம் குறித்த பிரக்ஞயுடன் இருந்தவன். அனைவரும் அந்த பூமியை விட்டு மீண்டும் செல்கின்றனர். திரும்புகையில் தற்செயலாக ஒரு மலரை பாண்டியன் கிம் கையில் கொடுக்கிறான். அவர்கள் மீண்டும் தம் தலைமை லாமாவைத் தேடும் பிட்சுக்களை காண்கின்றனர். கிம்மின் கையில் இருக்கும் மலர் தான் அவர்கள் தேடும் லாமாவுக்கான அடையாளம். கிம், லாமா ஆகிறான். டாக்டர் அவனை காலில் விழுந்து வணங்குகிறார். பாண்டியனும் அவனை கை கூப்பி வணங்குகிறான் சிறிய தயக்கத்த

ின் பின்.

அத்தயக்கம் குறித்து அவன் பின் வருத்தம் தெரிவிக்கையில் பனிமனிதன் பாகம்-2 க்கான ஒரு சிறு குறிப்பு தெரிவிக்கப் படுகிறது. அவர்கள் இறுதியாக மற்றொரு ஆச்சரியத்தையும் அடைகின்றனர். பனிமனிதனே இனி வரும் மைத்ரேய புத்தர் என்பதே அது. டாக்டர் கூறியதற்கும் அப்பால் பனிமனிதனை தேடல் அக்குழுவில் ஒவ்வொருவருக்கும் அகத்தேடலாகவே மாறியிருப்பதை நம்மால் உணர முடிகிறது. இறுதியாக பனிமனிதன் குறித்த இரகசியம் இரகசியமாகவே காக்கப் படுகிறது. இயற்கையினை அறிய அறிவியல் மாத்திரமே ஒரே வழியல்ல என்கிற உண்மையையும் அதே சமயம் அறிவியலின் அழகினையும், புராண மொழியின் அழகினையும் அவை இயங்கும் தளங்களின் இயற்கையையும் ஒரு சேர குழந்தைகளுக்கு தரும் முயற்சி பனிமனிதன். எளிதான விஷயமல்ல அது. வாக்கியங்களின் அமைப்பிலிருந்தே (சிறிய சிறிய வாக்கியங்கள் இடையிடையே உரையாடல் தன்மை கொண்ட கதை சொல்லல்) மிகுந்த கவனம் செலுத்தப் பட்டிருப்பது தெரிகிறது. இக்கட்டுரையாளனுக்கு தெரிந்த சில குழந்தைகளிடம் கேட்ட மாத்திரத்தில் 75% வெற்றி என்றே கூற வேண்டும். அதே சமயம் இன்று ஹாரி பாட்டரின் வெற்றியினை காண்கையில் பனிமனிதன் தமிழகத்தில் குழந்தைகளுக்கு வேண்டிய அளவில் கொண்டு செல்லப்பட வில்லை என்றே தோன்றுகிறது. பனிமனிதன் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப் பட்டால் சர்வதேச அளவில் பேசப்படும். ஆனால் ஹாரி பாட்டர் அளவுக்கு அது Craze ஆகாது. அதன் அமைப்பே அத்தகைய நிகழ்வுக்கு தடையாக கூடியது (ஹாரி பாட்டரில் காணப்படும் ‘Good feeling‘ மற்றும் தன்னை கதாநாயகனுடன் குழந்தைகளுக்கு அடையாளப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பு பனிமனிதனில் இல்லை என்பதனால்!) அறிவியல் தகவல்களில் ஆசிரியரின் உழைப்பு தெரிகிறது. கதையோடு தொடர்புடைய பெட்டி செய்திகள் ஏராளம். இரு குறைகள். ஒன்று:அறிவியல் தகவல்கள் சோவியத் தாக்கம் கொண்டு விளங்குகின்றன. அவற்றுள் பல இன்று மறுதலிக்கப்பட்டவை. மற்றொரு குறை திரு.ஜெயராஜின் உயிரற்ற ஓவியங்கள்.அடுத்த பதிப்பில் ஆசிரியர் அவற்றை மாற்றுவார் என நம்பலாம்.
(ஒரு தனிப்பட்ட பின்குறிப்பு: ஆசிரியரின் ‘பின்தொடரும் நிழலினின் குரல் ‘நூலில் ஒரு அழுத்தமான கிறிஸ்தவ மதிப்பீடுகளுடனான பார்வையால் அதிகார இயந்திரம் அதன் முழு சக்தியுடன் மதிப்பிடப் பட்டது. பியோத்தர் தாதாவோஸ்கி மற்றும் டால்ஸ்டாயின் குரல்களை போன்ற தீவிர (உண்மையான) கிறிஸ்தவ பார்வைகளின் தொடர்ச்சியாகவே தோழர் அருணாச்சலத்தின் ‘பாடினை ‘  (Similar to the Passion of Christ?) அறிந்து கொள்ள இயலும். ஆனால் டால்ஸ்டாய் அறிவியல் தாக்கங்கள் தம் மானுட இயற்கை குறித்த பார்வையை எவ்விதத்திலும் தீண்ட முடியாதென்றார். ‘பனிமனிதனில்‘ ஒருவிதத்தில் டால்ஸ்டாயின் கிறிஸ்தவம் பெளத்த போர்வையில் அறிவியலின் சில போக்குகளுடன் இணைந்து ஒரு புதிய புராண கதையாடலை குழந்தைகளுக்குக் கொடுக்கிறது. பெரு ஊழி அதிலிருந்து புனர்சிருஷ்டிக்காக காப்பாற்றப் பட்டு பின் பல்கிப் பெருகி புது உலகை நிர்மாணித்தல், ஆதிபாவம் ஆகிய கிறிஸ்தவ மைய புராண கதையாடல் (ஹிந்து புராணங்களில் இவை பேசப் பட்டாலும், இறையியலில் பங்கு பெறுமளவுக்கு மைய கதையாடல் ஆகவில்லை) இக்கதையில் வெளிப் படுகிறது. ஆசிரியர் தன்னை அடிக்கடி பின்நவீனத்துவவாதியென கூறிக் கொள்பவர். எந்த இடதுசாரி அறிவு ஜீவிக்கும் அடிப்படையில் கிறிஸ்தவ மெய்யியலே இயங்குகிறது எனும் இக்கட்டுரையாளனின் கோட்பாட்டை இது உறுதி செய்வதாக தோன்றுகிறது. ஆனால் எதுவானால் என்ன? இங்கு அதன் மிக ஆக்கப் பூர்வமான விளைவினை நாம் பார்க்கிறோம். நம் குழந்தைகளை சத்தியத் தேடலில் வேட்கை கொள்ளச் செய்யும் ஒரு கடினமான முயற்சி ‘பனி மனிதன் ‘. ‘விஷ்ணு புரம் ‘ மற்றும் ‘பின் தொடரும் நிழலின் குரல்‘ ஆகியவற்றுக்கு சரி நிகர் சமானமான, ஒருவேளை அவற்றை விட முக்கியமான படைப்பு பனி மனிதன். ஆச்சரியத்தையும், அற்புத உணர்வையும் நம் குழந்தைகளுக்கான அறிவியல் பாடதிட்டம் ஏற்படுத்த தவறி விட்டது அவ்வெற்றிடத்தை நல்லழகுடன் குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் நிரப்புகிறது ‘பனி மனிதன் ‘. அது காட்டும் பிரபஞ்ச தரிசனத்துடன் இக்கட்டுரையாளன் கடுமையாக வேறுபட்டாலும் கூட இந்நூல் தமிழக குழந்தைகளை பெரிய அளவில் அடைவது பெரும் அவசியம். Google BuzzEmail

This entry was posted in இலக்கியம், தத்துவம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s