அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி!

ன்யாகுமாரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப் பட்ட போது என் மாமனார், தமிழறிஞர் சற்குணம் பிள்ளை இங்கே இருந்தார். அய்யன் திருமுகத்தை முதல் நாளே பார்க்க வேண்டுமென்று திறப்பு விழாவுக்குப் போனார். நெரிசலில் சிக்கி, மூச்சு திணறி வந்து சேர்ந்த போது முகம் இருளடித்துக் கிடந்தது. காரணம் நான் கேட்கவில்லை. கேட்பேன் என்று எதிர்பார்த்து ஏமாந்து அவரே சொன்னார். “ஒருத்தருமே திருவள்ளுவரைப் பத்திப் பேசலியே. எல்லாரும் கலைஞரைத்தான் புகழ்ந்திட்டிருந்தாங்க…” நான் அவருக்கு அப்போதைய போஸ்டர் வாசகம் ஒன்றை நினைவூட்டினேன். “வாழும் வள்ளுவர் தானே இவரும்?” மாமனார் பெருமூச்செறிந்தார்.

சிலை அமைக்கப் பட்டு ஒரு வருடம் கழிந்தே நான் அதைப் பார்க்கப் போனேன். அச்சிலை என்னைப் பொருத்தவரை ஆள்வோரின் அகங்காரத்தின் விசுவரூபம் மட்டுமே. ஆனால் இங்கே வருபவர்களுக்கு அது ஒரு சுற்றுலாக் கவர்ச்சி. அன்று கூட வந்தவர் நாராயண குருகுல துறவியான சுவாமி தியாகீஸ்வரன். கவிஞர். நாராயண குருவால் மொழி பெயர்க்கப் பட்ட திருக்குறளுக்கு ஒரு நல்ல ஆய்வுரை எழுதியவர். “தமிழர்களின் கடவுள்கள் எல்லாம் இதே போல பெரிது தான். இதுவும் ஒரு முனியப்ப சாமி” என்றார்.

நான் வேதசகாய குமார் சொன்ன ஒரு சம்பவத்தை சொன்னேன். சிலையை சாரம் பிரிக்கும் போது வடங்களை கழற்றுகையில் ஒரு வடம் சரிந்து சிலையை வடித்த சிற்பியின் காலில் அடித்து விட்டது. அவர் ஆஸ்பத்திரியில் படுக்க நேர்ந்தது. இதை ஒட்டி குமரி மாவட்டம் முழுக்க ஒரே வதந்தி அலை. சிற்பம் முழுமையடையவில்லை எனவே இது நடந்தது என்று ஒரு தரப்பு. சிற்பத்தின் முகத்தில் ரெளத்ர பாவம் குடி கொண்டிருக்கிறது, ஆகவே தான் இப்படி என்று என்று இன்னொரு தரப்பு. சிலை சரிந்தால் கலைஞருக்கு ஆபத்துதான் என்பதனால் சென்னையிலிருந்து சோதிடர் குழு வந்து பார்த்து சென்றிருப்பதாகவும், நரபலி கொடுத்து சிற்பத்தை நிலை நிறுத்த கலைஞர் ஆணையிட்டிருப்பதாகவும் எங்கும் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள். வேதசகாய குமார் ஒரு நண்பரிடம் வேடிக்கையாக “கதை தெரியுமா, பாண்டியன் கண்ணகிக்கு பொற் கொல்லர்களைப் பலி கொடுத்தது போல கலைஞர் 108 தமிழாசிரியர்களை திருவள்ளுவருக்கு பலி தரப் போகிறார்” என்றார். ஒரு வாரம் கழித்து ஒரு தமிழ்ப் பேராசிரியர் “சேதி தெரியுமா, திருவள்ளுவர் சிலைக்கு ஒரு தமிழாசிரியரை பலி தந்து விட்டார்களாம்” என்றாராம்.

“நடக்கக் கூடாது என்றில்லை. பெரிய சிலைகளாக கடவுள்களை உருவகிப்பதும், பலி தருவதும் எல்லாம் பொதுவாக பழங்குடிகளிடம் உள்ள ஒரு பழக்கம்” என்றார் தியாகி. எனக்கே பயமாகி விட்டது. கன்யாகுமரி என்றால் கடலோரப் பொதுக் கழிப்பிடம் என்று பொருள். இரண்டு காலை சேர்த்து ஊன்றினால் அது மலம் மீது தான். அதையெல்லாம் சுத்தப் படுத்துவது கன்யாகுமரியின் தனித் தன்மையை இல்லாமலாக்குவதாகும் என்பது அரசின் கொள்கை. 18 புனித தீர்த்தப் படித்துறைகளில் அதிக நாற்றம் எடுப்பவை முறையே முக்கியத்துவம் உடையவை. இப்போது அங்கு எங்கே குந்தினாலும் அய்யனை தரிசித்தபடியே மலம் அறுத்து உய்வு பெறலாம். இப்போது சில கோடி செலவில் பாறைக்கே கடல் பாலம் கட்டப் போகிறார்கள். அய்யன் காலடியில் அமர்ந்து அதைச் செய்யும் பாக்கியம் தமிழ்க் குடிகளுக்கு கிடைக்கப் போகிறது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அய்யன் பாழடைந்த பாறைமீது சாம்பல் பூத்து பயங்கரக் கோலம் கொள்கிறார். மார்வாடிகள் கையிலிருக்கும் வரை விவேகானந்தர் பாறை சுத்தமாக இருக்கும். [அய்யனையும் அவர்களுக்கே ஈந்துவிட்டால் என்ன? அவர் குந்து குந்தாச்சாரியார் என்ற சமண முனிதான் என்று வரலாறு உண்டே?]

அமெரிக்காவில் அய்யன் சிலை நிறுவப்பட போகிறது என்ற செய்தி காதில் விழுந்த போது அங்கும் தமிழ் மணம் பரவப் போகிறது என்ற இறும்பூது ஏற்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் இலங்கைத் தமிழரான பஞ்சாட்சரம் என்பவர் இலங்கைத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பின் நிறுவனத் தலைவர். இவர் நியூயார்க் நகரில் உலகத் தமிழ் மையம் என்ற பிரம்மாண்ட கட்டடத்தைக் கட்டப் போகிறாராம்.அதன் துவக்க விழா தமிழ் நாட்டில் நடந்தது. கலைஞர் அதன் சிறு மாதிரியை திறந்து வைத்து பேருரை ஆற்றினாராம். அதை மகாபலிபுரம் சிற்பக் கலைஞர் திருஞானம் என்பவர் வடிவமைத்திருக்கிறார். இதற்கு மட்டுமே ஆறு லட்சம் ரூபாய் செலவாம்! கட்டடம் ஆக்டகன் [எண்கோண] வடிவில் கட்டப்படுமாம். எட்டுத் திசைகளிலும் வாழும் தமிழர்களை இணைப்பதற்காக இந்த வடிவமாம். [விண்வெளியில் ஏதாவது கிரகங்களில் ஏன் தமிழ் பேசப்படக் கூடாது? தஞ்சை தமிழ் பற்கலை பேராசிரியர் எவராவது இது குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்திருப்பார்கள்]

இங்கு கலையரங்கம், தமிழ் நாட்டு நட்சத்திர உணவு விடுதி, முதியோர் விடுதி, தமிழ் நீச்சல் குளம் ஆகியவை அமைக்கப் படுமாம். ஓரத்தில் நூலகம், அருங்காட்சியகம் [அங்கு புலியை விரட்ட பயன்படுத்தப்பட்ட தமிழ் முறம்] ஆகியவையும் அமைக்கப் படுமாம். இந்தியப் பெருநகர்களில் உள்ள பிரம்மாண்டமான தமிழ்ச் சங்கங்களில் நடப்பவற்றை வைத்து ஊகித்தால் கீழ் கண்டவற்றை எதிர்பார்க்கிறேன். கலை அரங்கத்தில் உதித் நாராயணன், ஹரிஹரன், மால்குடி சுபா [மலெ மலெ மல்லே மல்லே…] குழுவினரின் தமிழிசை, தமிழறிஞர் திண்டுக்கல் லியோனி, பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன் ஆகியோரின் செவி விருந்து முதலியவை வழங்கப்படும். நூலகத்தில் அகப்பொருளாய்வுகள், ராஜேஷ் குமார் நூல்கள் அடுக்கப்படும். அனேகமாக செயலாளரிடமிருந்து என்னைப் போன்ற சிற்றிதழ் எழுத்தாளருக்கு எங்கள் நூல்களையும், சிற்றிதழ்களையும் எங்கள் தமிழ்ப் பற்றின் அடையாளமாகவும், அவர்கள் நிதி நிலையை கருத்தில் கொண்டும் இலவசமாக [அடிக்கோடு] அனுப்பி உதவும்படி கடிதம் வரும்.

‘இருந்த பெரும் தமிழணங்கின்’ பெருமைக்கு உகந்த நினைவுச் சின்னம் தான் என்பதில் ஐயமில்லை. தாஜ்மகாலில் இருப்பது போல இந்தக் கட்டடத்திலும் நிலத்தடித் தளத்தில் தமிழன்னையின் சமாதியோ அஸ்தியோ வைக்கப்பட வேண்டும். அமெரிக்காவிற்கு வரும் கணிப்பொறித் தமிழர்களும் புலம் பெயர்க்கப் பட்ட தமிழர்களின் குழந்தைகளும் தமிழ்மொழி குறித்து கேள்விப் பட்டு அங்கு வந்து மலர் வளையம் வைக்க வசதியாக இருக்கும். தமிழன்னைக்கு சிலை வைக்கப் படும் போது அவள் தொன்மையை குறிக்கும் வகையில் நியாண்டர்தால் தோற்றம் கொடுக்கலாம் என்று என் நண்பர் சொல்கிறார், அது சற்று அதிகப் பிரசங்கித்தனம் தான். சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், கம்ப ராமாயணம், நீதி நூல்கள் முதலியவற்றை சுட்டு அச்சாம்பலைத் தூவி அதன் மேல் கட்டடம் கட்டலாம் என்ற கருத்து பரிசீலனைக்கு உரியது என்று தான் படுகிறது.

ஆனால் ஏனோ இந்த மகத்தான செய்தி ஒரு வகையான உற்சாகத்தையும் தமிழ் சூழலில் உண்டுபண்ணவில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கவலை. புது மனைவியிடமிருந்து எப்படி பணத்தை லவட்டி அடுத்த இதழ் ஆரண்யத்தை கொண்டு வருவது என்று ஸ்ரீபதி பத்மனாபா. தமிழ் நாட்டில் கட்டுரை நூலையும், கவிதை நூலையும் பிரபல ஆசிரியர் கூட [திரும்பி வராத] சொந்தப் பணத்தில் தான் போடவேண்டும், கட்டுரைத் தொகுப்பு போட வைத்திருந்த பணம் இதய நோய்க்கு செலவாகி விட்ட கவலை நாஞ்சில் நாடனுக்கு. தமிழறிஞரும் இசை மேதையுமான லட்சுமண பிள்ளையின் இசைப் பாடல்களை 60 வருட இடைவெளிக்கு பிறகு மறுபதிப்பு செய்வதற்கு நிதியுதவி செய்ய மலையாள வியாபாரிகள் எவரையாவது அணுகலாமா என்று வேத சகாய குமாருக்கு கவலை. பாவண்ணன் பெங்களூரில் இலங்கை அகதிக் குழந்தைகள் அரைப்பட்டினியாக வதைபடுவதைப் பற்றிச் சொன்னார்.

சரவணன் “அந்த ஆறு லட்சம் ரூபாய் இருந்தால் ஆறு சிற்றிதழ் தொடங்கி ஜாம் ஜாம் என்று நடத்தி தமிழ் இீலக்கியத்தையே மாற்றி விடலாம் ” என்றார். டி எஸ் சொக்கலிங்கம் மொழி பெயர்த்து நாற்பதுகளில் வெளி வந்து மறு பதிப்பே வராத தல்ஸ்தோயியின் போரும் அமைதியும் நூலை ஆயிரம் ரூபாய் செலவில் ஒளிநகல் எடுத்த அரவிந்தன் அந்த நூலையும் மறு பதிப்பே வராத பிற முக்கியமான நூல்கள் சிலவற்றையும் மறு பதிப்பு செய்யலாமே என்றார். பேராசிரியர் அ. கா. பெருமாள் மறுபதிப்பு செய்யப்பட வேண்டிய நூல்களின் பட்டியலையே சொல்ல ஆரம்பித்தார். பழைய புத்தகங்களை மட்டும் மறுபதிப்பு செய்தால் போதுமா புதிய நூல்கள் எத்தனை உள்ளன என்று சொல்ல ஆரம்பித்தார் இன்னொரு நண்பர்.

யாருக்குமே விஷயம் புரியவில்லை என்று எனக்கு பட்டது. தமிழ் பண்பாட்டையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

வயிற்றுக்கு சாப்பாடு இல்லையென்றாலும் தீபாவளிக்கு கடனில் பட்டுப் புடவையும் நகையும் எடுப்பவர்கள் நாம். மூதாதையர் பெருமையும் சொந்தக்காரர் பெருமையுமே நம் பெருமை என்று எண்ணுவது நம் மரபு. அய்யனும் நியூயார்க்கில் சமாதியும் எல்லாம் யாருக்காக? நமக்குத் தான் நம்மைப் பற்றி தெரியுமே. அதெல்லாம் ‘மாற்றான்’ நம் பெருமையை அறிந்து கொள்ளும் பொருட்டு அல்லவா?நாளைக்கே அமெரிக்க அதிபர் சமாதிக்கு வந்து இட்லி சாப்பிட்டு, பசலை பரவும் விதங்களை தெரிந்து கொண்டு, அன்னைக்கு மலர் வளையமும் வைத்துச் சென்றால் வாளோடு முன் தோன்றி மூத்த குடிக்கு வேறென்ன வேண்டும்?

This entry was posted in கட்டுரை, சமூகம், தமிழகம், நகைச்சுவை and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s