குறள் – கவிதையும், நீதியும்.

குறைந்தது பத்து நூற்றாண்டுகளாகவாவது குறள் தமிழ் சமூகத்தின் நீதியுணர்வின் சாரமாக இருந்து வந்துள்ளது. குறளுக்கு எழுதப்பட்ட புராதன உரைகள், குறள் குறித்த பாமாலைகள் என இதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. ஆயினும் அந்த இடம் அறிஞர் மத்தியில் தான் இருந்தது. கல்வி எல்லைக்குட்பட்டு வழங்கப் பட்ட சென்ற காலங்களில் அது இயல்பும் கூட.

பிற்பாடு மக்களாட்சியின் சாத்தியங்களுக்கு உட்பட்டு கல்வி பரவலாக்கப் பட்ட போது தமிழில் மிக அதிகமாக வெகு ஜன மயமாக்கப் பட்ட பேரிலக்கியம் குறளேயாகும். திராவிட இயக்கம் இதில் பெரும் பங்கு வகித்தது என்பது ஒரு வரலாற்று உண்மை. இன்றும் குறள் தமிழகத்து மேடைகளில் மீண்டும், மீண்டும் பேசப்படுகிறது. இங்கு வாழ்வின் ஒவ்வொரு உச்ச கணத்திலும் பெரும்பாலான மனங்கள் குறளைத் தொட்டு மீள்வதை கவனித்திருக்கிறேன்.  என்னைப் பொருத்த வரை எனது நீதியுணர்வு குறளாசிரியனுடன் இரண்டறக் கலந்தது. என்னால் குறளாசிரியன் மீது என் அகங்காரத்தையோ, இலக்கியஅறிவையோ ஒருபோதும் செலுத்தமுடியாது என்பதிலோ, என் மனதில் இறைவனின் பீடத்தில் அவரை அமர வைத்திருக்கிறேன் என்பதிலும் எனக்கு எவ்விதமான கூச்சமும் இல்லை.

ஆனால் குறளை நாமின்று புரிந்துகொள்வதில் சில மேலதிக விளக்கங்கள் தேவை. குறள் எழுதப் பட்ட காலத்தில் கவிதையே அறிவுலகின் இயல்பான தொடர்பு முறையாக இருந்தது. மருத்துவ நூல்களும், சிற்ப நூல்களும், இலக்கண நூல்களும் கவிதைக்குரிய வடிவிலேயே ஆக்கப்பட்டன. அவற்றில் கவிதைக்குரிய அணிகளும் பயன் படுத்தப் பட்டன. அச்செய்யுட்களிலும் ஆங்காங்கே மேலான கவித்துவம் மிளிர்வதை காணலாம். ஆகவே ஒரு படைப்பு கவிதையா, நீதியா என்று இன்று எழும் கேள்வி அன்று எழ வாய்ப்பிலை. குறள் ஒரு பேரிலக்கியமாகவும், நீதி நூலாகவும் ஒரே சமயம் கருதப்பட்டது. பிற்பாடு நவீன சுதந்திர சூழலில் மறு கண்டு பிடிப்பு செய்யப் பட்ட போது அது முதன்மையாக ஒரு நீதி நூலாகவே உணரப் பட்டது. அதன் கருத்துக்கள் மட்டுமே பேசப்பட்டன; விளக்கப்பட்டன. அவ்வாறே இன்று அது கற்பிக்கப் படுகிறது. தமிழ் சூழலில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அதற்கு இருந்த அவசியம் வேறு ஒரு தலைப்பு. ஆனால் கவிதையா, நீதியா, இரண்டுக்கும் உள்ள உறவென்ன என்று இன்று பேச வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் நவீன கவிதையின் உருவாக்கத்துக்குப் பிறகு குறளை ஒரு கவிதை நூலாக கருதுபவர்கள் குறைந்து விட்டார்கள்.

பல வருடம் முன்பு குறளை கவிதையாகக் கொள்ள முடியாது என்று சுந்தர ராமசாமி சொன்னார். அதை ஞானக் கூத்தன் மறுத்தார். என்னுடைய “நவீனத்துவத்துக்கு பிறகு தமிழ் கவிதை” என்ற நூலில் குறளை ஒரு கவிதை நூலாக அணுகுவது குறித்து நான் சில சொல்லியிருந்தேன். அதற்கு காலச்சுவடு இதழில் விமரிசனம் எழுதிய ந.முருகேச பாண்டியன் அக்கூற்றை திடமாக மறுத்து எழுதியிருந்தார். இது எப்போதும் நவீன கவிதையியலில் ஒரு பிரச்சினையாகவே உள்ளது.

பிரச்சினை நாம் எண்ணுவதை விடவும் ஆழமானது. நவீன கவிதை உபதேசிக்கும் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு விட்டிருக்கிறது. அது மேலான உண்மைகளின் விளக்கமாகவோ, வெளிப்பாடாகவோ இன்று தன்னை உருவகித்துக் கொள்வது இல்லை. கவிஞனும், இன்று ஞானியின் பீடத்தில் இல்லை. அவன் சக மனிதனாகவே பேச முற்படுகிறான். ஆகவே உபதேசிக்கும், ஆற்றுப் படுத்தும் கவிதை மீது இன்று ஆழமான அவ நம்பிக்கை உள்ளது. அச்செயலை செய்யும் போது அப்படைப்பாளி கவிஞனுக்குரிய நுண்ணுணர்வு நிலையில் இல்லை என்று கொள்ளப் படுகிறது. நுண்ணுணர்வு நிலையில் கவிதை நம்முடைய கற்பனையைத் தூண்டுவதையே தன் வழி முறையாக கொண்டுள்ளது. கவிதை சொல்வதையல்ல, உணர்த்துவதையே நாம் அடைகிறோம் என்று கருதப் படுகிறது. நவீனக் கவிதையியலின் ஓர் அடிப்படைக் கொள்கை இது. [நான் இதில் முரண்படுகிறேன், இது நவீனத்துவ கவிதையின் அடிப்படை என்று சொல்வேன்]. குறள் ஒரு சாராரால் நீதி நூலாக கருதப் படும் போது, அக்காரணத்தாலேயே அது பிறிதொரு சாராரால் கவிதையல்ல என்றும் கருதப் படுகிறது.

திருக்குறள் ஒரு மாபெரும் நீதிநூலாக இன்று கருதப் படுவதன் மூலமாக அதன் வாசிப்பின் ஓரிரு சாத்தியங்கள் மட்டுமே வெளிப் படுகின்றன என்பது முதல் பிரச்சினையாகும். உதாரணமாக

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர்”

என்ற அற்புதமான கவிதை இதில் உள்ளடங்கிய நீதி எது என்னும் வினாவுடன் படிக்கப் படுகையில் அவ்வரிகளில் உள்ள முடிவற்ற வாசல்கள் ஒவ்வொன்றாக மூடி இறுகி விடுகின்றன. நித்ய சைதன்ய யதி இவ்வரிகளை பற்றிக் குறிப்பிடுகையில் குழந்தையை உதடுகளால் முத்தமிட்டும், தொட்டு மார்போடு அணைத்தும், அறியும் பேரனுபவமும் இக்கவிதை வரியில் உள்ளது என்று சொன்னார். பல குறள் பாக்கள் இவ்வாறு அதி தூய கவித்துவ நிலையில் தான் உள்ளன. நீதி என்று எடுத்துக் கொண்டால் இவை சர்வ சாதாரணமான ஒரு லெளகீக உண்மையையோ, அனுபவத்தையோ சொல்லுவனவாக மாறி விடக் கூடும். எளிய உலகியலை வலியுறுத்துபவையாக அவை தோன்றும் அபாயமும் உண்டு. தம் மக்கள் சிறு கையால அளாவிய அந்தக் கூழ், தந்தையின் நெகிழ்ந்த மனமாக மாறும் அழகை அப்போது நாம் இழக்க நேரும்.

இரண்டாவது சிக்கல் கவிதையின் நீதியும், நீதியின் கவிதையும், முற்றிலும் வேறானவை என்பதே. குறள் ஆய்ந்து தெளிந்த நீதியை முன் வைக்கவும், விளக்கவும் கவிதைக்குரிய கூறு முறைகளை எடுத்தாள்கிறது என்பதே பரவலாக கூறப் படும் தரப்பாக உள்ளது. அதாவது அதில் உள்ள கவிதையானது நீதியை விளக்கும் உத்தேசத்துடன் அடையப் பெற்ற ஒன்று மட்டுமே என்று சொல்லப் படுகிறது. அந்த நீதியை அடையும் விதம் கவிதைக்கு அப்பால் வாழ்வனுபவம் தந்த விவேகத்தாலோ, தத்துவ சிந்தனை தந்த தெளிவினாலோ தான் தீர்மானிக்கப் படுகிறது என்பது இக்கருத்தின் விரிவாக்கம். ஆனால் குறளின் கவித்துவத்தினூடாக நாம் பயணம் செய்கையில், நீதியை விட கவித்துவம் சாராம்சமாக தோற்றம் தருவதையே நாம் மீண்டும், மீண்டும் காண்கிறோம். குறளின் நீதிகள் கவித்துவ எழுச்சியின் விளைவுகளாகவே உள்ளன.

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்”

இது என்ன நீதி? இதில் உள்ளது கவித்துவத்தின் சீற்றம் அல்லவா? குறளின் மெய் காண் முறை கவிதையே என்பதை மற்ற நீதி நூல்களுடன் ஒப்பீடு செய்தாலே அறியலாம். அவை முன் வைப்பது விதிகளை! குறள் ஓர் உச்ச மனஎழுச்சியை! உதாரணம்;

“அறத்தாறிதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை”

அனுபவ விவேகமோ, குலமரபின் அறப் பிரக்ஞையோ, தத்துவ சிந்தனையின் வழி நடத்துகையோ உருவாக்கும் நீதிக்கும், இதற்கும் உள்ள வேறுபாடு மிக முக்கியமானது. அதை ஒரளவு வகுத்துக் கொள்ள முயல்வோம்.

அடிப்படையில் நீதி என்பது என்ன? அது எதற்காக மானுடனுக்கு தேவைப் படுகிறது? மனிதனை ஒரு சமூக விலங்கு என்று எடுத்துக் கொண்டால், அவனது வாழ்வை உள்ளுணர்வும், பரிணாமம் மூலம் உருவாகிப் படிந்த பழக்க வழக்கங்களும் தான் தீர்மானிக்கின்றன. ஒரு கட்டத்தில் அவனுக்கு தன்னையும், தன்னை சார்ந்துள்ளவர்களையும் பற்றிய பிரக்ஞை வந்த போது பொதுவான நடத்தை விதிகளை உருவாக்க வேண்டிய அவசியம் வந்தது. முதல் நீதி பிறந்தது. நீதி என்பது அடிப்படையில் பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்ட ஒரு சமூக ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் சமூக வன்முறையினால், அதாவது தண்டனையினால் மட்டுமே நிலை நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். இன்றும் பழங்குடி சமூகங்களிலேயே தண்டனைகள் தளர்வில்லாத மூர்க்கத்துடன் நிறைவேற்றப் படுகின்றன என்பதைக் காணலாம். இந்த சமூக ஒப்பந்தங்கள், நம்பிக்கைகள் ஆயின என்று கொள்ளலாம். சடங்குகளாகவும், மரபுகளாகவும் உருவம் கொண்டன. இக்கால கட்டங்களில் எப்போதுமே நீதி என்ற தனியான கருத்தும், அமைப்புகளும் தேவையாக இருக்கவில்லை. பழங்குடி சமூகங்கள் அனைத்திலும் அநேகமாக நீதி நூல்களே இல்லை. நாம் இன்றும் “நடைமுறை நீதி”, “குலமரபு நீதி” ஆகிய பழங்குடி அமைப்புகளையே நமது அன்றாட வாழ்வின் இயக்கத்துக்கு சார்ந்திருக்கிறோம்.

அப்படியானால் நீதி என்ற தனிக் கருதுகோளும் நீதிநூல் என்ற அமைப்பும் எப்போது உதயமாயின? தத்துவ சிந்தனை உருவாகி வலுப் பெற்ற பிறகு தான் என்று ஓரளவு கூறலாம். ஒவ்வொன்றையும் நடை முறையிலிருந்து பிரித்தெடுத்து, மிகப் பொதுவான தளத்துக்கு கொண்டு சென்று, தூய தருக்க நிலையில் நிறுத்தி யோசிக்கும் செயல்பாட்டையே நாம் தத்துவ சிந்தனை என்கிறோம். இப்படிப் பட்ட ஒரு சிந்தனை முறை சங்க காலத்தில் இருந்ததாகக் கொள்ள [தொல்காப்பியம், இலக்கியம் கண்டதற்கு அமைந்த இலக்கணம், காலத்தால் பிந்தியது என்று கொண்டால்] தடயங்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. வாழ்வின் நேரடியான கவித்துவ வெளிபாடும் அக்கவிதையை, பொதுவாக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கண பிரக்ஞையும், பொதுவான அறமும், ஒழுக்க மரபுகளும் தான் அவற்றில் காணக் கிடைக்கின்றன.

அப்போதும் நீதி, குலமுறை நீதியாகவே பெரிதும் இருந்திருக்கக் கூடும். தத்துவ சிந்தனையின் ஊற்று முகங்கள் இருந்திருக்கக் கூடும். தத்துவம் எப்போதுமே பெரிய அமைப்புகளை சார்ந்து அவற்றின் தேவைகளால் உந்தப் பட்டு உருவாவது என்று கொள்ள வரலாற்றில் ஆதாரம் உள்ளது. வரலாற்றில் எப்போதுமே பெரும் தரிசனங்கள் [அதாவது மதங்கள்] பேரரசுகள் ஆகியவற்றை சார்ந்தே தத்துவ சிந்தனையின் வளர்ச்சியும் அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. தமிழக வரலாற்றுப் பரப்பில் பெளத்த, ஜைன மதங்களின் வருகை மிக முக்கியமானது. அதற்கு முன்பு இங்கு இருந்தவை மத நம்பிக்கைகள் அல்லது வழிபாட்டு முறைகள் மட்டுமே.[CULTS.] ஒருங்கிணைவுள்ள மையத் தரிசனம், ஒருங்கிணைவுள்ள வழிபாட்டுமுறை ஆகியவை இணைக்கப் படுகையில் தான் மதங்கள் உருவாகின்றன. பிற்பாடு சைவ, வைணவ மதங்களாக வளர்ந்த வழிபாட்டு முறைகள் பல தமிழ் மரபில் முன்பே இருந்தன என்றாலும் தமிழகத்தின் முதற் கட்ட மதங்கள் பெளத்தமும், சமணமுமேயாகும்.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து வரும் வழிபாட்டு முறை ஒன்று மதமாக மாறுவது அது பிற வழிபாட்டு முறைகளுடன் உரையாடவும், வெல்லவும், தன்னுடன் இணைத்துக் கொண்டு தன் எல்லைகளை விரிவு படுத்தவும் முயலும் போதுதான். ஆகவே பெரும் தொகுப்புச் செயல்பாடு ஒன்றின் மூலமே ஒரு வழிபாட்டு முறை மதமாக மாறுகிறது. இத்தொகுப்புச் செயல்பாட்டை நவ வரலாற்றாய்வாளர்கள் மத உருவாக்கம் என்று குறிப்பிடுகிறார்கள். எதனடிப்படையில் பல்வேறு வாழ்க்கைக் கூறுகள் ஒன்று சேர்க்கப் படுகின்றன? அந்த மையத் தரிசனத்தின் அடிப்படையில் தான்.

ஆனால் அத்தரிசனம் தன் தொகுப்புச் செயல்பாட்டின் போக்கில் படிப்படியாக விரிவும், உட்சிக்கலும் அடையும். சமரசம் செய்துகொள்ளும் .இந்த வளர்சிதை மாற்றத்துக்கு விரிவான விவாதக்களம் ஒன்று தேவை. அதன் பொருட்டு மதம் தத்துவப் பரப்பு ஒன்றை திரட்டி எடுக்கிறது. அத்தத்துவப் பரப்பின் தீவிரமான இயக்கம் மூலம் பல்வேறு வகையான வாழ்க்கைக் கூறுகள் இணைந்து பொதுவான வாழ்க்கைத் தரிசனம் ஒன்று உருவாகும்போது அதன் தொடர்ச்சியாக பேரரசுகள் உருவாகின்றன. பல சிறு அரசுகள் ஒன்றாகத் திரண்டு தான் பேரரசு உருவாகிறது. இது ஒரு விவாத உருவகம் மட்டுமே. ஒருவேளை இந்த இயங்கு முறையில் நேர் மாறான போக்குகளும் இருக்கலாம். பெரியமதம், ஒருங்கிணையும் தத்துவப் பார்வை, பேரரசு மூன்றும் ஒரே சமயம் ஒன்றை ஒன்று பயன்படுத்திக் கொண்டு வளரும் மூன்று சக்திகள் என்று மட்டும் குறைந்த பட்சம் உறுதியாக கூறமுடியும்.

தமிழ்ச் சூழலை எடுத்துக் கொண்டால் பண்டைத் தமிழ் மரபின், பெரிதும் பழங்குடித் தன்மை கொண்ட, வாழ்வுக் கூறுகளை பெளத்தமும், சமணமும் சந்தித்த போது தான் தத்துவப் பிரச்சினைகள் உருவாகின. இரு காப்பியங்களிலும் நாம் காண்பது ஓய்வற்ற, விரிவான தத்துவப் போராட்டத்தையே. தமிழ் மரபு சார்ந்த வழிபாட்டு முறைகளை, குறிப்பாக பத்தினி, பெளத்தம் தன் சரடில் கோர்ப்பதை காணலாம். அதாவது “குலமரபு நீதி”யானது தத்துவ போராட்டத்தினூடாக “பொது நீதி”யாக மாறும் கால கட்டம் இது. அதற்கேற்ப அறம் என்ற சொல்லில் வந்த மாறுதல்களை [அல்லது குடியேறிய கனத்தை] நாம் கவனிப்பது பெரிதும் உதவிகரமானது. இல்லறம்xதுறவறம், அறம்xமறம் ஆகிய சொற்களில் உள்ள அறமல்ல அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாக வரும் பேரரறம்.

இவ்வாறு நீதி புறவயமாக ஆனதன் பிறகு தான் நீதி நூல்கள் எழுதப்பட்டன. அவ்வாறு “எழுத”ப் படுவதன் அவசியத்தையும் நாம் கவனிக்க வேண்டும். சான்றோர், அறவோர் மத்தியில் ஒரு பொதுப் புரிதலாக அது இருந்தால் போதுமானதல்ல என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எழுதப் படுகையில் அது கால- இட எல்லைகளைத் தாண்டி விடுகிறது. வளைக்கப் படவோ மாற்றப் படவோ முடியாததாக, அதாவது தனிநபர் சராததாக, ஆகிவிடுகிறது. பேரரசுகள் உருவானதன் விளைவாக நீதி பொதுவானதாக ஆயிற்றா, அல்லது நீதி பொதுவாக ஆனதன் விளைவுகள் தான் பேரரசுக்கு காரணமாக ஆயிற்றா என்பது ஒரு அடிப்படைவினா. விரிவாக வரலாற்றை முன்வைத்து எழுப்பிக் கொள்ள வேண்டிய ஒன்று அது.

காப்பிய கால கட்டத்தைத் தொடர்ந்து நீதி நூல்களின் கால கட்டம் உருவான காரணம் இதுதான். [குறள் கால அளவில் காப்பிய காலத்துக்கு சமானமானது என்றும் சொல்லப் படுகிறது]. இக்கால கட்டத்தில் நீதி நூல்கள் பெருமளவில் எழுதிக் குவிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதை காலவெள்ளத்தை தாண்டியும் இத்தனை நூல்கள் எஞ்சியிருப்பதில் இருந்து ஊகிக்கலாம். ஆனால் குறள் இவற்றில் ஒன்று மட்டும் அல்ல, காரணம் அது வெறும் நீதி நூல் அல்ல.

பெரும் தத்துவ விவாதத்துக்கு பிறகு திரண்டு வந்த பொது நீதியை சுருக்கமாகவும், கறாராகவும் வகுத்துரைப்பதையே நீதி நூல்கள் செய்கின்றன. அவை முன்வைக்கும் நீதி உடனடியாக சமூக நடைமுறையாக மாற்றப்படவேண்டியுள்ளது. எனவே அவற்றின் குரல் அப்படி இருந்தாக வேண்டியுள்ளது. அவற்றின் ஒரு நுனி பழங்குடிகளின் நீதியில் வேரூன்றியிருக்கும். மறு நுனி விரிந்து பரவும் கிளைகளுடன் அன்றாட சந்தர்ப்பங்கள் மூலம் எதிர்கால நீதியை தேடிய படியிருக்கும். முற்றிலும் நடைமுறை சார்ந்த ஒரு நீதி நூல் வெறும் ஆசாரத் தொகுப்பாக மாறி காலத்தில் பொருளிழந்து போகும். முற்றிலும் இலட்சியவாதம் சார்ந்தஒரு நீதி நூல் வெற்றுக் கனவாக அந்தரத்தில் நின்று புறக்கணிக்கப் படும். எல்லா நீதி நூல்களும் இவ்விரு புள்ளிகளின் நடுவே நின்று கொண்டிருப்பதையே நாம் காண்கிறோம். அர்த்த சாஸ்திரமும், ஆசாரக்கோவையும், மனுநீதியும் நடைமுறை வாதம் சார்ந்த எல்லை அருகே நிற்கின்றன. குறள் இலட்சியக் கனவின் அருகாமையில் நிற்கிறது. இந்த அம்சமே குறளை நீதி நூல் என்ற அடையளத்தை மீறி பேரிலக்கிய எல்லைக்குள் கொண்டு வருகிறது.

தத்துவம் எவ்வாறு தருக்கத்தை தன் அறிதல் முறையாக கொண்டிருக்கிறதோ அவ்வாறு இலக்கியம் தன் அறிதல் முறையாக கற்பனையைக் கொண்டிருக்கிறது. தருக்க ரீதியான அறிதல் முறை தொகுத்தல் – பகுத்தல் ஆகிய செயல்பாடுகளினூடாக, சமரசப் புள்ளிகளைக் கண்டடைந்து அப்புள்ளிகள் இணைந்து உருவாகும் கோடு வழியாக நகர்கிறது. மாறாக கற்பனைக்கு சமரசப் புள்ளிகள் இல்லை, அது ஒவ்வொரு புள்ளியில் இருந்தும் அதிகபட்ச சாத்தியங்களைக் கண்டடைய முயல்கிறது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது தருக்க பூர்வமாக அடையப் பெற்ற ஒரு உண்மையல்ல, உச்சகட்ட மன எழுச்சியில் உருவான ஒரு அகத்தரிசனம் அது. தத்துவம் அதை ஒரு வெறும் மனப் பாய்ச்சல் என்பதற்கு மேல் முக்கியமாக கருதாது. இலக்கியத்தில் அது நூற்றாண்டுகளை அதிர வைக்கும் ஒரு மாபெரும் மானுட தரிசனம்.

குறளின் இயங்குமுறை பெரிதும் இலக்கியம் சார்ந்ததாகவே உள்ளது. ஒரு வாழ்க்கை சந்தர்ப்பத்தை எடுத்துக் கொண்டு அதன் சாராம்சமான நெறி என்ன என்று திட்ட வட்டமாக வகுத்துக் கூற அது பெரும்பாலும் முயல்வது இல்லை.

மாறாக அவ்வாழ்க்கைச் சந்தர்ப்பங்களில் இருந்து, மின்னல் போல, தொலையா தொலைவுக்கு பளீரிட்டுப் பாய்ந்து அதிகபட்ச சாத்தியங்களைக் கண்டடையவே அது முயல்கிறது.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார

என்பும் உரியர் பிறர்க்கு”

என்பது ஒரு நீதியே அல்ல, ஒரு பெரும் மானுடக் கனவு மட்டுமே. மானுடத்தை இன்று வரை இயக்கி வரும் ஒரு மகத்தான இலட்சியக் கற்பனை. இவ்வெல்லையை சென்று தொடுவதனால் தான் குறள் நீதி நூலாக அல்லாமல் பேரிலக்கியமாக ஆகிறது.

ஒரு பேரிலக்கியத்தை வாசிப்பதற்கும், நீதி நூலை வாசிப்பதற்கும் இடையேயான வித்தியாசம் முக்கியமானது. அதுவே இப்பாகு பாட்டை துல்லியமாக நிகழ்த்திக் கொள்ள நம்மை வலியுறுத்துவது. ஒரு நீதி நூலை நாம் அதன் மிகப் பொருத்தமான பொருளில் எப்படி எடுத்துக் கொள்வது என்ற கண்ணோட்டத்திலேயே அணுகுகிறோம். அதில் மாற்று வாசிப்புகளுக்கு இடம் தருவது பல சமயம் நீதியை நம் விருப்பத்துக்கு ஏற்ப திரித்துக் கொள்வதாகவே அமையும். அதாவது நீதிநூல அடிப்படையில் ஒரு தத்துவ நூலேயாகும். அதில் உள்ள இலக்கிய உத்திகளைக் கூட நாம் தத்துவத்தின் எல்லைக்கு உட்பட்டே அணுக வேண்டும். உதாரணமாக அதில் உள்ள உவமைகளை பதிலி பிம்பங்களாகவே [அலிகரி] எடுத்துக் கொள்ள வேண்டும். திட்ட வட்டமாக வகுக்கப்பட்ட ஒரு விஷயத்தை துல்லியமாக சுட்டும் பொருட்டு தரப்பட்ட உதாரணங்கள் அவை.

மாறாக இலக்கியப் படைப்பு நம்மை எந்த அளவு கற்பனை செய்ய வைக்கிறது என்பதே அதை மதிப்பிடும் அளவு கோலாகும். மிக அதிகமான வாசிப்புச் சாத்தியங்களே அதன் இலக்கியப் பண்பின் அடிப்படை. அது எதையும் திட்ட வட்டமாக நம்மில் விட்டுச் செல்வது இல்லை, கற்பனையின் நீரை நம் அந்தரங்கத்தில் பாய்ச்சுவதன் மூலம் அது நம் விதைகளை முளைக்கச் செய்கிறது. ஒரு இலக்கியப் படைப்பிடம் ஒருபோதும் கேட்கக் கூடாத வினா இதன் திரண்ட கருத்து யாது என்பதேயாகும். ஏனெனில் இக்கேள்வி அப்படைப்பின் விரிந்து செல்லும் எல்லா சாத்தியங்களயும் ஒரு புள்ளியில் குறுக்கி அதை முளையடித்துக் கட்டி விடுவதாகும். அவ்வாறு திரண்டு வந்த கருத்து என்பது உண்மையில் ஒரு வாசிப்பு அதன் தருணத்தில் அடைந்த ஒரு முகம் மட்டுமே, அதுவே அப்படைப்பின் முழுமையல்ல. அவ்வாசிப்பே அப்படைப்பு என்பது ஒரு அழகிய பெண்ணை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அவளை கொன்று விடுவதற்கு நிகராகும்.

இலக்கியப் படைப்பில் உள்ள அத்தனை அழகுகளும், நுட்பங்களும், அணிகளும் அதன் வாசிப்பை முடிவின்றி பெருக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவையே. குறள் மீதான இன்றைய வாசிப்பு அதை ஓர் இலக்கிய படைப்பாக கண்டு அதன் பாக்களின் முடிவற்ற வாசிப்புச் சாத்தியங்களினூடாக முன்னகர்வது அவசியமாகும். குறளை ஒரு நீதி நூலென்று வரையறுத்து விடுவதே இவ்வகை வாசிப்பின் பெரிய தடையாகும். அதாவது வேறு  வகையில் சொல்லப்போனால் இன்று ஒரு புதுக்கவிதை எப்படி வாசிக்கப் படுகிறதோ அப்படியே குறளும் வாசிக்கப் பட வேண்டும்.

உதாரணமாக

“வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்

உள்ளத்தனையது உயர்வு”

இக்குறளில் மரபான வாசிப்பு இரண்டாம் பகுதிக்கு அதிக அழுத்தம் தந்து, அதற்கான உதாரணமாக முதல் பகுதியை, அவ்வுவமையை, கண்டு வந்தது. நவீன வாசிப்பு வெள்ளத்தை ஒரு படிமமாக [poetic image] எடுத்துக் கொள்ளும். அப்போது அப்படிமம் சர சரவென்று வளர்ந்து காட்சிகளை உருவாக்கியபடியே போகும். வெள்ளத்தின் அலை, ஆழம், அதன் நிழற் கோலங்கள், அதில் ஊடுருவும் ஒளி, அதன் அடிப்பரப்பின் சேற்றுத் தடம், அங்கு வேர் விட்டு மேலெழுந்த மலர்… அம்மலர் எது என்ற கற்பனை அவனை மேலதிக கவிதைக் கற்பனைகளுக்கு இட்டுச் செல்லும். உள்ளத்தின் அடியாழத்தில் வேர் கொண்டு மேலெழுந்து, அலைகளில் ததும்பி நின்றாடி, விண் நோக்கி மலர்ந்து, ஒளி உண்டு, மிளிரும் அம்மலர் அவன் மனதிலும் விரியக் கூடும்.அக்கணமே கவிதையின் மெய்க் கணம்.

தமிழ் புதுக் கவிதைக்கு அரை நூற்றாண்டு வயதாகி  விட்டது. அதன் பிரபலமான போக்கு அனைவரும் அறிந்த கருத்துக்களுக்கு, அனைவரும் அறிய சாத்தியமான உவமையணிகளை உருவாக்குவதிலேயே ஈடுபட்டுள்ளது. ஆனால் “எழுத்து” இதழில் துவங்கி சிற்றிதழ்களினூடாக வளர்ந்து, இன்று மைய ஓட்டமாக மாறி வரும் போக்கு சொற்களையல்ல, அவற்றிற்கு நடுவே தேங்கும் மெளனங்களையே புதுக்கவிதை வாசகன் வாசிக்க வேண்டும் என்று ஏறத்தாழ நிறுவி விட்டது. புதுக் கவிதயை இவ்வாறு மெளனங்களை வைத்து வாசித்து விரிக்கும் பல வாசகர்கள் இன்று உருவாகியும் விட்டார்கள். ஆனால் அவர்கள் கவனம் இன்னும் குறள் மீது விழவில்லை. காரணம் அதன் மீதுள்ள நீதி நூல் என்ற முத்திரையே. அந்த எல்லைகளைத் தாண்டி நவயுகத்தின் புதிய வாசிப்புகளுக்கு தமிழின் இப்பேரிலக்கியத்தை ஆளாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

[தமிழரசு , அய்யன் திருவள்ளுவர் சிலைதிறப்பு விழா சிறப்புமலர் 2000]

This entry was posted in இலக்கியம், கவிதை and tagged , , . Bookmark the permalink.

One Response to குறள் – கவிதையும், நீதியும்.

  1. Pingback: jeyamohan.in » Blog Archive » குறளறம்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s