தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதரிலிருந்துதான் தமிழிசை இயக்கம் தொடங்குகின்றது. வரலாற்றுக் காரணங்களால் தொடர்ச்சியழிந்து போக நேரிட்ட தமிழ் மரபிசை , விஜய நகர ஆதிக்க கால கட்டத்தில் மறு கண்டுபிடிப்புக்கு ஆளான போது அன்றைய அரசியல் சூழல் காரணமாக தெலுங்கு இசையாக முன் வைக்கப் பட்டது. காலப் போக்கில் அதன் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் முற்றிலும் மறுக்கப் பட்டன. அது தெலுங்கு தேசத்திலிருந்து வந்தது என்றும் க்ஷேத்ரக்ஞர் முதலியோரில் இருந்து முளை விட்டது என்றும் புதிய வரலாறுகள் உருவாக்கப்பட்டன. அவ்வரலாறு முற்றிலும் ஆதார பூர்வமாக மறுக்கப் பட்ட பிறகும், இப்போதும், தொடர்ந்து கூறப்பட்டே வருகிறது.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் , பண் ஆராய்ச்சி மற்றும் இலக்கிய ஆராய்ச்சியின் வழியாக, தமிழிசையே இன்று தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்த முன்னோடி ஆய்வாளர். நெல்லை மாவட்டத்தில் குற்றாலம் அருகே சாம்பூர் வட கரை சம்புவனோடை என்ற ஊரில் 2.8.1859இல் மு. ஆபிரகாம் பண்டிதர் பிறந்தார். பெற்றோர் முத்துச்சாமி நாடார் மற்றும் அன்னம்மாள். திண்டுக்கல் நார்மல் ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியர் படிப்பு முடித்து அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். இறுதி வாழ்க்கையில் இவருக்கு திண்டுக்கல் அருகேயுள்ள சுருளி மலையில் வாழ்ந்த கருணானந்தர் என்ற சித்தரிடம் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய மாணாக்கராகி சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்தார்.

1882இல் பண்டிதர், நஞ்சங்குளத்தைச் சேர்ந்த ஞானவடிவு பொன்னம்மையைத் திருமணம் செய்து கொண்டார். 1883இல் தஞ்சை வந்து சித்தமருத்துவ தொழிலைத் தொடங்கினார். இதில் அவர் பெரும் பொருளீட்டினார். இக்கால கட்டத்தில் புது வகைப் பயிர்களை வேளாண்மை செய்வதிலும். காற்றாலைகள் நிறுவி நீர்ப் பாசனம் செய்வதிலும் பண்டிதருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. 1911இல் மின்சாரத்தில் இயங்கும் அச்சுக் கூடம் ஒன்றை நிறுவினார். இவரது விவசாய ஆராய்ச்சிகளுக்காக பிரிட்டிஷ் அரசு , ராவ் பகதூர் பட்டம் அளித்து கெளரவித்தது.

திண்டுக்கல் சடையாண்டி பட்டரிடம் ஆபிரகாம் பண்டிதர் இசை பயின்றார். பிறகு தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்வானிடமும் இசை கற்றார். ஆர்மோனியம், ஆர்கன், வீணை, பிடில் முதலிய வாத்தியங்களை வாசிக்கவும் கற்றார். இக்கால கட்டத்தில்தான் தமிழகத்தில் தெலுங்கு மொழியை முக்கியமாகக் கொண்டு கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் பிரபலமாக இருக்கும் இசை மரபு உண்மையில் பழந் தமிழ் இசை மரபே என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.

இதன் விளைவாக 1910 முதல் 1914 வரையிலான கால கட்டத்தில் பண்டிதர் ஆறு இசை மாநாடுகளைத் தஞ்சையில் நடத்தினார். 1912இல் (மே 27ஆம் நாள்) தஞ்சையில் சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை நிறுவினார். ஐரோப்பிய இசை வல்லுநரான பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி. பிச்சைமுத்து அவர்களின் மாணாக்கராகி மேற்கத்திய இசையையும் கற்றுத் தேர்ந்தார். பல்வேறு பாடகர்களையும், இசை நிபுணர்களையும், மேற்கத்திய இசை வல்லுநர்களையும் மாநாடுகளுக்கு அழைத்து விரிவாக உரையாடினார். மாநாடுகளை முழுக்கத் தன் சொந்த செலவில் பண்டிதர் நடத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

1917இல் பதினைந்து ஆண்டுக் காலப் பெரும் உழைப்பின் விளைவாகப் பெரும் இசை நூலாகிய ‘கர்ணாமிர்த சாகரம் ‘ என்ற ஆக்கம் பிரசுரமாகியது. 1395 பக்கங்கள் உடையது இந்நூல். இன்று வரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது. பிறரால் திட்டமிட்டுப் புறக்கணிக்கவும் படுகிறது.

பரதரின் ‘நாட்டிய சாஸ்திரம்’, சாரங்க தேவரின் ‘சங்கீத ரத்னாகரம் ‘ முதலிய பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத் தமிழ் நூல்களையும் விரிவாகக் கற்ற பண்டிதர் , தன் ஆய்வுகளில் இவற்றையெல்லாம் ஆழ்ந்து பரிசீலிக்கிறார்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்நாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இன்றைய ராகங்கள் தான் அன்று பண்களாக இருந்தன என்று சுவர ஆய்வு மூலம் நிரூபித்தார். இராகங்களை உண்டு பண்ணும் முறை, பாடும் முறை ஆகியவற்றைப் பழந்தமிழ் இசையிலக்கணத்தில் இருந்து ஆய்வு செய்து அறிந்து விளக்கி காட்டினார். அவையே இன்றும் இசையில் அடிப்படைகளாக உள்ளன.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையே வடக்கே இந்துஸ்தானி இசை என்ற பெயரில் விளங்குகிறது என்று நிரூபித்தார். 20-24.3.1916இல் பரோடாவில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்குச் சென்று தன் முடிவுகளைப் பற்றி உரையாற்றினார். இவரது கண்டுபிடிப்புகளை இவரது இரு மகள்கள் வீணையில் இசைத்துக் காட்டி நிரூபித்தனர்.

31.8.1919இல் பண்டிதர் உயிரிழந்தார். இவர் முடிக்காமல் விட்டிருந்த பகுதிகளை முடித்து இவரது மகளான திருமதி. மரகதவல்லி துரைப்பாண்டியன் ‘கர்ணாமிர்த சாகரம் ‘ இரண்டாம் பகுதியை நிறைவு செய்தார். பண்டிதரின் குடும்பமே இசைக் குடும்பம். அவரது தந்தையாரும் இசைப் பயிற்சியும் ஆர்வமும் மிக்கவர். பண்டிதரின் மூத்தமகன் சுந்தர பாண்டியன் அவரது இசை நூல்களைப் பிழை திருத்தங்கள் செய்து வெளியிட்ட இசை ஆய்வாளர். மூன்றாம் மகன் ஆ. வரகுணபாண்டியன் ‘பாணர் கைவழி ‘ எனும் இசை நூலை வெளியிட்டவர்.

மறைக்கப் பட்ட தமிழ்க் கலாச்சார வரலாற்றின் மறுபிறப்புக்குக் காரணமான பெரியோர்களில் ஐயத்திற்கு இடமின்றி முதலிடம் பெறத் தக்கவர் ஆபிரகாம் பண்டிதரே. ஆயினும் பிற்காலத்தில் அனைத்துத் தரப்பினரும் அவரைப் புறக்கணித்தனர்; மறக்கத் தலைப் பட்டனர் என்பது கசப்பான வரலாற்று உண்மையாகும்.

சொல்புதிது இதழ்-9இல் வெளிவந்த கட்டுரை

பண்டிதர் பற்றிய குறிப்புக்கு

கேள்விபதில்-74

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்

This entry was posted in ஆளுமை, இசை, தமிழகம், வரலாறு and tagged , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s